Tuesday, September 06, 2005

மணிமேகலைக் காப்பியத்தில் சிறை

காயசண்டிகை:
காஞ்சனன் கணவன், காயசண்டிகை மனைவி, இமயமலைச் சாரலில் காஞ்சனாபுரத்தில் வசித்தனர்.
பொதிகைமலையின் வனப்புக் காணச் சுற்றுலாப் பயணிகளாகத் தமிழகம் வந்தனர். வியந்து, மகிழ்ந்து பல்வேறு இடங்களுக்கும் பயணித்தனர்.
ஒருநாள், குளக்கரையருகே முனிவன் ஒருவன் குளிக்கச் செல்லும் பொழுது விட்டுச் சென்ற நாவல்பழத்தை, விவரமறியாது காலால் காயசண்டிகை மிதித்தாள். குளித்துவிட்டு மீண்ட முனிவன், நாவல் பழத்தை மிதித்த காயசண்டிகையைச் சினந்தான்.
என் பசிக்கு உணவாகிய பழத்தை மிதித்தனை, என்னைப்போல் உனக்கும் தீராப் பசிப்பிணி வருவதாக என முனிவன் சபித்தனன். காயசண்டிகையின் தீராப் பசிப்பிணியைத் தீர்க்கக் காஞ்சனன் முயன்றான். தமிழகமெங்கும் ஊரூராகச் சென்றான். மருத்துவர்களை நாடினான்.
சோழத் தலைநகர் பூம்புகார் வந்தான். வருவோர்க்கெல்லாம் வற்றாது உணவு வழங்கும் உலக அறவியில் காயசண்டிகையைச் சேர்த்தான். இணையோடு வந்தவன் தனியாக வடக்கே காஞ்சனாபுரத்திற்குத் திரும்பினான்.
மணிமேகலை:
கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை. மூப்பு, பிணி, சாக்காடு ஆய மூன்றுக்கான இப்பிறவியின் உடல், துன்பங்களின் கொள்கலன்; துறவே பிறவியின் பயன்; இவற்றைத் தேர்ந்த மணிமேகலை சிறுவயதிலேயே துவராடையை உடுத்தித் தேரரானாள்.
துறவுபூண்ட மணிமேகலை, யாழ்ப்பாணம் சென்றாள். கந்தரோடையில் கோமுகிப் பொய்கையில் அமுதசுரபிப் பாத்திரத்தைப் பெற்றாள்.
புகார் நகரம் திரும்பிய மணிமேகலை, பாரகம் அடங்களும் பசிப்பிணி அறுகென அமுதத்தை அனைவருக்கும் அள்ளி ஈந்தாள்.
காயசண்டிகைத் தங்கியிருந்த உலக அறவியில் மணிமேகலை பசிப்பிணி போக்கிக் கொண்டிருந்தாள். அங்கிருந்த காயசண்டிகைக்கு அமுதசுரபியிலிருந்து அள்ளிக் கொடுத்த உணவே மருந்தாயிற்று. தீராப் பசியை மணிமேகலை தீர்த்தாள். நன்றி கூறிய காயசண்டிகை தன் கணவனைத்தேடி வடக்கே காஞ்சனாபுரத்திற்குப் புறப்பட்டாள்.
உதயகுமாரன்:
சோழமன்னனின் மகன் உதயகுமாரன் மணிமேகலையை விழைந்தான். மணிமேகலையின் பாட்டி சித்திராபதியும் உதயகுமாரனுக்கு மணிமேகலை மீது காமவேட்கையை ஊட்டினாள்.
உதயகுமாரன் மணிமேகலையைத் தேடினான். உதயகுமாரன் தேடிப் பின்தொடர்தலைக் கண்ட மணிமேகலை அவனுக்காக வருந்தினாள். அருகிலிருந்த சம்பாபதிக் கோயிலுள் மறைந்தாள். மாறுவேடம் பூண்டாள், காயசண்டிகையின் உருவத்தைப் பெற்றாள், உலக அறவி வந்தாள். பசிநீக்கும் பணியைத் தொடர்ந்தாள்.
காயசண்டிகையின் உருவத்தில் இருந்ததால் உதயகுமாரனுக்கு மணிமேகலையைத் தெரியவில்லை.அறக்கோட்டமாக்குக உலக அறவியில் மட்டுமல்ல புகார் நகரின் ஏனைய இடங்களிலும் பசித்தோர்க்கு உணவை அள்ளியள்ளிக் கொடுத்தாள்.
புகார் நகரின் ஒரு பகுதியிலிருந்த சிறைக்கோட்டம் சென்றாள். சிறைக்கைதிகளுக்கு உணவை அள்ளியள்ளிக் கொடுத்தாள். அவர்களும் வயிறு புடைக்க உண்டனர். சிறைக்காவலருக்கோ வியப்பு. மன்னனிடம் சென்றனர். மணிமேகலையின் அன்புப் பெருக்கத்தையும், வற்றா உணவுப் பெருக்கத்தையும் வியந்து பாராட்டிக் கூறினர்.
மன்னன் தன் அரசவைக்கு மணிமேகலையை அழைத்தான். காயசண்டிகையாக மாறுவேடம் புனைந்த மணிமேகலை அரசவைக்குச் சென்றாள். பெருந்தொண்டு புரியும் அணங்கே, உனக்கு என்ன வேண்டும் கேள் என மன்னன் வினவினான். வேந்தே, தண்டனை பெற்ற கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குங்கள். அவர்களை அறவோர் ஆக்குங்கள். சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்குங்கள் என மணிமேகலை வேண்டுகோள் விடுத்தாள். மன்னன் உடன்பட்டான். மணிமேகலை மகிழ்ந்தாள்.
காயசண்டிகையின் உருவுடன் உலக அறவிக்கு மீண்டாள். பசிப்பிணிப் போக்கும் தொண்டில் தொடர்ந்து ஈடுபட்டாள்.
கொலை:
உதயகுமாரன் ஓயவில்லை. அமுதசுரபி மணிமேகலையின் கையிலிருந்ததே, இப்பொழுது வேறொருத்தியின் கையில் உள்ளதே! யாரிந்தப்பெண்? மணிமேகலையே இந்த மாறுவேடத்தில் உள்ளாளோ? என உதயகுமாரன் மயங்கினான்.
காயசண்டிகைதான் மணிமேகலை என உய்த்துணர்ந்தான். காஞ்சனாபுரத்திற்குக் காயசண்டிகை திரும்பியதை அறியாத காஞ்சனன் அவளைத் தேடிப் பூம்புகாருக்கு வந்தான், உலக அறவியுள் புகுந்து தேடினான். அங்கே காயசண்டிகை உருவிலிருந்த மணிமேகலையின் பின்னே உதயகுமாரன் காம வயப்பட்டுத் தொடர்வதைக் கண்டான். என் மனைவி மீது மாற்றான் மயங்குகிறானே எனக் கருதினான். வாளொடு காஞ்சனன் பதுங்கியிருக்க, உதயகுமாரன் அவ்வழி வந்தான். ஒரே வீச்சில் உதயகுமாரனை வெட்டி வீழ்த்திய காஞ்சனன் தப்பி ஓடினான்.
சிறையிடுதல்: உதயகுமாரன் இளவரசனல்லவா! மன்னனுக்குச் செய்தி போயிற்று. துறவு பூண்ட மணிமேகலையைக் காமுற்ற உதயகுமாரன் என் மகனாயினும் தவறிழைத்தவனே, தண்டனைக்குரியவனே. பழிச்சொல் பரவுமுன்பு அவனுடலை எரித்து விடுங்கள், மணிமேகலையை ஆய்வுக்காகச் சிறையிலிடுங்கள் என்றான் மன்னன். மனுநீதிகண்ட சோழனின் வழிவந்தவனல்லவா இம்மன்னவன். தேர்க்காலில் பசுக் கன்றைத் தன்மகன் கொன்றான் என்று தெரிந்ததும், மகனைத் தேர்க்காலில் இடுக எனச் சொன்னவன் மனுநீதிச்சோழன். அந்த நீதி மரபில் வந்த அரசனும், அரசியும் மகனை இழந்த துக்கத்தை வெளிக்காட்டவேயில்லை.
உடல்வதை:
தாய்ப்பாசம் விடுமா? அரசிக்கு மணிமேகலை மீது அடங்காத சீற்றம். எனினும் அதை மறைத்தாள். கணிகை மகளை என் மகன் காமுறுவது தவறா? எனத் தனக்குள்ளே வினவிக்கொண்டாள். மணிமேகலை மீது பரிவு காட்டுவது போல் நடித்துப் பழித் தீர்க்க விழைந்தாள். அரசனிடம் அரசி சென்றாள். குற்றமற்ற மணிமேகலையை விடுவியுங்கள் என்றாள். அரசனும் மணிமேகலையைக் காவலிலிருந்து விடுவித்தான்.
மணிமேகலைக்கு பித்தேற்றும் மருந்தை அரசி ஊட்டினாள். மணிமேகலை தப்பினாள்.
கல்லா இளைஞன் ஒருவனை அரசி அழைத்து, மணிமேகலையுடன் கூடினேன் எனப் பொய்யுரை வதந்தியைப் பரப்ப முயன்றாள். அவ்விளைஞனோ புகாரை விட்டே ஓடினான்.
மணிமேகலையைப் பட்டினி போட்டாள்.
சுண்ணாம்பு அறைக்குள் மணிமேகலையை அரசி அடைத்தாள். எவ்வித வருத்தமுமின்றி மாதவத்தாள் இருந்தாள்.
தன் உடல்வதை முயற்சிகள் தோல்வியுற்றதைக் கண்ட அரசி மாதவத்தாள் மணிமேகலையைத் தொழுதாள்.
மன்னிப்பு:
தனக்குத் துன்பங்களைத் தொடர்ந்து தந்த அரசியை மன்னித்த மணிமேகலை அரசியைத் தொழுதாள். காஞ்சனன் தன் நாடு திரும்பிக் காயசண்டிகையைக் கண்டு மகிழ்வோடு வாழ்ந்தான்.
முடிவுரை:
குற்றமிழைக்காதவர்களைச் சிறையிலிடுவதும், தண்டனைக்கு உள்ளாக்குவதும் பல நூற்றாண்டுகளாகவே இருந்துவரும் பிறழ்ச்சிகள்.
கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வா எனத் தீர்ப்பு வழங்கியவன் பாண்டியன் நெடுஞ்செழியன். அறிவுகெட்ட மன்னவனே (தேரா மன்னா) எனக் கண்ணகி அவனைச் சினந்தாள். அரசியல் பிழைத்தவனுக்கு அறங் கூற்றாயது. பாண்டியனோ மனைவியுடன் மாண்டான். மதுரையும் பற்றி எரிந்ததே.
குற்றமிழைக்கா மணிமேகலையைக் காவலில் வைத்த மன்னவனும் உடல் வதைக்குள்ளாக்கிய அரசியும் மனம் திருந்தினர். மன்னிப்புக் கோரினர்.
அன்னை திரேசா நம் காலத்தில் பசிப்பிணி போக்கிய மாதரசி. 1,700 ஆண்டுகளுக்கு முன்பே பசிப்பிணி போக்கி வழிகாட்டிய அருந்தவத் தமிழ்மகள் மணிமேகலை.
அம்னெஸ்டி இன்ரநாஷனல் என்ற அனைத்துலக மன்னிப்புச் சபை சிறையிலுள்ளோரை மன்னித்து விடுவிக்கப் போராடுவது இந்த நூற்றாண்டில். நம் தமிழ்ப்பெண் மணிமேகலையோ 1,700 ஆண்டுகளுக்கு முன்பே சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கி வழிகாட்டினாள்.
நமக்குக் கொடுமை செய்வோரை நாம் மன்னித்துத் தொழவேண்டும் என வாழ்ந்து காட்டிய தமிழ் மகளும் மணிமேகலையே.
சிலப்பதிகாரக் காப்பியமும், மணிமேகலைக் காப்பியமும் இவற்றுக்குச் சான்றாக இன்றும் நம்மிடை உள.

No comments: