Thursday, November 11, 2021

புலனாய்வாளர்

 ஊடகத்தார் வினா 3

ஈழம் தொடர்பாகவும் உங்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதா? எனவும்  அடிக்கடி குற்றப் புலனாய்வுத் துறையினர் உங்களை விசாரணை மேற்கொண்டு செல்கின்றனரே ? இது குறித்து கூறுங்கள்.

3 விடை

1965 மாசியில் சென்னையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம். அக்காலத்தில் பச்சையப்பன் கல்லூரியில் நான் மாணவன். விடுதியில் இருந்தேன். போராட்டத்தில் கைதான மாணவர்களுள் நானும் ஒருவன். இலங்கையைச் சேர்ந்தவன் என்பதால் என்னைச் சிறையில் அடைக்கவில்லை. காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் ஒரே அறைக்குள் பல நாள்கள் தங்க வைத்தனர். இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதாக அச்சுறுத்திக் கொண்டு இருந்தார்கள். அக்காலத்தில் சென்னையில் இலங்கைத் துணைத் தூதராக இருந்த சுசந்தா டி அல்விஸ் என்னை மிரட்டினார். காவல்துறைப் புலன் விசாரணையில் எனக்கு முதல்முதலாகப் பட்டறிவு அங்கே தொடங்கியது. இலங்கை அரசின் மிரட்டலும் அங்கே தொடங்கியது.

1966இல் அறிவியல் ஆய்வாளர் பணி. கொழும்பில் உயர் பதவியான அரசுப் பணி.

1972 வைகாசியில் இலங்கையைக் குடியரசாக்கிய அரசியலமைப்பு வந்த காலத்தில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் எனக்காகவும் கோப்பைத் தயாரித்தனர். அப்பொழுது என்னிடம் வந்து விசாரித்துக் குறிப்பெழுதினர்.

1973 ஆவணியில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு தொடக்கப் பணிகளில் நான் ஈடுபட்ட காலத்தில் புலனாய்வுப் பிரிவினர் என்னிடம் மீண்டும் வரத் தொடங்கினர்.

1973இல் நான் அரசுப் பணியில் உயர் பதவியில் இருந்தேன். என்னை விலக்க அரசு சார்ந்த தமிழர்கள் நடவடிக்கை எடுத்தனர். சட்டத்துக்கு முரணாக நான் எதையும் செய்யவில்லை. எனவே அவர்களின் முயற்சிக்குப் படுதோல்வி. (படிக்க: நான் எழுதிய ‘எனது யாழ்ப்பாணமே’ நூல்)

1974இல் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினோம். அரசின் தடைகளை உடைத்தோம். எதிர்ப்புகளை மீறினோம். அரசு சார்ந்தோர் பகைகளைத் தாண்டினோம். அக்காலங்களில் புலனாய்வுப் பிரிவினர் என்னைத் தொடர்ந்து விசாரித்துக் கொண்டே இருந்தனர். உரும்பிராய் சிவகுமாரன், குருநகர் பிரான்சிஸ், பேபி சுப்பிரமணியம், மயிலிட்டி பத்மநாபா, புசுப்பராசா என மாநாட்டுக்கான என்னுடைய தொண்டர் பட்டியலில் பலர் இருந்தார்கள். இலங்கை அரசுக்குப் பொறுக்கவும் முடியவில்லை, தடுக்கவும் முடியவில்லை.

1975 1976 என இரு ஆண்டுகள். தை மாதங்கள். யாழ்ப்பாணம் முற்றவெளியில் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் இறந்தவர்களுக்கான நினைவு நடுகல் அமைப்பதில் ஈடுபட்டேன். புலனாய்வுப் பிரிவினரின் கண்காணிப்புக்கு உள்ளானேன். என் தலைமையில் அமைத்த அந்த நினைவு நடுகல்லை இருமுறையும் அரசு இடித்துத் தள்ளியது. அக்காலத்தில் அரசின் உயர் பதவி ஊழியனாக இருந்தேன்.

1977 ஆடி ஆவணி இனக்கலவரத்தின் பின்னர் (11 ஆண்டுகள் கொழும்பில் அரசு உயர் பதவியில் இருந்த நான்) ஒரே நாளில் ஓய்வு ஊதியம் எதுவும் பெறாமல் பணியை விட்டு விலகினேன். குடும்பத்துடன் யாழ்ப்பாணம் வந்தேன். அக்காலத்தில் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கப் பல நாள்கள் உறவினர்களின் வீடுகளில் ஒழித்து வாழ்ந்திருக்கிறேன்.

1978இல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தேன். 

1979 மாசியில் அறவழிப் போராட்டக் குழுவைத் தொடக்கினேன். விடுவார்களா.. புலனாய்வு பிரிவினர்? தொடர்ச்சியாக என்னை விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

1979இல் அக்கால இளைஞர்கள் (அவர்களுள் பெரும்பாலோர் வன்முறை இயக்கங்களில் இருந்தவர்கள்) என்னுடன் சேர்ந்தனர். கைதடியில் சாதி மறுப்பு போராட்டமொன்றை விரிவாக நடத்தினேன். அக்காலத்தில் புலனாய்வுப் பிரிவினரின் கடுமை தாங்க முடியாமல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு கதிரவேற்பிள்ளை அவர்கள் எனக்காக அவர்களுடன் பேசத் தொடங்கினார். 

1979இல் ஐநா ஆலோசகர் பதவி பெற்று வெளிநாடு சென்றேன்.

1981இல் யாழ்ப்பாணத்தில் திரு ஐ தி சம்பந்தன் திரு ஈழவேந்தன் உள்ளிட்ட பலரைக் கச்சேரி வளாகத்தில் தடுத்து வைத்தனர். Where is the bugger Sachi? That fellow has signed for 14 passports enabling their escape! That fellow Sachi, wherever he is, we will bring him. திரு ஈழவேந்தனையும் திரு சம்பந்தனையும் அடித்துத் துன்புறுத்திக் கேட்ட பல்வேறு வினாக்களுள் என் தொடர்பான இந்த வினாவும் ஒன்று. திரு ஈழவேந்தன் கனடாவில் இருக்கிறார். திரு சம்பந்தன் இலண்டனில் இருக்கிறார். நானோ இன்றும் மறவன்புலவில் யாழ்ப்பாணத்தில் இலங்கையில் இருக்கிறேன்.

1976 மார்கழியில் சிறையிலிருந்த இளைஞர்களைச் சிறிமாவோ அரசு விடுவித்தது. அக்காலத்தில் விடுதலையானsயாரில் 14 இளைஞர்கள் ஒவ்வொருவராக என்னிடம் வந்தனர். அவர்கள் எவரையும் எனக்கு நேரில் பழக்கமே இல்லை. அவர்களுக்குக் கடவுச்சீட்டு எடுப்பதில் நான் உதவினேன். அரசு உயர் பதவியில் இருந்ததால் என் கையொப்பத்தை ஏற்றுக் கடவுச்சீட்டு வழங்கினர். அவர்கள் அனைவரும் உடனேயே வெளிநாடு போயினர். இதற்காகவே இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் திரு. ஈழவேந்தனையும் திரு. சம்பந்தனையும் விசாரித்தனர்.

1986 தை தொடக்கம் சென்னையில் வாழ்ந்து வந்தேன். தமிழகஅரசின் கியூ பிரிவு, சிஐடி பிரிவு, எழும்பூர் புலனாய்வுப் பிரிவு, நடுவண் அரசின் பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு, நடுவன் அரசின் புலனாய்வுப் பிரிவு, நடுவன் அரசின் குற்றவியல் ஆய்வுப் பிரிவு என அவ்வப்போது தொடர்ச்சியாக இன்றுவரை என்னை விசாரித்து வருகின்றனர். நான் மறவன்புலவில் 2012 தொடக்கம் இருக்கிறேன். மின்னஞ்சல் மூலமும் தொலைபேசி மூலமும் என்னிடம், விசாரிப்பர்.

என்னைக் கண்காணிப்பதற்காக நடுவன் அரசின் புலனாய்வுத் துறையின் அலுவலர் ஒருவர் என்னிடம் ஒரு மாதத்துக்கு இரு முறையேனும் வந்து விசாரித்துச் செல்வார். அவரே கவிஞர் காசி ஆனந்தனையும் விசாரிக்கும் அலுவலர்.

1995 தை தஞ்சாவூரில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து வரவிருந்த அறிஞர்களை வரவிடாமல் தடுத்ததை எதிர்த்து 1994 கார்த்திகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அடுத்த ஒரு மாதத்திற்கு நான் எங்கு சென்றாலும் காவலர் இருவர் என்னோடு இருக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. காரணம், வழக்குத் கொடுத்ததற்காக அரசு சார்ந்தவர்கள் என்னை மிரட்டிக் கொண்டிருந்தனர்.

1997 மாசியில் விடுதலைப்புலிகளுக்கு மருந்து கடத்த முயன்றேன் என என்னைக் கைது செய்து சிறையில் ஒரு மாதம் அடைத்தனர்.  2 ஆண்டுகள் நீடித்த வழக்கில் விடுதலையானேன்.

அதற்குப் பின்னர் என் வீட்டார், என் அலுவலகத்தார், எனக்கு உதவிய ஊழியர் யாவரும் பலமுறை புலனாய்வுப் பிரிவுகளின் விசாரணைகளுக்கு உள்ளானோம். என் வங்கிக்கணக்குகள், என் ஏற்றுமதி இறக்குமதி வணிகம், என் பதிப்புத் தொழில் வணிகம் யாவும் விசாரணைக்குள் அடங்கின.

2000 மாசியில் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு எனக்கு நடுவண் அரசின் உள்துறை அமைச்சு, குடியகல்வுத் துறை வழி ஆணை அனுப்பியது. உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு அந்த ஆணையை இடையிட்டு நிறுத்தி வைத்திருக்கிறேன். இன்றும் அந்த ஆணை உயிரோடு உள்ளது.

2000 சித்திரையில் என் வீட்டையும் அலுவலகத்தையும் ஒரே நேரத்தில் 8 மணிநேரம் முடக்கினர். 20க்கும் கூடுதலான நடுவன் அரசின்  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இரு இடங்களிலும் சமகாலத்தில் தேடுதல் நடத்தினர். என் கணக்குப் புத்தகங்கள், என் கடவுச்சீட்டு, மற்றும் சில கடிதங்கள் கோப்புகள், நூல்கள் யாவற்றையும் கைப்பற்றினர். பயங்கரவாதத் தடைச் சட்ட விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

அந்த நீதிமன்றத்தின் அனுமதி பெற்றே ஒவ்வொரு முறையும் இந்தியாவை விட்டு வெளியே பயணிக்கிறேன்.  இந்தியாவுக்கு மீண்ட உடன் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைப்பேன். புதிதாக விண்ணப்பித்துக் கடவுச் சீட்டை பெற்றே மீண்டும் நான் பயணிப்பேன். இன்று வரை அதே நிலை.

2010 ஆவணியில் யாழ்ப்பாணம் வந்தேன். நுணாவிலில் தங்கியிருந்தேன். ஒரு மாத காலம் வரை தங்கி இருந்தேன். அக்காலத்தில் திருமதி பார்வதி வேலுப்பிள்ளை பருத்தித்துறை மருத்துவமனையில் இருந்தார். (வேலுப்பிள்ளை இணையர் எனக்கு நீண்டகாலத் தொடர்பாளர், நண்பர்கள்). அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன்.

என்னோடு இருந்தவர்கள் நான் சென்று வந்ததை நுணாவிலில் உள்ள படை அலுவலகத்தில் சொல்லினர் (காட்டிக் கொடுத்தனர் போலும்). படையினர் என்னைத் தம் அலுவலகம் வருமாறு அழைக்க, நான் இரவோடு இரவாகக் கொழும்பு வழி சென்னைக்குச் சென்றேன்.

2012 ஆவணி வரை என்னால் யாழ்ப்பாணம் வர முடியவில்லை. வரவேண்டாம் என எனது உச்ச நிலைப் பதவியாளரான நண்பர்கள் பலர் சொன்னார்கள். எனினும் 2012 ஆவணியில் கொழும்பில் நடைபாதையில் என்னைக் கண்ட கரம்பனூர் நண்பர் ஒருவர், தாமே என்னை அழைத்து யாழ்ப்பாணத்தில் கொண்டு வந்து விட்டார். அவர் அமைத்த காப்பினாலேயே இன்று வரை யாழ்ப்பாணத்தில் மறவன்புலவில் தங்கியிருக்கிறேன்.

யாழ்ப்பாணம் வந்த பின்பு தொடர்ச்சியாகப் பயங்கரவாதத் தடைப் பிரிவினர், தேசிய புலனாய்வுப் பிரிவினர், படைப் புலனாய்வுப் பிரிவினர், காவல்துறைப் புலனாய்வு பிரிவினர் என வரிசையாக எல்லோரும் என்னிடம் வருவார்கள், அடிக்கடி வந்து விசாரித்துச் செல்வார்கள்.

1965இல் பொது வாழ்வுக்காகப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு உள்ளானேன். அடுத்த 56 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக விசாரிக்கின்றனர். பொதுவாழ்வில் இருக்கிறேன் என்பதற்காக இந்த விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.

போக்குவரவுக் குற்றங்களுக்காக இடையிடையே தண்டத் தொகை செலுத்தி இருக்கின்றேன்.

அக் குற்றத்தைத் தவிர வேறு எந்தக் குற்றத்துக்காகவும் என் தனி வாழ்வில் விசாரணையோ வழக்கோ கிடையாது.

இக்காலத்தில் இளம் வயதினரான புலனாய்வாளர்  தொடுக்கும் வினாக்களுக்கு நான் சொல்கின்ற பதில்களைப் பலர் புரிந்து கொள்வதே இல்லை.

அவர்களுக்கு விசாரணைகள் புதிது. எனக்கோ 56 ஆண்டுகாலப் பட்டறிவு.

No comments: