அன்புள்ள திருமதி சித்ரா அவர்களே,
இலங்கை, யாழ்ப்பாணம், மறவன்புலவில் இருந்து சச்சிதானந்தன் எழுதுகிறேன்
இன்று செவ்வாய்க்கிழமை ஆவணி முப்பதாம் நாள் (15.9.2020)
கலைமாமணி சாரதா மீது எனக்குள்ள மதிப்பும் மரியாதையும், அவருடைய இசை ஆற்றல், மொழி ஆற்றல், நினைவாற்றல், இலக்கிய உள்ளீடு, பேச்சாற்றல்.
சாரதாவின் உரைகளால், தொடர்பால், உரையாடலால், நான் பெற்ற அறிவு கொஞ்சநஞ்சமல்ல.
மதிப்புக்குரிய நம்பியாரூரன் அவர்களை அறியேன். நேரில் கண்டிலேன் எனினும், அவரது ஆக்கங்களைச் சாரதா தந்து படிக்கும் பேறு பெற்றவன். அவரது புலமையும் திறமையும் வல்லமையும் கொள்கைத் துணிவும் என்னை ஈர்த்தன. என் அறிவை வளர்க்க அவரது ஆக்கங்கள் உதவின
மார்சல், நீலகண்ட சாத்திரி, பாவலோவ், ஐராவதம், கணேசன் என அறிஞர்களின் பட்டியலை வரிசையாக்கி, அறிவியல் கண்ணோட்டத்துடன், சைவத்தைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நெறியாகக் கொள்கையாக அடையாளம் காட்டுகின்ற திருமகள் சித்திராவின் ஆற்றலைக் கண்டு வியந்தேன். அவரது அறிவூட்டலில் திளைத்தேன்.
வெள்ளி நாக்கர் சீனிவாச சாத்திரியாரை ஆங்கிலச் சொற்பெருக்கின் வரலாற்று நாயகனாக அறிந்திருக்கிறேன்.
இலங்கை நாடாளுமன்றத்தில் 48 மணி நேரத்துக்கும் கூடுதலாகத் தொடர்ச்சியாக இடையீடின்றி ஆங்கிலத்தில் உரையாற்றிய பெருமகன், யாழ்ப்பாணத்து நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலத்தை நேரில் அறிந்திருக்கிறேன்.
ஆங்கில உரைவீச்சுக்கு சர்ச்சிலையும் நேருவையும் எடுத்துக்காட்டாகச் சொல்வார்கள். அவர்கள் உரைகளையும் கேட்டிருக்கிறேன்.
ஆரவாரமின்றி ஆற்றொழுக்கான ஆங்கிலத்தில் உரையாற்றிய அண்ணாதுரையின் பேச்சை நேரில் பச்சையப்பன் கல்லூரியில் கேட்டிருக்கிறேன்.
இவர்களை எல்லாம் கண்முன் நிறுத்துகிறார் சித்திரா. வைகை நதியின் வற்றாத நீரோட்டமாக, ஆங்கிலச் சொல்லாட்சியின் தேரோட்டமாகச் சித்திராவின் ஆங்கில உரைவீச்சுக் கேட்டு அலமந்தேன்
சைவத்தில் ஊறியிருக்கிறார். தமிழில் தோய்ந்திருக்கிறார். தொல்லியலில் திளைத்திருக்கிறார். வரலாற்றை வியந்து படித்திருக்கிறார்.
திருக்கயிலாயம் தொடக்கம் கதிர்காமம் வரை நீண்ட, காந்தாரம் தொடக்கம் ஐராவதி வரை அகன்ற, பண்பாட்டுப் பேழையின் வேர்களைத் தேடி அலைந்திருக்கிறார்.
விலங்குகளைப் படித்திருக்கிறார். வணிகத்தைத் தொடர்ந்திருக்கிறார். சமூகவியலில் சார்ந்திருக்கிறார்.
குறுந்தொகையின் மேற்கோளும் ஐரோப்பிய தொல்சின்ன மேற்கோள்களும் கலிங்கப் பழங்குடிகளின் எருமைக் கொம்புகளும் அவரது பரந்த பார்வைக்கும் எடுத்துக்காட்டும் தொடர்புபடுத்தும் ஆற்றலுக்கும் அங்கங்கே சான்றுகள்.
தான் சொல்வதற்கெல்லாம் பட விளக்கங்களைச் சித்திரா கொடுத்திருப்பது, மேடையில் அவர் தாயார் சாரதாவால் செய்யமுடியாத ஒன்றல்லவா!
ஒவ்வொரு சொல்லையும் அளந்து ஆழமான பொருளுடன் கூறியிருக்கிறார். கேட்கக் கேட்கச் சுவை சொட்டும் சித்திராவின் புலமையும் திறமையும் ஆற்றலும் சிந்துச் சமவெளி மரபணுக்கள் தந்தவை; மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்களின் மரபணுக்கள் தந்தவை; ஆண்டாளும் சேக்கிழார் விட்டுச்சென்ற மரபணுக்கள் தந்தவை.
மறைமலை அடிகள் சார்ந்தோர் விட்டுச்சென்ற மரபணுக்களைத் தந்தையார் நம்பியாரூரரும் தாயார் சாரதாவும் தம்மூடாகத் தனக்குத் தந்தனர் எனச் சொல்லாமல் ஒவ்வொரு சொல்லிலும் சொல்லியிருக்கிறார்.
இருபத்தி மூன்றாவது உரையையே கேட்டேன்.
எருமைக் கொம்புகளை இறை உணர்வுடன் நோக்கும் மரபுகள் இன்றைய இந்தோனேசியாவிலும் அங்கிருந்து புலம் பெயர்ந்த இன்றைய மடகாசுக்கர் மக்களிடையேயும் பரவலாக உள்ளதை அந்நாடுகளில் பயணிக்கையில் நேரில் கண்டேன். அவரும் அறிவார் என்றே கருதுகிறேன்.
திருமகள் சித்ரா அவர்களே இருபத்தி மூன்றாவது உரையே நான் தொடங்கிய உரை. முலாவது உரையிலிருந்து கேட்பதற்காகப் பார்ப்பதற்காக, என் அறிவைப் பெருக்குவதற்காக முயன்று கொண்டிருக்கிறேன்.
தொடருங்கள்.
இந்தத் தலைமுறை
உங்களைத் தன் மரபுகளின் தாயகமாக
உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் தன் சேயாக
அனுப்பியிருக்கிறது.
தொடருங்கள் தொய்வின்றித்
தளர்வறியா உள்ளத்துடன்
No comments:
Post a Comment