Sunday, March 24, 2024

திரான் அலசர் அறிவாராக.

 

யாஅம் இரப்பவை நின்பால்

அன்பும் அருளும் அறனும்

மறவன்புலவு க. சச்சிதானந்தன், சிவ சேனை

ஊழலில் சுருட்டினாரா?

தமிழில் திறன் உள்ளவர் தீரன். பெயருக்கேற்ற திறன்எனவே சிங்களத்தில் திரான். ஆங்கில வரிவடிவில் Tiran.

எல்லாம் > All > Alles. இலத்தீனில் இருந்து வந்த யேர்மனியப் பெயர் Alles. எல்லாம் தெரிந்தவர் அனைத்தும் புரிந்தவர் என்ற பொருளில். அமெரிக்காவில் 100 பெயர்களுள் ஒரு பெயர் Alles.

Tiran Alles கொழும்பில் பெரிய முதலாளி. Apogee Group, Communication & Business Equipment Company, Ceylon Newspapers (Pvt) Ltd., எனத் தொழில் முனைவோராய்ப் பணத்தில் மிதப்பவர். 

பல நாடுகளில் ஊழல் புள்ளிகளை அடையாளம் காட்டிய அமைப்பு Pandora papersஇல் திரான் பற்றிய பின்வரும் குறிப்பு.

….Sri Lanka’s public security minister, Tiran Alles, is the first sitting Sri Lankan minister to be identified in the International Consortium of Investigative Journalists’ Pandora Papers data trove as having offshore holdings. 

பிரித்தானியாவில் இவரின்  Brompton Properties Ltd. மற்றும் Banham Ventures Ltd.இரண்டுமாகப் பிரபுக்கள் வாழும் இடங்களில் அரண்மனை வீடுகளை வைத்திருப்பதாக Pandora Papers கூறும்.

63 வயதில் இலங்கையின் உள் பாதுகாப்புத் துணை அமைச்சர்.

இலங்கையின் வரலாற்றை ஆழ்ந்து படித்தவரோதிரான் அலசர். மகாவமிசத்தைக் கரைத்துக் குடித்தவரோ திரான் அலசர். தீபவமிசம்அட்டகதை ஆகிய நூல்களைக் கற்றுத் துறை போகியவரோதிரான் அலசர்? சமந்த பாசா தீபிகை, மகாவமிச தீகை, குலவமிசம், சாசனவமிசம் ஆகிய நூல்கள் அவருக்கு மனப்பாடமோ?

எனவே, வெடுக்கு நாறி மலை, அநுராதபுர காலப் புத்த கோயில் எனக் கூசாமல் பொய் சொல்கிறார் திரான் அலசர். ஓராண்டுக்கு முன்பு வரை அங்கு சிவன் கோயிலே இருக்கவில்லை எனப் புரட்டுகிறார் திரான் அலசர்.

Brompton Properties Ltd. மற்றும் Banham Ventures Ltd., தொடர்பான புரட்டுகளையும் பொய்களையும் ஊழல்களையும் உலக அரங்கே பேசுகிறது. இவரோ வரலாற்றுப் பொய்களையும் புரட்டுகளையும் இங்கு பேசுகிறார்.

இலங்கை சிவ பூமி

அநுராதபுரப் புத்த காலம் மகிந்தருடன் தொடங்கும். மகிந்தருக்கும் சங்கமித்திரைக்கும் எந்த உறவும் அசோகனுடன் இல்லை. அசோகனின் கல்வெட்டுகளில் இலங்கைக்கு அவர்களை அனுப்பிய செய்தி எங்கும் இல்லை.

அசோகனுக்கு முன்பே புத்தரின் வழிகாட்டல்களை இலங்கையின் நாகர்களும் இயக்கர்களுமான தமிழர் பின்பற்றத் தொடங்கினர். 

