Monday, August 01, 2022

மணிவாசகர் பதிப்பகம் சோமு

 படு வானம். சூரியன் மறைந்தது. ஆனாலும் வானம் சிவந்திருந்தது. 

ஆங்கிலேயர் விட்டகன்றனர். ஆனாலும் தமிழகப் பதிப்புலகில் புத்தக விற்பனை உலகில் ஆங்கிலேயரின் பிடி தளரவில்லை. ஆங்கில நூல்களின் மேலாதிக்கம் குறையவில்லை. 

ஆங்கிலப் பவுண் விலைக்குச் சமமான இந்திய ரூபாய் விலையை மதிப்பிடும் குழுவாக, மாதந்தோறும் அக்குறியீட்டை வெளியிடும் குழுவாகத் தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர் சங்கம். அச்சங்கத்தின் தலையாய பணிகளுள் அதுவும் ஒன்று. 

தெபுவிபச என்ற சுருக்கம் புரியாது. பப்பாசி என்ற சுருக்கமே புரியும். 

அத்துணை ஆங்கில வாடை. ஆங்கிலேயர் அகன்ற பல பதின்ம ஆண்டுகளின் பின்னரும் தமிழகப் பதிப்புலகுள் ஆங்கில வாடை.

தமிழப் பதிப்பாளர் எண்ணிக்கையில் கூடுதல் உறுப்பினர் ஆயினும் ஆங்கிலப் பதிப்பாளர் அணிக்கே தலைமை. அறிக்கைகள் ஆங்கிலத்தில், கணக்குகள் ஆங்கிலத்தில் என ஆங்கிலமயமான தெபுவிபச.

தமிழகத்தில் தமிழப் பதிப்பாளர் தலைமை. தமிழில் அறிக்கைகள். தமிழில் கணக்குகள். தமிழில் தொடர்புகள். இவை நோக்கிய என் முயற்சி. பல கூட்டங்களில் எடுத்துரைத்தேன். 

எனக்கு ஆதரவாகப் பலர். என்னோடு சேர்ந்து உறுமியவர் உமாவார். மண்ணின் மரபுக்கு மகுடம் என்றவர் மணிவாசகனார், பதிப்பாளர் தமிழரே என்ற பாரியார். சொல்லும் செயலும் தமிழே என்ற சைவசித்தாந்தத்தார்.

எழு வானம். செம்மஞ்சளே முதலில் படரும். ஏழுநிறங்களின் சங்கமச் சூரிய உதயம் தொடரும்.

செம்மஞ்சளாகத் தெபுவிபசவில் தமிழ் உதயத்தின் ஊற்றான பெருந்தகைகளுள் ஒருவர் மணிவாசகத்தின் மீனாட்சி சோமசுந்தரனார். பப்பாசியைத் தெபுவிபச ஆக்கிய தந்தை மெய்யப்பனர் வழித் தனயன் மீனாட்சி சோமசுந்தரனார்.

பொறியியலாலர் எனினும் பதிப்புத் துறை அவரின் தறி. தறிகெடாது தடம் பிரளாது தமிழர், தமிழராக வாழலாம், தமிழோடு வாழலாம், எங்கும் எதிலும் தமிழ் என்ற மெய்யப்பனாரின் மெய்ப்பொருளை உயப்பவராக மீனாட்சி சோமசுந்தரனார்.

அவராலுமன்றோ தமிழகப் பதிப்புலகத்தில் தமிழும் தமிழப் பதிப்பாளரும் கோலாச்சுகின்றனர்.

அறுபது ஆண்டுகள் நிறைவா? இன்னமும் இளமை சொட்டும் இனிமை கொண்டவராகவே மீனாட்சி சோமசுந்தரனார் எண் கண்களுள் திகழ்கிறார். தமிழ்ப் பதிப்பாளருள் செம்லாகக் கோலோச்சுகிறார். தந்தைக்கும் தனயனுக்கும் தளர்வறியாத் தொண்டராக .................. இருப்பதால் மீனாட்சி சோமசுந்தரனாரின் பெற்றியும் புகழும் ஓங்குகிறேதே. பல்லடம் மாணிக்கனாரைத் தம்பக்கல் வைத்திருப்பதால் மீனாட்சி சோமசுந்தரனார் பணிகள் துலங்குகிறேதே.

மணி விழாக் காண்பவர். சிதம்பரத்தில் நாள்தொறும் குங்கிலியப் புகையூட்டிய பெருந்தகையைரின் பெயரன். மணிவாசக மெய்யப்பனாரின் மணி விளக்கு. 

மீனாட்சி சோமசுந்தரனார் துணையோடு மக்களோடும் தொண்டரோடும் பல்லாண்டு வாழ்க. நலமாக மகிழ்ச்சியாக உற்சாமாக வாழ்க.

எண்பதாம் வயதில் வாழ்த்துபவன்

மறவன்புலவு க.சச்சிதானந்தன்

காந்தளகம், யாள்ப்பாணம், சென்னை

 

No comments: