Saturday, February 28, 2026

ஈழம் என்ற சொல் எங்கெங்கு

#ஈழம்_பண்டைய_காலத்தில் #எவ்வாறு_அழைக்கப்பட்டது பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் . பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் அடிகளால் அமைந்துள்ளது. இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர். கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும். இது கரிகாலனை தலைவனாக வைத்து எழுதப்பட்ட இந்நூலை அரங்கேற்ற கரிகால சோழன்உறையூரில் பதினாறு கால் மண்டபம் எழுப்பினார் புலவர் அதன்கண் வீற்றிருந்து அந்நூலை அரங்கேற்றினார். அதில் கரிகாலனது பூம்புகாரின் சிறப்பை கூறிவந்த புலவர் " தென் கடல் முத்தும் குண கடல் துகிரும் கங்கை வாரியும், காவிரிப் பயனும் ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும் " என பாடினார். இப்பாடலுக்கு கரிகாலனும் பதினாறாயிரம் பொற்காசுகள் பரிசளித்தான். பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களை தலையெடுக்கவிடாமல் சோழமன்னர்கள் நெடுங்காலம் அடக்கி ஒடுக்கிக்கினர் அவமானப் படுத்தினர்.பின்னாளில் வீறுகொண்டவனாக முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் சோழநாட்டின்மேல் படையெடுத்து நகரங்கள் அரண்மனைகளை பாழ்படுத்தி கழுதை கொண்டு ஏர்பூட்டி எருக்கலை விதைத்தான். உறையூர் நகரமும் பாழ்பட்டது.ஆனால் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மன்னர் பரம்பரையில் வந்ததால் அந்த பட்டினப்பாலை அரங்கேறிய மண்டபத்தைத் தொழுது விட்டு அழிக்காது விட்டுச்சென்றிருக்கிறான் பாண்டியன் முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியன். அந்தச் செய்தியை திருச்சி திருவெள்ளறை கோவிலில் கல்வெட்டாக செதுக்கி வைத்துள்ளான். ஆகவே ஈழம் என்ற பெயர் பொ.ஆ 2 கரிகாலனுடைய காலத்திலேயே வழங்கப்பெற்றமை உறுதிப்படுத்துகின்றன. அதே போன்று பொ.ஆ மு 2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அநுராதபுர அபயகிரி விகாரை படிக்கட்டில் காணப்படுகின்ற கல்வெட்டு ஈழம் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அபயகிரிச் சைத்தியத்தின் மேடையொன்றின் விளிம்புப் பகுதியை அண்டிக் காணப்பட்ட கற்பாளம் ஒன்றில் இக்கல்வெட்டு உள்ளது. கலாசார முக்கோணத் திட்ட அலுவலர்களில் ஒருவரான எஸ். ஏ. பண்டாரநாயக்கா என்பவரே இக்கல்வெட்டை முதலில் கவனித்தவர். 1998ல் யப்பானியக் கல்வெட்டறிஞர் கராசிமா, தமிழ்நாட்டு அறிஞர்களான பேராசிரியர் சுப்பராயலு, பேராசிரியர் ப. சண்முகம், இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் சி. பத்மநாதன் ஆகியோர் அனுராதபுரத்து அழிபாடுகளைப் பார்க்கச்சென்றபோது இந்தக் கல்வெட்டுப்பற்றி அறிந்து அதைப் படியெடுத்தனர்.அடுத்து அனுராதபுரத்திலுள்ள அபயகிரி விகாரையில் உள்ள பாறைக்கல்வெட்டில் உள்ள கி.மு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி சாசனமானது (இல.94) மூன்று வரிகளைக் கொண்டது. இதில் முதல் வரியில் “ஈழ பரதகி தமிட சமணநே கரிதே தமிட கபதிகந பசதே” என்ற தமிழ்பிராமியும், அசோகப்பிராமியும் கலந்த பிராகிருத வசனத்தில் ஈழபரத என்ற சமணனால் உருவாக்கப்பட்ட வீடு என்று வருகிறது. இதை வாசித்த பரணவிதான இலா பரதகி என தவறாக வாசித்துள்ளார் இதனை பின்னர் பேராசிரியர் வேலுப்பிள்ளை தமிழ் பிராமியிலமைந்த இந்தக் கல்வெட்டானது “ஈழபரத” (ஈழத்துப்பரதவர்) என வாசித்து ஈழபரதத்தில் வாழும் தமிழ்ச் சமணரும், தமிழ்க் குடும்பத்தலைவனும் கட்டுவித்த மாடம் என விளக்கமளித்துள்ளார். ஆகவே ஈழத்தமிழரின் தொன்மையை விளக்குவதற்கு இற்றைவரையும் பயன்படுத்தப்பட்ட இலக்கிய ஆதாரங்களையும், கர்ண பரம்பரைக் கதைகளையும் விடுத்து முற்றிலும் நவீன விஞ்ஞான முறையினான தொல்லியல், மரபணுவியல், புவிச்சரிதவியல், மானிடவியல், கல்வெட்டியல் மற்றும் பண்பாட்டியல் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட தரவுகளையும் முடிவுகளையும் கொண்டு ஈழம் என்பது பண்டைய காலத்தில் இந்த நாட்டினை குறிக்க பயன்படுத்தப்பட்டது என்பது உறுதியாகிறது. மேலும் ஈழம் என்ற பெயர் எவ்வாறு வரலாற்றுக்காலங்களில் அழைக்கப்பட்டது என்பதனை தொல்லியல், மற்றும் கல்வெட்டியல் ஆய்வியல் நோக்கில் பார்க்கின்றபோது பூநகரி மண்ணித்தலையில் 1992 ஆண்டு பேரா.பரமு புஸ்பரட்ணம் தலைமையில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில் இரண்டு எழுத்துக்கள் கொண்ட இரண்டு மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகக் காலக் கணிப்பிடப்பட்டிருக்கிறது. இவ் இரண்டு மட்பாண்டங்களில் “ஈலா” என்ற எழுத்துப்பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் முக்கியமானவை. இதில் இரண்டு எழுத்துக்களை உடைய முதலாவது சாசனம் உடைந்த நிலையில் “ஈ” என்ற ஒலிப்பெறுமானம் கொண்ட எழுத்தும், இரண்டாவது மட்பாண்டத்தில் “ல” என்ற பெறுமானம் கொண்ட எழுத்தும் காணப்படுவதாகவும், இவ்விரு எழுத்துக்களுக்கும் இடையிலான இடைவெளியை நோக்கும்போது இடையில் வேறு எழுத்துக்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே பொருந்தக்கூடிய இரண்டு மட்பாண்டங்களையும் சேர்த்து வாசிக்கும் போது முதல் மண்பாண்டத்திலுள்ள எழுத்தில் ‘ஈ” என்ற ஒலியும், இரண்டாவது மட்பாண்டத்திலுள்ள எழுத்தில் ‘ல” என்ற ஒலியையும் சேர்த்து ‘ஈல” அல்லது ‘ஈலெ” என்றும் வாசிக்கமுடியும் என்கிறார் பேரா.புஸ்பரட்ணம். மேலும் அங்கு கிடைத்த மற்றுமொரு சாசனத்தில் மூன்று எழுத்துக்கள் காணப்படுகின்றன எனவும் இதன் முதலெழுத்திற்கு ‘ஈ” என்ற ஒலிப்பெறுமானமும், இரண்டாவது எழுத்திற்கு ‘ழ” என்ற ஒலிப்பெறுமானமும் கொடுத்து ‘ஈழ” என வாசிக்க முடியும் எனவும் அவ்விரு எழுத்துக்களைத் தொடர்ந்து மூன்றாவது எழுத்து சிறு கோட்டினை மட்டும் கொண்டிருப்பதால் இவ்விரு எழுத்துக்களையும் நோக்கும் போது இது ஈழத்தையே குறிக்கின்றது என்றும் பேரா.பரமு புஸ்பரட்ணம் தனது பூநகரி தொல்பொருளாய்வு நூலில் கூறியுள்ளார். மேலும் இங்கு காணப்பட்ட எழுத்துக்களை ‘வேளான்” ‘ஈழ” என புகழ்பெற்ற மறைந்த கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவன் வாசித்ததாகவும், இதன் காலம் கி.மு 2 என அவர் கணித்திருந்ததாகவும், தமிழ் எழுத்தின் தோற்றம் (பக்7) பேரா புஸ்பரட்ணம் எழுதியுள்ளார். இதுவே ஈழ என்ற பெயரிலமைந்த கி.