30 ஆடி 2048 (15.08.2017) செவ்வாய் மாலை
யாழ்ப்பாணத்தில் என் தந்தையார் மு. கணபதிப்பிள்ளை அவர்கள்,
சிறீ காந்தா அச்சகம் என்ற அச்சகம் + புத்தகசாலையை 1952இல் தொடங்கியபொழுது, தமிழகத்தில்
இருந்து புத்தகங்களை வருவித்து விற்பார்கள்.
அக்காலத்தில் யாழ்ப்பாணம் தொடர் வண்டிநிலையத்துக்குப்
பின் உள்ள சுங்கக் கட்டடத்தில் (இப்பொழுதும் இடிபாடாக உள்ளது. தனுக்கோடி - தலைமன்னார்
கப்பல் சேவை இருந்த காலங்கள்) தமிழக நூற் பொதிகைளப் பெறுவோம்.
தமிழகப் பதிப்புத் தொழில் முன்னோடிப் பதிப்பகம் திருநெல்வேலி
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட தலைப்புகள்
பலவற்றை நாம் விற்போம்.
1981இல் மதுரையில் ஐந்தாம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி
மாநாட்டில் புத்தகக் காட்சி அரங்குகளில் ஈழத்து வெளியீடுகளுக்கு ஓர் அரங்கு தருமாறு
கேட்டேன். சென்னைக் காந்தளகம் அரங்காகத் தந்து உற்சாகித்தவர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழக இயக்குநர் திரு. இரா. முத்துக்குமாரசாமி.
கழக நிறுவனர் தாமரைத்திரு சுப்பையாவின் மகளைத் திருமணம்
செய்தவர். அப்பொழுதே முதன்முதலாகத் திரு முத்துக்குமாரசாமியாருடன் பழகத் தொடங்கினேன்.
1986 மார்கழியில் சென்னைப் புத்தகக் காட்சியில் சென்னைக்
காந்தளகம் அரங்கு அமைத்து, ஈழத்து நூல்களைத் தமிழகத்தாருக்கு விற்ற காலங்களில் அவரோடு
பழக்கம் நெருக்கமாயிற்று.
இனிமையான புன்னகை, குழைந்து குழைந்து உரையாடல், நூலகத்
துறையில் அரங்கராசனாரின் வழிகாட்டலை எடுத்துக் கூறல், எந்தக் கருத்தையும் ஊக்குவிக்கும்
மனம், பதிப்பக வரலாற்றில் தோய்தல் என அவரது இயல்புகள் என்னுடன் இசைந்தன.
மணிமேகலைக் காப்பியத்தைப் பாண்டியனார் ஆங்கிலத்துக்கு
மொழிபெயர்த்தார். கழகம் வெளியிட இருந்தது. இருவரும் சென்னைக் காந்தளக அலுவலகம் வந்தனர்.
அச்சுக்கோர்த்துத் தரமுடியுமா எனக் கேட்டனர். நானோ பதிப்புத் தொழிலில் கற்றுக்குட்டி.
கழகமோ முன்னணியாளர். என்னிடமா...? தயங்கினேன்.
ஆறுமுக நாவலர் தொடக்கம் கணேசையர் ஊடாக ஈழத்துப் பதிப்புப்
பரம்பரைக்குத் தவறற்ற பதிப்புப் பரம்பரை என்ற நற்பெயர். நீங்கள் யாழ்ப்பாணப் பதிப்புப்
பரம்பரையினர், நீங்களே அச்சுக் கோர்த்துத் தரவேண்டும். இருவரும் வலியுறுத்தினர்.
பங்களூரில் வாழ்ந்த ஆங்கிலப் பேராசிரியர் வேங்கடகிருட்டிணனிடம்
மெயப்புப் பார்த்துப் பணியை முடித்தேன். பாராட்டிய முத்துக்குமாரசாமியார் என்னையும் பாண்டியனாரையும்
வேங்கடகிருட்டினனாரையும் அழைத்து விருந்தளித்தார். பணியைப் பார்ட்டுதல், உற்சாகித்தல்,
ஊக்குவித்தல் அவரிடம் நான் கற்ற வழமைகள்.
அக்காலத்தில் பெரிய
எழுத்தில் அபிராமி அந்தாதி நூலை வெளியிடத் தொடங்கினோம். ஒருநாள் கழகத்தில் முத்துக்குமாரசாமியாருடன்
பேசிக்கொண்டிருக்கிறேன். அவரது அருமைத் துணைவியார், தாமரைத்திரு சுப்பையரின் மகள் அங்கு
வந்தார். ‘காலையில் வழிபாட்டில் நான் படிப்பது நீங்கள் வெளியிட்ட அபிராமி அந்தாதி’
எனச் சொல்லி என்னைப் பாராட்டினார். கழகம் பாராட்டினால் வேறென்ன சிறப்பு எனக்கு வேண்டும்?
பேரா. அ. ச. ஞானசம்பந்தன்
சேக்கிழார் விழாவுக்காக, திரு விக குறிப்புரை எழுதிய பெரியபுராணத்தைப் பதிப்பிக்க விரும்பினார்.
அச்சுப் பணி காந்தளகத்தாயது. என் மகன் பிஞ்ஞகன், செ. கணேசலிங்கத்தாரின் மகள் மான்விழி
இருவரும் தம் கடனாக எடுத்துச் செய்தனர். இரா. முத்துக்குமாரசாமியார் அலுவலகத்தில் நூல்
தயாரானது. மெய்ப்புப் பார்த்தவர்களுள் ஒருவர் யாழ்ப்பாணப் பேரா. ந. சுப்பிரமணியன்.
எங்கள் அனைவருக்கும் வழிகாட்டியானவர் இரா. முத்துக்குமாரசாமியார்.
1995 தை மாதம். தஞ்சாவூரில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு.
எட்டு மாதங்களுக்கு முன்னரே இலங்கைப் பேராளர் பலரின் பதிவுக்காக நான் தஞ்சாவூர் சென்றேன்.
ஒரு மாதத்துக்கு முன்வரை இந்திய அரசு நுழைவனுமதியை அவர்களுக்கு வழங்காதென்ற நிலை. தமிழகத்தில்
நான் ஏறாத படியில்லை. பார்க்காத அமைச்சர் இல்லை. முதலமைச்சரை மட்டும் பார்க்க முடியவில்லை.
வெறுங்கையுடன் திரும்பினேன்.அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் மீது வழக்குத் தொடுத்தேன்.
பொறுப்பாக இருந்தவர்கள் முனைவர் வா. செ. குழந்தைசாமி, மற்றவர் இரா. முத்துக்குமாரசாமி.
தன்மீதுவழக்குத் தொடுத்ததை முத்துக்குமாரசாமியார் மனங்கொண்டதேயில்லை. என் மீது அன்பு
பாராட்டுவதைக் குறைக்கவில்லை.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தில்
(தெபுவிபச) அடிக்கடி தமிழ்ப் பதிப்பாளரின் குறைகளை எடுத்துக் காட்டுவேன். என்முயற்சிக்கு
மதிப்பளித்த தெபுவிபசவினர் தமிழ்ப் பதிப்பாளருக்குத் தலைமைப் பதவியை விட்டுக் கொடுத்தனர்.
இரா. முத்துக்குமாரசாமி தலைவரானார். காந்தளகம் சார்பில் சசிரேகா ஆட்சிக்குழு உறுப்பினரானார்.
ஆங்கில மொழி கோலோச்சிய தெபுவிபசவில் தமிழ் மொழியையும் புகுத்திய
பெருமையாளர் இரா. முத்துக்குமாரசாமியார். காந்தளகத்தில் அவருக்குத் துணையாக இருந்தோம்.
தமிழகத்தின் 100 ஆண்டுகள் கடந்த முதலாவது தமிழ்ப் பதிப்பகம்
எது? என வினா எழுந்தது. ஆறுமுக நாவலர் பதிப்பகம் 100 ஆண்டுகள் கடந்தது என நான் கூறியதைப்
பலர் ஏற்கவில்லை. இரா. முத்துக்குமாரசாமியார் இடையிட்டார். என் கருத்துக்கு மதிப்பளித்துப்
பாராட்டி, ஆறுமுக நாவலர் பதிப்பகத்துக்குச் சென்னைப் புத்தகக் காட்சியில் விருதும்
வழங்கினர்.
காந்தளகமும் தினமணியும் இணைந்து தமிழகத்தின் 40 இடங்களில்
சம காலத்தில் புத்தகக் காட்சிகள் நடத்திச் சாதனையாக்கினோம். கும்பகோணம், திருச்சி,
திருநெல்வேலி ஆகிய இடங்களில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அரங்குகளை அமைத்துக்
காட்சியால் சிறு பதிப்பாளர் நன்மை பெற இரா. முத்துக்குமாரசாமியார் பெரிதும் ஊக்குவித்தார்.
நான் அவரைச் சந்திக்காத பதிப்பு முற்றம் இல்லை. அவர் என்னை
ஊக்குவிக்காத உற்சாக முற்றம் இல்லை.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு
நூலகத்தில் பதிப்பாளர் கூட்டம். மொழிபெயர்ப்பு நூல்களைத் தமிழக அரசு உருவாக்குவது தொடர்பான
கருத்துரைகள். இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் இத்தகைய முயற்சிகளின் வரலாறு கூறினார்.
கலைச்சொல்லாக்கத்தில் ஒருமைப்பாடில்லை என நான் கூறியதை அவரும் வழிமொழிந்தார்.
என் காலத் தமிழ்ப் பதிப்புலகின் தந்தையாக இரா. முத்துக்குமராசாமியாரைப்
பார்க்கிறேன். இன்று (15.8.2017) மாலை அவர் காலமாகிய செய்தி நஞ்சாகக் காதில் பாய்ந்தது.
அவரில்லாத சென்னை எனக்கு வெறுமை. அவரில்லாத தமிழ்ப் பதிப்புலகம் எனக்கு வெங்கானம்.
குழையும் தமிழால் சச்சி என என்னை அழைக்க அவரில்லையே என ஏங்குகிறேன்.
No comments:
Post a Comment