ஆனி 12 வியாழக்கிழமை (26 06 2025)
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை எழுதுகிறேன்
1)
அழைப்பிதழ் நிகழ்ச்சிக்கு அனுப்புவார்கள்.
நிகழ்ச்சிக்கு வருவதை உறுதி செய்ய எனக் குறிப்பும் எழுதுவார்கள்.
அழையாதவர் நிகழ்ச்சிக்கு வர முடியாது
வந்தால் திருப்பி அனுப்புவார்கள்.
சில நிகழ்ச்சிக்கு அனைவரும் வருக
எனச் சுவரொட்டிகள் ஊடகங்கள் மூலம் அழைப்பார்கள்.
அவ்வாறு அழைக்கும் நிகழ்ச்சிகளுக்கு எவரும் வரலாம். வந்தவர்களை வரவேற்று நிகழ்ச்சியில் பங்கு பெற்றக் கூறுவது அழைப்பாளர் கடன்.
அந்த நிகழ்ச்சிக்கு எவர் வரலாம் எவர் வரக்கூடாது என்று வரையறை கிடையாது.
அமைச்சர் சந்திரசேகரன் அழைப்பை ஏற்று வந்தவர்.
சி வி கே சிவஞானம் அழைப்பை ஏற்று வந்தவர்.
அவர்கள் மீது வெறுப்புக் கொட்டியவர்களும் அழைப்பு ஏற்று வந்தவரே.
மனத்துள் வெறுப்பை வைத்திருக்க வேண்டுமே அன்றிச் செயலில் வெறுப்பைக் காட்டுவது தமிழர் மரபு அன்று.
நான்காவது அனைத்து உலகத் தமிழ் ஆராய்ச்சிப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் பலர். அல்பிரெட் துரைப்பா காரணமானவர் என்று கருதியே அவரைக் கொன்றார்கள். அவருக்கு அக்காலத்தில் துணையாக நின்றவர் சி வி கே சிவஞானம்.
1975இல் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுச் சின்னத்தை நெஞ்சு நெகிழ்ந்து இளைஞர்கள் உதவியுடன் அமைத்தேன். 1975 இல் உடைத்தனர். 76இல் நிறுவினேன், இளைஞர்கள் உதவியுடன். 76இல் உடைத்தார்கள். 77இல் நிறுவினோம் 77இலிலும் உடைத்தார்கள். 79 இல் பிரேமதாசா அந்த நினைவுச் சின்னத்தை மீளக் கட்டுமாறு ஆணையிட்டார்.
2013ஆம் ஆண்டு நினைவு நாளில் அங்கு கூடிய போது சி.வி.கே சிவஞானமும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். எனக்கு வியப்பு. மனத்தில் சஞ்சலம். ஆனாலும் அவரை வெளியேற்ற வேண்டும் என்று அங்கிருந்தவர் யாரும் சொல்லவே இல்லை.
அந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றிய பொழுது "நானே இந்த நினைவுச் சின்னத்தை கட்டுவித்தேன்" எனவும் கூறினார். அவர் பொய் பேசினார் என்பதை நானும் அறிவேன் அங்கு என்னோடு 75இல் 76இல் பணிபுரிந்த இளைஞர் சிலரும் அறிவார்கள்.
அதற்குப் பின்னர் ஒரு பொது நிகழ்ச்சியில் நானும் இருந்தேன் அவரும் இருந்தார். அவராக என்னிடம் வந்தார். உங்களிடம் பேச வேண்டும் என்றார். சுவரோரம் அவரை அழைத்துச் சென்றேன். அயோக்கியர்களிடம் நான் பேசுவதில்லை, போ, என்று அவரிடம் சொல்லிவிட்டு நான் வந்து விட்டேன். ஏனையவர்கள் கேட்டிருக்க வாய்ப்பில்லை.
1974 ஜனவரி 8இல் நாங்கள் சி வி கே சிவஞானத்தை அணுகிய போது அவர் திறந்தவெளி அரங்கைத் தர மறுத்தார். அடுத்து வந்த துன்ப நிகழ்ச்சிகளை அறிவோம். இதை நான் பல இடங்களில் எழுதி உள்ளேன்.
எனினும் சி வி கே சிவஞானம், 2013 சனவரி 10 அஞ்சலி நிகழ்வுக்கு வீரசிங்கம் மண்டபத்தின் முன் வந்த பொழுது நாங்கள் அவரை வெறுத்து ஏசவில்லை, திருப்பி அனுப்பவில்லை. ஏனெனில் தமிழர் மரபு அஃதே.
2)
தென்மராட்சி தெற்கில் காணாமல் போன 35 பேரின் பட்டியலை நீண்ட கல்வெட்டாகப் பொறித்தேன். என் 80ஆவது வயது நினைவாக என் பராமரிப்பில் இருந்த காணிக்குள் பொருத்தினேன்.
யாழ்ப்பாணம் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உள்ளிட்ட மூத்த அலுவலர்கள் 20 பேர் என்னிடம் வந்தார்கள். 7 8 மகிழுந்துகள் வரிசையாக என் வீட்டுக்கு முன் வந்து நின்றன.
கல்வெட்டுகளை நீங்கள் அமைத்தீர்கள். அதில் விடுதலைப் புலிகளின் பெயர்கள் இருக்கின்றன. ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளீர்கள் என்றார்கள்.
காணாமல் போனவர்களின் குடும்பத்தார் தந்த படங்கள், அவர்களுடைய தனி வரலாறுகள் உள்ளிட்ட நூலை ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கிறேன். என் பராமரிப்பில் உள்ள தனியார் நிலம். அதில் கல்வெட்டுகள் வைத்திருக்கிறேன். புத்தகத்தை அவர்களிடம் காட்டினேன். இவர்களுள் விடுதலைப்புலிகள் யாராவது இருக்கிறார்களா எனக் கேட்டேன்?
உசாவுமாறு உதவியாளரிடம் கொடுத்தார்.
ஈழம் என்றால் என்ன என்று கேட்டார்கள். தமிழில் ஈழம். அதுவே மருவிச் சிங்களத்தில் ஹெல என்றேன்.
ஹெல உரிமையக் கட்சியின் பெயரைத் தெரிந்து கொண்டீர்களா? எனக் கேட்டேன். யாழ்ப்பாணத்தில் இருந்து ஈழநாடு நாளிதழ் வெளிவருகிறதே படித்திருக்கிறீர்களா எனக் கேட்டேன்.
யாவரும் வண்டியில் ஏறிக் கிளம்பினர்.
சாவகச்சேரிக் காவல் நிலையப் பொறுப்பாளர் என்னிடம் வந்தார். ஈழம் என்று சொல்லுக்கு விளக்கம் கேட்டார்.
2000 ஆண்டுக்கு முன் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் ஈழம் என்ற சொல் ஆண்டுள்ளார். அது தொடங்கி வரலாற்றுப் படிகளில் ஈழம் என்ற சொல் எனக்குத் தெரிந்து எங்கெல்லாம் வந்திருக்கிறதோ அவற்றைப் பட்டியலிட்டேன்.
800 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சிங்களத்தில் ஹெல என்ற சொல் ஈழத்தில் இருந்து மருவியதையும் எடுத்துக் கூறினேன். அவரும் விவரமாக எழுதினார் ஏறத்தாழ ஒரு மணி நேரம் என்னுடன் இருந்து விட்டு எழுதியதை எடுத்துக் கொண்டு சென்றார்.
மாற்றுக் கருத்து வைத்திருந்தனர் என்றோ என் மீது வெறுப்புணர்வோடு வந்தனர் எனவோ நான் கருதவில்லை. காக்கி உடை அரசு கொடுத்தது. என்னை உசாவு அரசு ஆணையிட்டது. வந்தார்கள். அன்போடு பேசினேன். வெறுப்பை உமிழவில்லை. எதிர்ப்பைக் காட்டவில்லை. விளக்கங்களைக் கொடுத்தேன். அவர்களும் என் மீது எந்த வெறுப்பையும் காட்டியதாக எனக்குத் தெரியவில்லை.
அதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்கவில்லை.
மனத்தில் வெறுப்பு எழுந்தாலும் வெளியில் காட்டுவதற்குத் தயங்க வேண்டும். தமிழர் பண்பாடு தமிழர் நாகரிகம் தமிழர் வாழ்வியல் எனப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஊடாக முன்னோர் எமக்கு விட்டுச் சென்ற பெரும் செல்வம் அஃதே.
அமைச்சர் சந்திரசேகரனையோ சிவிகே சிவஞானத்தையோ வேறு எவரையோ பொது நிகழ்ச்சிக்கு வாருங்கள் என அழைத்த பின், வந்தோரை விரட்டுவது முறையற்ற தமிழர் பண்பாட்டுக்கு முரணான செயல்.
No comments:
Post a Comment