Friday, February 26, 2021

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சிறப்புரை

 

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் வெள்ளி விழா சிறப்புரை

மறவன்புலவு க. சச்சிதானந்தன் 16.02.2019

 

அனைவருக்கும் இனிய வணக்கம்.

 

பொன் மனம் படைத்தவர்,

பட்டுப் போல் மென்மையானவர்,

புத்தகங்களைப் போல் வழிகாட்டுபவர்,

இனிய பாட்டுப் போல் பழகுபவர்.

உலகோர் உள்ளங்களில் ஒட்டிக்கொள்பவர்.

கொடுத்துச் சிவந்த கைகளின் சொந்தக்காரர்.

இங்கிவரை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்!

விழாத் தலைவர் நல்லியாருக்கு முதல் வணக்கம்.

 

உலகத் தமிழ்ச் சங்கத் தேரிலே திருவள்ளுவப் பெருந்தகை உலகைச் சுற்றி பவனி வருகிறார்.

தேரை வடம் பிடித்திழுக்க ஆயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை அன்பால் ஈர்த்தவர் நம் விழா நாயகர், உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர், டாக்டர் வி. ஜி. சந்தோசம் அண்ணாச்சி.

அன்பு இவரின் கொள்கை.

அறம் இவரின் குறிக்கோள்.

உழைப்பு இவரின் மூலதனம்.

வெற்றி இவர் ஈட்டும் விளைச்சல்.

25 ஆண்டு காலமாகத் தமிழ் அன்னையை வித விதமாக அலங்கரித்து அழகு பார்க்கும் தமிழ் மகன்.

உலகத் தமிழ்ச் சங்கம் வெள்ளி விழா காணும் இப்பொன்னாளிலே அண்ணாச்சியை வாழ்த்தி வணங்குகிறேன்.

 

எளியோருக்காக இரங்கும் மனம்,

சமூக அக்கறை மேலோங்கும் குணம்,

ஏழை மக்கள் வளம் பெற போராடும் எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் காலையில் வந்தார், கனிவாகப் பேசினார்.

 

கலை, இலக்கியம், சமயம், அரசியல் யாவற்றிலும் பளிச்சிடும் கொழுந்து,

புதுவை சட்டப்பேரவையின் துணை சபாநாயகர் மாண்புமிகு வே. பொ. சிவக்கொழுந்து அவர்களுக்கு வணக்கம்.

 

பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற கல்விச் சீலர்,

என் ஆதிரியர் பேராசிரியர் கமலக்கரராவுக்கு இவரும் மாணவர்.

அரும்பெரும் கல்விப் பணிகள் ஆற்றுபவர்.

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் திரு. ஐசரி கணேஷ் அவர்களுக்கு வணக்கம்.

 

என் அருமை நண்பர் திரு. ஜேப்பியார் பெருந்தகை.

நீதி, அமைதி, புரட்சி எனும் குறிக்கோள்களைக் கொண்டவர்.

சீரிய கல்விப் பணி மூலம் இளைய தலைமுறையை உருவாக்கும் சத்யபாமா பல்கலைக்கழகத்தினை நிறுவியவர்.

அப்பல்கலைக் கழக நிர்வாக இயக்குநர் முனைவர் மரிய சீனா ஜேப்பியாருக்கு என் வணக்கம்.

 

நீதிக்குத் தலைவர், தமிழுக்குத் தொண்டர், அறிவின் சிகரம், பண்பின் மகுடம், எளிமையின் உருவம், அன்பே வடிவான நீதியரசர் திரு. வள்ளிநாயகம் அவர்களுக்கு வணக்கம்.

 

கனடா, ஸ்கார்பரோ நகரிலே பெரிய சிவன் கோயிலை நிறுவியவர.

கனடிய மண்ணிலே சைவப் பாரம்பரியத்தை வளர்ப்பவர்.

யாழ்ப்பாண மண்ணின் மைந்தர்.

என்றும் என் அன்பிற்கினிய முனைவர் அடிகளார் விபுலானந்தாவிற்கு வணக்கம்.

 

திறமையும் பணிவும் அன்பும் ஆற்றலும் கொப்பளிப்பவர்.

தித்திக்கும் திருமுகத்தார்.

எத்திக்கும் புகழ் மணக்கும் திரு. வி. ஜி. பி. ராஜாதாசுக்கு வணக்கம்.

 

கூடியுள்ள சான்றோர்கள், பெரியோர்கள், தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.

 

தாயுள்ளத்தோடு ஈழத் தமிழ் மக்களின் மீது அளவற்ற அன்பைப் பொழியும் தமிழ் நாட்டு மக்களுக்கு நாங்கள் என்றென்றும் கடப்பாடுடையோம்.

 

மேடையில் உள்ள இருவர் மறவன்புலவில் என் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அரங்கில் உள்ள நூற்றுக் கணக்கானோர் என் வீடு தேடி மறவன்புலவு வந்துள்ளனர்.

சந்தோசம் அண்ணாச்சி கால் வைத்ததால் மறவன்புலவு புண்ணிய பூமியானது.

கடந்த இரு மாதங்களுக்கு முன் திரு. திருமாவளவன் மறவன்புலவுக்கு வந்திருந்தார். நெடு நேரம் தங்கியிருந்தார். மரங்கள் நாட்டினார். மக்கள் கூட்டத்தில் பேசினார்.

 

யாழ்ப்பாணத்து ரகுநாத ஐயர் பஞ்சாங்கத்தையே நல்லியாரின் முன்னோர்கள் யன் படுத்துகிறார்கள். அக்குடும்ப சோதிடர் வீட்டில் யாழ்ப்பாணப் பஞ்சாங்கமே நூற்றுக்கும் கூடுதலான ஆண்டுகளாக வழக்கில் உள்ளது.

ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டிற்கும் ரகுநாத ஐயர் பஞ்சாங்கத்தை நல்லியாருக்கு  வழங்குவேன். அவர் முகத்தில் மலரும் புன்னகை என் உள்ளத்தில் உவகையை நிறைக்கும்.

 

போருக்குப் பின் 2009 தொடக்கம் மறவன்புலவு செல்லத் தொடங்கினேன். அச்சமும், வேதனையும், சோர்வும், சலிப்பும் குடிகொண்டிருந்த எம் மக்களின் உள்ளங்களில் நம்பிக்கையை, உற்சாகத்தை, மகிழ்ச்சியை விதைக்க எண்ணினேன்.

தைப் பொங்கல் விழாவை மறவன்புலவு அருள்மிகு வள்ளக்குளப் பிள்ளையார் கோயிலிலே மக்க்ள் யாவரும் கூடிப் பொங்கிக் கொண்டாடும் விழாவாக அமைத்தேன்.

பொங்கல் விழாவிற்கு வரும் ஏழை மக்களுக்கு வேட்டி, சேலை கொடுத்தால் மகிழ்வரே என்றெண்ணி நல்லியாரிடம் சென்றேன். உடனடியாக 100 சேலைகளைத் தந்தார். 100 வேட்டிகைளத் தந்தார். அடுத்த 3 ஆண்டுகளுக்கும் அவ்வாறே 100 சேலைகள் தருவார். 100 வேட்டிகள் தருவார். அவரின் ஈர உள்ளத்தை எண்ணி நெகிழ்கிறேன்.

 

நல்லியாரிடம் மறவன்புலவுக்காகச் சேலைகள் கேட்டேன். சந்தோசம் அண்ணாச்சியிடம் இலங்கைக்காகச் சிலைகள் கேட்டேன். அந்நாள் முதல்வர் புரட்சித் தலைவு ஜெயலலிதாவிடம் நூலகங்களுக்காக நூல்கள் கேட்டேன்.

 

ஓரிலட்சம் நூல்களை தமிழக மாண்புமிகு அமைச்சர் பெருமகன் செங்கோட்டையன் தந்தார், இலங்கை வந்தார், மலையகம் சென்றார். நூல்களை வழங்கினார். யாழ்ப்பாணம் வந்தார் பொது நூலகத்தில் 50000 நூல்களை என்னிடம் பேருள்ளத்துடன் தந்தார்.

 

தமிழக மக்களுக்கும் இலங்கைக்கும்  தொப்புள் கொடிப் பந்தம். இலங்கையில் தமிழருக்குத் துன்பம் என்றால் துயரம் என்றால் தமிழகம் புயலாயக் கொதித்து எழும். 1961ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தாரின் ஆதரவைப் பெற நான் பணி புரிந்திருக்கிறேன்.

 

காமராசரைச் சந்தித்தேன். இராஜாஜியைச் சந்தித்தேன். அறிஞர் அண்ணாவைக் கேட்டேன். இராஜாஜி என் மீது அன்பு காட்டியவர். அக்காலத்தில் ஸ்வராஜ்ஜியா இதழில் ஈழத் தமிழர் உரிமைகள் தொடர்பாக இராஜாஜி விரிவாகத் தொடர்ந்து எழுதி வந்தார். அவருக்குத் தேவையான செய்திகளை நான் கொடுத்து வந்தேன்.

 

சந்சோசம் அண்ணாச்சியின் கொடை உள்ளத்தின் வெளிப்பாடாய் வள்ளுவப் பெருந்தகை இலங்கையில் அமர்ந்திருக்கிறார். தமிழர் பெருகி வாழும் 16 மாவட்டங்களிலே வள்ளுவர் கம்பீரமாய் வீற்றிருக்கிறார். தளர்ந்த ஈழத் தமிழருக்கு நம்பிக்கை ஊட்டியபடி வள்ளுவர் பள்ளிக்கூடங்களிலும் பொது வெளிகளிலும் அமர்ந்திருக்கிறார்.


என் முப்பாட்டன் என்னை வழிநடத்த வந்துவிட்டான், தமிழ் இனப் பெருமையை பறைசாற்றி அமர்ந்திருக்கிறான். இனி எனக்கு சோர்வேது? அச்சம் எதற்கு? ஐயங்கள் எதற்கு என ஒவ்வொரு தமிழ் உள்ளத்திலும் நம்பிக்கை பெருக்கெடுக்க வித்திட்டவர் சந்தோசம் அண்ணாச்சி. 16 சிலைகளுள் 8 சிலைகளை அண்ணாச்சியே தன் திருக்கரங்களால் திறந்து வைத்தார்.

 

என் முயற்சி திருவினையாக உதவியவர் அப்போதைய இலங்கை கல்வி அமைச்சர் மரியாதைக்குரிய திரு. இராதாகிருஷ்ணன் அவர்கள்.

 

அண்ணாச்சி வழங்கிய பிரம்மாண்ட வள்ளுவர் சிலைகள் ஈழத் தமிழ் மாணவர்களின், மக்களின் உதிரத்திலே தமிழ் உணர்ச்சியைப் பாய்ச்சுகின்றன; தமிழ் இனத்தின் பெருமையை உரக்க கூறுகின்றன. கூடவே சந்தோசம் அண்ணாச்சியின் அன்புள்ளத்தையும் உயர் நோக்கத்தையும் பறைசாற்றுகின்றன.

 

உலக நாடுகள் பலவற்றிலும் திருவள்ளுவர் சிலைகளை நிறுவி தமிழ்த்தொண்டாற்றும் அண்ணாச்சியின் புகழ் ஓங்க வேண்டும். உலகத் தமிழர் பயனுற அவர் ஆற்றும் சீரிய பணிகள் மேன்மேலும் வளர்ந்து தழைக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். சந்தனத்தம்மாள் ஈந்த தமிழ்த் திருமகனை வணங்குகிறேன்.

 

நன்றி. வணக்கம்.  

 

 

 

No comments: