Thursday, June 26, 2025
நினைவுகள்
Wednesday, June 25, 2025
செம்மணியில் வெறுப்பு அரசியல்
ஆனி 12 வியாழக்கிழமை (26 06 2025)
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை எழுதுகிறேன்
1)
அழைப்பிதழ் நிகழ்ச்சிக்கு அனுப்புவார்கள்.
நிகழ்ச்சிக்கு வருவதை உறுதி செய்ய எனக் குறிப்பும் எழுதுவார்கள்.
அழையாதவர் நிகழ்ச்சிக்கு வர முடியாது
வந்தால் திருப்பி அனுப்புவார்கள்.
சில நிகழ்ச்சிக்கு அனைவரும் வருக
எனச் சுவரொட்டிகள் ஊடகங்கள் மூலம் அழைப்பார்கள்.
அவ்வாறு அழைக்கும் நிகழ்ச்சிகளுக்கு எவரும் வரலாம். வந்தவர்களை வரவேற்று நிகழ்ச்சியில் பங்கு பெற்றக் கூறுவது அழைப்பாளர் கடன்.
அந்த நிகழ்ச்சிக்கு எவர் வரலாம் எவர் வரக்கூடாது என்று வரையறை கிடையாது.
அமைச்சர் சந்திரசேகரன் அழைப்பை ஏற்று வந்தவர்.
சி வி கே சிவஞானம் அழைப்பை ஏற்று வந்தவர்.
அவர்கள் மீது வெறுப்புக் கொட்டியவர்களும் அழைப்பு ஏற்று வந்தவரே.
மனத்துள் வெறுப்பை வைத்திருக்க வேண்டுமே அன்றிச் செயலில் வெறுப்பைக் காட்டுவது தமிழர் மரபு அன்று.
நான்காவது அனைத்து உலகத் தமிழ் ஆராய்ச்சிப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் பலர். அல்பிரெட் துரைப்பா காரணமானவர் என்று கருதியே அவரைக் கொன்றார்கள். அவருக்கு அக்காலத்தில் துணையாக நின்றவர் சி வி கே சிவஞானம்.
1975இல் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுச் சின்னத்தை நெஞ்சு நெகிழ்ந்து இளைஞர்கள் உதவியுடன் அமைத்தேன். 1975 இல் உடைத்தனர். 76இல் நிறுவினேன், இளைஞர்கள் உதவியுடன். 76இல் உடைத்தார்கள். 77இல் நிறுவினோம் 77இலிலும் உடைத்தார்கள். 79 இல் பிரேமதாசா அந்த நினைவுச் சின்னத்தை மீளக் கட்டுமாறு ஆணையிட்டார்.
2013ஆம் ஆண்டு நினைவு நாளில் அங்கு கூடிய போது சி.வி.கே சிவஞானமும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். எனக்கு வியப்பு. மனத்தில் சஞ்சலம். ஆனாலும் அவரை வெளியேற்ற வேண்டும் என்று அங்கிருந்தவர் யாரும் சொல்லவே இல்லை.
அந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றிய பொழுது "நானே இந்த நினைவுச் சின்னத்தை கட்டுவித்தேன்" எனவும் கூறினார். அவர் பொய் பேசினார் என்பதை நானும் அறிவேன் அங்கு என்னோடு 75இல் 76இல் பணிபுரிந்த இளைஞர் சிலரும் அறிவார்கள்.
அதற்குப் பின்னர் ஒரு பொது நிகழ்ச்சியில் நானும் இருந்தேன் அவரும் இருந்தார். அவராக என்னிடம் வந்தார். உங்களிடம் பேச வேண்டும் என்றார். சுவரோரம் அவரை அழைத்துச் சென்றேன். அயோக்கியர்களிடம் நான் பேசுவதில்லை, போ, என்று அவரிடம் சொல்லிவிட்டு நான் வந்து விட்டேன். ஏனையவர்கள் கேட்டிருக்க வாய்ப்பில்லை.
1974 ஜனவரி 8இல் நாங்கள் சி வி கே சிவஞானத்தை அணுகிய போது அவர் திறந்தவெளி அரங்கைத் தர மறுத்தார். அடுத்து வந்த துன்ப நிகழ்ச்சிகளை அறிவோம். இதை நான் பல இடங்களில் எழுதி உள்ளேன்.
எனினும் சி வி கே சிவஞானம், 2013 சனவரி 10 அஞ்சலி நிகழ்வுக்கு வீரசிங்கம் மண்டபத்தின் முன் வந்த பொழுது நாங்கள் அவரை வெறுத்து ஏசவில்லை, திருப்பி அனுப்பவில்லை. ஏனெனில் தமிழர் மரபு அஃதே.
2)
தென்மராட்சி தெற்கில் காணாமல் போன 35 பேரின் பட்டியலை நீண்ட கல்வெட்டாகப் பொறித்தேன். என் 80ஆவது வயது நினைவாக என் பராமரிப்பில் இருந்த காணிக்குள் பொருத்தினேன்.
யாழ்ப்பாணம் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உள்ளிட்ட மூத்த அலுவலர்கள் 20 பேர் என்னிடம் வந்தார்கள். 7 8 மகிழுந்துகள் வரிசையாக என் வீட்டுக்கு முன் வந்து நின்றன.
கல்வெட்டுகளை நீங்கள் அமைத்தீர்கள். அதில் விடுதலைப் புலிகளின் பெயர்கள் இருக்கின்றன. ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளீர்கள் என்றார்கள்.
காணாமல் போனவர்களின் குடும்பத்தார் தந்த படங்கள், அவர்களுடைய தனி வரலாறுகள் உள்ளிட்ட நூலை ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கிறேன். என் பராமரிப்பில் உள்ள தனியார் நிலம். அதில் கல்வெட்டுகள் வைத்திருக்கிறேன். புத்தகத்தை அவர்களிடம் காட்டினேன். இவர்களுள் விடுதலைப்புலிகள் யாராவது இருக்கிறார்களா எனக் கேட்டேன்?
உசாவுமாறு உதவியாளரிடம் கொடுத்தார்.
ஈழம் என்றால் என்ன என்று கேட்டார்கள். தமிழில் ஈழம். அதுவே மருவிச் சிங்களத்தில் ஹெல என்றேன்.
ஹெல உரிமையக் கட்சியின் பெயரைத் தெரிந்து கொண்டீர்களா? எனக் கேட்டேன். யாழ்ப்பாணத்தில் இருந்து ஈழநாடு நாளிதழ் வெளிவருகிறதே படித்திருக்கிறீர்களா எனக் கேட்டேன்.
யாவரும் வண்டியில் ஏறிக் கிளம்பினர்.
சாவகச்சேரிக் காவல் நிலையப் பொறுப்பாளர் என்னிடம் வந்தார். ஈழம் என்று சொல்லுக்கு விளக்கம் கேட்டார்.
2000 ஆண்டுக்கு முன் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் ஈழம் என்ற சொல் ஆண்டுள்ளார். அது தொடங்கி வரலாற்றுப் படிகளில் ஈழம் என்ற சொல் எனக்குத் தெரிந்து எங்கெல்லாம் வந்திருக்கிறதோ அவற்றைப் பட்டியலிட்டேன்.
800 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சிங்களத்தில் ஹெல என்ற சொல் ஈழத்தில் இருந்து மருவியதையும் எடுத்துக் கூறினேன். அவரும் விவரமாக எழுதினார் ஏறத்தாழ ஒரு மணி நேரம் என்னுடன் இருந்து விட்டு எழுதியதை எடுத்துக் கொண்டு சென்றார்.
மாற்றுக் கருத்து வைத்திருந்தனர் என்றோ என் மீது வெறுப்புணர்வோடு வந்தனர் எனவோ நான் கருதவில்லை. காக்கி உடை அரசு கொடுத்தது. என்னை உசாவு அரசு ஆணையிட்டது. வந்தார்கள். அன்போடு பேசினேன். வெறுப்பை உமிழவில்லை. எதிர்ப்பைக் காட்டவில்லை. விளக்கங்களைக் கொடுத்தேன். அவர்களும் என் மீது எந்த வெறுப்பையும் காட்டியதாக எனக்குத் தெரியவில்லை.
அதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்கவில்லை.
மனத்தில் வெறுப்பு எழுந்தாலும் வெளியில் காட்டுவதற்குத் தயங்க வேண்டும். தமிழர் பண்பாடு தமிழர் நாகரிகம் தமிழர் வாழ்வியல் எனப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஊடாக முன்னோர் எமக்கு விட்டுச் சென்ற பெரும் செல்வம் அஃதே.
அமைச்சர் சந்திரசேகரனையோ சிவிகே சிவஞானத்தையோ வேறு எவரையோ பொது நிகழ்ச்சிக்கு வாருங்கள் என அழைத்த பின், வந்தோரை விரட்டுவது முறையற்ற தமிழர் பண்பாட்டுக்கு முரணான செயல்.
Monday, June 16, 2025
காசி ஆனந்தன் நினைவுகள்
1) 1956-58 ஆம் ஆண்டுகளில் சுதந்திரன் இதழில் மாணவர் பகுதியில், ஆனந்தன் என்ற பெயரில் எழுதுவேன். காசி ஆனந்தன் என்ற பெயரில் வேறொருவர் எழுதிக் கொண்டு வந்தார். அப்பொழுதுதான் அவருடைய பெயர் எனக்குப் பழக்கமானது. அவருடைய பேரைப் பார்த்த பின் என் முழுப் பெயராக க. சச்சிதானந்தன் என எழுதி அனுப்பத் தொடங்கினேன்.
துணுக்குகளாக எழுதினேன். 4 வரிப் பாடல்கள் எழுதினேன். கிருபானந்த வாரியார் சிறிய சிறிய புத்தகங்களாக வெளியிட்டு வந்தார். அவருடைய எழுத்து நடை என்னைக் கவர்ந்தது. பாரதியார் பாடல்கள் ஒரு முறை படித்த உடனேயே மனப்பாடமாயின. இராஜாஜி எழுதிய வியாசர் விருந்து நூலைப் படிக்க தொடங்கினால் புத்தகத்தைக் கீழே வைக்க மாட்டேன். என் எழுத்துகளில் கிருபானந்த வாரியார், பாரதியார், இராஜாஜி தாக்கங்கள் இருந்தன.
சுதந்திரன் ஆசிரியர் எஸ் டி சிவநாயகம். மாணவ எழுத்தாளர்களை ஊக்குவித்தார். ஒரே பக்கத்தில் சிறிய சிறிய கட்டங்களில் பல்வேறு மாணவர்களின் ஆக்கங்கள் நிறைந்திருக்கும். காசி ஆனந்தன் என்ற பெயரிலும் ஆக்கங்கள் வெளிவரும். நான் எழுதி அனுப்புவது இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை. காசி ஆனந்தனோ அடிக்கடி எழுதி அனுப்புவார் போலும். அவருடைய எழுத்துகள் என்னை ஈர்த்தன.
சுதந்திரன் மாணவர் பக்கத்தில் கிழக்கு மாகாண ஊர்ப் பெயர்கள். அழகான தமிழ் பெயர்கள் பலவற்றைப் பார்ப்பேன். படிக்க படிக்கச் சுவைக்கும் தமிழை மாணவர் எழுதினர். நிகழ்ச்சிகளைச் செய்யுளாக எழுதினேன். காசி ஆனந்தனோ உணர்ச்சியாக எழுதினார். வீறு நிறைந்திருக்கும் சொற்களை அடுக்கினார். உந்துதலாக அமையும் வரிகள் அவருடையன.
2) சென்னை பச்சையப்பன் கல்லூரி. 1960 ஆனி முதலாக 1962 பங்குனி ஈறாக. ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு பாடங்களுக்கும் நாம் இருவரும் ஒரே வகுப்பில். அவர் தேனாம்பேட்டை சாமாஸ் விடுதியில். நான் கல்லூரி விடுதியில்.
எனக்கு விலங்கியல் முதன்மைப் பாடம். கவிஞருக்குத் தமிழ் முதன்மைப் பாடம். பட்டதாரி மாணவனாகத் தமிழையும் ஆங்கிலத்தையும் பாடமாக முதல் இரண்டு ஆண்டுகளும் தொடர்ந்து பயின்றால் தேர்வு. மூன்று ஆண்டுகள் பட்டதாரி வகுப்பில். நான் அறிவியல் இளவலானேன். அவர் கலை இளவலானார்.
படிக்கட்டும் பைந்தமிழ் பாடும் பச்சையப்பன் கல்லூரி. தமிழ் துறைக்குப் பேராசிரியர் மு வரதராசன் தலைவர். பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம், புலவர் அன்பு கணபதி, பேராசிரியர் இரா. சீனிவாசன் இவர்கள் நடத்தும் வகுப்புகளில் காசி ஆனந்தனும் நானும் ஒன்றாக அமர்வோம். வாரத்தில் மூன்று அல்லது நான்கு வகுப்புகள்.
ஆங்கில இலக்கியங்களில் முதல் இரு ஆண்டுகள் பயிற்சி. ஷேக்ஸ்பியர் மில்டன் வேர்ட்ஸ்வொர்த் செஸ்ட்ரட்டன் ஆகியோரின் படைப்புகள் பலவற்றைப் பேராசிரியர் ஜான்சன் பேராசிரியர் வெங்கட்ராமன் ஆகியோர் விரித்துரைப்பர். நானும் கவிஞர் காசி ஆனந்தம் ஒரே வகுப்பில் இருந்து இவற்றைப் பயின்றோம்.
கல்லூரி விடுதியில் நான் இருந்தேன். மாலையில் டென்னிஸ் கிரிக்கெட் கால்பந்து என விளையாட்டில் ஈடுபடுவேன். கவிஞரோ நேரே விடுதிக்குப் போய்விடுவார்.
3) 1961 பங்குனி இலங்கையில் தமிழரசுக் கட்சி தலைமை தாங்க அனைத்துக் கட்சிகள் அறவழிப் போராட்டம். சென்னையில் நாம் இருவரும் தமிழக ஆதரவு திரட்டும் முயற்சியில். நிதி திரட்டும் முயற்சியில்.
அக்காலத்தில் இந்து நாளிதழில் உலகம் சார்ந்த செய்திகளோடு ஒரு மூலையில் இலங்கை செய்தி வரும். தினமணி தினத்தந்தி என்பன பரவலாக விற்பனையான தமிழ் இதழ்கள். அவற்றில் இலங்கை செய்தி வருவது குறைவு. வார மாத இதழ்களில் இலங்கைச் செய்திகள் மிக மிகக் குறைவு.
1962 மார்ச் நடுப் பகுதியில் தொடங்கிய அறவழிப்போர். பச்சையப்பன் கல்லூரியில் படித்த இலங்கை மாணவர்களுள் மூத்தவர்கள் சிலர் தமிழ்நாட்டு ஆதரவை அறப்போருக்கு திரட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டனர். அவர்களோடு நானும் கவிஞர் காசி ஆனந்தனும் சேர்ந்து கொண்டோம்.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரைக் காண மாணவர் குழுவாகச் சென்றோம். அக்கால முதலமைச்சர் காமராஜர். முதலில் சந்திக்க மறுத்தவர், பின்னர் உடன்பட்டார். அவரைக் கண்டோம். நீங்கள் இங்கிருந்து போனவர்களே. அங்கே உள்ள சிங்களவரோடு சமாதானமாக இருப்பதே நன்று. இவ்வாறு சொன்னார். நிலையை விளக்கினோம். நாங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக அங்கே வாழ்பவர்கள் என்றோம். தமிழக அரசு மாநில அரசு. வெளியுறவு விவகாரங்களைத் தில்லியில் பார்க்கிறார்கள். அவர்களோடு பேசுங்கள், எனச் சொல்லி எங்களை அனுப்பிவிட்டார்.
பின்னர் கவிஞர் காசி ஆனந்தன் முயன்று திராவிட முன்னேற்றக் கழக தலைவர்களைப் பார்த்தார். நுங்கம்பாக்கத்தில் வாழ்ந்தவர் ஏவிபி ஆசைத்தம்பி. ஆயிரம் விளக்கில் வாழ்ந்தவர் கே ஏ மதியழகன். இவர்களைப் பார்க்க நான் சென்று இருக்கிறேன் அண்ணாவைப் பாருங்கள் எனச் சுட்டினர்.
கவிஞர் காசி ஆனந்தன் முயன்று அண்ணாவைப் பார்த்தார். நுங்கம்பாக்கத்தில் நிழற் சாலையில் சந்தித்தார். சென்னைக் கடற்கரையில் மாபெரும் ஆதரவுக் கூட்டத்தை நடத்துகிறோம். செலவாக மதியழகனிடம் ரூபா 1500 செலுத்துங்கள் என அண்ணா சொன்னார். அக்காலத்தில் தோராயமாக 600 மாணவர்கள் வரை சென்னை நகரில் உள்ள கல்லூரிகளில் படித்து வந்தோம். ஆளுக்கு 15 ரூபாய் கேட்டோம். நிதி திரட்டுவதில் நான் ஈடுபட்டேன். 100 மாணவர்களிடம் பெற்றோம். திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையகமான அன்பகத்தில் பணத்தைச் செலுத்தினோம்.
சென்னை கடற்கரையில் மாபெரும் ஆதரவுக் கூட்டத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நடத்தினார்கள். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் என மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் அக்கூட்டத்தில் உணர்ச்சிகரமான உரைகளை ஆற்றினார்கள். இலங்கையில் நடைபெறும் ஈழத் தமிழரின் அறப் போருக்கு ஆதரவாக இந்தியா தலையிட வேண்டும் எனக் கோரினார்கள்.
4) இலங்கை துணைத் தூதர் அலுவலகம் நுங்கம்பாக்கம் இரட்டிலண்டு கேட்டில் அமைந்தது. கவிஞர் காசி ஆனந்தன் ஒரு முறை அவ் அலுவலகத்துக்கு முன் ஒரு நாள் உண்ணா நோன்பு இருந்தார். நோன்பை முடிக்க நுங்கம்பாக்கத்தில் இருந்து அமைந்தகரைக்கு நடந்து வந்தார்.
பச்சையப்பன் கல்லூரிக்குக் கிழக்கெல்லயில் கல்கி தோட்டம். கல்கி வார இதழ் அச்சிட்டு வெளியிடும் வளாகம். இசைப் பேரரசி எம் எஸ் சுப்புலட்சுமியும் கணவர் சதாசிவமும் வாழ்ந்தனர். அந்த வளாகத் தெற்கு ஓரத்தில், தடிகளாலும் ஓலைகளாலும் வேய்ந்த நீண்ட குடில். அங்கே இராஜாஜி வாழ்ந்தார்.
மாலையில் நடந்து வந்த கவிஞர் காசி ஆனந்தன், கல்கி தோட்டத்திற்குள் நுழைந்தார். மூதறிஞர் இராஜாஜியைச் சந்தித்தார். பழச்சாறு வேண்டிக் குடித்து உண்ணா நோன்பை முடித்தார்.ம
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சொல்லின் செல்வர் செ. இராஜதுரை சென்னையில். பச்சையப்பன் கல்லூரியில் உரையாற்றும் நிகழ்ச்சி ஒழுங்குகள், நிதி சேகரிப்பு இவற்றில் நாம் இருவரும் ஒன்றாகப் பணி.
அக்காலத்தில் பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்களுக்காக உரையாற்றத் தந்தை பெரியார் வருவார். அறிஞர் அண்ணாதுரை வருவார். கலைஞர் கருணாநிதி வருவார். நாவலர் நெடுஞ்செழியன் வருவார். பொருளாதார நிபுணர்கள் வருவார்கள். அறிவியல் ஆலோசகர்கள் வருவார்கள். தத்துவ மேதை இராதாகிருஷ்ணன் வருவார்.
பச்சையப்பன் கல்லூரி விடுதி விழாக்களில் சிறப்பு விருந்தினர்களாக எம் ஜி ராமச்சந்திரன் வந்திருக்கிறார்.
இத்தகைய பின்புலத்தில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சொல்லின் செல்வர் செ இராஜதுரை அவர்களை நாங்கள் மாணவர்களிடையே உரையாற்ற ஏற்பாடு செய்தோம். அவரும் மிக நன்றாகப் பேசினார். மாணவரின் பாராட்டைப் பெற்றார்.
5) 1963 ஆனியில் தமிழ் முதன்மைப் பாடமாக கலை இளவல் பட்டதாரியாகிக் கவிஞர் காசி ஆனந்தன் மட்டக்களப்புத் திரும்பினார். விலங்கியல் முதன்மைப் பாடமாக அறிவியல் இளவல் பட்டதாரித் தேர்வில் முதல் வகுப்பில் தேர்வானேன். பச்சையப்பன் கல்லூரியில் முதல் நிலை பெற்றேன். யாழ்ப்பாணம் திரும்பினேன்.
1963 புரட்டாதியில் பட்டமளிப்பு விழா. கலந்து கொள்ள விரும்பினேன். அக்காலக் கொழும்பு அரசு பல தடைகளை வெளிநாட்டு பயணங்களுக்கு விதித்தது.
சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து அரசாங்க எழுதுவினைஞர் சங்கத் தலைவர் கோடீஸ்வரன் தொடுத்த வழக்கில் இராணியின் வழக்குரைஞர் மு திருச்செல்வம். சென்னையில் கே கே நம்பியார் வழக்குரைஞரிடம் ஆலோசனை பெற விரும்பினார். மு. திருச்செல்வத்துக்குச் சென்னையில் உதவ முடியுமா எனக் கேட்டனர். பட்டமளிப்பு விழாக் காலத்தில் சென்னையில் இருக்கிறேன் என்றேன். எனக்குப் பயண உரிமைகளை பெற்றுத் தந்தவர் தந்தை செல்வா, டாக்டர் இ எம் வி நாகநாதன்.
பட்டமளிப்பு விழாவிற்கு கவிஞர் காசி ஆனந்தன் வரவில்லை. சிங்களம் மட்டும் சட்டத்திற்கு எதிரான வழக்கில் உதவ வேண்டும் என்பதால் சென்னை வந்தேன். மு திருச்செல்வம், சர்வானந்தா, பாலசுப்பிரமணியன், வந்திருந்தனர்.
அவர்களை வழக்குரைஞர் கே கே நம்பியாரிடம் அழைத்துச் சென்றேன். நான்கைந்து நாள்கள் ஆலோசனை நடத்தினர். நீதியரசர் கயிலாசத்திடம் அழைத்துச் சென்றேன். நாவலர் நெடுஞ்செழியனிடம் அழைத்துச் சென்றேன். பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தனிடம் அழைத்துச் சென்றேன்.
6) 1963 அக்டோபரில் கொழும்பில் ஏற்றுமதி இறக்குமதித் திணைக்களத்தில் எழுதுவினைஞராகப் பணியில் சேர்ந்தேன். அக்காலத்தில் கவிஞர் காசி ஆனந்தன் எங்கிருந்தார் என அறியேன். பின், இலங்கை அறிவியல் முன்னேற்ற சங்கத்தாரன் புலமைப் பரிசில் பெற்றேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவனானேன். அக்காலத்திலும் அவர் எங்கிருந்தார் என்பதை அறியேன்.
1964 ஆனி தொடக்கம் 1966 ஆனி வரை இந்திய அரசின் புலமைப் பரிசில் பெற்று, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் விலங்கியல் முதன்மைப் பாடமாக அறிவியல் முதுவல் பட்டதாரியானேன். அக்காலத்தில் சென்னையில் பயின்று கொண்டிருந்த 400-500 மாணவர்களுக்கான இலங்கை மாணவர் சங்கத்தின் தலைவரானேன்.
1965 பிப்ரவரி 4, ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை விடுதலை அடைந்த நினைவு நாள். சென்னை இலங்கை துணைத் தூதரகத்தில் விழா. இலங்கை மாணவர் சங்கத் தலைவர் என்பதால் உரையாற்றுகிறார் சச்சிதானந்தன் என்ற அறிவித்தல் அனைத்துக் கல்லூரிகளின் விளம்பரப் பலகைகளில்.
என் ஒப்புதல் பெறாமல் எவ்வாறு என் பெயரைச் சேர்த்தீர்கள். இலங்கைத் துணைத் தூதர் சுசந்தா டீ அல்விசிடம் நேரே போய்க் கேட்டேன். ஆண்டுதோறும் வழமை. எனவே சேர்த்தோம், என்றார். என் பெயரை நீக்குங்கள். புதிய அறிக்கை அனுப்புங்கள், என்றேன். முதலில் என்னை மிரட்டினார் பின்னர் என்னை மருட்டினார். அசைந்தேனல்லேன். என் பெயரை நீக்கிப் புதிய சுற்றறிக்கை அனுப்பினார். விழாவில் இலங்கை மாணவர் பலர் வழமையில் கலந்து கொள்வதில்லை.
1965 பங்குனியில் ஆட்சி மாற்றம். மு. திருச்செல்வம் கொழும்பில் அமைச்சரானார். இலங்கை மாணவர்களின் கடவுச்சீட்டுகளை நீடிக்க இதுவரை மறுத்துவந்த இலங்கைத் துணைத் தூதர் சுசந்த டி அல்விசிடம் சென்றேன். ஆட்சி மாற்றத்தைக் கூறினேன் நீடித்த கடவுச்சீட்டுகள் வழங்குமாறு கேட்டேன். மாணவர் கேட்டவற்றைச் செய்து கொடுத்தார்.
இக்காலப் பகுதியில் கவிஞர் காசி ஆனந்தன் எங்கிருந்தார் எனத் தெரியவில்லை. என்னோடு அவர் தொடர்பில் இல்லை. 1966 ஆனியில் முதுநிலைப் படிப்பு முடிந்து யாழ்ப்பாணக் கல்லூரியில் பட்டதாரிப் பிரிவில் விரிவுரையாளர் ஆனேன். 1966 புரட்டாதி சென்னையில் பட்டமளிப்பு விழா முடிந்ததும் நேரே கொழும்பு சென்றேன். உள்ளூர் அமைச்சர் மு திருச்செல்வத்தின் தனிச் செயலாளர் ஆனேன்.
7) 1967 சனவரியில் கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சி அலுவராக நான் சேர்ந்த காலத்தில், கவிஞர் காசி ஆனந்தன் அரசு சேவையில் மொழிபெயர்ப்பாளராகக் கொழும்பில் இருக்கிறார் என்பதை அறிந்தேன்.
அக்காலத்தில் மாலை வேலைகளில் அமைச்சர் மு திருச்செல்வம் தந்தை செல்வா ஆகியோருக்கும் சார்ந்தவர்களுக்கு என் பணிகள் தொடர்ந்தன. கவியரோடு தொடர்புக்காக ஏங்கினேன். எங்கிருக்கிறார் என்பதை அறிய முடியவில்லை.
1968இல் எனக்குத் திருமண நிகழ்வு. அழைப்பதற்காகக் கவிஞரைத் தேடினேன். அவருடைய இருப்பிடம் மருதானை என்றார்கள். கண்டுபிடிக்க முடியவில்லை.
என் திருமணத்தின் பின்பு வெள்ளவத்தையில் தெருவோர நடைமேடைகளில் அவரைச் சந்திக்கத் தொடங்கினேன். பொது நிகழ்வுகளில் மேடைகளில் அவர் இருப்பார், பார்த்திருக்கிறேன் அவரோடு பேசியிருக்கிறேன்.
1968 நடுப் பகுதியில் அரசுக் கடன் பெற்று வண்டி ஒன்றை வாங்கினேன். அக்காலங்களில் அவரைக் கண்டால் வண்டியில் ஏற்றிக்கொண்டு போய் விட வேண்டிய இடத்தில் விடுவேன்.
1968 பிற்பகுதியில் தற்செயலாக சந்தித்த பொழுது, என் துணை இங்கிருக்கிறார். அவரை அழைத்துச் செல்ல வேண்டும். வண்டியில் வருகிறீர்களா? அவர் வேண்டுகோளை ஏற்றேன். கொழும்பில் அவரையும் அவருடைய துணையையும் என் வண்டியில் ஏற்றிக்கொண்டு கடற்கரை, விலங்குப் பூங்கா எனச் சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச் செல்வேன்.
அக்காலத்தில் அவர் வெளியிட்ட தமிழன் கனவு நூலில் இருந்து பாடல்களை எடுத்து நான் பதிப்பித்த இந்து இளைஞன் மாத இதழில் வெளியிடுவேன். காட்டு மரங்களிலே கள்ளர் மரம் ஐயர் மரம் உண்டோட தோழா..., நாட்டு மனிதரிடை வேற்றுமை காட்டுகின்றாய்.. என்ற வரிகள் இப்பொழுதும் நினைவு. இதுபோன்று பல பாடல்களை நான் மீள் வெளியிட்டுள்ளேன்.
1968-1972 காலப்பகுதியில் கொழும்பில் பல்வேறு இடங்களில் சந்தித்து அளவுவோம். 1971 தேர்தல். 1972 இல் புதிய அரசு ஆட்சி. அரசியலமைப்பு உருவாக்கம். 1972 மே 22 புதிய அரசியலமைப்பு நடைமுறையில். நான் பதவியில் இருந்தேன் அரசியலமைப்பை ஏற்றுக் கையொப்பமிட வேண்டும் என்று சொன்னார்கள். கையொப்பமிட மறுத்தார் கவிஞர் காசி ஆனந்தன். அரச மொழிபெயர்ப்பாளர் பதவியில் இருந்து விலகினார்.
1972க்குப் பின்னர் மீண்டும் இடைவெளி. அவர் கொழும்பில் இல்லை. அவரோடு தொடர்புகள் மிக மிகக் குறைந்தன. அவரை சிறையில் அடைத்தார்கள் என்ற செய்தியைப் படித்திருக்கிறேன்.
8) 1973இல் கவிஞர் காசி ஆனந்தனின் நோக்கமும் என் நோக்கமும் இணைகின்ற சில முயற்சிகளில் ஈடுபட்டேன். அவர் சிறையில் இருந்தாலும் நோக்கங்கள் வேறல்ல.
இலங்கையில் சிறீமாவோ ஆட்சி. குமாரசூரியர் தமிழரான அமைச்சர். எவற்றையும் தேசியமயமாக்கும் கொள்கையரான அரசு.
புத்த சமயத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியலமைப்பை 1972இல் கொண்டு வந்த அரசு.
1973ஆம் ஆண்டில் இந்து சமயத்தை ஓரம் கட்டும் முயற்சியைத் தொடங்கியது
சைவத் திருக்கோயில்கள் தோராயமாக 25,000 இலங்கையில் உள்ளன. இவை இலங்கைத் தீவு முழுவதும் பரவியுள்ளன. இவற்றுள் தோராயமாக 3000 - 4000 கோயில்கள் சிங்கள மக்கள் அமைத்து வழிபடும் கோயில்கள்.
சைவர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்ற வடக்கு, கிழக்கு, மலையகம். அங்கே உள்ள கோயில்கள் தொடக்கத்தில் தனியார் அறங்காவலரான கோயில்கள். காலப்போக்கில் பல கோயில்களுக்கப் பொதுச் சபைகள் அறங்காவலர் ஆயின.
கோயில் அறங்களின் ஆட்சியில் தனியார் மற்றும் பொதுச் சபையினரின் நடவடிக்கைகளில் மன நிறைவற்று இருந்தோர் பலர். இவர்களுள் சிலர் அப்பொழுது ஆட்சியில் இருந்த சிறீமாவோ அரசின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தனர்.
இலங்கையின் இந்துக் கோயில்கள் அனைத்துக்கும் வழிபடுவோர் சபைகளை அறங்காவலராக்கலாம் என்ற கருத்தைச் சிறீமாவோ அரசிடம் முன் வைத்தனர். அதற்கான சட்ட வரவை அரசு தயாரித்தது. இந்துக்களின் கருத்தைக் கேட்கவும் அவர்களின் ஒப்புதலைப் பெறவும் அகில இலங்கை இந்து மாமன்றத்தை நாடியது.
அக்காலத்தில் அதன் தலைவர் மேனாள் நீதியரசர் சிவசுப்பிரமணியம். முதலில் ஆட்சிக் குழுவில் பேசினர். பின்னர் பொதுக்குழுவைக் கேடகலாம் என முடிவு. ஏழாலை கந்தசாமி, ஐ தி சம்பந்தன், திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் திரு நமசிவாயம் ஆகியோருக்கும் வேறு பலருக்கும் அரசின் சட்ட வரைவில் உடன்பாடில்லை.
தலைவர் மேனாள் நீதியரசர் சிவசுப்பிரமணியம், துணைத் தலைவர் கே சி தங்கராசா போன்றவர்கள் சட்ட வரவை ஏற்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.
ஐ தி சம்பந்தன் இந்த முரண்களை என்னிடம் தெரிவித்தார். அகில இலங்கை இந்து மாமன்றக் கூட்டம் சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப் பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடைபெறப் போவதை எனக்குத் தெரிவித்தார்.
இந்து சமயத்துக்கே கேடு. திருக்கோயில்கள் அரசுடமை ஆகும் கேடு. சிலாவம் முன்னேச்சரம் திருக்கோயிலில் வழிபடுவோர் 80% புத்த சிங்கள மக்கள். அறங்காவலரோ பரம்பரையாகச் சைவத் தமிழர்.
சிலாவத்தில் வல்லவன் திருக்கோயில் சைவக் கோயில். கதிர்காமத்தில் முருகன் திருக்கோயில். சைவக் கோயில் இவற்றில் தமிழர் அறங்காவலர்களாக இருந்தனர். இப்பொழுது சிங்களவர் அறங்காவலர். சிங்கள ஊர்களில் உள்ள சைவக் கோயிலுக்கு அருகே புத்தர் சிலைகளை நிறுவுவதும் பின்னர் அவை வளர்ந்து பெரிய விகாரைகளாவதும் வரலாற்று நடைமுறை.
கட்டுவத்தைப் பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் ஞானானந்தன், கருணாகரன், வேந்தர் இளங்கோ. சட்டக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் நீலகண்டன். இவர்களை அழைத்துப் பேசினேன்.
கூட்டம் நடந்த 1973 ஆனி ஞாயிறு காலை. 20-22 பல்கலைக்கழக மாணவர் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் கூடினர். ஒவ்வொரு ஒவ்வொரு கையிலும் ஒரு தட்டி. சட்ட வரைவை ஏற்கக் கூடாது என்ற வரிகள் அடங்கிய தட்டி. வரிசையாக அங்கிருந்து அருகில் உள்ள சரசுவதி மண்டபத்துக்கு நடந்தனர். முதல் ஆளாக நான் நடந்தேன். எனது கையிலும் ஒரு தட்டி. மற்றக் கையில் சட்ட வரைவின் அச்சுப் படி.
ஒருவர் பின் ஒருவராக நடந்தோம். சரசுவதி மண்டபத்திற்குள் சென்றோம். கூட்டம் நடந்து கொண்டிருந்தது. கூட்டத்தாரைச் சுற்றி வலமாக மூன்று முறை நடந்தோம் குரல் எதுவும் எழுப்பவில்லை. மேனாள் நீதியரசர் கூட்டத் தலைவர். அவரருகே கே சி தங்கராசா. முதலாவது சுற்று வரும்பொழுது, கே சி தங்கராசா என்னைக் கேட்டார் "நீங்கள் பிடித்திருப்பது மட்டையா? அட்டையா?" "நீங்கள் காகிதக் கூட்டுத்தாபனத் தலைவர். உங்களுக்குத் தெரியாததா?" என அவரிடம் கூறினேன்.
மூன்றாம் சுற்று முடிந்தது. தலைவருக்கு பின்னால் நான் நின்றேன். ஏனைய 20-22 பேரும் ஒரே வரிசையில் நின்றார்கள். கையில் இருந்த சட்ட வரைவின் அச்சுப் படியைத் தூக்கினேன் தீக்குச்சியால் கொளுத்தினேன்.
"போதும்.. போதும்.. நீங்கள் விலகுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்", என நமசிவாயமும் சம்பந்தனும் என்னிடம் கூறினார்கள். அமைதியாக நாங்கள் வெளியேறினோம்.
சட்ட வரைவை ஏற்பதில்லை என அகில இலங்கை இந்து மாமன்றம் தீர்மானித்தது. மேனாள் நீதியரசர் சிவசுப்பிரமணியம் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். புதிய தலைவரைத் தேர்ந்து கொள்ளுங்கள் என வெளியேறினார்.
இந்து மாமன்றத்தைக் குலைத்தேன் என்ற பழியை என் மீது மூத்த உறுப்பினர் சிலர் சுமத்தினர்.
சிறீமாவோ அரசின் கட்டுப்பாட்டுள் 25,000 இந்துக் கோயில்களும் வரமாட்டா என்ற மன நிறைவே எனக்கும் என்னோடு பங்கு பற்றிய ஞானானந்தன், நீலகண்டன், கருணாகரன், இளங்கோ உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கும்.
9) 1971இல் இலங்கை இந்து இளைஞர் பேரவை அமைப்பு உருவானது. தோராயமாக 75 ஊர்களில் 75 இந்து இளைஞர் அமைப்புகள். கே சி நித்யானந்தா, தில்லைநாதன், நான் மூவருமாக, இந்த 75 அமைப்பையும் இணைத்தோம். இலங்கை இந்து இளைஞர் பேரவையை உருவாக்கினோம். என்னைத் தலைமைச் செயலாளர் ஆக்கினர்.
1973இல் இந்து இளைஞர் பேரவையின் மூன்றாவது மாநாடு. கொழும்பு வெள்ளவத்தை இராமகிருட்டிண மண்டபத்தில் நடந்தது. 75 ஊர்கள், 150 பேராளர். அந்த மாநாட்டுக்கு மலேசியா, சிங்கப்பூர், பிஜி மொரிசியசு ஆகிய நாடுகளில் இருந்து இந்து இளைஞர்களைப் பார்வையாளராக அழைத்திருந்தோம்.
கோலாலம்பூரில் இருந்து வைத்திலிங்கம், சிங்கப்பூரிலிருந்து சிவானந்தன், பிஜியிலிருந்து நாயுடு, மொரிசியசில் இருந்து தமிழ் தெரியாத இரு இளைஞர். மொரிசியஸ் இளைஞருக்கு அரசே அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டது. மொரிசியசு பிரதமர் அலுவலகத்தின் மூத்த செயலாளர் கிரிசர் பொன்னுசாமி என்னோடு தொடர்பானர். மாநாட்டு நிறைவில் ஐவரையும் இலங்கை முழுவதும் சுற்றுலாவுக்காக அழைத்துச் சென்றோம். இலங்கையில் இந்துக்களின் துயர் நிலை தொடர்பாக நான்கு நாட்டுப் பார்வையாளருக்கும் விளக்கமாக எடுத்துரைத்தோம்.
8) 1976 திசம்பரில் கவிஞர் காசி ஆனந்தன் விடுதலை ஆகிறார். கொழும்பு பம்பலப்பட்டி சரஸ்வதி மண்டபத்தில் அவருக்கு வரவேற்பு. ஐ.தி சம்பந்தனும் நானும் நிகழ்ச்சியைத் திட்டமிட்டு நிதிப் பங்களித்து நடத்தினோம். அக்காலத்தில் அரசியல் உரிமை இல்லாத மேல்தட்டு அரசு ஊழியன் நான்.
அவ்வாறு விடுதலையான இளைஞர்கள் பலர் என் அலுவலகம் வருகின்றனர். கடவுச் சீட்டு எடுப்பதற்குப் பிணை ஒப்பமிடவேண்டும் எனக் கேட்கின்றனர். 14 இளைஞர்கள் கடவுச்சீட்டுப் பெறப் பிணை ஒப்புதல் அளித்தேன். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
1977 என் அரசுப் பதவியை ஒரே நாளில் துறந்தேன். 11.5 ஆண்டு கால அரசுப் பணி என்னும் ஓய்வூதியம் எதையும் வேண்டாம் என தூக்கி எறிந்து யாழ்ப்பாணம் வந்தேன். கை மணிக்கூடு வியாபாரம் செய்து பொருள் ஈட்டினேன். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஆனேன். அக்காலத்தில் யாழ்ப்பாணத்திற்குக் கவிஞர் வந்து போவார் சந்தித்திருக்கிறேன்.
1978 கடைசிப்பகுதி. யாழ்ப்பாணம் மணிக்கூண்டு வீதி, வெலிங்டன் திரையரங்குக்கு அருகில் உள்ள வீடு. கவிஞர் அங்கு இருக்கிறார். நான் அவரிடம் போகிறேன். நான் இருக்கும் இடம் தேடி விசாரிக்க அவர் வருவதில்லை.
"எனக்குத் திருமணமாகி நான்கு குழந்தைகள். என்னைவிட மூன்று வயது மூத்தவர் நீங்கள். திருமணம் ஆகாமலே காலம் கடத்துகிறீர்கள்" என்றேன்.
"அகமும் புறமும் அறமும் புறமும் ஆகப் போகிறதே" என்றார். தன் திருமணத்தில் உள்ள சிக்கல்களைக் கூறினார். நானும் மனைவியும் அழைப்பாளராக உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறோம், சம்மதமா? எனக் கேட்டேன். ஒப்பினார்.
அவரது திருமணம் ஒழுங்குகள் தொடர்பாகத் தமிழ் இளைஞர் பேரவை திரு புஷ்பராஜா, சுதந்திரன் ஆசிரியர் திரு கோவை மகேசன் ஆகியோருடன் கலந்து பேசினேன். செல்வச் சந்நிதி கோவிலில் திருமணம். வீரசிங்கம் மண்டபத்தில் வரவேற்பு. அவரோடு சேர்ந்து நாள் குறித்தோம். நானும் மனைவியும் அழைப்பாளர். யாழ்ப்பாணம் ஈழநாடு இதழில் விளம்பரம். சுதந்திரன் இதழில் கோவை மகேசனின் கட்டுரை.
கன்னாதிட்டி வீதிக்கு நானும் புஷ்பராஜாவும் சென்று நன்கொடையாக தாலிக்கும் கொடிக்கும் தங்கம் பெற்றோம் காங்கேயன்துறை வீதியில் புடவைக் கடைகளில் கூறைப் புடைவை நன்கொடையாகப் பெற்றோம். கோப்பாய் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கதிரவேற்பிள்ளை அவர்களிடம் நிதி உதவி பெற்றோம். கை மணிக்கூடு வியாபாரத்தில் ஈட்டிய பொருள் எனக்கு உதவியது.
நண்பர்களிடம் வண்டி ஒழுங்குகள் செய்தோம். செல்வச் சன்னதி சென்று கோயிலில் சொல்லி வைத்தோம் வீரசிங்க மண்டபத்துக்குப் பணம் கொடுத்தோம். வரவேற்புக்கு வருவோர்களுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்தோம் என் மனைவியும் அக்கா தங்கையரும் வீரசிங்க மண்டபம் விருந்து ஒழுங்குகளைக் கவனித்தனர். திரு புஷ்பராஜா மண்டப அலங்காரம் முதலான ஒழுங்குகளைக் கவனித்தார்.
மனைவி கோயிலுக்கு வர முடியாத நிலை. எனவே செல்வச் சந்நிதிக்கு நான் சென்றேன். மாலை மனைவியும் பிள்ளைகளும் என் பெற்றோரும் என் உடன்பிறப்புகளும் என்னோடு சேர்ந்திருந்தனர். மட்டக்களப்பில் இருந்து உறவினர் செல்வச் சந்நிதிக்கு வந்திருந்தனர். திரு புஷ்பராஜாவின் தொண்டர்கள் மற்றும் அரசியலார் யாவரும் வரவேற்புக்கு வந்திருந்தனர்.
நிகழ்ச்சிக்குப் பின் கோப்பாய் திரு கதிரவேற்பிள்ளை இல்லத்தில் மணமக்கள் தங்கினர். கோவை மகேசன் கட்டுரையை அடுத்து வீரசிங்கம் மண்டபத்தில் பரிசுப் பொருள்கள் குவிந்தன. யாவற்றையும் திரு கதிரவேற்பிள்ளை இல்லத்துக்கு அனுப்பினோம். நாலாம் நாள் சடங்குக்கு மணமக்கள் மறவன்புலவுக்கு வந்தனர். மறவன்புலவு மக்கள் விருந்தோம்பினர்.
9) ஐக்கிய நாடுகள் சபை ஆலோசகர் பதவி பெற்று 1979 ஆனியில் நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினேன். 1981ல் திரு கதிரவேற்பிள்ளை காலமானார். பேராசிரியர் நேசையா கடிதம் எனக்கு எழுதினார் கதிரவேற்பிள்ளையின் இடத்திற்கு நான் வர வேண்டுமெனத் திரு அமிர்தலிங்கம் விரும்புவதாக எனக்குத் தெரிவித்தார். கவிஞர் காசி ஆனந்தன் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். வடக்கும் கிழக்கும் இணைய வாய்ப்பு. அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்குங்கள் எனப் பேராசிரியர் நேசையாவுக்கு நான் பதில் எழுதினேன்.
ஐக்கிய நாடுகள் சபை ஆலோசகராக இருந்த காலத்தில் (1979-1985) கவிஞர் காசி ஆனந்தன் இல்லத்தாரைச் சந்திக்கும் வாய்ப்போ தொடர்பு கொள்ளும் வாய்ப்போ எனக்கு இருக்கவில்லை.
1986 தொடக்கம் சென்னைவாசி ஆனேன். அக்காலத்தில் கவிஞர் இல்லத்தாருடன் சென்னையில் வாழ்ந்தார்.
சென்னையில் என்னோடு தொடர்பு மீண்டது. என் இல்லம் வருவார். காந்தளகம் வருவார். தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நான் செல்வேன். புத்தக வெளியீட்டு விழாக்கள், பொது நிகழ்வுகளில் நானும் அவரும் மேடையில் இருப்போம்.
வயிற்றுப் பகுதியில் உடல்நலக் குறைவு தொடர்பாக இராயப்பேட்டை தனியார் மருத்துவமனையில் இருந்தார். நான் அவரைச் சென்று பார்ப்பேன். காந்தளகத்தில் பணிபுரிந்த மட்டக்களப்பைச் சேர்ந்த திரு ஜெயராஜசிங்கம், இரு வாரங்கள் முழு நேரமாக மருத்துவமனையில் அவரோடு இருந்தார். அவர் கேட்டுக் கொண்டதால் அனுப்பி வைத்தேன்.
அவர் எழுதிய நூலொன்றை என்னிடம் அச்சுறுத்தந்தார் கவிஞர் பாலபாரதி, பக்கமாக்கப் பணிகளில் உதவினார். அழகிய பதிப்பாக அமைந்தது. பதிப்புத் துறையில் எனக்கு இருந்த திறமை விற்பனையில் எனக்கு இல்லை. அவரது நூலை என்னால் விற்றுக் கொடுக்க முடியவில்லை.
10) 1990 அக்டோபர் கடைசி வாரத்தில் சென்னையில் காந்தளக அலுவலகத்துக்கு வந்தார். அதற்கு முதல் நாள் திருச்சியில் இருந்ததாகக் கூறினார். 45 பேர் திருச்சியில் இருந்து இலங்கைக்கு படகு ஒளியை போவதற்காக காத்திருந்த செய்திகளை கூறினார். கிருபன் என்பவர் பொறுப்பாக இருந்ததாகவும், தமிழகக் காவல் துறையினர் அவர்கள் இருந்த வீட்டைச் சுற்றி வளைத்ததாகவும், நச்சுக் குப்பியைக் கடிக்குமாறு அனைவருக்கும் கிருபன் கொடுத்ததாகவும், இலங்கையில் இருந்து வந்த ஆணையால் அந்த நிலையைத் தவிர்த்ததாகவும், சிலர் கைதானதாகவும் சிலர் தப்பித்ததாகவும் தாம் உள்ளிட்ட பலர் விடுதலையானதாகவும் கூறினார்.
காவலர் ஒருவர் துணையுடன் பேருந்தில் சென்னை வந்ததாகத் தெரிவித்தார். அப்பொழுது கலைஞர் கருணாநிதி முதலமைச்சர். நாகராஜன் உள்துறைச் செயலாளர். தில்லியில் விபி சிங் பிரதமர் ஆட்சிக்கு அரசியல் நெருக்கடி இருந்ததால் அக்காலத்தில் முதலமைச்சர் கலைஞரும் நாகராஜனும் தில்லியில் இருந்தனர். அங்கிருந்தே திருச்சி நிலையைக் கண்காணித்தாகத் தெரிவித்தார்.
இலங்கையில் காவல்துறை படைத்துறை நடவடிக்கைக்கு உட்படுவோர் நச்சுக் குப்பியைக் கடிக்க வேண்டும் என்பதே விதி. கிருபன் முறையற்று நடந்து கொண்டாரே என்றேன். இந்தியா எங்களுக்கு எதிரி நாடல்லவே. இந்தியக் காவல்துறை எங்களுக்கு எதிரிக் காவல்துறை அல்லவே எனனேன். அருந் தப்பில் உயிர் தப்பினேன் என்றார் கவிஞர்.
இந்திய அரசும் விடுதலைப் புலிகளும் முரண்பட்டுக் கொண்டிருப்பது ஈழத் தமிழர் எதிர்காலத்துக்கு ஏற்றதல்ல, நல்லதல்ல, என்று அவர் என்னிடம் கூறினார்.
ஒரு தேசம் ஒரு நேரத்தில் ஒரு பகைவரையே கையாள முடியும். மற்ற அனைவரையும் நண்பராக்கிக் கொள்ள வேண்டுமே. ஒரு பகைவரை எதிர்கொள்ள மற்றவர்களின் உதவியை நாட வேண்டுமே என நான் அவரிடம் கூறினேன்.
இந்திய அரசோடு பேச வேண்டும். முரணை நீக்க வேண்டும். ஆதரவைப் பெற வேண்டும் என்ன செய்யலாம் என என்னிடம் கேட்டார்.
அதன் பின்னர் நவம்பர் முற்பகுதியில் ஒரு நாள் என்னிடம் காந்தளம் வந்தார். வி பி சிங் அரசு கவிழ்ந்து சந்திரசேகர் பிரதமராகி ஆட்சியைத் தக்கவைக்க அணி திரட்டி கொண்டிருந்த காலம்.
காஞ்சி காமகோடி பீடம் தவத்திரு ஜெயேந்திர சரஸ்வதி சவாமிகளைச் சந்திப்போமா என என்னிடம் கேட்டார். நான் வருகிறேன் எனச் சொன்னேன். கவிஞரும் அவர் துணைவியாரும் நானும் பேருந்தில் காஞ்சிபுரம் சென்றோம். காஞ்சிப் பெரியவரைச் சந்தித்தோம். கடிதம் தாருங்கள் எனப் பெரியவர் கேட்டார். பேருந்தில் சென்னை திரும்பினோம்.
காந்தளகத்தில் இருந்தவாறே இருவருமாகக் கடிதம் ஒன்றைத் தயாரித்தோம். மீண்டும் அடுத்த வாரம் கவிஞரும் துணைவியாரும் நானும் பேருந்தில் காஞ்சிபுரம் சென்றோம். கடிதத்தை பெரியவரிடம் கொடுத்தோம்.
கடிதத்தைப் படித்த காஞ்சிப் பெரியவர் மயிலாப்பூரில் தன் உதவியாளரைச் சந்திக்கச் சொன்னார். சென்னை திரும்பினோம். மயிலாப்பூராருடன் கவிஞர் தொடர்பு கொண்டார்.
தமிழக ஜனதாக் கட்சியின் தமிழக மாநிலத் தலைவரை எழும்பூரில் அவரது வீட்டில் ஒரு நாள் இரவு 9 மணி அளவில் நானும் கவிஞரும் சென்று சந்தித்தோம். அக்காலத்தில் ஜனதாக் கட்சி தலைவர் முனைவர் சுப்ரமணியம் சுவாமி. சந்திரசேகர் அமைச்சரவையில் வணிகத்துறை அமைச்சர்.
ஜனதா கட்சி அமைச்சரவையில் உள்ளது. பிரதமர் சந்திரசேகர் ஆட்சி. விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள் எனக் கவிஞர் கேட்டார். இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த முரண்களை மறந்து ஒன்றாகச் செயல்படலாம் என கவிஞர் கூறினார்.
ஜனதா கட்சிக்கு இணக்கத்தில் ஆர்வமுண்டு. விடுதலைப் புலிகளுக்கும் இணக்கத்தில் ஆர்வம் இருந்தால் அவர்கள் திரு அன்டன் பாலசிங்கத்தைத் தம் அரசியல் குழுவில் இருந்து நீக்க வேண்டுமென ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கூறினார்.
சென்னையில் அண்டன் பாலசிங்கம் வாழ்ந்த காலங்களில், முனைவர் சுப்பிரமணியன் சுவாமியை அமெரிக்க சிஐஏ முகவர் என வெளிப்படையாக நாளிதழ்களில் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். அத்தகைய ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்கும் வரை ஜனதா கட்சி இணக்கத்துக்கு இணங்காது என்றார். இத்தகைய இணக்க முன்மொழிவை முன்னெடுக்க முடியாது என்றார்.
சோர்வுடன் நாங்கள் இருவரும் வெளியே வந்தோம். அதற்கு மேல் என்ன செய்ய முடியும்? முனைவர் சுப்பிரமணியன் சுவாமி எனக்குப் பழக்கமானவர். அவரிடம் நேரே கேட்கவா? எனக் கவிஞரிடம் வினவினேன். கேளுங்கள் சச்சி என உற்சாகித்தார் கவிஞர்.
வணிக அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி சென்னை வந்திருந்தார். கன்னிமரா விடுதியில் தங்கி இருந்தார். திருகோணமலையைச் சேர்ந்தவரும் சென்னையில் வாழ்ந்தவரும் அங்கு நீதிபதியாக இருந்தவருமான சிவானந்தன் எனக்கு நண்பர். அவரையும் அழைத்துக் கொண்டு கன்னிமாரா விடுதி சென்றேன்.
இன் முகத்தோடு வரவேற்றார் அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி. நாங்கள் நுழையும்போது அறையில் திரு சா செ சந்திரகாசன் இருந்தார். ஆங்கில ஊடகர் இராஜப்பா இருந்தார். சிறிது நேரம் உரையாடினோம். அதன்பின்னர் அமைச்சரைப் பார்த்து, உங்களிடம் தனியாகப் பேச வேண்டும் என்றேன். அறையின் மொட்டை வெளிக்குச் சென்றோம்.
இந்தியாவும் விடுதலைப் புலிகளும் இணக்கமாக வேண்டும். முன்பிருந்த முரண்களை மறக்க வேண்டும். இணைந்து பயணிக்க வேண்டும் என்று நாங்கள் அமைச்சரிடம் கூறினோம். காஞ்சிப்பெரியவரும் இதில் ஆர்வமாக உள்ளார் என்று அவரிடம் தெரிவித்தோம்.
விடுதலைப் புலிகள் என்ற சொல் கேட்டதும் அமைச்சர் சினந்தார். That fellow Anton Balasingham, he called me a CIA agent, while in India, enjoying our hospitality. How can India work with a fellow like him. Ask the LTTE to remove him. Then come to me.. இவ்வாறு உரக்கக் கூறியவாறே மொட்டை வெளிப்பகுதியில் இருந்து சந்திரகாசன் இராஜப்பா இருந்த அறைப் பகுதிக்கு வேகமாக நடந்து சென்றார். நாங்களும் அவரைப் பின்பு தொடர்ந்து சென்றோம்.
என்ன பதில் சொல்வது என்று எமக்குத் தெரியவில்லை. எங்களைச் சந்திக்க ஒப்பியமைக்கு நன்றி. மீண்டும் சந்திக்க வருகிறோம். அவரிடம் கூறிவிட்டு வந்தோம்.
இந்தச் சந்திப்பு விவரத்தை அதற்கு அடுத்த வாரம் காந்தளகத்துக்கு வந்த கவிஞரிடம் நான் கூறினேன். திரு பாலசிங்கமும் சுப்ரமணியம் சாமியும் முரண்பட்ட நிலையில் அந்த வழியில் செல்ல முடியாதே எனக்கு கவிஞரிடம் நான் சொன்னேன். காஞ்சிப்பெரியவருடன் ஆன தொடர்பு அவர் காட்டிய வழியும் எங்கேயும் எம்மை எடுத்துச் செல்லவில்லை.
பிரதமர் சந்திரசேகருக்கு ஈரோட்டில் குருவானவர் ஒருவர் இருக்கிறார் அவரைச் சந்திப்போமா எனக் கவிஞர் என்னிடம் கேட்டார்.
11) இவ்வாறு பிரதமர் சந்திரசேகரர் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலத்தில், 1991 தைமாதம் தொடக்கத்தில் அவருடைய பாதுகாப்புத் துணை அமைச்சர் சுபோத் கான் சகாய் சென்னைக்கு வந்தார். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் கலைஞரைச் சந்தித்தார். செய்தியாகப் படித்துக் கொண்டிருந்தேன்.
அன்று இரவு 9 மணி இருக்கும் முதலமைச்சர் வீட்டிலிருந்து கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் அழைத்தார். நீங்கள் உடனே கோபாலபுரம் வர முடியுமா? எனக் கேட்டார். சென்றேன். படிகளில் ஏறி மாடியில் அறையில் கலைஞரிடம் சென்றேன் வழமையாக இல்லாமல் மேல் உள்ளாடை, தோளில் துண்டு மற்றும் வேட்டியுடன் நின்றார். என்னைக் கண்டதும் அவர் விம்மினார். அவர் முகத்தில் சோகம் இல்லையோடியது. கண்களில் இருந்து நீர் வழிந்தது.
"என்னால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. தமிழகத்தில் விடுதலைப் புலிகள் எங்கிருந்தாலும் அவர்களைச் சிறையிலிடும் நிலையில் உள்ளேன். இன்று காலை தில்லியிலிருந்து பாதுகாப்புத் துணை அமைச்சர் வந்திருந்தார். இந்தத் துயரத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே அழைத்தேன். நான் என் செய்வேன்" கண்களில் நீர் கசிந்தவாறே என்னிடம் இவ்வாறு நின்றவாறே கூறினார்.
நெஞ்சுறுதி நிறைந்தவராகவே அவரைத் தொடர்ந்து சந்தித்து வந்திருக்கிறேன். நினைவாற்றல் நிறைந்தவர். சாணக்கியர். சொற்களில் சிலேடையாகப் பேசுவார். என் மீது அளவற்ற அன்பும் பரிவும் மதிப்பும் கொண்டவர். எனக்காக அவரிடம் நான் எதையும் கேட்டதில்லை. ஈழத் தமிழருக்காக நான் அவரிடம் கேட்டு அவர் செய்யாமல் விட்டதும் இல்லை. அத்தகையவர் இன்று கலங்கி நிற்கிறார். ஆறுதல் சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.
நேரே கவிஞர் காசி ஆனந்தன் வீட்டுக்குச் சென்றேன். பழ நெடுமாறனை அழைத்தோம். விடுதலைப்புலிகள் பொறுப்பாளர் கிருபனும் வந்தார். முதலமைச்சர் சொன்னவற்றை அவர்களுடன் பகிர்ந்தேன்.
காற்சட்டைப் பையுள் கையை விட்டவாறே கருவியில் கைவைத்தவாறே கிருபன் சினந்து பேசினார். முதலமைச்சரின் மீது வெறுப்பைக் கொட்டினார்.
பழ நெடுமாறனுக்குக் கடுங் கோபம். தமிழ்நாட்டில் யார் யாருடன் எவ்வாறு அரசியல் செய்வது என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் உங்களுடைய முயற்சிகளைத் தளத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கே பொறுமை காக்க வேண்டும். கிருபனைக் கண்டித்தார் பழ நெடுமாறன்.
கவிஞர் காசி ஆனந்தனும் கிருபனைக் கண்டித்தார். தகவலுக்காகவே உன்னை அழைத்தோம். தகவல்களைச் சொல்வதோடு உன் கடமை முடிந்தது என்றார் கிருபனிடம்.
கிருபன் பாதுகாப்பற்ற முறையில் தகவல்களை தளத்துக்கு அனுப்பினார் போலும். சுபோத்கான் சகாய் கலைஞர் உரையாடல் விடுதலைப் புலிகளிடம் சேர்ந்தது என ஊடகங்கள் அடுத்து சில நாள்களில் செய்தி வெளியிட்டு முதலமைச்சரை இழிவு படுத்தின.
1991 சனவரி 31இல் கலைஞரின் ஆட்சியைக் கலைப்பதற்கு இச்செய்தியையும் ஊடகங்கள் காரணம் காட்டின.