மு.2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதல் தொல்பொருட்சான்றாகும். மகாவம்சம் கி.பி 1 ஆம் நூற்றாண்டில் (95 – 101) ஈழநாகன் என்பவன் 6 ஆண்டுகள் அனுராதபுரத்தை ஆண்டதாகவும், இந்த ஈழநாக என்ற அரசனின் பெயர் ராஜவலிய என்ற நூலில் எலுநாக, எலுந்நாக என பதியப்பட்டுள்ளது. பண்டைய ஈழத்தில் தமிழர் (பக்.48) என்னும் நூலில் சி.க சி;ற்றம்பலம் அவர்கள் எழு, ஈழ என்பன ஒரே பொருள் கொண்ட ஒன்றிலிருந்து திரிபடைந்த பதங்கள் என்கிறார். இதிலிருந்து மகாவம்சம், ராஜவலிய ஆகிய சிங்கள வாரலாற்று நூல்களே ஈழம் என்கின்ற பெயர் பெயரில் ஆண்ட ஈழமண்ணின் மைந்தர்கள் என்பதை சுட்டிக்காட்டி நிற்கின்றது. அத்துடன் ஈழத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலுள்ள திருப்பரங்குன்றத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.மு 2 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது. இக்கல்வெட்டு ஒன்றில் (கல்:- 03) “எருகாடூர் ஈழக்குடுமிகன் பொலாலையன் செய்த ஆய்சயன் நெடுஞ்சாதன்” என்ற வரி வருகிறது இது எருகாட்டூர் ஈழக்குடுமிகன் பொலாலையன் சமண (ஆசீவக) தானம் வழங்கியது பற்றிய குறிப்பை சொல்லுகிறது. இது ஒட்டுமொத்த இலங்கையையும் ஈழமென அழைக்கப்பட்டதற்கு சான்றாகிறது. இதன் கல்வெட்டினை கீழே நோக்குக. மேலும் ஈழம் என்பது முழு இலங்கையையும் குறிக்கின்றது என்பதற்கு தமிழகத்தில் சங்ககாலத்தில் எழுந்த பட்டிணப்பாலை காவிரிப்பூம்பட்டினத்திற்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் விபரிக்கும் பொழுது (வரி 190 -192)* ‘கங்கை வாரியும், காவிரிப்பயனும், ஈழத்துணவும், காழகத்து ஆக்கமும்” .. எனப்புகழ்ந்துரைக்கின்றது. இது முழு ஈழத்தையும் குறிப்பனவாகவே அமைகின்றது. பட்டிணப்பாலை எழுந்த காலத்தில் ஈழம் என்னும் நாட்டின் பெயர் தமிழகத்தில் நன்கு அறிமுகமாகிவிட்டதனை அறியலாம். சுப்பிரமணியன்.அ.வே, சங்க இலக்கியம் பத்துப்பாட்டு, பக.450, 2010. கலிங்கத்துப் பரணியிலும் அதன் வரி 200 இல் ஈழமும் தமிழ்க் கூடலும் சிதைந்து.. என இடம்பெறுகிறது. இது ஒட்டுமொத்த இலங்கையையும் ஈழம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு மற்றுமொரு சான்றாக அமைகிறது. மேலும் சங்கப்பாடல் பாடிய புலவர்களின் ஒருவராக கி.பி.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த “ஈழத்துப் பூதந்தேவனார்” எனப்படுபவர் காணப்படுகின்றார். இவர் அகநானூறில் மூன்று பாடல்களையும், குறுந்தொகையில் மூன்று பாடல்களையும், நற்றிவீணியில் மூன்று பாடல்களையும் பாடியுள்ளார் என சங்க நூல்கல் கூறுகின்றன. இவரது பெயரின் முன்னுள்ள ஈழம் என்ற பெயர் ஒட்டுமொத்த இலங்கையையும் குறிப்பதாக அமைகிறது. இதே காலப்பகுதியைச் சேர்ந்த ஈழத்துப் பிராமிக்கல்வெட்டுக்களில் பூதன், பூத, பூதி ஆகிய பெயர்கள் வருகின்றன. பல்லவர்காலத்தில் ஈழம் பற்றிய மிகப்பழைய குறிப்பு வருகிறது. அது “ஈழம்பூட்சி” என்ற கூட்டுமொழியில் வருகிறது. ஈழம்பூட்சி என்பது ஒரு வகையான வரி. “தெங்கும் பனையும் ஈழவர் ஏறப்பெறாதாராகவும்” என்று சில நலமானியங்கள் தொடர்பாக சாசனங்களிற் குறிப்பிருக்கின்றது. இது தற்போது பூநகரியில் உள்ள கிராஞ்சி கிராமம் முன்னொருகாலத்தில் ஈழவூர் என அழைக்கப்பட்டதை அங்கு பெறப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளிலிருந்து அறிய முடிகிறது. சேது சமுத்திரம் என வழங்கும் கடற்பரப்பின் கரைகளிலும் வாழ்ந்தவர்கள் ஈழம் என்ற நாட்டின் பெயராக பயன்படுத்தினர் என தனது யாழ்ப்பாண இராச்சியம் ஒரு சுருக்க வரலாறு (2011) என்னும் நூலில் எழுதியுள்ளார். பேராசிரியர்.க.இந்திரபாலா இலங்கையில் தமிழர் (2004) பக்.338 இல் இன்று தென்னை, தெங்கு எனப்படும் மரப்பெயருக்கு பழந்தமிழில் ஈழம் என்றொரு இன்னொரு பெயரும் இருந்ததாகச் சொல்லுகின்றார். இச்சொற்களனைத்தும் இலங்கைத்தீவின் இன்னொரு பெயராகிய ஈழம் என்ற பெயருடன் தொடர்புபட்டிருப்பதைக் காணலாம் என்கிறார். இலங்கையிலிருந்து வந்த மரம் என்ற பொருளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னைக்கு ஈழமரம் என்ற பெயரும் இருந்தது. அந்த மரத்தில் காய்க்கும் காய்க்கு ஈழக்காய் என்றும், அக்காயிலுள்ள நீருக்கு ஈழநீர் என்றும் வழங்கபட்டிருந்ததாகவும், இந்த ஈழநீர் மருவி இளநீராக இன்றுவரை வழங்கப்படுவதையும், ஆயிரம் ஆண்டுகளின் முன்னர் தென்னிந்தியாவில் ஒரு தனிச்சமுகப்பிரிவாக ஈழவர் என்ற பிரிவு இருந்தனர் என்பதை கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன என்றும் பேரா.இந்திரபாலா குறிப்பிடுகின்றார். அனுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி.7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு அங்குள்ள ஆலயமொன்றுக்கு 30 ஈழக்காசுகள் தானமாக கொடுக்கப்பட்ட செய்தி பற்றிக்கூறுகிறது. அதேபோல் பராந்தக சோழன்காலத்தில் வேலூரில் பாண்டிர்களுக்கு எதிரான போரில் ஈழத்து ஆட்சியாளனாக ஈழத்து மன்னன் சென்று போரிட்டான் இதை “ஈழத்து ஆரியன்” என சோழக்கல்வெட்டுக்கள் பதிவு செய்வதை பேரா.நீலகண்டசாஸ்திரி அவர்கள் பதிவுசெய்துள்ளார். இதனைத்தொடர்ந்து கி.பி 10 நூற்றாண்டில் (993) ஈழம் சோழர்கள் வசமானதால் அது சோழர்களின் ஆட்சிமண்டலங்களில் ஒன்றானது. இதனால் இதை “ஈழமான மும்முடிச்சோழ மண்டலம்” என அழைத்தனர். முதலாம் இராஜராஜனின் மெய்க்கீர்த்திகள் “எண்திசை புகழ்தர ஈழ மண்டலமும்” எனப்புகழ்கிறது. இதன்போது ஈழத்திலும் “ஈழவளநாட்டு வரி” என்றொரு வரிமுறையையும் சோழர்கள் நடைமுறைப்படுத்தியிருந்தனர். அத்துடன் 10ஆம் நூற்றாண்டுகால சோழக்கல்வெட்டுக்களில் “ஈழக்காசு, ஈழக்கருங்காசு” பற்றிய செய்திகள் காணப்படுகிறது. சோழர் ஈழத்தை வெற்றிகொண்டதன் நினைவாக ஈழக்காசு, ஈழக்கருங்காசு என்ற பெயரில் நாணயங்கள் வெளியிட்டதை சோழர் காலக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருக்கேதீஸ்வரம் மாந்தைக் கல்வெட்டில் தமிழகம் சோழமண்டலத்தைச் சேர்ந்த ஒரு நிலக்கிளாந்தர் ஈழத்தில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு நன்கொடை அளித்திருப்பதாக உள்ளது. இக்கல்வெட்டை கிருஸ்ணசாஸ்திரி அவர்கள் வாசித்து படியெடுத்துள்ளார். (கிருஸ்ண சாஸ்திரி 1923) இக்கல்வெட்டு தற்போது கொழும்பு அருங்காட்சியகத்திலுள்ளது. எனவே 11 ஆம் நூற்றாண்டிலும் இலங்கையில் ஈழம் என்கின்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதனை மாதோட்டம் கல்வெட்டு சான்றுபகர்கின்றது. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் ராஜேந்திர சோழனின் சாசனத்தில் “முரட்டெழில் சிங்களர் ஈழமண்டலமும்” எனவும், இராசாதிராசன் 1 கல்வெட்டுக்கள் மதுரையும் ஈழமும் கொண்டவன்” என்றும், மூன்றாம் குலோத்துங்கன் மெய்க்கீர்த்திகள் “சிங்களவன் தலைமையாற் தென்னீழங் கொள்கவென்னத் திரைகடலை அடைக்கவென்ன” எனவும் குறிப்பிடப்பட்டிருப்பதானது. ஈழம் என்கின்ற பெயர் முழு இலங்கைக்கும் வழங்கப்பட்டிருப்பதனை அறியமுடிகிறது. மேலும் முத்தள்ளாயிரம் என்ற இலக்கியத் தொகைநூலானது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக பலரும் கருதுவர். இது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட 2700 பாடல்களைக்கொண்ட தொகுப்பாகும். கோழி என்னும் உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரியும் கிள்ளிவளவனின் யானையானது போர் புரியும் விதத்தை பாடும்போது “கச்சி ஒருகால் மிதியா ஒரு காலால் தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் – பிறையும் ஈழம் ஒருகால் மிதியா வருமேதங் கோழியர் கோக்கிள்ளி கயிறு” என்று பாடுகிறார் கவிஞர். (எஸ்.வையாபுரிப்பிள்ளை 1943) இங்கு கிள்ளிவளவனின் யானை ஈழத்திலும் ஒரு காலை வைத்து போரிட்டதாம் என்பதிலிருந்து இலங்கை ஈழம் என அழைக்கப்பட்டிருப்பதனைக் காணமுடிகிறது. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜாடவர்மன் சுந்தரபாண்டடியனின் இளைய சகோதரன் வீரபாண்டியன் (1253 – 1273) ஈழத்தின் மீது படையெடுத்தனை அவனது மெய்க்கீர்த்தி கூறும்போது “சோனேடும் ஈழமுங்கொண்டு சாவகன் முடியும், முடித்தலையும் கொண்டருளிய வீரபாண்டிய தேவர்க்கு….” என வருகிறது. இதில் இலங்கைக்கு ஈழம் என்னும் பெயரைப் பாவிப்பதனை அறியலாம். அதேபோல் ஈழத்தின் மீது படையெடுத்து அங்கு ஆட்சிசெய்த சாவகமன்னனை வெற்றி கொண்டதாக கொங்குநாட்டு வீரபாண்டியன் கல்வெட்டிலும் கூறப்படுகிறது. “கொங்கீழம் கொண்டு கொடுவடுகு கோடழித்து கங்கை இருகரையும் காவீரியும் கொண்டு” என்னும் வரிகளினூடாக தெளிவுபடுத்துகிறது.இவ்வாறெல்லாம் குறிப்பிடப்பட்ட ஈழம் பிராகிருத மொழியான பாளியில் சிகல என்று பாளிமொழி உச்சரிப்புக்கேற்ப அழைக்கப்பட்டது. அதுவே பின்னாளில் சிங்கள என்று மாற்றமடைந்தது. இந்த விடயத்தை கி.பி 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அங்கம் வங்கம் கலிங்கம் கௌசிகம் சிந்து சோனகம் திரவிடம் சிங்களம் மகதம் கோசலம் மராடம் கொங்கணம் துளுவம் சாவகம் சீனம் காம்போசம் பருணம்பப் பரமெனப் பதினெண்பாடை என்னும் சமண திவாகர நூற்பாவும், சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம்வங்கம் கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே அதையே முன்மொழிந்த அதே காலப்பகுதியை சேர்ந்த தனிப்பாடல் பாடல் ஒன்றும் உணர்த்தும். Copy

No comments: