28 ஆடி 2050
(13.08.2019)
இலங்கையின் மேனாள் குடியரசுத்
தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு, அர்ஜுன் சம்பத்தின் மனம் திறந்த மடல்
அன்புள்ள திரு
ராஜபக்சே அவர்களே,
காஷ்மீர் தீர்வு இலங்கைக்கு ஓர்
எடுத்துக்காட்டு
அண்மையில்
காஷ்மீரில் நடந்தவை, இலங்கையில் ஆட்சிப் பரம்பல்
தொடர்பாகப் பொருத்தமானவை
என்றும் ஆட்சிப்
பரம்பலால் வரும் கேடுகளுக்கு எடுத்துக் காட்டு என்றும் நீங்கள் கூறியதாகக் கொழும்பு வீரகேசரியில்
படித்தேன்
நடுவண் அரசில் ஆட்சி
அதிகாரங்களைக் குவிப்பதோ மாநிலத்தில் ஏற்கனவே பகிர்ந்த ஆட்சி அதிகாரங்களைக்
குறைப்பதோ பிரதமர் மோடியின் நோக்கமல்ல. அத்தகைய நோக்கத்தை அவர் கொண்டிருந்தார் என
நீங்கள் கருதினால் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
வடக்கே
திருக்கயிலாயம் திபெத் நாட்டில்
தெற்கே
கதிர்காமம் இலங்கையில்
மேற்கே காந்தாரம்
ஆப்கானிஸ்தானில்
கிழக்கே ஐராவதி
மியன்மாரில்
இவ்வாறு நீண்டு அகன்று
விரிந்த பழம்பெரும் பாரதத்தின் பண்பாட்டுக் கூறுகள் பல கோடி ஆண்டுகள்
பழமையானவை. மீட்டும் மீட்டும் தேர்வாகி, பிழைகளைத் தவிர்த்து, தவறுகளை நீக்கி, பட்டறிவின் தளத்தில் உயர்ந்தவற்றைத் தேக்கி, சிறந்தவற்றைப் பேணிச்
செதுக்கிச் செதுக்கிக் காப்பாற்றிக் கூர்மையாக்கிய நீண்ட
நெடிய பரம்பரீயம் உடைய பண்பாட்டைப் பேணுவதே காஷ்மீரில் பிரதமர் எடுத்த
நடவடிக்கையின் உயரிய நோக்கம்.
இலங்கையில்
உள்ளவர்களுக்கும் இந்த உயரிய நோக்கத்தை எடுத்துக்காட்டியது பிரதமர் மோடியின்
அளப்பரிய பங்களிப்பு ஆகும்.
பிரதமர் மோடியின்
நடவடிக்கையால் காஷ்மீரில் அரசியல் ஆட்சி அதிகாரம் பெருகியது. காஷ்மீரிகள் தாம்
இழந்த மண்ணை மீளப் பெறுகிறார்கள். காஷ்மீரிகள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தங்களுடைய
பண்பாட்டை மீட்டும் நிலை நாட்டுவார்கள்.
கடந்த 1000 ஆண்டுகளூடாகக் கஜினியும்
கோரியும் தைமூரும் பாபரும் நடத்திய ஆக்கிரமிப்பு வடுக்களை அகற்றுவதில் வெற்றி காண்பார்கள். சுமேரியா தொடக்கம் இந்துகுஷ் மலை வரை
படர்ந்து உலகையே அதிர்விக்கும் பயங்கரவாதக் குழுக்களின் தாக்குதலில் இருந்து
விடுதலை பெறுவார்கள்.
துடைத்து எறிந்து, வழக்கிலிருந்து
நீக்கிய காஷ்மீர மொழியை அதன் எழுத்து வடிவமான கிரந்தத்தைப் பெருமை மிக்க
புகழ்மிக்க வரலாற்றுப் பயன்பாட்டுக்கு மீட்டமைப்பார்கள்.
காஷ்மீரின்
மண்ணின் மகன் ஒவ்வொருவரும் பூமியின் புத்திரன் ஒவ்வொருவரும் தனது ஆளுமையைத் தனது
முன்னோர் வழியில் வளர்த்துப் பூத்துக் காய்த்துப் பழமாக்கி உலகம் பயன்பெற வளர்த்து
எடுப்பார்.
திபெத்துக்குத் தெற்கே புத்தர்களின் மரபு வழி வாழ்விடம்
இலடாக். ஆங்கிலேயர் விட்டுச் சென்ற நாள் தொடக்கம் மனமோகன் எல்லைக் கோட்டைச்
சார்ந்த இலடாக் நிலப் பகுதியையும் தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி
இலடாக் மக்கள் குரல் கொடுத்து வந்துள்ளார்.
அன்னிய மொழி
அன்னிய வாழ்வுமுறை அன்னிய மதம் என்பன அண்மைக் காலங்களில் புகுந்து அவர்களின்
மரபுகளை வாழ்வியல் முறைகளைப்
பாழாக்கி வருவதைப் பலமுறை தில்லியிடம் கூறித் தமக்கு தனியான நிலப்பகுதி வேண்டும் என்று
கேட்டிருக்கிறார்கள்.
காலம் கனிந்தது. உள்ளம் கனிந்த பிரதமர் மோடி அவர்களுக்கு தனியான நிலப்பகுதியை அமைத்தார். தில்லியில் நேரடி ஆட்சியிலேயே சிறிதுகாலம் இருக்கும் என அறிவித்தார்.
காஷ்மீர்
சைவத்தின் வாழ்விடம்.
காஷ்மீர முனிவரே காஞ்சிபுரம் வந்த கச்சியப்ப முனிவர். கச்சி என்ற சொல் காஷ்மீரத்தைக் குறிக்கும். சைவத்தின்
பண்டைய வாழ்விடம் காஷ்மீரம். இலங்கை வேந்தன் இராவணன் அந்த தீவின் இராஜலட்சுமியை
நாகர்கள் புடைசூழ எடுத்துச் சென்று காஷ்மீரத்தில் கோயில் அமைத்தான். இன்றும் தால்
ஏரியின் அருகே அந்தக் கோயில் இருக்கிறது.
உங்களின்
முன்னோர், நீங்கள்
அண்மையில் ஏவிய செயற்கை கோளின் பெயரைத் தாங்கிய பெருமகன், சைவ சமயத்தின் காவலன், இராவணன், காஷ்மீரத்தில் அமைத்த
திருக்கோயிலைக் காப்பாற்றுவதற்குப் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
நீங்கள் மகிழ வேண்டாமா?
அறிஞர், தத்துவார்த்தி,
தமிழ் முனி இராமானுஜர் காஷ்மீரில் சாராத பீடம் சென்று தொல் சுவடிகளைக் கற்றுத் தேர்ந்தார்.
அவர் சென்ற சாராத பீடமும் ஆயிரக் கணக்கான சிவன் கோயில்களும் புத்த விகாரைகளும் இன்றைய
பாகிஸ்கானின் பிடியில் உள்ள காஷ்மீரத்தில் அழிந்து வருவதை அறிவீர்களே. அவற்றை மீட்டகவே
பிரதமர் மோடி இலக்கு வைத்துளார்.
மகாவமிசம் கூறிய
முதலாவது இலங்கை மன்னன் நாகநாட்டு மகோதரன். பின்னர் கலிங்க விஜயன், கஜபாகு, மானவர்மன், செகராஜசேகரன்,
விஜயபாகு, பராக்கிரமபாகு, சங்கிலி எனத் தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசர், கடைசிக் கண்டியரசன் இராஜசிங்கன் வரை எந்த இந்துக்
கோயிலையாவது இடித்து இருக்கிறார்களா?
மாற்றாக நான்
சொன்ன ஒவ்வொரு மன்னரும் இடையில் வந்த மன்னர்களும் இலங்கையில் உள்ள சைவக்
கோயில்களுக்கு நிவந்தங்கள் மானியங்கள் கொடுத்துப் பூசைகளைப் பேணி
வளர்த்திருக்கிறார்கள். இடிக்கவில்லை.
தென் முனையில் வரலாற்றுக்கு முற்பட்டதும் இராவணன்,
நரசிம்ம பல்லவன், பராக்கிரமபாகு போன்றோர் பேணியதுமான சிவன் கோயில்
தென்னாவரத்தை இடித்து உலூசியா தேவாலயம் கட்டியவன் போர்த்துக்கேயர் தளபதி தோமையன்.
இராவணன் தொடக்கம்
கயிலாய வன்னியன் வரை பூசித்த திருக்கேதீச்சரம், திருக்கோணச்சரம் இரண்டையும் அழித்தவன்
போர்த்துக்கேயத் தளபதி கொன்ஸ்டாண்டினாசா.
அண்மையில்
கிழக்கில் காளி
கோவிலை இடித்து மசூதி கட்டியவர் அமைச்சராக இருந்த ஹிஸ்புல்லா.
ஏமாங்கதப் பாலைவனத்தில்
பூத்த ஆபிராமிய அறங்களின் போர்வையில் ஆட்டுத் தோல் போர்த்த ஓநாய்களாகப் பாரத கண்டத்தின்
பராம்பரியத்தை அழிக்க முயன்றவர் இவர்கள்.
பிரதமர் மோடியின்
இலக்குத் தோமையர்களும் கொண்ஸ்டாண்டினாசாக்களும்
ஹிஸ்புல்லாக்களும் அன்றி வேறல்ல.
அகண்ட பாரத
கண்டத்தின் ஆட்சி மரபுகளுக்கு அவ்வப்பொழுது ஆலோசனை வழங்கி நூல்களை எழுதி
வைத்தவர்கள் சாணக்கியர் திருவள்ளுவர் போன்ற பெருமக்கள். காந்தாரம்
தொடக்கம் உங்களின் போற்றுதலுக்குரிய நிலமான உரோகணம் வரையான அரசுகள் தொடர்ச்சியாக இத்தகைய அறிஞர்களிடமே ஆலோசனை கேட்டு ஆண்டு வந்தனர்.
அகண்ட பரத
கண்டத்தில் பிரதமர் மோடியின் ஆட்சி அந்தப் புனித மரபைப் பேணும் ஆட்சி.
கத்தியின்றி யுத்தமின்றிக் காஷ்மீரத்தில் அரசியலமைப்பு விதி
மாற்றம் மூலம் அமைதியான அன்பளிப்பைக் காஷ்மீர மக்களுக்கு
கொடுத்தவர் பிரதமர் மோடி. மேலை நாட்டு ஆட்சி அளவுகோல்களும்
அரசியல் அளவுகோல்களும் கொண்டு பிரதமர் மோடியின் செயல்களை மதிப்பிடாதீர்கள்.
காஷ்மீரத்தில்
இந்த நடவடிக்கைக்காக அவர் சிறு வயதில் இருந்தே மக்களிடம் பரப்புரை செய்து
இருக்கிறார் போராட்டங்கள் நடத்தி இருக்கிறார் 60 ஆண்டுகள் அவர் நடத்திய அறப் போராட்டத்தின்
விளைவாக அவரே ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி
இருக்கிறார்.
தங்கத்
தாம்பாளத்தில் பிரதமர் மோடியின் ஆட்சியின் அணுகுமுறைகளை உங்களுக்கு பரிசாகத்
தருகிறேன். பரத கண்டத்தின் பண்பாடுகளை மீட்டெடுக்க உங்களுக்கும் அரிய வாய்ப்பு.
இலடாக்கில் புத்த
சமயத்நவருக்குத் தனி நிலப்பகுதியை உரித்தாக்கியமை வரலாற்று நிகழ்வு. இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் தமக்கான நிலப் பகுதியில் இந்து சமயத்தைப் பேணி வந்திருக்கிறார்கள்.
2570 ஆண்டுகளுக்கு
முன்பு தைப்பூச நாளில் முருகனுக்கு விழா. அந்நாள், புத்தர் மாணிக்கக் கங்கை
ஆற்றோரம் வந்தார். பின்னர் யாழ்ப்பாணம் வந்தார் அதை அடுத்து களனிக்கு சென்றார்.
அகண்ட பாரதத்தின்
சிந்தனையூற்றுச் செம்மல்
புத்தர். இலங்கையின் சைவ சமயத்தவர் அவரை ஏற்றனர். பலர் அவருடைய கொள்கைகளை கொண்டனர். நீங்கள்
அத்தகையோரின் வழி வந்தவர்களே.அண்மையில் யாழ்ப்பாண நாக விஹாரையின் வணக்கத்துக்குரிய
புத்த பிக்கு அவர்கள் இந்தச் செய்தியை வலியுறுத்திக்
கூறியுள்ளார்கள். இந்துக்களின் வாழ்விடங்களில் அடாத்தாக அட்டூழியத்தில் ஈடுபடும்
புத்த பிக்குகள் புத்தர்களே அல்லர் எனபது இத்தகைய மூத்த அறிவார்ந்த புத்தர்களின் நோக்கு.
இலங்கையில் இரு
நிலப்பகுதிகள். ஆதி குடிகளான இந்துப் பெரும்பான்மை நிலப்பகுதி ஒன்று. பின்வந்த
புத்தர் சார்ந்த பெரும்பான்மையினரின் நிலப்பகுதி மற்றது. வேறு எவருக்கும்
இலங்கையில் நில உரிமை கிடையாது.
இந்துப்
பெரும்பான்மை நிலப்பகுதி ஒன்று, புத்தர் பெரும்பான்மை நிலப்பகுதி மற்றது, என இலங்கையில் இரண்டு நிலப் பகுதியை அமையுங்கள். தர்ம நிலமும் தம்ம
நிலமும் சத்+சித்+ஆனந்தமாய் நிர்வாணம் நோக்கிய தேசமாகும். பிரதமர் மோடி காட்டிய வழி
அதுவே.
அகண்ட பாரதத்தின்
பழம்பெரும்
பண்பாடுகளைப் பேணுவதற்கு இத்தகை ஆட்சி முறையே சிறந்த வழி என்பதைப் பிரதமர் மோடி
உங்களுக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்.
அவர் வழியைப்
பின்பற்றி இலங்கையைச் செழிப்பும் செல்வமும் அன்பும் அறமும் அருளும் நிறைந்த நாடாக
மாற்றுங்கள்.
நன்றி
என்றும் உங்கள்
அன்புடன்
அர்ஜுன் சம்பத்
தலைவர்
இந்து மக்கள்
கட்சி
இந்தியா.