Saturday, March 23, 2019

மங்களம் வாசனின் மக்கள்

மயிலுக்கு ஆட்டத்தையும் மானுக்கு துள்ளலையும்…

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

ஒருவரை ஒருவர் விரும்பும் தலைவனும் தலைவியும் சந்திக்கும் நேரம். தலைவியைத் தலைவன் தொடுவான்.

தலைவி கழுத்தை வளைப்பாள், தலை குனிவாள், முகம் சிவப்பாள், கொடுப்புக்குள் சிரிப்பாள், உடல் நெளிவாள், கால் விரல்களால் நிலத்தில் கோடிடுவாள், மேனி சிலிர்ப்பாள். காதுகளைக் கூர்மையாக்கிக் கொள்வாள்.

கண்களின் கடைக்கோடிக்கு விழிகள் போவதும் வருவதுமாய்… அடுத்துத் தலைவன் என் செய்வானோ என்ற ஏக்கம் ஒருபுறம்.. ஏதும் செய்யாமலிருக்கும் தலைவனின் தேக்கத்தால் வரும் ஏக்கம் மறுபுறம்..

இவ்வளவு நீண்ட விளக்கத்துக்குத் தமிழில் ஒரே சொல் நாணம்…. தலைவியின் நாணம்.

இறியூனியன் தீவில் பரத நாட்டியப் பள்ளி. கலாச்சேத்திராவில் பயின்ற ஆசிரியை சொல்லிக் கொடுக்கிறார். நாணத்துக்குரிய அடவுகளைக் கூறுகிறார். பிரஞ்சு மொழியில் விளக்குகிறார். பதம் பிடித்துக் காட்டுகிறார்.

மாணவிகளுள் ஒருத்தி. 18 வயதுப் பெண். தமிழ் மொழி தெரியாத தமிழ்ப் பெண். பிரஞ்சு மொழியில் கேட்கிறாள். நாணம் என்றால் என்ன? பிரஞ்சு மொழியிலோ ஆங்கில மொழியிலோ அதற்கான சொல்லை ஆசிரியையால் கூற முடியவில்லை. தலைவன் தொட்டால் ஏன் நாண வேண்டும்? இது அடுத்த வினா.

அந்த மாணவி மட்டுமன்று, அங்கிருந்த மாணவிகளுள் பெரும்பாலோரின் உள்ளத்தில் எழுந்த வினாக்கள் அவை.

250 ஆண்டு காலமாகத் தமிழர் இறியூனியனில் வாழ்கின்றனர். பிரஞ்சுக்காரர், ஆபிரிக்கர், கலப்பினத்தார் நடுவே இன்றைய (2013) மதிப்பீட்டில் ஐந்து இலட்சம் தமிழர்.

தமிழ் மரபுகளை மழுங்கடிப்பதையே தலைமுறைகள் பலவூடாக ஊக்குவிக்கும் பிரஞ்சு மேலாதிக்கச் சூழல்.  வெங்கானத்தில் காணற்கரிய நீரூற்றையும் சுற்றிய நிழல்தரு மரங்களையும் போல, அங்கங்கே தமிழ் ஆர்வலர்கள், கோயில்கள், ஊடகங்கள், நூல்கள், சைவ சமயச் சடங்குகள், இசை நாட்டியப் பள்ளிகள், தமிழ் வகுப்புகள். இவையே தமிழ் மரபுகளுக்கு நங்கூரங்கள்.

நாணம் என்ற தமிழ் மரபின் பொருளை அறியாமலே பேதையாகிப் பெதும்பையாகி நங்கையாவோர்.

இறியூனியனுக்கு மட்டுமன்று, புலம்பெயர்ந்து உலகெங்கும் பல நாடுகளில் பரந்து வாழும் தமிழர், அங்கங்கே பெற்று வளர்க்கும் தமிழ்த் தலைமுறைக் கொடுப்பனவுகள் இவை.

30 ஆண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்த தமிழர் ஆத்திரேலியாவில் பெற்றெடுக்கும் தமிழ்க் குழந்தைகள் விதிவிலக்காவாரா? அவர்களுள் பெரும்பாலோர் கொண்ட கோலம் அதுவே. ஆனாலும் விதிவிலக்காக வாழ்கிறோம் என்கின்றனர் மெல்போணில் வாழும் வாசன் இல்லத்தவர்.

வாசனும் மங்களமும் பெற்றெடுத்த மக்கள்,  18 வயதான இலட்சணியா, 14 வயதான வசீசர்.

மயிலாப்பூரின் கிழக்கு மாட வீதியில், பாரதப் பண்பாட்டுப் பேழை போற்றும் பாரதீய வித்தியா பவன அரங்கில், 2013 மார்கழி இசை விழாவிற்குப் பங்களிப்பாக, 06. 01. 2013 அன்று சென்னையின் விற்பன்னர் நடுவே, தெரிந்து சுவைக்கும் சுவைஞர் குழாம் சூழ இலட்சணியாவும் வசீசும்  ஆடிய பரத நாட்டிய நிகழ்ச்சி.

அலாரிப்பில் கணேச  கவுத்துவம். சிறீகாந்தரின் செழுமைக் குரலில் கஜானனம். எடுத்த எடுப்பிலேயே வசீசரின் கால் அடிகளின் கட்டுக்கோப்பும் இலட்சணியாவின் முக பாவங்களும் மேடையைக் கொள்ளைகொண்டன. இருவரா? மேடையில் ஒருவரா? அதே பதங்களை ஒரே நேரத்தில் இருவரும் இரு பாவைகளாக, பதம் பிடித்தனரே, இம்மியும் பிறழாது ஒத்திசைந்து நடனமாடினரே.

அடியார் மேல் பரிவு கொண்டார்.  காலனைக் காலால் உதைத்தார். மார்க்கண்டேயருக்கு வாழ்வளித்தார். நம்மை ஆட்கொண்டவர். மௌவலும் மாதவியும் புன்னையும் வேங்கையும் செருந்தியும் செண்பகமும் குருந்தும் முல்லையும் வளரும் சோலை சூழ்ந்த திருக்கோணமலை இறைவன் எனத் திருஞானசம்பந்தர் 1400 ஆண்டுகளுக்கு முன் பாடிய தேவாரப் பாடல். மூன்றாம் திருமுறை 123ஆம் பதிகம் 6ஆவது பாடல். பரிந்து நன் மனத்தால் எனத் தொடங்கும் அப்பாடல் வரிகளுக்குப் பதம் பிடித்தனர் இலட்சணியாவும் வசீசரும். இருவரின் தாய்வழிப் பாட்டனார் யாழ்ப்பாணத்து மாவிட்டபுரத்தார். எனவே இலங்கையர்கோன் வழிபட்ட ஈசருக்கு அஞ்சலி!

அடுத்துத் தோடி இராகம், ஆதி தாளம், ஆதிசிவனைக் காணவே  எனத் தொடங்கும் பாடல். தண்டாயுதபாணிப்பிள்ளை ஈந்த பாடல் வர்ணமாக. ஒன்பான் சுவைகள், ஒன்பதுக்கும் முக பாவங்கள் முன்னெடுத்த பதங்கள். நரேந்திராவின் சொற்கட்டுகளுக்கு நடனமணிகள் இருவர் ஈந்த அசைவுகள். ஒருவர் அசைந்த வழி ஒத்திசைந்த மற்றவரின் அசைவு. குழலிசைத்தார் அதுல் குமார். மத்தளம் ஒலித்தார் அரிபாபு. கலையரசன் இராமநாதன் வயலின் இசைத்தார். இலட்சணியா முக பாவங்களில் மிளிர்ந்தார், வசீசர் காலடிக் கட்டமைப்பு முதலாகக் கழுத்தசைவு வரையாக இயைந்து அசைந்து பரந்து ஒளிர்ந்தார்.

இருவரும் ஒரே நேரத்தில் மேடையிலாயின் மேடை பொலியுமா? அல்ல அல்ல, ஒவ்வொருவரும் தனித் தனியே திறமையாளர். அவரவர் பாணி அவரவருக்கு. இருவரையும் தனித தனியாகப் பார்க்கலாமா என்ற குரு நரேந்திரனாரின் ஆவலுக்கு விடை தந்தனர் வசீசரும் இலட்சணியாவும்.

கருணைரஞ்சனி இராகத்தில், கண்ட தாளத்தில் அம்புசம் கிருட்டினா இசையில், திருமால் பூவுலகிற்குக் குருவாயூரப்பனாக வந்து அருளுவதை வியக்கும் அடியாராக, ஓம் நமோ நாராயணா எனத் தொடங்கும் பாடலுக்குத் தனியாகவே வந்து நடனமாடி அசத்தினார் இலட்சணியா.

செஞ்சுருட்டி இராகத்தில் ஆதி தாளத்தில் காவடிச் சிந்துக்கு ஆடி அசத்தினார் வசீசர். பழனி மலையையும் காவடி ஆட்டத்தையும் மெல்போணில் இருந்தவாறே கண்டவரோ கேட்டவரோ வசீசர்? காவடிக்காக அவர் தோள்கள் வளைந்த அழகும் கால்கள் வைத்த அடி ஒழுங்கும் வியப்பில் என்னை ஆழ்த்தின.

அடுத்துக் காம்போதி இராகம், ஆதி தாளம், குழலூதி மனமெல்லாம் எனத் தொடங்கும் பாடல். ஊத்துக்காடு வேங்கட சுப்பிரமணியனாரின் பாடல். மயிலே வசீசரைப் பார்த்துப் போலச்செய்யுமோ என்ற மயிலாட்டம் இடையில் வந்தபோது என் கைகள் தாமே சேர்ந்தன, தட்டின. உள்ளமோ ஆர்ப்பரித்தது.

நாட்டிய இணையர் தனஞ்செயனும் சாந்தா தனஞ்செயனும் கற்பித்து ஆளாக்கிய நரேந்திராவின் மாணாக்கர் இலட்சணியாவும் வசீசரும் மேடையில் ஆடுந்தொறும் நரேந்திராவின் முகத்தில் பூரிப்பு. தன் முயற்சிக்கு முழு வடிவம் கொடுத்தனரே இருவரும் என்ற மன நிறைவு.

சிறப்பு விருந்தினரான சாந்தா தனஞ்செயன் மேடைக்கு வந்து இலட்சணியாவையும் வசீசையும் பாராட்டி மகிழ்ந்தார்.

திருமந்திரப் பாடலான அன்பு சிவம் இரண்டென்பர் எனத் தொடங்கும் பாடலுக்கும் அதையொத்த இரு பாடல்களுக்கும் இலட்சணியாவும் வசீசரும் ஆடி மகிழ்வித்தனர்.

பிருந்தாவன சாசங்க இராகத்  தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவெய்திய பின்னரும், பாட்டியார் பாலம் இலட்சுமணனின் இராமகிருட்டிண மிசன் சார்ந்த மங்களப் பாடலை நினைவூட்டிச் சுவாமி அரங்கானந்தாவின் பாடலுக்கு நடனமாடி மங்களம் சேர்த்தனர் இருவரும்.

கொல்லன் தெருவில் ஊசி விற்கலாமா? மயிலாப்பூரில் பரத நாட்டிய மரபுகளைக் காட்டிப் பிழைக்கலாமா?

அருள்மிகு கபாலீச்சரர் கோயிலின் மாட வீதியில் தொடங்கி தெற்கே திருவான்மியூர் வரை, மேற்கே மாம்பலம் வரை, வடக்கே திருவல்லிக்கேணி வரை படைப்பாற்றலின் மேதைகள், இசையில் நுண்மா  நுழைபுலத்தார், நடனத்தின் துல்லிய மரபுகளைத் துலக்குவோர் குவிந்து வாழ்கின்றனர் . அவர்களின் ஆற்றல், திறன், புலமை யாவுக்குமான அரங்குகள் தெருவுக்குத் தெருவாய், சந்து பொந்தெங்கும் விரவியுள.

மெல்போணில் பிறந்து, வெள்ளையர் நடுவே வளர்ந்து, ஆங்கில மொழி மூலம் கற்று, தமிழ்க் கலைகளோ, விளையாட்டுகளோ, பண்பாட்டுக் கூறுகளோ இல்லாத வெங்கானத்தில் நீரூற்றான பரத நாட்டியப் பள்ளி ஒன்றில் பயின்ற இருவர், மயிலாப்பூரின் பாரதீய வித்தியா பவன அரங்கில் நாணத்துக்கு இலக்கணம் வகுத்தனராயின், மயிலுக்கு ஆட்டத்தையும் மானுக்கு துள்ளலையும் கற்பித்தனராயின் அந்த நிகழ்ச்சியைக் கண்ணாரக் கண்டு களிகொண்டு என் உள்ளம் சிலிர்த்ததை, யான் பெற்ற இன்பத்தை என் தமிழில் பகிரவேண்டாமா?

என் தமிழ் எழுத்தை ஊக்குவித்தவர் இலட்சுமண ஐயர். என் தொண்டை ஊக்குவிப்பவர் அவரின் அருமைத் துணைவியார் பாலம் இலட்சுமணன். இருவரும் ஈந்த இளைய மகள் பெருமாட்டி மங்களம். அவர் கணவர் திருவுடையார் சீனிவாசன். இருவரும் இடையறாது உழைத்தனர்.  தம்மக்கள் இலட்சணியாவையும் வசீசைரையும் பரத நாட்டிய விற்பன்னராக்கினர். ஆத்திரேலியாவில் தமிழ் மரபு பேணுகின்றனர். அவர்களின் முயற்சிக்குத் தமிழுலகம் கடப்பாடுடையது.

Thursday, March 14, 2019

கைதடி தங்கராசா வாழ்த்துக் கவிதை கார்த்திகை 2018

மறவன்புலவு ஐயா சச்சிதானந்தம் அவர்களின் அகவை 77 
மன மகிழ் வாழ்த்து

எழுதியவர்
கைதடி நவபுரம் மாங்கனி சங்கரன் தங்கராசா

மருதமும் நெய்தலும் மருவிய மணியாம்
மறவன்புலவு திருவிளங்கும் ஊர் அதனில் 
மறவன்புலவு தன்னை தன்நாமத் தலைஎழுத்தாய் 
மனம் மகிழ்ந்து கொண்ட இறைஅருளாளர்

வள்ளக் குளத்து வாத்தியார் கணபதியார் 
வையகம் தந்த வள்ளலிவர் சச்சி
வள்ளுவர் போல் ஞானமுடன் ஆனந்த 
வான்புகழ் கொண்ட சச்சி தானந்தர்

வண்டாடும் மலர் போன்ற வதனம் 
கொண்டா டிடும் குவலயத்தின் சான்றோர் 
திண்டாடும் மானுடர்க்கு மதி யுரைஞர் 
பண்பாடும் காப்பதில் அற முதலி 

சந்தன மேனியர் சாந்த சொரூபர் 
சச்சிதா னந்தன் அழகு நாமமுடன் 
சர்வமும் அறிந்த வித்தகர் ஞாலமதில்
சகல கலா விற்பன்னர் வாழி 

பவளம் அகவை தாண்டிய குமரன் 
பழுதறியாப் பொன் உடல் அழகர் 
எழுபத் தேழுகளிலும் ஏற்றங் களுடன்
ஏறு போல் பீடு நடையோர் வாழி

பட்டிதொட்டி யெங்கும் பலரறி பாண்டித்தியர்
பார் புகழும் பாக்கியவான் பேரறிஞர் 
பகுத்து அறிந்த மூதறிஞர் யார்இவர் 
பாட்டாளிகளின் தாயுமா னவரே வாழி

பார்எல்லாம் பறந்துசென்று பணி கொண்டே 
யார்எல்லாம் துன்புறுவார் மேன்மை பெற 
அவரெல்லாம் இன்பமுற ஈந்தே மகிழும் 
சீர்எல்லாம் செய்யும் வள்ளல் வாழி 

சைவத் திருமுறைகள் பன்மொழி தந்த 
சைவத்தின் நலம் புகழ் காவலர் 
சன்மார்க்க சீலர் ஆவினக் காவலர்
சச்சிதா னந்தப் பெருந்தகை வாழி

கார்த்திகை மைந்தன் வாழ்க வாழ்க
ஊர் போற்றும் உத்தமன் வாழ்க 
பார் புகழும் பாக்கியவான் வாழ்க 
சீர் கொண்ட வாழ்வு மேன்மையுற வாழ்க 

மின்னொளி மேனியரைப் போற்றி செய்தேன் 
மிருதுவான இயல்பினரை வணங்கி மகிழ்ந்தேன் 
மிதுனத்தின் மிருகசீரிட நட்சத்திரத்தார் வாழி
மிகைவளங்கள் கொண்டே பல்லாண்டு வாழ்க

மறவனபுலவு ஐப்பசி 2018

மறவன்புலோவில் உள்ளேன்மகிழ்ச்சியாக உள்ளேன்உற்சாகமாக உள்ளேன்.

திருக்கோயிற் திருப்பணிகள் செய்கிறேன்திருக்கோயிற் கோபுரத் தூண் அடித்தளம் இட மண் பரிசோதனை செய்விக்க வேண்டும்திருக்குளத் திருப்பணிக்கு ஒரு வாரம் ஆயிற்றுதூர் வாரிகட்டுகள் கட்டுவித்தேன். நாகதம்பிரான் வளவில் 35 அடி உயரத்தில் தூண் எழுப்பி வருகிறேன்என் முன்னோர் நினைவாக.

தாமரைத் தொட்டி 1இல் செங்கழுநீர் மலர்கிறது நீலோற்பலம் மலர்கிறது அல்லி தேடுகிறேன். வெள்ளை மலராக. தாமரைத் தொட்டி 2இல் செந்தாமரை நன்றாக இலைகள் விரிகின்றனதாமரைத் தொட்டி 3இல் வெள்ளைத் தாமரை இலைகள் வரவில்லை.

விரால், யப்பான் வகை மீன்கள் மூன்று தொட்டிகளிலும் வளர்கின்றன. கொசுக் குடம்பிகளை உண்கின்றன.

மாஞ்செடிகள் இலை விரித்துக் கிளை பரப்புகின்றனநெல்லி செடிகள்அடர்ந்து கிளை விடுகின்றன. திருக்கோயில் திருமரமே நெல்லி.
எலுமிச்சை செடிகள் வளர்கின்றனமாதுளை செடிகள் வளர்கின்றன.

கடும் காற்று வாழை இலைகளைக் கிழித்தாலும் குருத்துகள் விரிந்துகொண்டே 15 வாழைகள் வளர்கின்றன.பக்கவாட்டில் வாழைக் குட்டிகள் முளைக்கின்றனஒரே ஒரு வாழை குலை ஈன்றுளதுநாகதம்பிரான் வளவுக்கு முள் வேலி அடைத்து மட்டை வரிந்து அடி அகல 2அடி ஆழ 15 அடி நீளக் கிட்ங்கு அகழ்ந்து,.குளத்துச் சேற்றால் கிடங்கை நிரப்பி 20 வாழைக்கன்றுகள் நட்டுள்ளேன்.

நந்தியாவட்டைகள் பூத்துக் குலுங்குகின்றன.
செம்பருத்திச் செடி 10 தரும் பூக்கள் பல்வேறு வண்ணங்களில் விரிகின்றன.

மல்லிகைச் செடிகள் 3இல் மொட்டுக்களும் மலர்களும் மணம் வீசுகின்றன.

அரலிச் செடிகள் வெள்ளைதீச் சிவப்பு,.இளம் சிவப்புமென்சிவப்புமஞ்சள் என நான்கு வண்ணங்களில்.பூத்துக் குலுங்குகின்றன.

பெரும் கொடிகள் மலர்கள் மஞ்சளிலும் ஊதாவிலும்.பூக்கின்றன.

காகிதப் பூச்செடிகள்.4 வெள்ளைகபிலபட்டுச் சிவப்பு வண்ணங்களில் பூத்து வளர்கின்றன.

கொடி மரங்கள் மஞ்சள் வெள்ளை வண்ணங்களில் விரிகின்றன.

அழகுக்கான ஈச்சம் பிள்ளைகள் இரண்டு 15 நாள்களுக்கு ஒருமுறை குருத்து விரிக்கின்றன.

பாதிரிச் செடி இளம் சிகப்பில் அப்பப்போ பூத்துக் கண் சிமிட்டுகிறது.

இவையெல்லாம் அருள்மிகு பிள்ளையார் திருவருளால் பூத்து நாள்தோறும் காலை 0630 தொடக்கம் நகம் தேய ஆய்ந்து கூடைக்குளிட்டுவழிபட நான் எடுத்துச் செல்ல மலர்கின்றன.

இட்லிக்கும் தோசைக்கும் மா அரைத்து வைத்துள்ளேன்அப்பப்போ சுடுவேன். பிட்டு அவிக்கிறேன்,உப்புமா கிளறுகிறேன்.
சோறு சமைக்கிறேன் சாம்பார் சமைக்கிறேன் தயிர் நிறைய வைத்திருக்கிறேன். சிவகாமி விட்டுச்சென்ற குழம்பு கூட்டு கீரை இன்னமும் உறைகுளிர் பெட்டியிலிருந்து அப்பப்போ எடுத்து சேர்த்துக் கொள்வேன்.

என்னோடு வளர்கிற நாய் வள்ளி. அதற்காகப் பாண் வாங்கி வைத்திருக்கிறேன் அப்பப்போ சோறும் தயிரும் கொடுப்பேன்.

தையல் என்றொரு உதவியாளர்அவருக்கு மகன் கயன். இருவரும் காலை மணிக்கு வருவார்கள் திருக்கோயிலில் செடிகளுக்கு நீர் இறைப்பார்கள். வீட்டு வளவில் செடிகளுக்கு நீர் இறைப்பார்கள் வீட்டைச் சுத்தம் செய்வார்கள் 10 மணிக்குப் புறப்படுவார்கள்.

நாள்தோறும் திருக்கோயில் திருப்பணிக் கட்டுமானப் பணியாளர்கள் வருவார்கள்.

இலங்கைமலேசிய நூலகங்களுக்கு நூல்கள் தமிழக அரசும் தனியாரும் நூல்களை வழங்கல்திருவள்ளுவர் சிலை கொண்டுவரல்வழிபாட்டுப் பயணக் கப்பல்கடற்றொழில் சட்டமியற்றல்உயிரப் பலித் தடைச் சட்டமியற்றல்என ஈழத் தமிழ் மக்களுக்காகப் பங்களிக்கிறேன்.

சிவசேனைப் பணிகள் செய்கிறேன். இறக்குவானை மன்னார் வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி நல்லூர் என என்னை அழைப்போருக்கு ஆலோசனை தருவதும் அவர்கள் நிலைகளை உலகுக்கு எடுத்துக் கூறுவதும் அப்பப்போ பயணங்களை மேற்கொள்வது எனக்கு விருப்பமான பணிகள். தில்லி செல்வேன்பங்களூர் செல்வேன்கோவா செல்வேன்இராசபாளையம் செல்வேன்கோலாலம்பூர் செல்வேன்சிங்கப்பூர் செல்வேன்ஆத்திரேலியா செல்வேன்அமெரிக்கா செல்வேன்கனடாவுக்கு அழைத்துள்ளார்கள்.

ஆவின அறவோராக இலங்கையில் மாடுகளைக் கொலைசெய்தல் மாட்டிறைச்சி விற்றல் தொடர்பாக நான் பங்களிக்கும் பணிகள் வெற்றிப்படிகளையே தந்துளஉண்ணாநோன்புஊர்வலம்வரவேற்புபாராட்டு,சுவரொட்டிசெய்தி அறிக்கை எனப் பங்களிக்கிறேன்.

திருமணம் இறப்பு எனச் சொல்லி வரும் நிகழ்வுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கிறேன்.

காவல்துறை புலனாய்வுத்துறை பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவு என வருவோர்க்கு ஒத்துழைப்புக் கொடுக்கிறேன்.

தருமபுரம் 10 ஏக்கர்பரந்தன் 38 ஏக்கர்மறவன்புலவில் 10 ஏக்கர் என நெல்வயல்களில் இந்த ஆண்டு நெல் விளைச்சலுக்குப் பலருக்குக் குத்தகைக்குக் கொடுத்துள்ளேன்.

யாழ்ப்பாணம் அய்யனார் கோவிலடியில் உள்ள வீட்டை இரு குடும்பங்களுக்கு வாடகைக்குக் கொடுத்துள்ளேன். கொழும்புக்குச் செல்லும்பொழுது கேசவனார் வீட்டில் பராமரிப்புப் பணிகள் செய்வேன். சென்னையில் வீட்டடையும் தாத்தா நானோ வண்டியையும் பார்த்துக்கொள்கிறேன். மறவன்புலவில் வீடு,தாத்தா குட்டி யானை வண்டி பார்த்துக் கொள்கிறேன்.

மறவன்புலவில் இருந்துகொண்டே சென்னையில் காந்தளகம் கிளிநொச்சியில் காந்தளகம் எனப் புத்தக விற்பனையை ஊக்குவிக்கிறேன். தேவாரம் இணையத்தளப் பணிகள் பன்னிரு திருமுறை மொழிபெயர்ப்புப் பணிகள் இவற்றை இங்கிருந்து பார்த்துக்கொள்கிறேன்.

மின்சாரம், தொலைப்பேசி, இணையம், மின்னஞ்சல், முகநூல், கட்புலனி, அதிரலை என யாவும் மறவன்புலவில் கிடைக்கிறது. மடிகணிணி, கைப்பேசி, அச்சான், ஊடுருவி என மின் பொறிகள் தரும் துணையே துணை.

77 வயது முடிந்து 78 வயதாகிறது. கடந்த இரு ஆண்டுகளாக நாடித் துடிப்புச் சீராக இல்லை அதனால் என் உடல்நிலையில் ஏதும் மாற்றம் தெரியவில்லை. உடலில் சர்க்கரை அளவு சரியாக இருக்கிறது. இரத்த அழுத்தம் நிதானமாக இருந்தாலும் இரவில் குறைவதும் இயல்பு என மருத்துவர் கூறுவர். வாயுணவுக் குழாயினுள் செமித்த உணவு படுத்த நிலையில் மீள் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு..

காலை ஒரு மாத்திரை மாலை மூன்று மாத்திரைகள் ஊட்ட மாத்திரைகள் என உட்கொள்கிறேன்.

குறை ஒன்றும் இல்லை இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது.
நாள்களை எப்பொழுதும் போல எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
தூங்கும்பொழுதுஆகா இவ்வளவு பணிகள் செய்தேனே என்ற மன நினைவுடன் இறைவனை வழிபட்டுத் தூங்குவேன்.
புலர் காலை எழுந்துவிடுவேன். நாளாந்தக் கடன் முடித்து வழிபடுகையில் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் வழிபடுவேன்.

சென்னையில் தை, மாசி 2019

21.01.2019 சென்னை வந்தேன். இரண்டு மாத காலமே சென்னையிலிருந்தேன்.  முழுமையாக முயற்சியின் விளை நிலமாக எனக்கு இருந்த காலமே இரு மாதங்கள்.
சென்னை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீச்சரம் கோயில்,
மதுரை அருள்மிகு மீனாட்சி உடனுறை சுந்தரேசுவரர் கோயில்
இராசபாளையம் அருள்மிகு மாப்பிள்ளைப் பிள்ளையார் கோயில்
பிடதி அருள்மிகு பார்வதி உடனுறை பரமேச்சரன் கோயில்
வழிபட்ட திருக்கோயில்கள்.
நாள் தோறும் காலையும் மாலையும் நினைக்கும் பொழுதுகளிலும் உண்ணும் பொழுதுகளிலும் தூங்கும் போதிலும் அருள்மிகு வள்ளைக்குளப் பிள்ளையாருக்கு நன்றி சொல்லிக் கொள்வேன்.
மகிழ்ச்சி, உற்சாகம், ஆற்றல், திறமை இடையறா உழைப்பு இவை என்னிடம் சிறிதளவேனும் உள்ளதெனில்அவரின் அருள் அன்றி வேறென்ன?
சிவகாமியை மகளாகத் தந்தவர் பிள்ளையார். கேசவனை ருமகனாகத் தந்தவரும் பிள்ளையார். அரன்நாநமக்குப் பிள்ளையார் தந்த புகழ் அல்லவா. 
பிள்ளையார் எனக்குத் தந்த மச்சி, கயல்விழி, முருகவேள், பிஞ்ஞகன் புறத்தே முரணாக உள்ளவராகக் காட்டுவர்.அவர்கள் மனத்தின் ஆழத்தில், உள்ளத்தின் அடியில், என் மீது அன்புப் பெருக்கம் என் மீது உண்டுஅந்த அன்புப் பெருக்கத்தை நினைப்பேன். முரணை நான் கருத்தில் கொள்வதே இல்லை.
21.1.2019இல் சென்னை வந்திறங்கிய முதல் ஒரு வாரம் என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. எந்த நேரமும் தூங்கினேன். தூங்குவது, உண்பது, தூங்குவது, உண்பது, என மாறி மாறி ஒரு வார காலம் கழிந்தது. நான் தொடர்ந்து உற்சாகமாகப் பணிபுரியும் நாள் வருமோ என்ற ஐயம் எனக்கு வந்தது.
அனைத்து மருத்துவப் பரிசோதனைகளுக்கும் ஆளானேன். மருத்துவரிடம் கலந்தாலோசித்தேன். எனக்கு எவ்விதமான நோய் அறிகுறியும் இல்லை என்றார் மருத்துவர். வழமையாக வயதுக்குரிய இயல்புகள் இருப்பதாக மருத்துவர் கூறினார்.
சிட்னியில் மருத்துவப் பரிசோதனையில் வயிற்றில் கிருமிகள் இருந்தால் அத்தகைய தூக்கம் வரும் எனமருத்துவர் சொன்னதை நினைவில் கொண்டேன். மீண்டும் மருத்துவரிடம் சென்றேன். வயிற்றில் கிருமிகளை அழிக்கும் மருந்துகளைக் கேட்டு வாங்கினேன். ஒரு வாரத்திற்கு பின்பு நான் வழமையாக, வழமையை விட உற்சாகமாகப் பணிபுரியத் தொடங்கினேன்.
அருள்மிகு வள்ளைக்குளப் பிள்ளையார் திருக்கோயில் திருப்பணி என் மனத்தில் மீநின்றது. நிதி திரட்டவேண்டும், அடித்தளக் கட்டு வரைபடம், பொருள் பட்டியல் காணவேண்டும். கோயில் மணி, கற்சிலைகள் செய்யவேண்டும்.
மதுரையில் 17 கல்வி நிறுவனங்களையும் இருபத்தொரு ஆலைகளையும் சொந்தமாக வைத்திருக்கும் திரு.கருமுத்து கண்ணன் அவர்கள், அருள்மிகு வீரகத்திப் பிள்ளையார் கோயில் மணியையும் நடராஜர் சிலையையும் செய்து தருவதாக ஒப்புக்கொண்டார். மதுரையிலும் கும்பகோணத்திலும் சிற்பிகளிடம் விலைக்கூறு பெற்றேன். கொடுத்துள்ளேன்.
இராஜபாளையத்தில் பஞ்சு வணிகர் திரு இராதாகிருஷ்ணன் இராஜா அவர்கள்அருள்மிகு வீரகத்திப் பிள்ளையார் கோயிலுக்காகத் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் தனித்தனியாக மூன்றரை அடி உயரக் கற்சிலை வடிவங்களைச் செய்து தர ஒப்புக் கொண்டுள்ளார். மதுரைச் சிற்பக் கலைக்கூடத்தில் விலைக்கூறு பெற்று அனுப்பினேன்.
அருள்மிகு வீரகத்திப் பிள்ளையார் கோயில் கருவறை அடித்தத்துக்காக raft foundation அடித்தளக் கட்டுமான வரைபடத்தையும் கட்டுமானப் பொருள்களின் பட்டியலையும் சென்னையில் கட்டடக் கலைஞர் திரு. நாராயணசாமிஅவர்கள் தயாரித்துத் தந்தார்.
இராஜபாளையத்தில் இராம்கோ நிறுவனர் இராமசுப்பிரமணிய இராஜா 2016இல் அருள்மிகு வீரகத்தி பிள்ளையார் கோயிலுக்காக 3500 சீமெந்துப் பைகள் நன்கொடையாகத் தந்தார். 2017இல் அவர் மறைந்தார். 2.3.19 அன்றுஇராஜபாளையத்தில் அவர் நினைவிடத்துக்குச் சென்றேன். அஞ்சலித்தேன்.
3500 பைகளில் 2016இல் 200 பைகள் தந்தனர். 2019 தையில் 560 சிமெந்துப் பைகளைத் தந்தனர். சென்னையில் இராம்கோ நிறிவனம் சென்று மூத்த அலுவலர்களைச் சந்தித்து வந்தேன். அவர்கள் பணி தொடரத் தொடரச் சீமெந்து தருவார்கள்.
www.vallakulam.com மின்னம்பல தளத்தில் தரவுகள் ஏற்ற முடியாது தவிப்பேன். சேலம் திரு. முரளி என் மென்பொருளாளர். அவரிடம் சொல்லியுள்ளேன். முன்பு அவர் இணக்கித் தந்தவர். என் மகன் பிஞ்ஞகன் கருத்துக்கமைய www.vallakulam.com மின்னம்பல தளத்தை இயக்கிவருகிறேன்.  
அடுக்குத் தீபம், திருமுடி, தும்பை என்பன அருள்மிகு வீரகத்தி பிள்ளையார் கோயிலுக்காக நேற்று வாங்கி வந்தேன். 6,000 ரூபாய் செலவில்.
தேவாரம் தளப் www.thevaaram.org பணிகளில் கடந்த 2 மாதங்களாக ஈடுபட்டேன்.
தெலுங்கில் இதுவரை 12 ஆயிரம் பாடல்களை மொழி பெயர்ப்பிர்த்துள்ளேன். அவற்றை மாதிரிப்புத்தகங்களாக்கினேன். திருமலை திருப்பதி தேவத்தானத்தில் கொடுப்பேன். மொழிபெயர்ப்பாளருக்குக் கூலி வாங்கிக் கொடுக்கவேண்டும். திருப்பதி போகவேண்டும். திருக்கோவையார், 11ஆம் திருமுறை, திருமந்திரம் புத்தகமாக்கியபின் இந்த வாரத்தில் திருப்பதி போவேன்?
கோலாலம்பூரில் திருவாசகம் லாய் மொழிபெயர்ப்பில் ஏறத்தாழ 20 மொழிபெயர்ப்பாளர் பங்கேற்பர்.வர்களை ஊக்குவித்தேன். ஏறத்தாழ 400 பாடல்கள் மொழிபெயர்த்துத் தந்துள்ளர். எஞ்சியதை இந்த வாரம் தருவார்கள் போலும். தந்ததும் பக்கமாக்கிப் புத்தகமாக்க வேண்டும். சிவபுராணம் பகுதியை மட்டும் புத்தகமாக்கித் தருமபுரம் ஆதீனம் மற்றும் நிதி நன்கொடை தரும் புரவலர்களுக்கு அனுப்பினேன்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கவுகாத்தியில் திருமதி மாயா என்பவர் திருவாசகத்தை அசாம் மொழிக்கு மொழி பெயர்த்து தருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அவரோடு தொடர்பு கொண்டு ஆவன செய்து வருகிறேன்.
மியன்மார் மொழியில் ஏற்கனவே வெளிவந்த திருவெம்பாவை இருபது பாடல்கள் கொண்ட நூலை மீண்டும் அச்சடிக்கவும் மியன்மார் மொழிபெயர்ப்பை தேவாரம் தளத்தில் சேர்ப்பதற்காக என் முயற்சி கடந்த இரு மாததத்தில்.
தேவாரம் தளத்தில் கிருமிகள் நுழைந்து உள்ளதாகத் தளப் பொறுப்பாளர் anusisoft தெரிவித்தார். சேலத்தில் மென்பொருளாளர் திரு. முரளி அவர்கள் வழியாக அந்தத் தளத்தின் தரவுப் பகுதியை MySQL முற்று முழுதாக மீளமைத்தேன். கூலியாகத் தேவாரம் தள நிதியிலிருந்து ரூ. 25,000 ரூபா கொடுத்தேன்.
www.muruganpaadal.com மின்னம்பல தளம் பாதிப் பணி முடிந்தது. மேலும் பணிக்கு நிதி தேவை. உரியவர்களிடம் பேசினேன்.
முன்பு நான் வெளியிட்ட உலகம் முழுவதும் தமிழர் என்ற வரைபடம் மற்றும் தகவல்கள் கொண்ட நூலை முழுமையாக இற்றைப்படுத்தி இக்காலத்து செய்திகளை உள்ளடக்கித் தயாரித்து காந்தளகத்தில் கொடுத்துள்ளேன். அப்பணிக்கு எனக்குக் கூலி தருவர்.
காந்தளகத்தில் கணக்குகளை சரிபார்த்தேன். இருப்பு, 31.3 வரை கணக்கு முடித்தல், பதிப்பு முயற்சிகளை ஊக்குவித்தல், சசிகுமார் பணிகள், சசிரேகா பணிகள், புத்தகக் காட்சிப் பணிகள் என யாவற்றையும் கண்காணிக்கப்பகல் நேரத்தில் காந்தளகம் ஒரு வார காலம் சென்று வந்தேன்.
முன்பு அச்சிட்ட முறை முழுமையாக மாறியது. முன்புள்ள அச்சுமுன் தயாரிப்பு முறை மாறியுள்ளது. முந்தைய பதிப்புகளின் அச்சுமுன் தயார்நிலைகள் களஞ்சியத்தில் குவிந்துள. அவற்றை இன்றைய பதிப்பாக்கத்துக்கு மாற்றவேண்டும் உதவியாளரைத் தேடினேன், கிடைக்கவில்லை.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைச் சைவர்களின் நிலையை எடுத்துக் கூறிய பொழுது, என்னைவாழ்த்தியோர், நகைத்தோர், பாராட்டியோர் எனப் பலர் இருந்தார்கள். 
இலங்கையின் மூத்த ஊடகர்கள், மூத்த அரசியலார், சென்னைக்குத் தொலைபேசியில் அழைத்து, ஐயா நீங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை இப்போது நாங்கள் நேரடியாக காண்கின்றோமே எனப்பாராட்டுகிறார்கள். என்னைப் பார்த்து நகைத்தவர்கள் முழுமையாக என் பக்கம் வந்துள்ளர்.
இலங்கை நிலைமை தொடர்பாக, நான் வெளியிடும் அறிக்கைகள், கூறும் கருத்துகள் எழுதும் கட்டுரைகள் சென்னையில் யாழ்ப்பாணத்தில் கொழும்பில் கோலாலம்பூரில் செய்தி ஊடகங்களில் வெளியாகின்றனஉலகம் முழுவதும் உள்ள மின் ஊடகங்களில் அவை வெளியாகின்றன.
சென்னையில் தொலைக்காட்சிப் பேட்டிகளுக்காககப் போய் வந்தேன். இலங்கையில் இருந்து தொலைக்காட்சிகள் குரல்வெட்டுக் கேட்பர். பேசுவேன். 
என் கருத்துக்கு மிகவும் மதிப்புக் கொடுத்து அவற்றை வெளியிடுகிறார்கள். மாற்றுக் கருத்துச் சொல்கிறார்கள்.சிலர் மோசமாகத் திட்டுகிறார்கள். சிலர் அளவுக்கு மீறிப் பாராட்டுகிறார்கள்.
இவற்றை எல்லாம் நீங்களும் ஊடகங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பங்களூர், பிடதி, தில்லி, மதுரை என என் பயணங்கள் இலங்கை நிலை தொடர்பான பயணங்களே.
பெங்களூர் பிடதி தில்லி மதுரை என நான் சென்ற இடங்களில் தங்கிய விடுதிகள் மிக சிறந்த விடுதிகள் மிக நல்ல வசதியுடன் தங்கினேன்.
மதுரைக்குத் தொடர் வண்டியில் சென்று மீண்டேன் பெங்களூருக்கும் தில்லிக்கும் விமானத்தில் சென்று மீண்டேன்.
பெருமளவு வீட்டில் சமைத்து சாப்பிட்டேன். தோசை, இட்லி, சப்பாத்தி, உப்புமா, ரவை இட்லி, பிட்டு, கூட்டு, பொரியல், சாம்பார், தயிர், தினை, சாமை, வரகு, அரிசி என வகைவகையாகச் சமைத்துச் சாப்பிட்டேன்.
என்றாலும் நண்பர்களுக்காக உணவகங்கள் செல்வேன். சென்னையில் மதுரையில், இராசபாளயத்தில்,தில்லியில், பெங்களூரில்  நல்ல உணவகங்களில் உணவு கொண்டேன்.
வடக்கே தில்லியில் பாராட்டினார்
தெற்கே மதுரையில் பாராட்டினர்
சென்னையில் அடையாறு பாராட்டு விழா
சென்னையில் அசோக் நகர் பாராட்டு விழா
என்னை ஊக்குவிக்கும் உற்சாகிக்கும் அறிஞர்கள் ஆர்வலர்கள் ஆற்றலர்கள் அரசியலாளர்கள் சைவ சமயப் பணியாளர்கள் நடுவே நான் மகிழ்ந்து மகிழ்ந்து நெஞ்சம் நிறைந்து நிறைந்து  நீடித்துப் பணிபுரிய வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கிறேன்.
அண்ணா கண்ணனின் இல்ல விழா சென்றிருந்தேன். உறவுகள், பதிப்பாளர் அன்பர்கள் திருமண விழாக்களுக்குப் போயிருந்தேன்.
 திருமுறை இசை விழா சென்றிருந்தேன். நடன நிகழ்ச்சி பார்த்தேன். பேச்சு நிகழ்ச்சிகளுக்குப் போயிருந்தேன்.
என்னைத்தேடி வீட்டுக்கு அறிஞர்கள் வந்திருந்தார்கள். உணவுக்கு அழைத்துச் சென்றேன். வெளிநாட்டில் இருந்து பலர் வந்திருந்தார்கள். பாராட்டினார்கள். உதவி வேண்டுமா என்று கேட்டு உற்சாகிக்கிறார்கள்.
தொலைபேசி, கைபேசி, இணையம், மின்னஞ்சல், புலனம் என்கின்ற என்னாப்பு, வைபர், முகநூல் எனச் சமூக ஊடகங்களில் நான் பயணிக்கிறேன்.
வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க, துணிகள் துவைக்க, பெட்டிபோட, சமையல் சட்டிகள் கழுவ, என் தாயாரை மிகக் கவனமாகப் பேணிய சோதி அம்மையார் நாள்தோறும் இரு மணி நேரம் வந்து போவார்கள்.
என் மனம் இங்கில்லை. மறவன்புலவில் திருப்பணி. விட்டகுறை தொடரவேண்டும். இராம்கோ நிறுவனத்தார் தந்த 560 சீமெந்துப் பைகள் கெட முன் கட்டவேண்டும்.
நாளாந்தப் பூசனை, சிறப்பு நாள் வழிபாடு எனத் திருக்கோயில் கடமைகள், பூசகர் சம்பளம் யாவும் என் கவனத்தை ஈர்ப்பன.
சந்தனக் கன்றுகள், தாமரைத் தொட்டிகள், மல்லிகை, செவ்வரத்தை, நந்தியாவட்டை, நித்திய கல்யாணி, நெல்லி, வெற்றிலை, எலுமிச்சை, கறிவேப்பிலை, கொடிப் பூச் செடிகள், மாதுளைகள், வாழைகள், அரளிகள் கோயிலுள் என்னைத் தேடுவன.
வள்ளைக்குளம் நிரம்பியுளது. குளிக்க அழைக்கிறது. கோயில் காணிகளான நித்திலபுலம், இணி, தோப்பு வளவு வேலிகள் திருத்த, புதிதாக அமைக்க என்னைத் தேடுகின்றன. 
தையல், கயன், தோட்டக்காரர் சம்பளங்கள் என் வரவைக் காத்திருப்பன. வள்ளி என்னைக் கண்டால் பாய்ந்து தழுவக் காத்திருக்கிறது.
4700 கத்தரிக் கன்றுகள், 300 பூசனிக் கன்றுகள் பூத்தனவாம், காய்த்தனவாம். எனக்காகக் காத்திருப்பன.
மறவன்புலவில் 10 ஏக்கர், தருமபுரம் உழவனூரில் 10 ஏக்கர், பரந்தனில் 39 ஏக்கர், நெல் விதைப்பித்தேன், அறுவடை முடிந்தது. கணக்குகள் என்க்காகக் காத்திருக்கின்றன.
ஐயனார்கோயிலடி வீட்டில் குடியிருப்பவர் விட்டுச் செல்ல மறுக்கிரார். வாடகையும் தருவதில்லை. பார்க்கிறேன்.
21.3.2019 புறப்படுகிறேன். காலை கொழும்பு செல்வேன். தொடர்வண்டியில் பயணித்து மாலையே மறவன்புலவு செல்வேன். பங்குனியின் வியர்வை சொட்டும் வெயில் எனக்காகக்  காத்திருக்கிறது. வைகாசி விசாகத்தில் சோழகம் பிறக்கும் வரை காற்றற்ற சூழலில் வயல்வெளி வெயிலின் சூட்டில் உள்ளம் கொக்கரிக்கும். உடல் வியர்த்தளிக்கும்.
இதற்கிடையே இன்று 14.3.19 ஓர் அழைப்பு. கங்கை நதிக் கரை வருக. அரித்துவாரம் வருக. ஆச்சிரமத்தில் தங்குக என அழைப்பு. 18.3.2019 அரித்துவாரத்திலும் இருடிகேசத்திலும் கங்கைக் குளியலிலும் போலும். யார் அறிவார் இறைவன் கட்டளைகளை?