தைப்பூச நாளில் கதிர்காமத்தில் மாணிக்கக் கங்கைக் கரை ஓரத்தில் சைவ சமயப் பெருவிழா. முருகனுக்குத் திருவிழா. நடத்திக் கொண்டிருந்த உரோகணத்து அரசன் மாலநாகன். இலங்கையில் உள்ள இயக்கர்களும் நாகர்களும் பெருந்திரளாகக் கூடியிருந்தனர்.

காவடி ஆடிக்கொண்டிருந்தனர். மாவிளக்குச் சுட்டுக் கொண்டிருந்தனர். தேனும் தினை மாவும் படைத்துக் கொண்டிருந்தனர். முருகப் பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தனர். நான் சொல்லவில்லை. மகாவமிசம் சொல்கிறது. மாகாநாமர் சொல்கிறார்.

யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்லநின்பால்
அருளும்அன்பும்அறனும்… என்ற வரிகளைப் பாலையாழ்ப் பண்ணில் பாடினர். ஈழத்தவரான கண்ண நாகனார் அமைத்த இசைக்கேற்ப ஆடினர். இவை சங்க காலப் பரிபாடல் வரிகள். இன்று தேவாரம் திருவாசகம் போல அன்று நாகர்களுக்கும் இயக்கர்களுக்கும் முருகன் மீது பரிபாடல் வரிகள். கடுவன் இளவெயினனார் இயற்றிய வரிகள்.

க்காலம் புத்த சமயம் இலங்கையில் இல்லை. இலங்கை முழுவதும் சைவ சமயமே சமயம். இலங்கை சிவபூமி. நான் சொல்லவில்லை. மகாவமிசம் சொல்கிறது. மகாநாமர் சொல்கிறார்.

பொய்களையும் புரட்டுகளையும் பேசி ஊழலில் சுருட்டி உருட்டிக் கொண்டிருந்தோருக்கு இந்தச் செய்தி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவர்கள் மகாநாமரின் மகாவமிசத்தைக் கரைத்துக் குடித்த புலமையாளர்.

தைப்பூச நாளில் புத்தர் வந்தார்

..அநேகசாதி சம்சாரம் சந்தா விசுசம் அநிப்பிசம்

கககாரகம் கவேசந்தோ துக்கா சாதி புனப்புனம்

கககாரகா திட்டோசி புனகேகம் நகாகசி

சப்பா தேபாசுகா பக்கா கககூடம் விசங்கிதம்

விசங்கார கதம் சித்தம் தண்கானாம் காயம் அச்யங்கா..

புத்தர் கூறிய வரிகள். பாளி மொழி வரிகள். பிராகிருத வரிவடிவ வரிகள்.

மனிதர் உய் வழி தெரிந்தது. பிறப்புபிணிமூப்புசாக்காடு ஆகிய நோய்களை ஒழிப்பதற்கு வழி பிறந்தது. அறிவாகிய சூரியனை ஆசை என்ற முகில் மறைத்ததும் தெரிந்தது. 

...தோற்றம் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு 

அவலம் அரற்றுக் கவலை கை ஆறு எனத் 

தவலில் துன்பம் தலைவரும் என்ப..

(மணிமேகலை 30 ஆம் காதை வரி 115-117)

எண்ணற்ற பிறவிகளை எடுத்தேன். இந்த உடலைக் கட்டியவனைத் தேடினேன். பிறவி துக்கமே. உடலைக் கட்டியவனே நீ தொடர்ந்து உடலைக் கட்ட முடியாது. பிறவி எனக்கு ஒழிந்தது. ஞான ஒளி பிறந்தது. என் சித்தம் என் வேட்கையைக் களைந்தது.

கயாவில் அரசு மரத்தின் கீழ் புத்தர் இவ்வாறு தனக்குத் தானே கூறினார்.

பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்;
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்;
பற்றின் வருவது முன்னதுபின்னது
அற்றோர் உறுவது அறிக

(மணிமேகலை 2 ஊரலர் உரைத்த காதை 64-67 வரிகள்)

புத்தர் இவ்வாறு கூறிக் கொண்டிருந்த காலத்தில் இலங்கைத் தீவில் நாகர்களும் இயக்கர்களும் அருளும்அன்பும்அறனும் இரந்தனர். முருகனிடம் இரந்தனர். இயற்கையை வழிபட்டனர். பாம்பை வழிபட்டனர். வேம்பை வழிபட்டனர். சிவனை வழிபட்டனர். முருகனை வழிபட்டனர். சிவனுக்கும் முருகனுக்கும் திருக்கோயில்கள் அமைத்திருந்தனர்.

புத்தரின் வரலாற்றை நன்கு அறிந்தோருக்கு இச் செய்திகள் நன்றாகத் தெரிந்திருக்கும். மேற்கூறிய மணிமேகலைக் காப்பியத்தின் வரிகளையும் அவர்கள் படித்திருக்கலாம் அல்லவா?

போர்த்துக்கேயர் தந்த பெயரையும் தமிழர் தந்த பெயரையும் இணைத்துத் தனக்குக் கொண்டவர் அல்லவாஎனவேயே சொல்கிறார் வெடுக்குநாறி மலை அநுராதபுர காலத்தைச் சேர்ந்தது என! அவரை விடக் கற்றறிந்தவர் யார் இருக்க முடியும்?

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கண்ணோட்டத்துடன்மக்கள் நடுவே எடுத்துக் கூறபுத்தர் காசிக்கு செல்கிறார். கங்கைக் கரைக்குச் செல்லவில்லை. சிவன் கோயிலடிக்குச் செல்லவில்லை. சற்றே தொலைவில் மான்கள் வாழ்கின்ற சாரங்க நாதர் கோயில் அருகே இருக்கிறார்.

மக்கள் கூட்டம் எங்கிருக்கிறதோஅங்கு செல்லார். தொலைவில் இருப்பார். தன் கருத்தைச் சொல்வார். மக்கள் கூட்டத்தில் தகுதியுள்ள ஒரு சிலரையாவது தன் பக்கம் ஈர்ப்பார். புத்தர் பெருமானுக்கு இப்பேராற்றல். காசியில் அறுபது சீடர் குவிந்தனர்.

ஊர்வெளியில் சடில பார்ப்பனர்களின் வேள்வி. புத்தர் தொலைவில் இருக்கிறார் வேள்விக்கு வந்தோர் சிலர் அவரிடம் வருகின்றனர். புத்தரின் கருத்துகளில் மயங்குகின்றனர். வேள்விக்குச் செல்லாமலே அவரோடு தங்குகின்றனர். வேள்வித் தலைவரான சடில பார்ப்பனர் காசியப்பர் தேடி வருகிறார். அவரையும் புத்தரின் கருத்துகள் ஈர்க்கின்றன. வேள்வியைக் கலைக்கின்றனர். புத்தரோடு சேர்கின்றனர்.

இலங்கையில் மாணிக்கக் கங்கைக் கரையில் தைப்பூசப் பெருவிழா. முருகனுக்குத் திருவிழா. அங்கேயும் புத்தர் வருகிறார். தை மாதத்து முழுநிலா நாளில் புத்தர் வருகிறார். தன் கருத்துக்களை ஒரு சிலருக்குச் சொல்கிறார். கூட்டம் எங்கே இருக்கிறதோவேள்வி எங்கே நடக்கிறதோதிருவிழா எங்கு நடக்கிறதோஅங்கே புத்தர் செல்வார்தொலைவில் இருப்பார்மக்களைக் கவர்வார். தன் கருத்துக்களைச் சொல்வார்.

அநுராதபுர காலத்துக்கு முன்பே புத்தரின் கருத்துக்களை இலங்கை மக்கள் ஏற்றுக் கொண்டனர். தெற்கே தைப்பூச விழாவில் ஏற்னர். ஆனாலும் சைவ வழிபாடுகளை, மரபுகளை, அருந் தமிழை, இசையை, ஆடலை அவர்கள் கைவிடவேயில்லை.

சித்திரையில் புத்தர் வந்தார்

போர்க்களத்துக்குப் போவதும் போரை நிறுத்துவதும் புத்தரின் மற்றும் ஒரு பரப்புரை உத்தி. 

ஆற்று நீருக்காக உறவுக்கார அரசர் இருவர் கபிலவத்துவில் போரிட முயன்றனர். புத்தர் கபிலவத்து விரைந்தார்தன் கருத்துகளைச் சொன்னார்போரை நிறுத்தினார்.

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் மாணிக்கக் கல் அரியணைக்காக மகாநாகனும் குலநாகனும் போரிட முழங்கினர்.  போர்க் களத்திற்குப் புத்தர் வந்தார். சித்திரை மாதத்துச் சித்திரை நட்சத்திரத்தில் முழுநிலா நாளில் புத்தர் வந்தார். கபிலவத்துவில் எதைக் கூறினாரோ அதையே யாழ்ப்பாணத்திலும் கூறினார். போரிட முழங்கிய மகாநாகனும் குலநாகனும் புத்தரின் அறிவுரையை ஏற்றனர்.

இந்தச் செய்தியை மகாவமிசத்துக்கு முன்னரே மணிமேகலை விரித்துக் கூறும்.

விரிந்திலங்கு அவிரொளி சிறந்துகதிர் பரப்பி,

உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித்

திசைதொறும் ஒன்பான் முழநிலம் அகன்று,

விதிமாண் ஆடியின் வட்டம் குயின்று,

பதுமசதுர மீமிசை விளங்கி,

அறவோற்கு அமைந்த ஆசனம்’ என்றே,

நறுமலர் அல்லது பிறமரம் சொரியாது,

பறவையும் முதிர்சிறை பாங்குசென்று அதிராது,

தேவர்கோன் இட்ட மாமணிப் பீடிகை,

பிறப்பு விளங்கு அவிரொளி அறத்தகை யாசனம்,

கீழ்நில மருங்கின் நாகநாடாளும்

இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி

எமதீ தென்றே எடுக்கல் ஆற்றோர்

தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார்

செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்து

தம்பெரும் சேனையொடுவெஞ்சமர் புரிநாள்,

இருஞ்செரு ஒழிமின் எமதீது’ என்றே

பெருந்தவ முனிவன் இருந்தறம் உரைக்கும்,

(மணிமேகலை, 8 மணிபல்லவத்துத் துயறுற்ற காதை, வரி 44-61)

மகாநாகனும் குலநாகனும் வழிபட்ட கோயில் வெடுக்குநாறி மலைச் சிவன் கோயில். மகாநாகனும் குலநாகனும் வழிபட்ட கோயிலே குருந்தூர் மலையின் நிறை மலர்க் குருந்தம் மேவிய சீர் ஆதி சிவன் கோயில். 

மகாநாகனும் குலநாகனும் வழிபட்ட எட்டுப்பட்டை கொண்ட சிவலிங்கம் (தாராலிங்கம்) இப்பொழுதும் குருந்தூர் மலையில் உள்ளது. அங்கிருந்த நந்தியம் பெருமானின் திரு உருவத்தைத் தாம் கண்டதாக ஆங்கிலேயர் J. Penry Lewis குறிப்பு எழுதிவைத்துப் போனாரே.

வெடுக்குநாறி மலை அநுராதபுரக் காலப் புத்தர் கோயில் எனவும் கடந்த ஆண்டு வரை சிவன் கோயில் அங்கு இருக்கவில்லை எனவும் சொல்பவர் யார்மகாநாகன்குலநாகன்சித்திரை முழு நிலா நாளில் புத்தர் வருகைபோர்க்களம்இவற்றை விளக்கமாகக் கூறும் மகாவமிசத்தை நன்றாகப் படித்துக் கரைத்துக் குடித்த துணை உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் திரான் அலசர் அல்லவா?

அநுராதபுரத்து மூத்த சிவன்

திருவள்ளுவருக்கு 250 ஆண்டுகளுக்கு முன். அநுராதபுர அரசு. பாண்டியன் அபயனின் மகன் பாண்டியன் மூத்த சிவன். பெயரிலேயே சிவனைக் கொண்டவன். இலங்கை சிவபூமி என ஆண்டவன். மனைவி பொன்முகலி. மக்கள் உதயசிவன், மகாசிவன், சூரதீசசிவன், அசேல சிவன்.

அநுராதபுரத்துக்கு வடக்கே அருள் பாலிக்கும் சிவன் கோயில்கள். வெடுக்குநாறி மலையில் ஒன்று. குருந்தூர் மலையில் மற்றது. மூத்த சிவனின் வழிபடு தெய்வங்கள் வெடுக்குநாறி ஈச்சரர்குருந்தூர் ஈச்சரர்.

மகாவமிசத்தைக் கரைத்துக் குடித்தோருக்கு இவை நன்றாகத் தெரிந்த செய்திகள். ஆனாலும் பொய்களையும் புரட்டுகளையும் ஊழல்களையும் அவிழ்த்து விடுவதால் கடந்த ஆண்டுக்கு முன்பு அங்கு சிவன் கோயிலே இல்லை என்கின்றனர்.

அநுராதபுர அரசன் மூத்த சிவன் தனியாகவா இச் சிவன் கோயில்களுக்குப் போனான்அல்ல அல்லதன் இல்லத்தவரையும் அழைத்துச் சென்றான். அரச வாரிசுகளான தன் மகன்களையும் அழைத்துச் சென்றான். 

அந்த மகன்களுள் ஒருவனே பிற்காலத்தில் தேவனாம் பியதீசன் என அசோகனின் பெயரை ஏற்றான்புத்தரையும் ஏற்றான். 

வடக்கு வெடுக்குநாறி மலையில் சிவன் வழிபாட்டுடன் குருந்தூர் மலையில் சிவன் வழிபாட்டுடன் புத்தரையும் ஏற்றுக் கொண்டவன் தேவனாம் பியதீசன். 

சிவபழிபாட்டைக் கைவிட்டுப் புத்த சமயத்தை ஏற்றுக் கொண்டவன் அல்லன். அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்ற அக்கால நடைமுறை. சிவ வழிபாடு தொடர்ந்தது. இலங்கை சிவபூமியே. அதேசமயம் புத்தரின் வழிகாட்டல்களையும் ஏற்றனர் - மிகச்சில அரசர்களும் மிகச்சில குடிமக்களும்.

புத்த விகாரங்கள் இல்லாத காலம். நாகரின் சைவக் கோயில்கள், இயக்கரின் சைவக் கோயில்கள் புத்தரின் தங்குமிடங்கள். பிச்சை எடுத்தே உண்ணவேண்டும். பிச்சை > பிட்சை > பிக்கு எனப் புத்த பிக்குகளுக்கான விதி. மக்களிடை பிச்சை எடுப்பதும் சைவக்கோயிலை அண்டி உண்போரே உறங்குவோரே புத்த பிக்குகள்.

வெடுக்குநாறிச் சிவன் கோயில் பாறையில் 2000 ஆண்டுக்கு முந்தைய தமிழி வரிவடிவ வரிகள். புத்த பிக்குகள் இங்கு உறங்கலாம் என்ற வரிகள். இன்றும் அவற்றைக் காணலாம்.  

சைவர்களான அநுராதபுர அரசர்

விசயன் சைவ அரசன். அவனைத் தொடர்ந்த பாண்டிய வாசுதேவன், பாண்டிய அபயன், மூத்த சிவன், உதய சிவன், மகாசிவன், சூரதிசையன், சேனன்குடிகன், அசேல சிவன், எல்லாளன், யாவரும் சைவ சமயத்தவர்.

துட்ட காமன், சத்தா தீசன், இலம்பதீசன், ஆக மூவர் புத்த சமயத்தவர்.

அதற்குப்பின்னர், கல்லாட நாகன், புலத்தியன், பாக்கியன், பாண்டிய மாறன்பிள்ளை மாறன்சோழ நாகன், சிவதிசையன், சிவன், வடுக சிவன், நீலன், அநுலன், குடகண்ணன், பார்த்திபயன், மகாநாகன், குலவபயன், சிவாலி, ஈழநாகன், சந்திரமுக சிவன் (மனைவி தமிழ்த்தேவி), சுப்பராயன், வங்கநாசதிசையன், கயவாகுமாமல்லநாகன் எனத் தொடர்ச்சியாக அநுராதபுரத்தை ஆண்டவர்கள் அனைவரும் சைவ சமயத்தவரே. நாக, இயக்க, பாண்டிய சோழத் தொடர்புடையவரே. தமிழரேசைவரே.

வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை என வன்னி நிலப்பரப்பின் சிவன் கோயில்கள் பலவற்றை அழியாமல் பாதுகாத்தவர். சிவனருள் பெருக்கும் அரசாட்சி நடத்தியவரே.

திருவள்ளுவருக்கு 330 ஆண்டுகளுக்கு பின்பு அநுராதபுரத்தில் புத்த சமயத்தை வலிமையாகக் கடைப்பிடித்த மேகவண்ணன் என்ற ஒரே ஒரு அரசனைத் தவிரஏனையோர் சைவ சமயத்தவரே. புத்தரின் கருத்துகளை ஏற்ற சைவ சமயத்தவர். அரசர்கள் பலரின் பெயர் சிவன் என அமைந்த வரிசை பார்க்க.

இந்தச் செய்திகளை நான் சொல்லவில்லை. மகாநாமர் எழுதிய மகாவமிசம் சொல்கிறது. வரலாற்றுப் புலமையர் இவற்றைப் படித்திருப்பார்கரைத்துக் குடித்திருப்பார்.

குருந்தூர் மலையில் எட்டுப்படை இலிங்கத்தில் எழுதியுள்ள தமிழி வரிகள் அவை சிவன் கோயில் என்கின்றன. அந்த இலிங்கத்தை இப்பொழுது அங்கு அமைத்த புத்த விகாரத்தின் உச்சியில் வைத்திருக்கிறார்கள்புத்தக் கட்டடக்கலை வடிவமைப்புக்கு முரணாக.

அடிமைத்தளை அகன்று மீளெழுவர்

தமிழர்களும் சைவர்களும் போரில் தோல்வியுற்றதால் அடிமைகள் என்ற நினைப்பில் புத்தர்களுள் மிகச் சிலரே புத்த மேலாதிக்க வாதிகள் ஆகின்றனர். எனவே புத்த விகாரங்களைத் தாம் நினைத்தவாறுதாம் நினைத்த இடத்தில்ஆட்சியைப் பயன்படுத்தி அமைத்து வருகின்றனர்.

900 ஆண்டுகளுக்கு முன்பு கஜினி முகமது கூர்ச்சரத்தின் சோநாதர் கோயிலை இடித்தான்கொள்ளையடித்தான். இன்று சோமநாதர் கோயில் பொலிவுடன் அருள் பாலிக்கிறதே!

700 ஆண்டுகளுக்கு முன் மாலிக் கபூர் படையெடுத்தால் அறுபது ஆண்டுகள் முகமதியர் ஆட்சியில் மதுரை. இராமநாதபுரத்தின் பெயர் இலாலாபாத் ஆனது. மீண்டும் இராமநாதபுரம் ஆகவில்லையா? 25 ஆண்டுகள் மறைந்திருந்த ஆலவாய் அப்பனும் அங்கயற்கண்ணியும் மீண்டும் பொலிவுடன் அருள் பெருக்கவில்லையா? 16 ஆண்டுகள் மறைந்திருந்த தில்லை நடராஜர் பொன்னம்பலத்தில் புகழ் பரப்பவில்லையாபல ஊர்கள் தாண்டிக் கரந்துறைந்த அரங்கநாதர் மீண்டும் திருவரங்கத்தில் திகழ்ந்து அருள் பெருக்கவில்லையா?

500 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் இராமர் கோயிலைப் பாபர் இடித்தான்மசூதி கட்டினான். இன்று அயோத்தியில் இராமர் கோயில் ஒளிவீசி அருள் பாலிக்கிறதே!

400 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கேதீச்சரம் திருக்கோயிலைச் சுவடுகளே இல்லாமல் கத்தோலிக்கர் இடித்துத் தரைமட்டமாக்கினார்களே. இன்று அங்கு அழகான திருக்கோயில் அமைந்திருக்கிறதே! அருள் பெருக்குகிறதே!

யாழ்ப்பாணக் குடாநாட்டுள் 400 சைவக் கோயில்களைக் கத்தோலிக்க இடி இலீவேரா இடிப்பித்தான் என்பர் குவேரசர், தெனத்தர் போன்றோர். சைவக் கோயில் கோயிலாகக் கட்டுகிறார்களே என அங்கலாய்க்கும் இன்றைய கிறித்தவர் சிலரின் பொச்சாப்பை மீறிச் சைவக் கோயில்கள் யாழ்ப்பாணக் குடாநாடெங்கணும் பொலிந்து பூரித்துப் புகழ் மணக்கின்றனவே.

போர்கள் வெற்றியைத் தரும் அல்லது தோல்வியைத் தரும். 2009 போரில் வெற்றி பெற்றோம் எனக் கொழும்பு அரசு மார்தட்டி வெற்றி விழாக் கொண்டாடுகிறது.

வெற்றி நிலையானதன்று. தோல்வியும் நிலையானது அன்று.

கஜினி முகமதுமாலிக் கபூர்பாபர், பிரன்சிசு சேவியர், இடீ இலீவராஅவுரங்கசீப் வரிசையில் திரான் அலசர் பெயரும் இணைந்து விடக்கூடாது.

அன்பு, அருள், அறன், அறிவு

போரில் வெற்றி பெற்றவர் பெருந்தன்மையாக நடந்து கொள்வார்கள் என்பதற்கு மாமன்னன்  அலெக்சாண்டர் சிறந்த எடுத்துக்காட்டு. இரண்டாம் உலகப்போர் இறுதியில் அமெரிக்க - யப்பான் உடன்பாடுஅமெரிக்க - யேர்மன் உடன்பாடு எடுத்துக்காட்டுகள்.

அந்த எடுத்துக்காட்டுகளைப் பின்பற்றச் சிங்கள-புத்த அரசியல் தலைவர்கள் பலர் முயன்றாலும் சரத் வீரசேகரர்விதுர விக்கிரமநாயக்கர்திரான் அலசர்விமல் வீரவன்சர் போன்ற இடக்கரடக்கிகள் சிலர், புத்தரின் பெயரைச் சொல்லித் துவராடை அணிந்து (புத்தராய்ச் சில புனைத்துகில் அணிபவர் என்பார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஞானசம்பந்தர்) புத்தரின் கொள்கைகளுக்கு வேட்டு வைக்கும் புத்த பிக்குகள் சிலர்வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டைக் கட்டி எழுப்புவதாவேட்டு வைத்துத் தகர்ப்பதாஎன்பன வினாக்கள். வேட்டு வைத்துத் தகர்ப்போம்நாட்டில் பிரிவினை வாதத்தைத் தூண்டுவோம் என்ற போக்கில் பொய்கள் புரட்டுகள் உருட்டுகள் மிரட்டல்கள் எனத் தொடர்கிறார்கள்.

வெற்றி நிலையானது அன்று. தோல்வியும் நிலையானது அன்று. அன்பும் அறனும் அருளும் அறிவும் என்றென்றுமே நிலையானது. பரிபாடலில் கடுவன் இளவெயினனார் சொன்னார். அவரைத் தொடர்ந்து புத்தரும் சொன்னார். திரான் அலசர் அறிவாராக.


No comments: