1961 மார்ச்சு ஈழத்தில் அறப்போர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றவாறே தமிழகத் தலைவர்களிடம் ஆதரவு கேட்டோம். கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட இலங்கை மாணவர்கள் பலருடன் சேர்ந்தேன். இலங்கைத் தமிழர் அறப்போருக்கு ஆதரவாகச் சென்னைக் கடற்கரையில் மாபெரும் கூட்டத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்த உதவினேன்.
யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன், அறப்போரின் உறுப்பாக ஈழத் தமிழர் அஞ்சல் நிலையம். பெரு மர நிழலில் ஈழத்தமிழர் அமைத்த அஞ்சலகத்துள் அஞ்சல் தலைகள் விற்கும் பணியில் இரு நாள்கள் நான்.
1963 ஆகத்தில் கொழும்பில் தந்தை செல்வா வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர் ஈ எம் வீ நாகநாதன் அங்கிருந்தார். பட்டமளிப்பு விழாவுக்குச் சென்னைக்குச் நான் செல்வதற்குரிய உரிமத்தை வாங்கித் தருவதாகத் தந்தை செல்வா என்னிடம் கூறினார். இராணியின் வழக்குரைஞர் மு திருச்செல்வத்தின் சென்னைப் பயணத்துக்கு உதவுமாறு என்னை கேட்டார். ஒப்பினேன்.
மருத்துவர் ஈ எம் வீ நாகநாதன் கொழும்புக் கோட்டைக்கு அழைத்துச் சென்றார். அன்னியச் செலவாணிக் கட்டுப்பாட்டு ஆணையர் அலுவலகத்தில் வாதாடினார். சென்னைப் பயணத்துக்கு உரிமம் பெற்றுத் தந்தார்.
1963 ஆகத்து செப்டம்பரில் சென்னைக்கு இராணியின் வழக்குரைஞர் மு திருச்செல்வம் தலைமையில் வந்த தமிழரசுக் கட்சி சார்ந்தவர்களுக்கு உறுதுணையானேன். சிங்களம் மட்டும் சட்டத்துக்கு எதிராக அரசாங்க எழுதுவினைஞர் சங்கத் தலைவர் கோடீஸ்வரன் தொடுத்த வழக்கு. அரசியலமைப்பு நுணுக்கங்கள் தொடர்பாக ஆலோசிக்க, சென்னையின் மூத்த வழக்குரைஞர் நம்பியார் மற்றும் மேனாள் நீதியரசர் கைலாசம் ஆகியோரிடம் அழைத்துச் சென்றேன்.
1963 அக்டோபர் தொடக்கம் 1964 வைகாசி வரை கொழும்பில் வாழ்ந்தேன். அக்காலங்களில் இராணியின் வழக்குரைஞர் மு திருச்செல்வத்துடன் தந்தை செல்வாவின் இல்லத்திற்கு சென்று வருவேன். தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் யாவரையும் அங்கு சந்திப்பேன்.
கொழும்பில் பம்பலப்பிட்டி மெல்பன் நிழற்சாலை. அண்ணர் என நான் அன்புடன் அழைத்த மூத்த உறவினர் பேராசிரியர் முனைவர் ஆ. கந்தையா அவர்களுடன் தங்கி இருந்தேன். அக்காலத்தில் அவருக்கு அகில இலங்கை இந்து மாமன்றம், திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை ஆகியவற்றில் பணி. சேர் கந்தையா வைத்தியநாதன் அவ்வமைப்புகளின் தலைவர்.
அண்ணர் கந்தையா அழைத்துச் சென்றார். சேர் கந்தையா வைத்தியநாதன் இல்லம் சென்றேன். அவருக்கு அலுவலக, நூலகப் பணிகளில் உதவினேன். அவரோடு திருக்கேதீச்சரம் செல்வேன். அங்கும் அவருக்கு உதவுவேன்.
அண்ணரைச் சந்திக்க வருபவர் கொழும்பு இந்து வாலிபர் சங்கச் செயலாளர் காரைநகர் ப கதிரவேலு. சங்கத்தின் இதழ், இந்து இளைஞன். என்னை எழுதச் சொல்வார். ஒவ்வொரு இதழிலும் என்னுடைய பங்களிப்பு. நினைவில் உள்ள கட்டுரை, பேராறு பெரும் கழகம். இலங்கையின் இந்து இளைஞர் சங்கங்களை ஒருங்கிணைத்து ஒரே குடையுள் கொண்டு வருகின்ற கருத்தியல்.
தொடர்ந்து கொழும்பு இந்து வாலிபர் சங்கக் கூட்டங்களுக்குப் போகத் தொடங்கினேன். அங்கு சந்தித்தவர்களே, எழுதுமட்டுவாழ் அ தில்லைநாதர், கொழும்புத்துறை மா க ஈழவேந்தன், காரைநகர் ஐ தி சம்பந்தன், ஏழாலை க கந்தசாமி, விவேகானந்த சபை மு சிவராசா.
இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர் கரவெட்டி மு சிவசிதம்பரம். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியார். மேலே குறிப்பிட்டவர்களுள் கதிரவேலுவைத் தவிர மற்றவர்கள் தமிழரசுக் கட்சியினர். இரு கட்சிகளும் மோதிக் கொண்டிருந்த அரசியல் சூழ்நிலையால் சங்கத்திலும் சார்ந்த முரண்கள் வருவதும் மறைவதும் இயல்பு.
கதிரவேலு, தில்லைநாதர், ஈழவேந்தன், சம்பந்தன் நான் ஆகியோர் பணிகளில் இணைந்தோம் ஒருவருக்கொருவர் நெருக்கமானோம். சனிக்கிழமை மாலையும் ஞாயிற்றுக்கிழமை காலையும் பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நாங்கள் கூடுவதும் பணிகளை மேற்கொள்வதும் வழமை.
1964 வைகாசி. இந்தியாவில் முதுநிலைப் பட்டத்துக்கான இந்திய அரசின் புலமைப் பரிசில் பெற்றேன். ஈராண்டுகள் பட்ட மேல் படிப்பு. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மீண்டும் மாணவன். விலங்கியல் முதன்மை பாடம். கடல் உயிரியல் துணைப் பாடம். சென்னைப் பல்கலைக்கழக முதுநிலை மாணவர் விடுதியில் கடற்கரை ஓரத்தில் தங்கினேன். பேருந்தில் சேத்துப்பட்டு சென்று வந்தேன்.
சென்னை அவ்வை சண்முகம் சாலை. அங்கே இந்திய அரசின் கலாச்சார நடுவம். இலங்கை மாணவர் சங்கக் கூட்டம். வருக என அழைத்தனர். தமிழகம் முழுவதும் தோராயமாக 1500 இலங்கை மாணவர். வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு என யாவிலிருந்தும் வந்தனர். சென்னைப் பல்கலைக்கழகப் பட்டங்கள் பெறப் பயின்றனர்.
1964 ஆவணியில் அக்கூட்டத்தில் தலைவராக ஒரே மனதாக என்னைத் தேர்ந்தனர். ஓராண்டு காலப் பதவி. பல்வேறு பதவிகள், கல்லூரிகளுக்கான சார்பாளர் எனக் குழு அமைந்தது. இந்தியக் கலாச்சார நடுவத்தின் அலுவலர் வருவோருக்கு விருந்தோம்புவர். இதற்காகவே மாதம் ஒருமுறை கூடுவோம்.
தேர்வு எழுதிய மாணவர். சில பாடங்களில் வெற்றி பெற முடியாதவர். மார்ச் அல்லது செப்டம்பர் தேர்வு. மார்ச்சில் வெற்றி இல்லை என்றால் செப்டம்பரில் எழுதலாம் செப்டம்பரில் வெற்றி இல்லை என்றால் மாற்றி எழுதலாம். கல்லூரி விடுதிகளில் தங்கார். வெளியே அறை எடுத்து தங்கி படித்து தேர்வு எழுதுவார்.
பட்டப் படிப்புக் காலத்தில் இலங்கைக் கடவுச்சீட்டு, இந்திய நுழைவுரிமம் இரண்டும் கல்லூரியின் சான்றிதழுடன் மாணவருக்குக் கிடைக்கும். மீண்டும் தேர்வு எழுத வேண்டுமானால் கடவுச்சீட்டுக் காலம் நீடிக்க, நுழைவுரிமக் காலம் நீடிக்க, இலங்கை இந்திய அரசு அலுவலகங்களில் மாணவர் காத்திருப்பர். வேறும் ஒரு நெருக்கடி. இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு தகுந்த காரணம் வேண்டும். அந்தக் காரணத்தைக் காட்டி வெளியேறும் உரிமம், கொழும்பில் சிறீமாவோ அரசிடம் பெறவேண்டும்.
மார்ச்சில் தோல்வியுற்று செப்டம்பரில் எழுதும் மாணவர், இலங்கைக்குத் திரும்பவதில்லை. தனி அறைகளில் தங்கி, தேர்வுக்குப் படிப்பர். தேர்வு எழுதுவர். தேர்வு எழுதி முடிந்ததும் கடவுச்சீட்டைப் புதுப்பிக்க சென்னை, நுங்கம்பாக்கம், இரட்லண்டு வாயில், இலங்கைத் துணைத் தூதரகத்துக்கு செல்வர். அங்கே சுசந்த டி அல்விசர், துணைத் தூதர்.
இலங்கை மாணவர் அங்கு சென்றனர். விண்ணப்பித்தனர். கடவுச்சீட்டுக் காலத்தை நீடிக்க மறுத்தார் சுசந்தா. இவ்வாறான 30-40 மாணவர் என்னிடம் வந்தனர். இலங்கை மாணவர் சங்கத் தலைவர் நீங்கள், துணைத் தூதரிடம் பேசுங்கள் என்றனர்.
ஒரு நாள் பிற்பகல் 2 மணி அளவில், 30-40 கடவுச்சீட்டுகள், உரிய விண்ணப்பங்கள், நுங்கம்பாக்கத்தில் துணைத் தூதரகம் சென்றேன். துணை தூதரைப் பார்த்தேன். கடவுச்சீட்டுக் கால நீடிப்புக் கட்டாயத்தைச் சொன்னேன்.
மாணவராகச் சென்னைக்கு வந்திருக்கிறீர்கள். கல்லூரியில் படிக்க வந்திருக்கிறீர்கள். பயண முகவர் பணி உங்களுடையது அன்று. ஒவ்வொருவரையும் தனித்தனியாக விண்ணப்பிக்கச் சொல்லுங்கள். அரசின் கொள்கைகளுக்கு அமையத் தீர்மானிக்கிறேன் என்றார் சுசந்தா. சிறீமாவோ அரசின் கொடுமைக் கரங்கள் சுசந்தா வழி மாணவர் மீது பாய்ந்தன.
ஓராண்டுக்கு முன்பு பட்டமளிப்பு விழாவிற்கு வராது என்னைத் தடுத்த சிறீமாவோ அரசு. தந்தை செல்வா, ஈ எம் வி நாகநாதன் தலையீட்டால் உரிமம் பெற்று வந்தேன். திருச்செல்வத்திற்கும் குழுவினருக்கும் உதவினேன்.
சென்னையில் இலங்கை மாணவருக்கு என்னால் உதவ முடியவில்லை. அவர்கள் கடவுச்சீட்டுக் காலத்தை நீடித்தால், இந்திய அரசிடம் தங்கும் காலத்தை நீடிப்பர். சென்னை, எழும்பூர் காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் இதற்கான பிரிவு. அந்தப் பிரிவினர் நயமாக உதவுவர். அங்கு சிக்கல் இல்லை.
செப்டம்பர் தேர்வு முடிவுகள் வந்த பின் நீங்கள் இலங்கை போகலாம் என அவர்களுக்கு ஆறுதல் சொன்னேன்.
சென்னை கடற்கரை விடுதியில் இருந்து நாள்தோறும் பச்சையப்பன் கல்லூரிக்கு பயணிப்பதா? பச்சையப்பன் விடுதிக்கு மீண்டுவிடக் கூடாதா? விடுதிக் காப்பாளர் பேராசிரியர் சுந்தரலிங்கம்.
நான் கேட்ட உடனே விடுதியில் அறை தந்தார். விலங்கியல் துறை விரிவுரையாளர் ஈரோடு ஆறுமுகம், கணிதத் துறை விரிவுரையாளர் பிருதுவிராசர் இருவர் இருந்த அறைக்குள் நானும். 1964 கார்த்திகையில் வந்தேன்.
அக்காலத்தில் மதுரை, சாத்தையா என்ற தமிழ்க்குடிமகன், வேலூர் துரைமுருகன், சென்னை கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் மாணவர். தமிழில் உரையாற்றுவதில் அனைத்துக் கல்லூரிப் போட்டிகள் இவர்களுக்கு முதல் இடம். இவர்களோடு போட்டியாளர் மாநிலக் கல்லூரி மாணவர் வை கோபாலசாமி.
1964 65 ஜனவரி 25 திங்கள்கிழமை. கோயம்புத்தூரில் இருந்து ஜனார்த்தனன் வந்திருக்கிறார் என்றார்கள். நான் இருந்த தொகுதி பகுதியில் அவர் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தார். அன்று வகுப்பு நாள் எனினும் மாணவர்கள் போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.
அரங்கசாமி அக்காலத்தில் மாணவர் மன்றச் செயலாளர். துரைமுருகனும் போட்டியிட்டார். அரங்கசாமி வென்றார். இருவரும் எம்ஜிஆரைத் தெரிந்தவர்கள். போராட்டம் எனில் நாங்கள் கல்லூரியை விட்டுப் புறப்படுவோம். கடற்கரை நோக்கி ஊர்வலமாவோம். நாங்கள் புறப்படலாம் என பேசிக்கொண்டு இருந்த பொழுது பெருந்தொகையான காவலர் அங்கு வந்தனர்.
விடுதிக்குள் வராதீர்கள் எனக் காப்பாளர் பேராசிரியர் சுந்தரலிங்கம் காவலர்களைத் தடுத்தார். காவலர்களுள் ஒரு குழு அவரைச் சூழ்ந்தது. நாங்கள் ஒரு சிலர் பேராசிரியரைக் காப்பாற்ற ஓடினோம் அவரைச் சுற்றி நினறோம். எங்கள் மீது காவலர் தடியடி நடத்தினர். சற்று நேரத்தில் கண்ணீர் புகை குண்டுகள் விழத் தொடங்கின. விடுதிக்குள் ஓடி முகத்தை மூடிக் கொள்ளுங்கள் எனக் எனக்குக் கேட்டது. கையில் கிடைத்த நெகிழிப் கையால் முகத்தை மூட முயன்றேன் முடியவில்லை. மூக்கு கண் முகம் யாவிலும் எரிவு. முகம் கழுவக் குளியலறைக்குள் மாணவர் முண்டியடித்தனர்.
காவலர் வண்டிகள் வரிசையாக நின்றன. மாணவர்கள் அனைவரையும் வண்டிகளுள் ஏற்றினர். கண்ணீர்ப் புகைச் செறிவுச் சோர்வுடன் வண்டிகளுள் ஏறினோம். பேராசிரியர் சுந்தரலிங்கம் நான் இருந்த வண்டிக்குள் இருந்தார். சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனரா? மண்டபத்துக்கு கொண்டு சென்றனரா? நினைவிலில்லை.
மாணவர்களை வரிசையில் நின்றனர். பதிவேட்டுடன் காவலர்கள். ஒவ்வொருவரின் பெயர், வகுப்பு, பேராசிரியர் பெயர், பெற்றோர் பெயர், முகவரி என விவரங்களைப் பதிந்தனர். பதிந்தவர்களை மீண்டும் வண்டிகளுக்குள் அழைத்துச் சென்றனர்.
என் முறை வந்தது. இலங்கை மாணவன் என்றேன். விவரம் எதுவும் எழுதாமல் என்னைத் தனியாக்கினர். என்னை வண்டிக்குள் ஏற்றவில்லை. மூத்த அலுவலர் ஒருவர் வந்தார். அவர் என் விவரங்களை எழுதத் தொடங்கினார்.
1965 சனவரி 25.
1966 அக்டோபர். தமிழரசுக் கட்சியின் சார்பாக அரசில் உள்ளூராட்சி அமைச்சராக இராணியின் வழக்குரைஞர் மு திருச்செல்வம். அவர் என்னை அழைத்தார். அவருக்குத் தனிச் செயலாளர் ஆனேன்.
1963 ஆகத்தில் தொடங்கிய பணி. 1976 நவம்பர் 19ஆம் நாள் அவர் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தில் ஒருவனானேன். உதவியாளரானேன். தமிழரசுக் கட்சித் தொண்டனானேன். தமிழ் தேசிய உணர்வு என் வாழ்வானது.
1967 சனவரி முதலாக இலங்கை அரசின் கடற்தொழில் ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு அலுவலர் பணி. சம்பளப் பட்டியலில் ஒரு நிலைக்குக் கீழே அரசியல் உரிமை பெற்ற அரசு ஊழியர். அந்த நிலைக்கு மேலே அரசியல் உரிமை பெறாத அரசு ஊழியர். ஆய்வு அலுவலர் பணி, அரசியல் உரிமை இல்லாத அரசு ஊழியர் பணி.
அலுவலகப் பணி முடிந்ததும் மாலையில் கறுவாக்காட்டில் வாழ்ந்த மு இராணியின் வழக்குரைஞர் மு திருச்செல்வம் இல்லம் செல்வேன். அவருக்கு உதவுவேன். அவரும் துணைவியாரும் மக்கள் நால்வரும் என் மீது அளவற்ற பாசத்தினர். அவருக்குத் தம்பி இராஜேந்திரா. மூத்த ஆட்சிப் பணியர். அமைச்சின் செயலாளர் பதவியர். அங்கு வரும் அவரோடும் இல்லத்தாருடனும் அன்போடு பழகுவேன். திருச்செல்வத்தாரின் தங்கையும் அங்கு வருவார்.
பட்டப் படிப்பை முடித்து நான் பணியில் இருந்த காலத்தில் சூட்டி, நீலன் திருச்செல்வம் பேராதனையில் சட்டம் படித்தார். இரண்டாவது மகன் பானு, வாசுதேவன் இராயல் கல்லூரியில் படித்தார். மாலை வேளையில் பானுவுக்கு நான் வகுப்பு எடுத்த நாள்களும் உள. திருச்செல்வத்தின் மூத்த மகள் மகிழ்ச்சியாக இருப்பார். இரண்டாவது மகள் ஜானகி பாடசாலையில் படித்தார். புனிதம் அம்மையார் செஞ்சிலுவைச் சங்கம், மகளிர் அமைப்புகள், மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமாக இருந்தார். இவர்கள் அனைவருக்கும் நான் சச்சி. அங்குள்ள பணியாளருக்கு நான் புஞ்சி பாலா.
மு திருச்செல்வத்தோடு அவரது வண்டியில் கொள்ளுப்பிட்டியில் தந்தை செல்வா வீட்டுக்குப் பலமுறை சென்றேன். அமிர்தலிங்கம் இணையர், தென்னிந்திய திருச்சபை ஆயர் குலேந்திரன், மட்டக்களப்பு இராசதுரை, மாவட்டபுரம் கந்தசாமி, வரலாற்றுப் பேராசிரியர் பத்மநாதன், நீதியரசர் மாணிக்கவாசகர், மூத்த வழக்குரைஞர்கள் என்ன அவர் வீடு எப்பொழுதும் வருகையாளரால் நிறைந்திருக்கும். அக்காலத்தில் அத்தகைய அரசியலார், சான்றோர், நீதித்துறையர் ஆகிய பெரியவர்களோடு இயல்பாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன்.
1969 சனவரி. கொழும்பு வெள்ளவத்தை 41ஆவது ஒழுங்கை. வழக்குரைஞர் உருத்திரமூர்த்தியின் இல்லம். தமிழரசுக் கட்சிக் கொழும்புக் கிளையின் ஒன்று கூடல்.
1969க்குப் பின்னர் தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைக் கூட்டங்களுக்குப் போவேன். வெள்ளவத்தையில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்குரைஞர் உருத்திரமூர்த்தியின் வீட்டில் கூடுவர். மா க ஈழவேந்தன் தலைவர். உமா மகேஸ்வரன் செயலாளர், ஐ தி சம்பந்தன், டேவிட், உருத்திரமூர்த்தி, நான் எனச் சிலர் அங்கு கூடுவோம். மலையகத்தில் பணிபுரிந்த இராஜசுந்தரம், டேவிட்டோடு வருவார்.
1963லிருந்தே ஈழவேந்தனும் ஐ தி சம்பந்தனும் நானும் ஒன்றாகப் பழகுபவர்கள். பாசப்பிணைப்பு, கருத்தொருமித்த செயல் ஒருவருக்கொருவர் உதவி என இணைந்தோர். உருத்திரமூர்த்தி உமாமகேசுவரன் டேவிட் ஆகியோர் 1969க்கு பின்னர் தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளை கூட்டங்களில் எனக்கு அறிமுகம்.
டேவிட், இராஜசுந்தரம் என இருவர் அக்காலத்தில் வவுனியாவில் தமிழர் தொகையைப் பெருக்குவது தொடர்பாகப் பேசுவர். மலையகத் தமிழருக்கு அங்கு நிலங்களைப் பெற்றுக் கொடுக்க முயல்வர்.
மட்டக்களப்பின் பொருளாதார வளர்ச்சி, புணானை போன்ற எல்லைப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் என்பன பேச்சாகும். பம்பலப்பிட்டி மாடிக் குடியிருப்பில் வாழ்ந்த பெரியவர் ஒருவர் அங்கு வந்து எடுத்துக் கூறுவார். மலையகத்தில் நிலவரைவாளர் பணியில் இருந்த உமாமகேசுவரன் வார இறுதியில் கொழும்பு வருவார். எங்களோடு சேர்ந்து கொள்வார்.
மேற்கு மாகாணத்தில் தமிழரசு கட்சியின் பணிகளை விரிவாக்குவது பற்றி நாம் பேசியதாக நினைவில்லை மலையகம் கிழக்கு வடக்குத் தமிழரின் எதிர்காலமே கொழும்புக் கிளையில் பேச்சுக் கரு. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியுடனான அரசியல் மோதல் தொடர்பாகவும் அங்கு பேசுவோம்.
அரசியல் உரிமை இல்லா அரசு ஊழியர் என்ற மனோநிலை எனக்கில்லை. இலங்கைத் தமிழரசு கட்சியின் கொழும்பு கிளைக் கூடலுக்குச் செல்வேன். மு திருச்செல்வம் இல்லத்தில் அரசியலாரை, அறிஞர் சான்றோர் பெருமக்களைச் சந்திப்பதும் அரசியல் பேசுகையில் கேட்பதும் எனக்கு வழமை. அரசியல் கருத்துருவாக்கம் என்னுள் வளர்ந்தது.
11) 1973 ஏப்பிரல் முதல் வாரத்தில் செய்தி. சிங்கப்பூர் அரசின் வெளியுறவு அமைச்சர் இராசரத்தினம் கொழும்புக்கு வருகிறார். ஏப்ரல் 15-17ஆம் நாள்களில் கொழும்பில் தங்குகிறார்.
அச்செய்தியைப் படிக்கையில் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றச் செயலாளர் பேரின்பநாயகம் என்னுடன் இருந்தார்.
"கட்டுநாயக்கா வானூர்தியகத்தில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சருக்கு நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் வரவேற்பு கொடுக்குமா? வானூர்தியகத்தில் இருந்து கூப்பிடு தொலைவில் இருக்கிறீர்கள் அல்லவா?" எனக் கேட்டேன்.
"ஆகா.. மகிழ்ச்சியாகச் செய்வோம்" என்றார் பேரின்பநாயகம். உற்சாகமடைந்தேன்.
இலங்கை இந்து இளைஞர் பேரவை சார்பில் இலங்கை வெளியுறவு அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதினேன். சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் வருகிறார். கட்டுநாயக்கா வானூர்தியகத்தில் அவருக்கு இந்துக்களாகிய நாங்கள் வரவேற்பு கொடுக்க விரும்புகிறோம். உங்கள் ஒப்புதலை எதிர்பார்க்கிறோம் என எழுதினேன்.
இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் வரவேற்பு ஒழுங்குமுறைப் பிரிவுக்கு சென்றேன் கடிதத்தைக் கையளித்தேன். கேட்டுச் சொல்கிறோம் என்றனர். மூன்று நாள்களின் பின் என்னைத் தொலைப்பேசியில் அழைத்தனர். வர முடியுமா? எனக் கேட்டனர். சென்றேன்.
"வரவேற்பு என்றால் என்ன? எவ்வாறு வரவேற்பீர்கள்?" கேட்டனர்.
"வாழை இலையில் அரிசி பரவுதல். நிறைகுடம் மாவிலை தேங்காயுடன். இரு பக்கமும் குத்துவிளக்குகள். பெண்கள் இருவரின் ஆரத்தி. தோரணம், மாவிலை, தொங்கும் பூச்சரம். மங்கல இசையாக நாதசுவரம் தவில். இவற்றுடன் நாங்கள் நால்வர், ஆக, 10 பேருக்குள் வருவோம் என்றேன்.
கேட்டுச் செல்கிறோம் நாளை வாருங்கள் என்றனர். மறுநாள் சென்றேன். ஒப்புதல் கடிதம் தந்தனர். 15 04 1973 காலை பிரமுகர் அறை வாயிலில் இக்கடிதத்தை கொடுக்க. உள்ளே நுழைக. அலங்கரிக்க என்றனர்.
இலங்கை இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சண்முகநாதன். அவரே நீர் கொழும்பு இந்து இளைஞர் மன்றத் தலைவர். செயலாளர் பேரின்பநாயகம். இருவரும் உற்சாகத்தின் உறைவிடங்கள். இலங்கை வெளியுறவு அமைச்சகம் தந்த கடிதத்தின் செய்தியை அவரிடம் பகிர்ந்தேன். மகிழ்ச்சியாயினர். அடுத்த நடவடிக்கைக்குப் போகிறோம் என்றனர்.
15.04.1973 ஞாயிறு காலை 8 மணி. மங்கல இசை கருவியுடன் இருவர். இளம் பெண்கள் நால்வர். எங்களில் நால்வர். வரவேற்புப் பொருள்களுடன் கட்டுநாயக்க வானூர்தியகத்தின் பிரமுகர் அறைக்குள் புகுந்தோம். அரை மணி நேரத்தில் அந்த அறை வரவேற்புக் கோலம் கொண்டது.
சற்று நேரத்தில் இலங்கை வெளியுறவுத் துணை அமைச்சரும் மூத்த அலுவலர்களும் வந்து சேர்ந்தனர். ஒருவரை ஒருவர் அறிமுகம் ஆயினோம். வந்தோர் முகத்தில் மகிழ்ச்சி. மிக நன்றாக அமைத்து இருக்கிறீர்கள் எனப் பாராட்டினர்.
வானூர்தி தரையிறங்கியது. சற்று நேரத்தில் பிரமுகர் அறை பின் கதவு திறந்தது. மங்கல இசை தொடங்கியது. இலங்கையர் முதலில் வந்தனர் தொடர்ந்து சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் இராசரத்தினமும் உதவியாளர்களும் வந்தனர்.
மங்கல இசை காற்றில் கலந்தது. பெண்களின் அழகான ஆரத்தி. தீத் திரியை மஞ்சள் நீரில் அணைத்தனர். சண்முகநாதன் திருநீற்றை இராசரத்தினத்திற்கு அணிவித்தார். சந்தனப் பொட்டிட்டார். பேரின்பநாயகம் உதவியாளர்களுக்குத் திருநீறு அணிவித்து சந்தனப் பொட்டுமிட்டார். ஆரத்தி எடுத்த பெண்கள் இலங்கைத் துணை அமைச்சருக்கும் மூத்த அலுவலர்களுக்கும் திருநீறிட்டுச் சந்தனப் பொட்டிட்டனர்.
அங்கிருந்த சொகுசு நாட்களில் யாவரும் அமர்ந்தனர். இலங்கை இந்துக்கள் சார்பில் வரவேற்க வந்திருக்கிறோம் என ஆங்கிலத்தில் உரையாற்றினேன். இலங்கையில் இந்துக்களின் தொகை, திருக்கோயில்களின் எண்ணிக்கை என விவரங்களைக் கூறினேன். சிங்கப்பூரில் இந்துக்களையும் தமிழர்களையும் போற்றிப் பாதுகாத்துப் பேணும் சிங்கப்பூர் அரசுக்கு நன்றி தெரிவித்தேன். அமைச்சரோடு தொடர்ந்தும் தொடர்புகளைப் பேண விரும்புகிறேன் எனத் தெரிவித்தேன்.
அமைச்சர் உதவியாளரைப் பார்த்தார். அறிமுக அட்டைகளை உதவியாளர் எம்மிடம் தந்தார். எமது அறிமுக அட்டைகளை அவர் பெற்றுக் கொண்டார்.
நாங்கள் ஓரமாக நின்றோம். இலங்கைத் துணை அமைச்சர், மூத்த அலுவலர்கள் சிங்கப்பூராருடன் பேசிக்கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் யாவரும் வெளியேறத் தொடங்கினர். இலங்கைத் துணை அமைச்சர் எம்மிடம் வந்தார். மிகச் சிறப்பான வரவேற்பு, இலங்கை அரசே இவ்வாறு செய்திருக்க முடியாது, என எம்மைப் பாராட்டிச் சென்றார். மூத்த அலுவலர்கள் ஒவ்வொருவரும் எம்மிடம் கைகுலுக்கி விடை பெற்றனர்.
"மலேசியா, சிங்கப்பூர், மொரிசியசு, பிஜி நாட்டு இந்து சங்கங்களுடன் தொடர்பைக் கொண்டோம். இன்று சிங்கப்பூர் அரசுடன் தொடர்பாகும் வாய்ப்பு", எனச் சண்முகநாதன் பேரின்பநாயகம் இருவரும் மகிழ்ச்சியில் என்னிடம் கைகுலுக்கினர்.
பிரமுகர் அறைக்குள் கொண்டு சென்ற அத்தனையையும் வெளியே கொணர்தோம். தூய்மையாக்கிய அறையை விட்டு விலகினோம். அனைவரும் நீர்கொழும்புக்கு சென்றோம்.
1973 பிற்பகுதியில் சிங்கப்பூர் சென்றிருந்தேன் ஒரு மாதம் நன்மையாக பல்கலைக்கழகத்தில் தங்கி இருந்தேன் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டேன். தன்னை வந்து சந்திக்குமாறு அமைச்சர் இராசரத்தினம் சொன்னார். சென்றேன் அவரைச் சந்தித்தேன் இலங்கையில் இருந்து கொண்டு சென்ற அவல் கொடுத்தேன். மிகவும் மகிழ்ந்தார். தன் தாயார் அவல் குழைத்த நினைவுகளைப் பகிர்ந்தார்.
12) யேம்சு இரத்தினம் பல்துறை அறிஞர். வரலாற்றுத் தகவல்கள் தொகுப்பதில் வல்லுநர். அவரது ஆங்கில மொழி நடை ஈர்க்கும். எனக்கு அன்பர்.
சிங்கப்பூரிலிருந்து திரும்பிய சில வாரங்களில் அவரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு. மில்லாகிரியா இல்லக் கூட்டங்களுக்கு நீங்கள் ஏன் வருவதில்லை? எனக்குப் புரியவில்லை என்றேன்.
அனைத்து உலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையின் கூட்டம் மிலாகிரியா இல்லத்தில். நீங்கள் மன்றத்தின் உறுப்பினர் வருவதில்லையே என்றார். அடுத்த கூட்டத்தில் நாளை நேரத்தைச் சொன்னார். வர வேண்டுமென்று அழைத்தார்.
முதல் நாள் கூட்டத்திற்கு நான் போனேன். அடுத்த கூட்டங்களுக்கு பேரின்பநாயகத்தையும் அழைத்துக் கொண்டு சென்றேன்.
நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு. கொழும்பில் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற அரசு நிலையை ஆதரிப்போர் ஒரு புறம். முன் திட்டமிட்டவாறே யாழ்ப்பாணத்தில் மாநாட்டை நடத்த வேண்டும் என்போர் மறுபுறம்.
இந்த முரண் நிலையை எவ்வாறு கையாண்டோம்? என் பங்களிப்பு என்ன? 1974 ஜனவரி 2 தொடக்கம் 9 வரை வெளிநாட்டுப் பேராளர் உள்ளிட்ட சில நூறு தமிழ் அறிஞர்கள் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக மாநாட்டை நடத்தினோம்.
1973 ஆகத்து தொடக்கம் 1974 ஜனவரி வரை மாநாட்டுக்காக ஈடுபாட்டுடன் உழைத்தோர், சிறப்பு பங்காற்றியோர், கூட்ட நிகழ்வுகள், முரண்பாடுகள், மாநாட்டு நிகழ்ச்சிகள் யாவற்றையும் 1979இல் தொகுத்து எழுதினேன். எனது யாழ்ப்பாணமே என்ற தலைப்பில் 1980இல் தமிழ்நாட்டில் வெளிவந்தது. தமிழராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் என்ற தலைப்பில் 2014இல் யாழ்ப்பாணத்தில் நூல் வெளியிட்டேன்.
எனக்குத் தெரியாத, என்னுள் ஊறிய, என்னோடு சேர்ந்த உணர்வை அறிவு சார்ந்து வெளிப்படுத்தி, ஈழத் தமிழர் தேசிய வரலாற்றில் திருப்புமுனை நிகழ்வாக மாற்றுவதற்குப் பங்களித்தேன். 1974 சனவரி மாதத்தில் யாழ்ப்பாண குடாநாடு முழுவதும் தமிழ்த் தேசிய உணர்வலைகள் பொங்கி எழுந்ததைக் கண்டு பூரித்தவருள் நானும் ஒருவன். உறங்கிக் கிடந்த உள்ளுணர்வுகள் விழித்தன. 400 ஆண்டுகளாகத் தொடர்ந்து மறைந்திருந்த தமிழ்த் தேசிய உணர்வுகள் மீண்டும் முகிழ்த்தன.
அரசின் தடைகளை மீறலாம். கொடுமைத் தடைகளை உடைக்கலாம். சட்டங்களை மீறாமலே சட்டங்களைத் தாண்டலாம். உணர்வுகளை அறிவின் கட்டுக்குள் கொண்டு வரலாம். நெஞ்சுறுதியும் நேர்மைத் திறமும் ஒழுக்கக் கட்டமைப்பும் கொள்கைப் பிடிப்பும் அறிவின் துணையோடு ஆற்றலை முறையாக வெளிப்படுத்தினால் வெற்றி பெறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டிய மாநாட்டு அமைப்பு குழுவில் காத்திரமாகப் பங்களித்தவருள் நானும் ஒருவன் என்பதால் மகிழ்ந்தேன்.
குழுவின் தலைவர் பேராசிரியர் சு வித்தியானந்தன். செயலாளர் கட்டடக் கலைஞர் வி எஸ் துரைராஜா. புனிதம் திருச்செல்வம், மறவன்புலவு க. சச்சிதானந்தன், பேராசிரியர் சி பத்மநாதன், எனக்கு அன்பர் இ பேரின்பநாயகம். பிறரும் குழுவில் இருந்தார்கள். உணர்வு வாய்க்காலில், அறிவின் மடைதிறந்து, கொள்கை இறுக்கத்தில், ஆற்றலின் ஓட்டத்தில், திறமையின் முடுக்கத்தில், மாநாட்டை இயக்கியோர் இவர்களே.
13) இலங்கை அரசின் கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு அலுவலர், என் பணி. ஆட்சி அலுவலர்களுக்கோ இலங்கை ஆட்சிச் சேவை. அறிவியல் ஆய்வாளர்களுக்கோ இலங்கை அறிவியல் சேவை. அறிவியல் சேவையில் மூத்த நிலைப் பணி. அரசியல் உரிமை இல்லாப் பதவி.
அரசியல் உரிமை இல்லாத பதவியில் நீ இருக்கிறாய். பச்சையப்பன் கல்லூரியில் படித்தாய். கலைஞர் கருணாநிதிக்கு நெருக்கமாக உள்ளாய். நீ அரசியல் பணியில் ஈடுபடுகிறாய். அரசுப் பணியில் இருந்து உன்னை நீக்க வேண்டும். இப்பொழுதே அமைச்சர் பிலிக்ஸ் டயஸ் பண்டாரநாக்காவிடம் போகிறேன். உன்னைப் பதவி நீக்குமாறு கோருகிறேன். கொழும்பில் வாட் பிளேசில் கட்டடக் கலைஞர் வி எஸ் துரைராஜாவின் அலுவலக அறையில் இவ்வாறு என்னை 1973 நவம்பர் மாதத்தில் மிரட்டியவர் கண் மருத்துவர் ஆனந்தராசா. (எனது யாழ்ப்பணமே நூலில் இந்தக் குறிப்பு உண்டு).
இராணியின் வழக்குரைஞர் மு. திருச்செல்வம் அவர்களைப் பின்பு ஒருநாள் சந்தித்த பொழுது இதைச் சொன்னேன். தம்பி உம்மைப் போன்ற மூத்த அரசுப் பணியாளர்களை இடை நிறுத்தவோ நீக்கவோ வரன்முறையான வழிமுறைகள் உள. அமைச்சரின் தற்துணிபிற்கு அப்பாலானது உம்முடைய பதவி நிலை என்பதைப் பைத்தியக்காரர் மருத்துவர் ஆனந்தராசாவுக்கு தெரியவில்லைப் போலும் என்றார் சிரித்துக் கொண்டே.
1974 சனவரி, மாநாட்டு நாள்கள். காலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை ஓய்வற்ற பணி. இப்பணிக்கிடையே எனக்குக் கொழும்பிலிருந்து தொலைப்பேசி அழைப்பு என ஒருவர் சொன்னார். மாநாட்டு அலுவலகம் சென்றேன். அழைத்தவரைத் திருப்பி அழைத்தேன். எதிர் முனையில் கொழும்பில் கே சி நித்தியானந்தா.
சச்சி, நீ உற்சாகமாக இரு. உன்னுடைய பதவி தொடர்பாக அரசில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீ மாநாட்டுப் பணிகளைப் பார். உன் மீது எவனாவது நடவடிக்கை எடுக்க முயன்றால் நான் பார்த்துக் கொள்கிறேன். கவலையை விடு. யாராவது ஏதாவது சொன்னால் அவரைத் தூக்கி எறி. மாநாட்டை வெற்றிகரமாக நடத்து, என்றார் பழுத்த தொழிற்சங்கவாதியும் அரசு ஊழியர்களின் காப்பரணாக விளங்கியவருமான கே சி நித்தியானந்தா.
1974 ஜனவரி 22ஆம் நாள் கொழும்பு திரும்பினேன். கல்கிசையில் வாடகை வீட்டில் வாழ்ந்தேன். 24ஆம் நாள் வீட்டில் விபத்து. 15 நாள்கள் கொழும்பு மருத்துவமனையில் நான். என்னைப் பேணிக் காத்தவர் என் துணைவியார். அவருக்குத் துணையாக இருந்தோர் பேரின்பநாயகம், புனிதம் திருச்செல்வம். இராணியின் வழக்குரைஞர் மு திருச்செல்வத்தின் துணைவியார் புனிதம் என அனைவருக்கும் தெரிந்த புனிதவதி. நீலன் திருச்செல்வத்தின் தாயார். மருத்துவமனைக்கு அண்மித்தாக அவர்கள் இல்லம். நாள்தோறும் இரு நேரங்களிலும் மருத்துவமனைக்கு வருவார். என்னையும் என் இல்லத்தரையும் கண்ணை இமை காப்பது போல் பேணினார்.
மருத்துவ விடுப்பு ஓய்வுக்குப் பின் அலுவலகம் திரும்பினேன். என் பணியகம் நிலத் தள ஆய்வுகூடத்தில். அமைச்சகத்தின் அலுவலகங்கள் முதல் மாடித் தளத்தில்.
கடற்றொழில் அமைச்சராக ஜார்ஜ் இராஜபக்ச. மகிந்திர இராஜபக்சவின் சித்தப்பா. துணை அமைச்சராக சிலாபம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் டி எஸ் ஜயரத்தினா. அமைச்சின் செயலாளராக முன்பு உள்ளூராட்சி அமைச்சில் அமைச்சர் மு திருச்செல்வத்திற்கு நான் தனிச் செயலாளராக இருந்த காலத்தில் பணிபுரிந்தவர்.
கடற்றொழில் திணைக்கள இயக்குனர் பத்திரானா, பின்னர் ஐ ஓ கே ஜி பெனாண்டோ, பின்னர் மொகிதீன். கடற்றொழில் ஆராய்ச்சி நிலைய இணை இயக்குனர் மெண்டிஸ். துணை இயக்குனர் தா பி குணவர்தனா.
ஆய்வு கூடப் பணிகளுக்குத் திரும்பினேன். சக ஆய்வுஅலுவலர்கள், முனைவர் புறூயின், முனைவர் துரைரத்தினம், முனைவர் கனகரத்தினம், முனைவர் தி பி பிள்ளை, முனைவர் சிவசுப்பிரமணியம், பீரீஸ் யாவரும் என் மீது அளவற்ற அன்பு கொண்டோர். துணை இயக்குனர் குணவர்தனா எனக்கு எந்த இடரும் வராமல் பார்த்துக் கொள்பவர். இணை இயக்குனர் மென்டிஸ் என் ஆய்வுப் பணிகளையும் அதன் விளைவுகளையும் பார்த்து வியப்பவர்.
1967 ஜனவரியில் பணியில் சேர்ந்தேன். 1971 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் ஆலோசகராக நான்கு மாதங்கள் பசிபிக் கடலுக்குச் சென்றேன். தொடக்கத்தில் இந்தியப் பட்டதாரி என இழக்கமாகக் கருதிய சில சக அலுவலர், என் பணியின் வேகத்தால் வியந்தனர். என் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டனர். ஆய்வு அலுவலர் தொழிற் சங்கத்தின் செயலாளராகவும் எனக்குப் பணி.
1974 மார்ச் மாதம் ஒரு நாள் காலை என் ஆய்வு கூடத்துக்குள் வந்த இளைஞர், உங்களைத் துணை அமைச்சர் எஸ் டி எஸ் ஜெயரத்தினா அழைக்கிறார், என்றார். உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் வருகிறீர்களா எனக் கேட்டார். துணை இயக்குனர் தா பி குணவர்தனாவிடம் போனேன். செய்தியைச் சொன்னேன். போய்ப் பாருங்கள், என்றார்.
முதல் மாடியில் துணை அமைச்சரின் அறைக்குச் சென்றேன். எழுந்து நின்று வரவேற்றார் துணை அமைச்சர். பக்கத்தில் இருந்தவர் நீர்கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் தென்சில் பர்னாந்து என அறிமுகித்தார்.
துணை அமைச்சர் சிங்களத்திலேயே பேசிக் கொண்டிருந்தார். எனக்கு சிங்களம் தெரியாதே என அவரிடம் சொன்னேன். நீங்கள் அரசு ஊழியர் சிங்களம் படிக்க வேண்டாமா? என்றார். ஆய்வு அலுவலர்கள் சிங்களம் படிக்கத் தேவையில்லை என்ற விதிவிலக்கை (தமிழ் மொழிச் சிறப்பு வசதி விதிகள்) மென்மையாக அவரிடம் கூறினேன்.
தென்சில் பர்னாந்து என்னிடம் தமிழில் பேசினார். சிரித்துக் கொண்டே பேசினார். நீங்கள் அடிக்கடி யாழ்ப்பாணம் போகிறீர்கள் இலங்கையின் மற்றப் பகுதிகளுக்கு போவதில்லையே ஏன்? என்றார். யாழ்ப்பாணமும் இலங்கையின் ஒரு பகுதியே என்றேன். ஏனைய பகுதிகளில் தேவைக்கேற்ப ஆய்வுக்காகக் களப் பணி. வடக்கே வளர்ச்சிப் பணி, என்றேன்.
1972இல் விடத்தல்தீவில் கடலட்டை பதனிடுவதில் உடல்நலக் கேடுகள் உள்ளதை இயக்குனர் பத்திரனாவிடம் கூறினேன். உடனடியாக நடவடிக்கை எடுத்தார். நிலையை மாற்றினார். உற்பத்தித் தராதரம் பெருகியது. அந்நியச் செலவாணி வருவாயும் பெருகியது, என்றேன்.
1972-73இல் எனது தலைமையில் பொறியியலாளர் அழகரத்தினம், சுன்னாகம் தேவதாசன், யாழ்ப்பாணம் பிலிப்பு ஆகியோர் முயன்று வடிவமைத்த கடல் அட்டைத் தோல் நீக்கும் எந்திரம். அதை உள்ளடக்கிய கடலட்டை பதனிடும் தொழிற்சாலை.
தொழிற்சாலைத் திட்ட அறிக்கையைப் பார்த்த உடனே, திட்டமிடல் அமைச்சில் இயக்குநர் ஒலிவர் பர்னாந்து தேவையான நிதியை ஒதுக்கினார். மன்னார் உதவி அரச அதிபர் தயாபரன் திட்டத்தை நிறைவேற்றி வெற்றி கண்டார். ஏற்றுமதியால் இலங்கையின் அந்நியச் செலவாணி வருவாய் மேம்பட்டதே, என்றேன்.
இதனால் மகிழ்ந்த திட்டமிடல் அமைச்சின் இயக்குனர் ஒலிவர் பெர்னாந்து, புதிய திட்டங்கள் தாருங்கள் எனக் கேட்கிறார். நாச்சிகுடாவில் அமைக்கலாம் என உள்ளேன் என்றேன்.
சிலாபம் நீர்கொழும்புப் பகுதிகளில் இத்தகைய திட்டங்களை அமைத்துத் தாருங்கள் என்றார் தமிழில் தென்சில் பர்னாந்து. துணை அமைச்சரும் ஆங்கிலத்தில் ஆமோதித்தார். சிலாபம் பிரதேச வளர்ச்சிக் கூட்டத்திற்கு வருகிறீர்களா? கேட்டார் துணை அமைச்சர். எப்பொழுது அழைத்தாலும் வருவேன் என்றேன்.
வாருங்கள் அமைச்சரைப் பார்ப்போம் என அழைத்தார் துணை அமைச்சர். நாடாளுமன்ற உறுப்பினரும் துணை அமைச்சரும் நானும் எதிர் அறையில் அமைச்சரின் அலுவலகத்துள் நுழைந்தோம். ஆய்வு அலுவலர் தொழிற்சங்கம் தொடர்பாக ஒரு முறை அமைச்சரைப் பார்த்திருக்கிறேன். அதற்கு மேல் தொடர்ப் ஏதுமில்லை.
ஓ... சச்சிதானந்தனா.. என ஆங்கிலத்தில் கேட்டார் அமைச்சர் ஜார்ஜ் இராஜபக்ச. வாருங்கள் என வரவேற்றார். மூவரும் அமைச்சர் முன்னே அமர்ந்தோம். அவர்கள் தம்முள்ளே சிங்களத்தில் பேசிக் கொண்டார்கள் எனக்குப் புரியவில்லை. அவர்கள் உரையாடல் முடிந்ததும் ஜார்ஜ் இராஜபக்ச ஆங்கிலத்தில் பேசினார்.
நீர்கொழும்பில் மீன் பெருமளவு கரைசேர்ப்பர். அப்பால் சிலாபம் வரை இறால், சிங்கறால் பிடிபாடு கூடுதல். கற்பிட்டி வரை நீண்ட கரையோரம். வடமேற்குக் கரையோர வளர்ச்சிக்கு உங்கள் அறிவியல் தொழில்நுட்பப் பங்களிப்புத் தேவை என்றார் அமைச்சர்.
அதுவே என் பணி. அறிவியல் ஆராய்ச்சியை ஆராய்ச்சிக்காக, கல்விக்காக மேற்கொள்வது ஒருபுறம். மக்களின் வளர்ச்சிக்காக நாட்டு முன்னேற்றத்திற்காகப் பயனாக்குவது மறுபுறம். சூழலுக்கு ஏற்ற பொருத்தமான தொழில்நுட்பங்களை அறிமுகித்து வெற்றி காணலாம், என்றேன்.
உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அமைச்சிலிருந்து தருவர். நீங்கள் வடமேற்குக் கரையையும் வட கரையையும் வளர்த்துத் தாருங்கள், என்றார் அமைச்சர். அன்று அவர் காட்டிய அன்பு. தொடர்ந்து காலங்களில் அவரின் உதவிகள்.
யாழ்ப்பாணத்தில் அரசுத் தடையை மீறிய மாநாடு. தடையை உடைக்கும் அமைப்புக் குழுவில் இருந்த என் மீது அரசின் கோபம். என் மீது ஆட்சியாளரின் வன்மம். அந்த வன்மத்தின் வெளிப்பாடாக அலுவலகத்துக்குள்ளேயே வெகுசிலரின் புகைச்சல். விளைவாகத் துணை அமைச்சரின் அழைப்பு.
நாடாளுமன்ற உறுப்பினர், துணை அமைச்சர், அமைச்சர் யாவரும் என் நட்புக்குரியவராயினர். என்னைப் பயனாக்கத் தொடங்கினர்.
சிலாவத்துக்குப் போனேன். சில நாள்களில் இரவு 10 மணி வரை நீளும் கூட்டங்களில் பங்கேற்பேன். மொழிபெயர்ப்பாளர் ஒருவரைத் துணை அமைச்சரே தருவார்.
சிலாபத்தில் ஒரு தொழிற்சாலை. அத்தொழிற்சாலைக்குத் துணை அமைச்சர் அடிக்கல் நாட்டினார். அவரோடு இருந்தேன். கற்பிட்டியில் ஒரு தொழிற்சாலை. திறப்பு விழாவிலும் துணை அமைச்சரோடு பங்கேற்றேன்.
14) 1974 நடுப்பகுதியில் உமாமகேஸ்வரனைச் சிறையில் இருந்து விடுவித்தனர்.
No comments:
Post a Comment