Tuesday, April 24, 2018

மருதினி தெய்வநாயகம்


வாழ்த்துரை
மங்கையற்கரசி, ஆகா என நாம் போற்றி மகிழ முன்னே, வளவர் கோன் பாவை என்பார் ஞானசம்பந்தர். பின்னர் அவரைப் பாண்டிய மன்னனின் மனைவி, பாண்டிமாதேவி என்பார். பின்னர் மக்களுக்கும் பரவுவாருக்கும் மற்றவருக்கும் இறைவனுக்கும் பணி செய்பவர் என்பார்.
யார் இந்தப் பெண்? பெற்றோருக்கு மகள். கணவருக்கு மனைவி, மக்களுக்குத் தாய். பரவுவாருக்கு மருத்துவர்.
பாண்டியன் – மீனாட்சி மகள் என்கோ, தெய்வநாயகத்தின் துணைவி என்கோ, திலகவதிக்கும் மீனாட்சிக்கும் தாய் என்கோ, செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் இல்லாள் என்கோ, குழைந்து கனிந்து பேசியும் பழகியும் வாழும் பண்பாளர் என்கோ, மதுரையும் வைகையும் உவந்த தமிழ் என்கோ, ஊனுடன் இணைந்து உயிருடன் கலந்த இறையாளர் என்கோ, தளர்ந்து வாடி நொய்ந்து நோயாகி வரும் இலட்சக்கணக்கான ஆசியர் ஐரோப்பியர் ஆபிரிக்கர் நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்  வாய்நாடி வாய்ப்பச் செயும் மருத்துவர் என்கோ, புலமையின் பெற்றி என்கோ, மருதினி என்கோ!
அன்பு உண்டு கொல், ஆற்றல் உண்டு கொல், இறை உணர்வு உண்டு கொல், ஈகை உண்டு கொல் எனத் தேடுவாருக்குப் பன்முக இயல்பினராய், உண்டு உண்டு என உளம் குளிரக் கூறி மகிழ, மதுரை செழிக்கும் மாண்பமை இல்லத்தவரின் குறிப்பே இந்நூலானால் பரப்பு எவ்வாறாகும்?
மருதினி தந்த குறிப்புகள் வழிகாட்டிகளே. விரித்துப் பரந்து எழுத வேண்டிய செய்திகள் ஏராளம் உண்டென்பதை அங்கங்கே கோடிட்டுளார் மருதினி.
அறிவியலை எழுதுவோர் குறுக்குவர், சொல்செட்டுக் கொள்வர். ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வொரு சொல்லும் அறிவியல் எழுத்துகளில் பொருள் தருவன.
கலைப் படைப்பில் கற்பனை சிறகு விரிக்கும், அலங்காரம் எழிலொழுகும், சொல்லாடல் சுவை தரும், விளக்கின் பல் பொருளாய் விரியும்.
மருதினி அறிவியலாளரா? கலைஞரா? எழுத்தாளரா? அவர் பன்முகத் தொகுப்பு. அதனாலன்றோ சுவை கூட்டும் வரிகள் தந்தார், பொருள் பொதிந்த சொற்கள் தந்தார், நோற்ற தந்தையை, பெரிதுவக்கும் தாயை வியக்கும் விழுமியங்கள் தந்தார்.
வாழ்த்துகிறேன்.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சித்திரை 09, 2048 (19.04.2018)

No comments: