Sunday, December 30, 2018

குகநாதன் ஈழநாடு


சுவையான பலகாரம்
இனிப்பான பணியாரம்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
ஜெயகாந்தன் எழுதிய நாவல்பாரிசுக்குப் போ’. அந்த நாவலைப் படித்துக் கொண்டே கொழும்பிலிருந்து பாரிஸ் நகருக்கு வானூர்தியில் பயணித்தேன் என்றார் மின் பொறியாளரான என் நண்பர். 1970களில் அவர் பாரிசுக்குப் மேற்படிப்புக்குப் போனார்.
360 ஆண்டு காலத் தொடர்பு. தமிழருக்கும் பிரஞ்சுக்காரருக்குமான தொடர்பு. இந்தியாவுடனான நேரடி வணிகத்துக்குப் பிரான்சின் ஐந்தாம் என்றி மன்னர் 1605இல் ஆணையிட்டார். பிரஞ்சு வணிகர் முதலில் கேரளம் சென்றனர். பின்னர் கூர்ச்சரம் வரை நீண்டனர். 1674இல் புதுச்சேரிக்கு வந்தனர்.
புதுச்சேரிச் சிற்றூரை விலைக்கு வாங்கினர். பாண்டிச்சேரி எனப் பெயர் மாற்றினர். வணிக நகராக்கினர். இந்தியாவின் நுழைவாயிலாகப் பிரஞ்சுக்காரருக்குப் புதுச்சேரி அமைந்தது.
பிரஞ்சுக் கப்பல்களில் பணியாளராகத் தமிழர் சேர்ந்தனர். பிரான்சு சென்றனர். அவர்களுட் பலர் அங்கேயே தங்கினர். பிரஞ்சுப் பெண்களையும் திருமணம் செயதனர்.
பிரஞ்சுத் தமிழரின் வரலாறு கப்பல் பணியாளர் (இலாசுக்கர் Lascars) குடியேற்றத்துடன் தொடங்குகிறது. 1777இல் 200 தமிழர் பிரான்சில் Bordeaux, Nantes, La Rochelle, Marseilles, Saint-Malo Lorient ஆகிய துறைமுக நகரங்களில் வாழ்ந்தனர். சிலர் பாரிசு நகருக்கும் வந்தனர். இவர்களுள் பலர் வீட்டுப் பணியாளராக ஆயாக்களாகவே பணி புரிந்தனர்.
எழுத்தாளர் செயகாந்தன் தமிழகத்தில் கடலூரில் பிறந்து வளர்ந்தவர். புதுச்சேரி அயலூர். எனவேபாரிசுக்குப் போஎன அவர் எழுதிய நாவல், முன்னோர்களின் வழி வழிச் சிந்தனையின் தொடர்ச்சியே.
கரம்பனில் பிறந்து வளர்ந்தவர் எழுத்தாளர் குகநாதன். 1990இல் முதன் முறையாகப் பாரிசுக்குப் போகிறார். அந்தப் பயணம் அவரின் வாழ்வுத் திட்டமிடலுள் அடங்காத பயணம். காலத்தின் கட்டாயமாக அமைந்த பயணம். முன்னோர் வழிகாட்டலற்ற பயணம்.
உரோமாபுரிக்கோ வத்திக்கானுக்கோ எழுத்தாளர் குகநாதன் போயிருப்பின் அஃது அயலாரினதும் துணைவியாரினதும் வழிகாட்டலாயிருக்கும். ஏனெனில் சின்ன உரோமாபுரி எனவும் அவரின் ஊரான கரம்பனை அழைப்பர்.
 1777 தொடக்கம் பிரான்சில் தமிழர் வாழ்ந்து வருவதைக் குகநாதன் ஊகிக்கவில்லை. எழுத்தாளர் குகநாதன் பிரான்சுக்குள் நுழைந்த 1990இல் பிரான்சில் 200,000 எண்ணிக்கை வரையான தமிழர் வாழ்ந்தனர்.
ஆங்கில மொழி பேசும் நாடுகளே ஈழத் தமிழருக்குப் பழக்கமான நாடுகள்.  ஐரோப்பிய நாடுகளைத் தெரிந்து வைத்திருந்தனர். ஆனாலும் ஐரோப்பிய மொழிகளுடன் தொடர்பு அற்றதால் மனத்தால் அவை தொலைவில் இருந்தன, கற்பனைகளில் எட்டாது இருந்தன.
1973 வரை ஈழத் தமிழர்கள் பிரான்சு நாட்டிற்கு போவது மிக அரிது. பிரான்சு நாட்டுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் உள்ள தொடர்புகள் மிக மிகக் குறைவு.
பல்கலைக் கழகத்துள் தகுந்தவர்களுக்கு நுழைவு மறுப்பு, 1971இல் சிறீமாவோ ஆட்சி தமிழ் மாணவர்களுக்கு இழைத்த கொடுமைகளுள் ஒன்று.
இந்தக் கொடுமை ஈழத் தமிழ் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டியது, போராடத் தூண்டியது. 1972-1973 காலப் பகுதியில் ஒரு சில இளைஞர்கள் பாதுகாப்புத் தேடிப் பிரான்சுக்கும் யேர்மனிக்கும் ஏதிலிகளாகக் குடிபெயர்ந்தனர். பின்னைய பெருந்தொகைப் புலம்பெயர்தலுக்கு முதல் அடி எடுத்து வைத்தோர் அவரே.
இலங்கையில் சிறீமாவோ ஆட்சியில் 1972 தொடக்கம் சிறையில் இருந்த ஏராளமான தமிழ் இளைஞர்கள் 1976 மார்கழியில் விடுதலையானார்கள்.
சிறையிலிருந்து வெளிவந்தோருட் 14 இளைஞர்கள் கடவுச் சீட்டுப் பெறுவதற்காக எனது உதவியை நாடினர். நான் அவர்களுக்கு உறுதிக் கையெழுத்து வைத்தேன். கடவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொடுத்தேன். அவர்களுட் சிலர் யேர்மனி போயினர், சிலர் பிரான்சு போயினர்.
இக்காலத்தில் கணிசமான தமிழ் இளைஞர்கள் பிரான்சுக்கு ஏதிலிகளாகப் போயினர்.
1983 யூலையில் சிங்களவரின் தமிழர் மீதான திட்டமிட்ட தாக்குதல், இனப் படுகொலை எனக் கருதக்கூடிய அழிவு முயற்சி. இந்த இனப் படுகொலை முயற்சியே ஆயிரக்கணக்கான தமிழர்களை ஐரோப்பா நோக்கி அனுப்பியது.
1983க்குப் பின்னர் சில ஆண்டு காலத்துள் பிரான்சு நாட்டுக்கு ஏதிலிகளாகப் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் தொகை 90,000 எனும் ஒரு மதிப்பீடு.
பிரான்சின் நடு நாட்டிலும் இறியூனியன், குவாடுலூப்பு, மார்ட்டினிக்கு, நியூகலிடோனியா, நியூகெர்பிடிசு, கயானா ஆகிய கடல்கடந்த மாகாணங்களிலும் 250 ஆண்டுகளுக்குக் கூடுதலாக வாழும் தமிழருட் பலர், பிரஞ்சு மொழியை வீட்டுமொழியாகவும் கொண்டவர்கள். தமிழை ஓரளவு மறந்தவர்கள்.
1983 தொடக்கம் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழருள் பெரும்பாலோர் தமிழ்மொழியிலேயே பேசி வாழ்ந்து பழகியவர். பிரஞ்சு மொழியைக் கிஞ்சித்தும் பயிலாதவர், படிக்காதவர்.
முன்னவர் பிரான்சுக்குசெல்கையில் பிரஞ்சுச் சூழலுக்குப் போவதைத் தெரிந்து போனவர்கள். பின்னவருக்குக் காலம் திணித்த வாழ்விடமே பிரான்சு. மொழி அறிவா? பாதுகாப்பா? பொருள் வளமா? இவை மனத்தில் வினாக்களாகப் பிரான்சுப் பயணங்கள் பின்னவருக்கு விடையாயின.
1990இல் குகநாதன் பிரான்சுக்குப் போகிறார். அங்கே 90,000 ஈழத் தமிழர். 200,000 புதுச்சேரி வழித் தமிழர். பிரான்சின் கடல்கடந்த மாகாணங்களில் 500,000 தமிழர். ஐரோப்பாவின் 44 நாடுகளுள் ஏறத்தாழ 15 நாடுகளில் 300,000 ஈழத் தமிழர்.
யாழ்ப்பாணம் சிவன்கோயில் வீதியில் ஈழநாடு பணிமனை. குகநாதன் அங்கு மூத்த செய்தியாளர். . சபாரத்தினம், கோபாலரத்தினம் ஆகிய இருவர் இவருக்கு வழிகாட்டிகள். ஊடகத் துறையில் முறையாகப் பயிற்சி பெறாதவர் குகநாதன்.
யாழ்ப்பாணம் ஈழநாடு இவரின் செயற் பயிற்சிக் களம். ஏனோ தானோ என்றில்லாமல், கடமைக்காக என்றில்லாமல், உணர்வு பூர்வமாக ஊடகத்துடன் குகநாதன் ஒன்றிணைந்தார்.
பாரிசு நகரம் புதிய சூழல். மொழி புதிது. பண்பாடு புதிது. வாழ்வுமுறை புதிது. வாழ்வை அணுகும் முறை புதிது.
ஐரோப்பிய பரப்பைக் கழுகுப் பார்வையாகக் குகநாதன் பார்க்கிறார். இங்கிலாந்து தவிர, ஈழத் தமிழர் சென்ற நாடுகளில் மொழி, பண்பாடு வாழ்வுமுறை யாவும் புதிதாக அமைய, அவர்கள் உடலோ அந்தந்த நாடுகளில். உணர்வோ உறவோ உயிரோ ஈழத்தில்.
உறவுகளின் நினைவு, உணவுகளுக்கு ஏக்கம், வெள்ளைகளை அந்நியமாகப் பார்த்தல், புதுமைகளை நுகரமுடியா வருவாய்க் குறைவு, குளிரின் கொடுமை, ஈழத்தின் அவலத்தை அறிய அடங்கா ஆர்வம், அந்ததந்த நாடுகளில் ஈழத்தவர் கூடும் இடங்கள் குட்டி ஈழமாவதைக் குகநாதன் கண்டார். குட்டி உரோமாபுரியைத் தன் ஊரில் முன்னமே கண்டவர்.
உறவாகி நிறைந்தது. உணர்வோடு கலந்தது. உயிராகி உறைந்தது. குகநாதனின் ஊனோடு கலந்தது, யாழ்ப்பாணம் ஈழநாடு நாளிதழ். ஐரோப்பாவைக் கழுகுப் பார்வையாகப் பார்த்தவர். ஈழத்தவர் உணர்வுகளை ஏக்கங்களை உணர்ந்தவர். ஊடக வாழ்வில் ஊறித் திளைத்தவர். ஈழநாடு இதழைப் பாரிசில் இருந்து வெளியிடலாமா என எண்ணினார்.
1991 தமிழ்ப் புத்தாண்டு நாள் பிரான்சில் தமிழ் மொழி ஊடகத் தரம் பெற்ற நாள். தந்தவர் குகநாதன். வெளிவந்தது பாரிசு ஈழநாடு முதலாவது இதழ். 1777 முதலாகப் புதுச்சேரித் தமிழர் பிரான்சில் வாழ்வர். தமிழ் மொழி அவர்களின் தாய். எனினும் 200 ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழ்த் தாய்க்கு மணிக்கொடி ஏற்றியவர் 1990இல் பிரான்சுக்குத் திட்டமிடாமல் வந்த ஈழத் தமிழர் குகநாதன்.
அச்சிதழைத் தொடங்கிப் பார் என்பது, திருமணத்தைச் செய்து பார், வீட்டைக் கட்டிப் பார் என்பது போன்ற வாழ்க்கைச் சவால். சவால்களே குகநாதனுக்கு சுவைப் பலகாரமும் இனிப்புப் பணியாரமும்.
தொடக்கத்தில் ஆர்வம் எழும். தொடர முதல் கரையும். வாசகர் ஆர்வம் குறையும். எழுதுவோர் பங்களிப்பு வற்றும். அச்சிதழின் விற்பனை வீழும். வீச்சுடன் தொடங்கியவர் பேச்சு மூச்சின்றி இதழை மூடுவார்.
குகநாதனுக்கு உய்த்துணரும் ஆற்றல் மிகை. திட்டமிடும் ஆற்றல் நகை. குமிழ் குமிழாய்க் கொப்பளிக்கும் உற்சாகம் தகை.
தொடக்க இதழோடு மூடுவதா? சில வாரங்களில் மூடுவதா? அலுப்புத் தட்டக் கைவிடுவதா? பழிப்போர் சொற்களால் துவள்வதா? இவை குகநாதனின் கனவிலும் வராத சிந்தனைச் சிதறல்.
ஐரோப்பியப் பரப்பில் வாழ்ந்த 300,000 ஈழத் தமிழரே இவரது வாசகர் தளம். 1777 தொடக்கம் பிரான்சில் வாழ்ந்து வரும் 200,000 தமிழரோ, கடல்கடந்த பிரஞ்சு மாகாணங்களில் வாழும் 500,000 தமிழரோ, குகநாதனின் விற்பனை வட்டத்துள் அடங்கவில்லை.
எனவே இதழின் பக்கங்களைத் திட்டமிடுவதில் ஈழத் தமிழ் வாசகர் தளத்தின் ஆர்வத்தை மட்டுமே கருதினார். ஈழச் செய்திகள் தலைப்புப் பக்கங்களாயின. தன் தன் சிற்றூரில் என்ன செய்தி எனத் தேடும் ஈழத் தமிழருக்காக, மாவட்டச் செய்திகளைப் பக்கங்களில் நிறைத்தார்.
தமிழகச் செய்திகளை ஈழத்தவர் அறிய விழைவர். தமிழகத்துக்காக ஓரிரு பக்கங்கள் ஒதுக்கினார். எழுதுமாறு யாரைக் கேட்பது? அக்காலத்தில் பாரிசுக்குச் சென்று சேர்ந்தவர் பற்றிமாகரன். குடும்பத்தோடு அவர் புலம்பெயர நான் பங்களித்தேன். குகநாதன் தமிழகச் செய்தியாளரைத் தேடுகிறார். பற்றிமாகரன் என் பெயரைச் குகநாதனுக்குச் சொல்கிறார்.
கைப்பேசிகள் வராத காலம். தொலைப்பேசியில் அழைத்தார் குகநாதன். குரலில் குழைவு. சொற்களில் உறுதி. சுருங்கச் சொலல். விளங்கச் சொலல். உரையாடலில் உற்சாகம். ஈர்க்கும் இனிமை. செயலில் தளரா நம்பிக்கை. குகநாதனின் அறிமுகம் அவ்வாறு தொடங்கியது.
 குகநாதனை நேரில் சந்திக்காமலே சில ஆண்டுகள் பாரிசு ஈழநாடு வார இதழுக்குத் தமிழகத் தொடர்பாளராகப் பங்களித்தேன். அவரது துணைவியார் என் இணைப்பாளர். அவரையும் நேரில் பார்த்திரேன்.
குரலைக் கேட்டேன். குரல் வழிப் பண்பில் திளைத்தேன். செயல் வேகத்தை வியந்தேன். தொழிநுட்ப உள்வாங்கலால் திகைத்தேன். கணிணியும் இணையமும் எழுத்துருக்களும் பக்கமாக்கலும் குகநாதனுக்குக் கைவந்தனவோ அறியேன், அவர் துணைவியார் வல்லுனரானார்.
நான் எழுத்தாளனல்ல. அறிவியலுள் ஆய்வுள் நுழைய முயல்பவன். எனக்குச் சைவ சமயத்தில் ஈடுபாடு. தமிழ்மீது அடங்காக் காதல். சென்னையில் எனக்குத் தொழிலாக அச்சுத் துறை. அலங்காரமாகப் பதிப்புத் துறை. அறிவியல், சைவம், தமிழ், அச்சு, பதிப்பு யாவும் எனக்கு என் தந்தையாரின் கொடை. நான் வாழ்ந்த யாழ்ப்பாணத்தின் விளைச்சல்.
ஈழத் தமிழர் அரசியல் தொடர்பாகச் சென்னையில் தமிழில் தினமணி, ஆங்கிலத்தில் இந்து, என் கட்டுரைகளை வெளியிட்ட காலங்கள். குமுதம், விகடன் மற்றும் வார மாத இதழ்களும் என் கருத்துகளுக்குக் களம் அமைத்தன. யாழ்ப்பாணத்தில் ஈழநாடு, கொழும்பில் வீரகேசரி, சுதந்திரன், தினகரன் என 1963 தொடக்கம் என் ஆக்கங்களை வெளியிட்டுள. என் தமிழ் எழுத்தாற்றலைச் செதுக்கிய களங்கள் இவை.
பாரிசு ஈழநாடு வார இதழில் வாரந்தோறும் தமிழகச் செய்திக் கட்டுரையை எழுதுமாறு குகநாதன் பணித்தார். எழுதினேன். பாரிசு ஈழநாடு ஆண்டிதழ் ஒன்றைச் சென்னையிலேயே. எழுத்தாளர் செ. யோகநாதன் தயாரித்துத் தந்தார்.
சென்னையின் பத்தி எழுத்தாளர்களைக் குகநாதனுக்கு அறிமுகித்தேன். கவிஞர் காசி ஆனந்தன் பாரிசு ஈழநாடு இதழுக்கு எழுதத் தொடங்கினார். ஓர் இதழுக்கு எழுதினார். பாரிசிலிருந்து யாரோ கொடுத்த அழுத்தத்தால் அவர் தொடர்ந்து எழுதவில்லை.
மென்மையைக் கண்டேன், கேட்டேன். இனிமையைக் கண்டேன், கேட்டேன். உற்சாகத்தைக் கண்டேன், கேட்டேன். பண்பட்ட உள்ளங்களைக் குகநாதனிலும் துணைவியாரிலும் மகனினும் மகளிலும் கண்டேன், கேட்டேன். கண்களால் அல்ல. காதுகளால் அல்ல.
சில ஆண்டுகளின் பின் சென்னைக்கு வந்த குகநாதன், வண்டியில் இருந்து இறங்க முடியாமல் திணறி இறங்கியபொழுதே, அவரின் உள்ளம் போன்ற பருமனராக அவரை நேரில் கண்டேன். குழைந்த குரலைக் கொடுக்கக் கழுத்தை மூடும் கொழுத்த தாடையைக் கண்டேன். பண்பில் இனிமை சேர்த்த கூர்ந்த கண்களைக் கண்டேன். உற்சாகம் தரும் உணர்வைத் தூண்டக் கோதும் தலைமுடிகளைக் கண்டேன். பணிகளை முடுக்கப் பணத்தை விசிறிய கைகளைக் கண்டேன். நடந்தாரா நகர்ந்தாரா கால்களில் நயந்தாரா அறியேன். நேரத்தைக் காக்கும் முகாமை கண்டேன். நெறிகளுள் அடங்கும் நேர்மை கண்டேன்.
பாரிசில் தொடர்ச்சியாக ஊடகப் பணி. வார இதழோடு நிற்காமல் 25.12.2000 முதலாகத் தொலைக்காட்சி வழங்கலிலும் துணிந்தார். அவருக்குத் தொலைக்காட்சி வழங்கலிலும் தொடர்புகளைக் கொடுத்தேன். சிக்கல்களை அவிழ்க்க உதவினேன்.
பாரிசு ஈழநாடு, தான் தொலைக்காட்சி இரண்டும் தமிழை ஐரோப்பாவின் மொழியாக்க உதவின. 1777 தொடக்கம் வாழ்வோர் செய்யத் துணியாததை 1990இல் சென்ற குகநாதன் தொடக்கி, வெற்றியாக்கினார்.
தெருவோரக் கடைகளில் பாரிசு ஈழநாடு வார இதழ். துலங்கும் அலைவரிசைகளுள் ஒன்றாகத் தான் தொலைக் காட்சி. ஐரோப்பாவில் தமிழ் மிளிர்ந்தது. குகநாதன் தொடக்கிய முயற்சி பலருக்கு வழிகாட்டியானது. வழிவந்தவர்கள் நன்றி பாராட்டவேண்டாமா? தமிழுக்காக நயந்து சீராட்டவேண்டாமா?  நம்மவரிடம் அதை எதிர்பார்க்கலாமா?
ஏசுவார்கள் எரிப்பார்கள் உண்மையை எழுதுங்கள் உண்மையாய் எழுதுங்கள் என யாழ்ப்பாணம் ஈழநாடு இதழை நோக்கிச் சொன்னவர் யாழ்ப்பாணத்தின் தவமகன் யோக சுவாமிகள். குகநாதனுக்கு இந்த வரிகள் மனப்பாடம் போலும்.
நெஞ்சில் உரம். நேர்மைத் திறம். வஞ்சகமற்ற உள்ளம். தமிழை வாழ்விக்கும் திண்மை. எனவே குகநாதன் சோதனைகளுக்குள்ளானார். தவமகன் யோக சுவாமிகளின் போதனைகளால் சோதனைகள் தந்த வேதனைகள் சாதனைகளை நோக்கிக் குகநாதனை நகர்த்தின.
18.05.2005இல் இந்தியாவின் புதுச்சேரியில் இருந்து தான் தொலைக்காட்சி ஒளி-ஒலி பரப்பு. சென்னையில் இணைப்புக்காக அலுவலகம்.
கோலோச்சிய தொலைக்காட்சித் தமிழக அலைவரிசைகள், கோடிகளில் புரண்டோரின் தமிழக அலைவரிசைகள், அரசியல் செல்வாக்காளரின் அலைவரிசைகள் நடுவே, ஈழத்தவர் ஒளி-ஒலி பரப்பிய அலைவரிசையும் சமதையானது, சாதனையானது.
ஒரு கதவை மூடுங்கள் மறு கதவு திறக்கும் என்பர். குகநாதன் சாதனையாளர். ஆனாலும் நெருக்கடிகளுக்குக் குறைவில்லை. வேறு எந்தத் தொலைக்காட்சி அலைவரிசைக்கும் இடமில்லை என்றோரின் மேலாதிக்க நெருக்கடிகளால் குகநாதன் கொழும்பு நோக்கினார்.
மற்றொரு கதவைத் திறந்தார். 25.12.2000 தொடக்கம் இலங்கையில் தான் தொலைக்காட்சியின் தளம். நெருக்கடி தந்தோர் நெருடலுக்காயினர்.
2010 புரட்டாதியில் கொழும்பிலிருந்து சென்னைக்குத் தப்பிச் சென்றேன். சேர்ந்ததும் பெருமூச்சுவிட்டேன். பின்னர் கொழும்புக்கு வந்து போவேன். வடக்கே போக முடியவில்லை.
2012 ஆவணி. கொழும்பு வெள்ளவத்தை காலி வீதி. பிற்பகல் வேளை. நடைமேடையில் வடக்கு நோக்கி நடந்துகொண்டிருந்தேன். ஐயா என்ற குரல். வண்டிக்குள்ளிருந்து இறங்கி வாஞ்சையோடு விளித்தவர் குகநாதன்.
வடக்கே போக முடியவில்லை என்றேன். வாருங்கள் போகலாம் என்றார். இரவு விருந்து தந்தார். யாழ்ப்பாணப் பேருந்தில் ஏற்றினார். மறுநாள் காலை மறவன்புலவுக்கு அவரே வந்தார். ஆவன செய்தார். வடக்கில் மட்டுமன்று, இலங்கை எங்கும் விட்டுவிடுதலையாக நான் பயணிக்க வழிவகுத்தவர் குகநாதன். அஃது ஒரு கனவுக் காலம். நனவில் நனைகிறேனா என நுள்ளிப் பார்த்துக் குகநாதனை வியந்த காலம்.
திருமதி குகநாதனை நேரில் அறியேன். 2013இல் அவரைக் காணப் பாரிசு சென்றேன். அவர் இல்லம் சென்று அவரையும் மகளையும் காணும் பேறுற்றேன்.
இலங்கையில் குகநாதன் விரித்த ஊடக வலைப்பின்னல், தொலைக்காட்சி அலைவரிசைகளாய்ப் பரந்தன. அச்சு ஊடகத்திலும் நாட்டம் கொண்டார். நாளிதழுக்கு ஆசிரியராகும் தகமை எனக்குண்டென்றார். அவர் முதலீடுகள் பெருகவேண்டும் என நெஞ்சார விரும்புபவன். எனவே தவிர்த்தேன். காலைக் கதிர் நாளிதழ் அவர் மேற்பார்வைக்கு வந்துளது.
யாழ்ப்பாணம் சிவன்கோயிலடியில் ஊடகத் துறையுள் நுழைந்தவர். ஒரு சுற்று உலக வலம் வந்தார். ஐரோப்பாவில் 1777இல் வந்த தமிழர் முயலாதன இவர் கைவண்ணமாயிற்று.
தமிழகத்தில் காலூன்ற முயல்வது எளிதானதல்ல. பதிப்பாளனாக நான் தமிழகத்தில் வெற்றிபெறச் சந்தித்த சவால்களை அறிவேன்.
மீண்டும் யாழ்ப்பாண மண்ணில் இருந்து உலகையே ஊடகத்தால் ஆள்கிறார் குகநாதன். தமிழ்த் தேசம், தமிழ்த் தேசியம் இவை வெற்று முழக்கங்கள் அல்ல. செயலால், ஆற்றலால், திறமையால், தொலைநோக்கால் தமிழ்த் தேசியத்தின் வடிவம் குகநாதன்.  


No comments: