Monday, June 11, 2018

வரணி வடக்குத் தேர்


பார்க்க காணொலி
https://youtu.be/PpxMEluMVj4



27 வைகாசி 2048 (10.6.2018) ஞாயிறு காலை

தென்மராட்சியில் கிழக்காக வரணி. வடக்கு வரணி தனிப் பிரிவு. யா339 நிலதாரிப் பிரிவு.

நான்கோ ஐந்தோ கிறித்தவக் குடும்பங்கள். அவர்களும் சைவக் கோயில்களுக்கு வருபவர்கள். ஏனைய அனைத்தும் சைவக் குடும்பங்கள். கோயில் சார்ந்தோர் குருக்கள் மரபினர், பண்டார மரபினர்.
ஏனையோர் வழிபாட்டாளர்.

அவர்களுள் 20 – 25 குடும்பங்களை சார்ந்தோரை அறங்காவலராகக் கொண்ட அருள்மிகு சிமிழ் கண்ணகி அம்மன் கோயில். ஏனையோர் தோராயமாக 350 குடும்பங்கள். இந்த 350 குடும்பங்களுள்ளும் 260 வேறு, 60 வேறு, 10 வேறு, 10 வேறு. இவர்களுள்ளும் பிளவுகள், பகைகள், ஏற்றத் தாழ்வுகள்.  

இவர்களுக்காக அண்ணமார் கோயில், முருகன் கோயில்கள் இரண்டு. தவிர, பிள்ளையார் வைரவர் எனச் சில கோயில்கள்.

வேறு வேறாக இருக்கும் அனைவரையும் இணைப்பது பனை தரும் கள். கணிதசமான தொகையினர் பனங் கள் இறக்குபவர். சமூக வேறுபாடுகளுக்கு அப்பால் கள் குடிக்கப் பிளா பொது, சிரட்டை பொது, போகக் கூடாத இடங்களுள் போவதும் கள் குடிப்பதும் நெடு வழமை.

ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒன்றாக மூன்று சனசமூக நிலையங்கள். கிராம முன்னேற்றச் சங்கத் தலைவர் 350 குடும்பங்களைச் சேர்ந்தவர். மாதர் சங்கம், கமக்காரர் அமைப்பு, பிரதேச சபை உறுப்புரிமை,  350 குடும்ருக்கும்பங்களைச் சேர்ந்தவர் பொறுப்புகளில் இல்லை.

வரணி வடக்கில் உள்ள சுடலை அனைவருக்கும் பொதுவானது. யாரும் எரிக்கலாம். எரிப்பவர்கள் 350 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
அருள்மிகு சிமிழ் கண்ணகி அம்மன் கோயிலுக்குப் 12 மாதங்களுக்கும் 12 அருளாளர் பொறுப்பு. அவற்றுள் இரு மாதங்களுக்கு 350 குடும்பங்களைச் சேர்ந்தவர் பொறுப்பு.

அருள்மிகு சிமிழ் கண்ணகி அம்மன் கோயிலுக்கு ஆண்டுத் திருவிழா 11 நாள்கள். 11 அருளாளளர் பொறுப்பேற்பர். அவர்களுள் இருவர் 350 குடும்பங்களைச் சேர்ந்தவர்.

கோயிலுக்குள் எவரும் செல்லலாம், தடையில்லை. பூசைகளுக்குப் பொறுப்பானவர் வேறுபாடின்றி அனைத்துச் சடங்குகளிலும் பங்கேற்பர்.

எழுந்தருளியாக வரும் அம்மனை உள் வீதி உலாக் காவுதலுக்கு நால்வர் மட்டுமே. அவர்களுள் 350 குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு இடமில்லை.
வெளிவீதி உலா உழவு எந்திரத்துப் பெட்டியில் வருவதால் சிக்கலில்லை.

திருவிழாக் காலங்களிலும் பிற சிறப்புப் பூசை நாள்களிலும் அன்னதானம் உண்டு. சமையலுக்குப் பொருளை எவரும் கொடுக்கலாம். குறிப்பிட்டோரே சமைக்கலாம், மற்றவருக்கு இடமில்லை. உணவைப் பரிமாறவும் குறிப்பிட்டோரே. மற்றவர் பரிமாற முடியாது. உணவுப் பந்தியில் எவரும் எவ்விடத்திலும் வேறுபாடின்றி அமர்ந்து உண்ணலாம்.

திருவிழாக் கால இறுதியில் தேர்த் திருவிழா. கடந்த ஆண்டுவரை உழவு எந்திரப் பெட்டிமேல் கட்டுத் தேராக அமைத்து, எழுந்தருளி அம்மன் வெளிவீதித் தேருலா வருவர்.

தேர்த் திருவிழாவுக்குப் பொறுப்பான அருளாளர் நீர்வேலிக்குச் சென்று சிற்பாசாரியாரிடம் சிற்பத் தேர் அமைத்தனர். அருள்மிகு சிமிழ் கண்ணகி அம்மன் கோயிலக்குக் கொணர்ந்தனர்.

வைகாசி 22ஆம் நாள் (04.06.2018) வெள்ளோட்டம் விட்டனர். அனைவரும் வேறுபாடின்றி வந்தனர். மணற்பாங்கான வெளிவீதி. சில்லுகள் புதையும் வாய்ப்பு. வேறுபாடின்றி அனைவரும் தேர் வடம்பிடித்தனர். 
அருட்பொலிவுடன் தேர் இருப்புக்கு வந்தது.

வைகாசி 24ஆம் நாள் (06.06.2018) புதன் தேர்த் திருவிழா நாள். எவரும் தேர் வடம் பிடிக்க இடமின்றி, மண்பரப்பி எந்திரம் தேரை வீதி உலாவுக்காக இழுத்துச் சென்றது.

இந்நாள் வரை தணலாக இருந்த நெருப்புக்கு, மண்பரப்பி எந்திரம் காற்றாகியது. சமூக நல்லுறவைக் கெடுத்தது. உலகம் முழுவதும் வாழும் நல்லுள்ளங்களின் கண்டனத்தைத்தேடியது.

தேர்வடம் பிடித்து இழுக்கவேண்டியவர் யார் என்ற வினா இன்று வரை பல ஊர்களில் தொடர்வது வேதனையே. 

தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு அருகே கண்டதேவி கோயில். நீதி மன்ற, அரச ஆணைகள் அங்கு செல்லுபடியாகா. ஒரு பிரிவினர் தேர் வடம் பிடிக்க முடியாத, அதனால் சாதிக் கலவரங்களே வரக் கூடிய சூழ்நிலை இன்று வரை அங்கே.

1979இல் கைதடிப் பிள்ளையார் கோயிலில் தேர்வடம் பிடிக்க விடாதாதால் தேரோட்டமே நடக்காத சூழ்நிலையே உருவாக்கினேன். பின்னர் மனமாற்றத்தைக் கொணர்ந்தேன். இப்பொழுது எவரும் தேர்வடம் பிடிக்கலாம்.

எதிர்காலத்தில் வரணி வடக்கில் அனைத்து அடியவர்களும் தேர்வடம் பிடித்திழுத்தே அருள் பெருக்வார்கள். அதற்கான மனமாற்றத்தைக் கொண்டுவருவது எம் கடன்.
1.   
1. 1. கோயிலுக்கு வருவோர் எவரும், உள்ளத்தில் தூய்மை, நல்லொழுக்க மேன்மை, உடலில் தூய்மை, உடையில் கோயில் மரபு பேணல், பூசைக் கால நோன்பாளராதல்,
2.2. அனைவரும் சேர்ந்து தேர் வடம் பிடித்தல்,
3.
   3. அனைவரும் பங்குபற்றி எழுந்தருளி உலாவுக்குக் காவுதல்,
4
.   4. அனைவரும் சேர்ந்து சமைத்தல், 
5
.   5. அனைவரும் சேர்ந்து பந்திக்கு உணவு பரிமாறுதல்,
6
.   6. காமதேனு வாகனமும் வேட்டைத் திருவிழாவுக்குப் பயன்படல்,
7
.   7. கோயிலுக்கு வருவோரை அடியாவராக, அருள் பெற விழைபவராகப் பார்த்தல்.
8
.   8. சமூக வளர்ச்சி அமைப்புகளில் திறமைக்கும் செயல் வேகத்துக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்தல்

இவை எட்டும் உடனடியாகத் தீர்க்க வேண்டிய வரணி வடக்கு அருள்மிகு சிமிழ் கண்ணகி அம்மன் கோயில்  அடியவரின் சிக்கல்கள்.  

No comments: