Monday, May 20, 2024

மறவன்புலவு சச்சிதானந்தன் அருணகிரி உரையாடல் 2

 யாழ்ப்பாணத் தமிழர் வாழ்க்கை


மறவன் புலவு சச்சிதானந்தன் அருணகிரி உரையாடல்

12.11.2022


பகுதி 2


மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களுடன் அருணகிரி உரையாடல் தொடர்ச்சி. 


யாழ்ப்பாணத் தமிழர் வாழ்க்கை


மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களுடன் அருணகிரி உரையாடல்.


சிறுவனாக இருந்தபொழுது எனக்கு இரண்டு நோய்கள் தாக்கின. ஒன்று கூவக்கட்டு என்று சொல்லுவார்கள். கொடுப்புக் கட்டு மருவிக் கூவக் கட்டானது. 

கொடுப்புக் கழுத்துப் பகுதி வீங்கி விடும். 

அதுவும் ஒரு தீ நுண்மித் தொற்றுதான். 

எனவே, ஒரு திண்ணையில் என்னைத் தனியாக ஒதுக்கி உட்கார வைத்து விட்டார்கள். 

முருங்கைக்காய் அவியல் கறி, கத்தரிக்காய் அவியல் கறி, வெங்காயம் தருவார்கள். நிறைய மோர் குடிக்கச் சொல்லுவார்கள்.


அருணகிரி


மறவன்புலவில் உங்களுக்குக் குடிநீர் எப்படிக் கிடைத்தது?


மறவன்புலவு க. சச்சிதானந்தன்


எங்கள் ஊரில் நிலத்தடி நீர் அவ்வளவு சுவையான நல்ல தண்ணீர். வயலுக்கு நடுவே கிணறு இருந்தது. அது ஊருக்கே பொதுக்கிணறுதான். எல்லோரும் வந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு போவார்கள்.


சனிக்கிழமைதோறும் அம்மா எங்களை அந்தக் கிணறுக்கு அழைத்துச் சென்று, எண்ணெய் தேய்த்து உட்கார வைத்து விடுவார். 

அப்படி இரண்டு மூன்று மணி நேரம் உட்கார்ந்து இருப்போம். அதன்பிறகு, சீயக்காய் அல்லது ஏதேனும் அரப்பு போட்டுக் குளிப்பாட்டி விடுவார். 

அன்றைக்கு மிளகு ரசம் வைத்துத் தருவார்.


அம்மா யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வீட்டில் கிணற்றுத் தண்ணீரில்தான் குளித்தவர். 

எனவே, அவருக்காக அப்பா எங்கள் வீட்டில் ஒரு கிணறு வெட்டினார்.


நோய்த் தொற்று நீங்கியதும், வீட்டுக் கிணற்றுத் தண்ணீரில்தான் முதல் வார்ப்பு. 

அதற்குப் பிறகும் தொடக்கு மாறாது.


அருணகிரி


தொடக்கு என்றால் என்ன?


மறவன்புலவு க. சச்சிதானந்தன்


தொடக்கு என்றால், வீட்டை விட்டு விலக்கி வைப்பது. மாதம் மூன்று நாள்கள் பெண்களை விலக்கி வைப்பார்கள், 

நோய் வந்தால் தொடக்குதான், 

இறப்பு வீடுகளுக்குச் சென்று வந்தால் தொடக்கு. 

அந்த வேளைகளில் அவர்களைத் தொடக் கூடாது. குளத்தில் போய்க் குளித்துவிட்டுத்தான் வீட்டுக்கு உள்ளே வர வேண்டும்.


அவர்கள் விலக்கி வைக்கப்பட்டு இருக்கின்ற இடத்தைச் சுற்றிக் கரியால் கோடு போட்டு வைத்து இருப்பார்கள். நான் படுத்துக் கிடந்த இடத்தைச் சுற்றிலும் வேப்பிலை கட்டி இருந்தார்கள். 

அடுத்து எனக்கு அம்மை வந்தபோதும் அப்படித்தான். நாங்கள் பொக்குளிப்பான் அம்மை என்று சொல்லுவோம்.


சின்ன அம்மை உண்டு, மற்றொரு அம்மை என மொத்தம் மூன்று வகையான அம்மைகள் உண்டு. பெயர்கள் மறந்து போய்விட்டன.


அம்மாவின் உறவினர்கள் மறவன்புலவுக்கு வந்து போனார்கள். யாழ்ப்பாணம், நீர்வேலி, அராலி, சித்தங்கேணி என யாவரும் குதிரை வக்கு வண்டியில்தான் வருவார்கள். 

அப்படி வருகின்றவர்கள், முறுக்கு, சீடை எனப் பலவிதமான பலகாரங்கள் செய்து கொண்டு வருவார்கள். காலையில் வருவார்கள். 

மாலை வரை உட்கார்ந்து பேசிவிட்டுத்தான் போவார்கள். அவர்களோடு கடற்கரைக்குப் போய் வருவோம்.


அப்பாவிடம் கேட்காமல், அம்மா வீட்டை விட்டு வெளியே வர மாட்டார். 


அப்பா, அம்மாவை மெய்யே என்றுதான் அழைத்தார். 

மெய்யே என்றால், உடம்பே அல்லது உண்மையானவளே என்று பொருள். 


அம்மா அப்பாவை என்னங்க, ஏங்க என்று சொல்லித்தான் அழைப்பார்.


அப்பா, அம்மாவை நீர், வாரும், போறீரா என்றுதான் சொல்லுவார். 

நீர் எங்கே இருக்கின்றீர்? உமக்கு என்ன வேணும்? என்றுதான் கேட்பார்.


ஆனால் அப்பா, தன் அம்மாவை, 

நீ, வா, போ, வாணை போணை, இருக்கிறியோணை, என்ன செய்யுதணை என்றுதான் பேசுவார். 

உனக்கு என்ன வேண்டி (வாங்கி) வரணும்? என்று கேட்பார். அவர்களுக்கு உள்ளே அப்படியான உறவு.


நீ, நான் என்று சொல்லுவதை தரக்குறைவாகக் கருதினார்கள். 

அப்படித்தான் எனக்கும் கற்பித்துக் கொடுத்தார்கள்.


வீட்டில் வெற்றிலைத் தட்டு இருக்கும். 

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புக் குடுவை, பாக்குவெட்டி, பாக்கு உரல் எல்லாம் இருக்கும். 

வீட்டுக்கு யார் வந்தாலும், முதலில் வெற்றிலைப் பெட்டியைக் கொண்டு போய் அவர்கள் முன்பு வைத்து விட வேண்டும். 

அதற்குப் பிறகு தண்ணீர் கொடுக்க வேண்டும்.


ஆச்சி வீட்டுக்கு உள்ளே மற்றவர்களை விடவே மாட்டார். 

ஆனால் அப்பா மாறி விட்டார். யார் வந்தாலும், வீட்டுக்கு உள்ளே அழைத்து வந்து விடுவார். தேங்காய் சிரட்டையில் செய்த குடுவைகள் தொங்கும். 

அதில்தான் தேநீர் கொடுப்பார்கள்.


அப்பா மூக்குப்பேணியில்தான் கொடுப்பார். அதைப் பார்த்துவிட்டு ஆச்சி, 

இவனோடு கரைச்சலாப் போயிட்டுது என்பார். 


அப்படி ஆச்சி எதிர்த்தாலும், அப்பா மிகத் தெளிவாக இருந்தார். அவரிடம் இருந்துதான் எல்லோரும் சமம் என்ற உணர்வை நான் பெற்றேன். 

என் தாயாரும் அப்படித்தான். என் தந்தையார் என்ன நினைத்தாரோ, அதையும் என் அம்மாவும் செய்தார். அப்படியே என்னையும் வளர்த்தார்.


எல்லா வீடுகளிலும் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே இருக்கின்ற பிரச்சினைகள் எங்கள் வீட்டிலும் இருந்தது. 

அதை நான் பார்த்து இருக்கின்றேன். ஆனால், அப்பா முன்பு இரண்டு பேரும் கட்டுப்பெட்டியாக நிற்பார்கள். எதுவும் பேச மாட்டார்கள். ஆச்சி, அம்மாவைக் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்.


கிராம அதிகாரிகளை விதானையார் என்று சொல்லுவார்கள். 

சிறுவனாக இருக்கையில் விதானையார் அறுளம்பலத்தார். 

அவர் ஓய்வு பெறுகையில், குதிரைகள் பொருத்திய சாரட் வண்டியில் உட்கார வைத்து ஊர்வலமாக அழைத்துப் போனார்கள். 

வழிநெடுகிலும் தோரணங்களைக் கட்டித் தொங்க விட்டு இருந்தார்கள். பெட்ரோமாக்ஸ், தீவட்டி விளக்கு வெளிச்சத்தில்தான் அவருக்குப் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. அவருக்கு மலர் மாலைகள் அணிவித்தார்கள்.


எங்கள் வீட்டில் அப்பா மூன்று படங்களை மாட்டி வைத்து இருந்தார். 

காந்தி, நேரு படங்கள் தனித்தனியாகவும், இருவரும் ஒரு திண்டில் சரிந்து உட்கார்ந்து கொண்டு பேசுவது போல ஒன்றும் என மூன்று படங்கள் இருந்தன.


காந்தியைச் சுட்டுக்கொன்ற பொழுது, அவரது படத்தைக் காட்டிச் சொன்னார்கள். 

அதேபோல, டிஎஸ் சேனநாயகா, கொழும்பு காலி முகத்திடலில் குதிரை ஏற்றப் பயிற்சியின்போது கீழே விழுந்து இறந்தார் என்று சொன்னார்கள். 


எங்கள் ஊர் விதானையார்தான் அதிகாரம். 

அவரை மீறி, காவல்துறை எங்கள் ஊருக்கு உள்ளே வர மாட்டார்கள். கொலை, கொள்ளை, களவு, குடி எல்லாம் உண்டுதான். ஆனால், எங்கள் வீட்டுப் பக்கம் கிடையாது. யாரேனும் குடித்து விட்டு வந்தால், அப்பா அவர்களுடன் பேசவே மாட்டார். 

நீ நாளைக்கு வா என்று அனுப்பி விடுவார்.


ஒருவர் குடிப்பதை நம்மால் தடுக்க முடியாது. 

அதே வேளையில், குடிப்பவர்களுடன் பேசாமல் இருந்து கொள்ள முடியும்.


எங்கள் கிராமத்தில் வீடுகளில் கணவன் மனைவிக்கு உள்ளே பிரச்சினைகள் ஏற்படும். 

மாமியார் மருமகள் தகராறுகள் ஏற்படும். அங்கெல்லாம் அப்பா சென்று பேசித் தீர்த்து வைத்ததையும் கண்டிருக்கிறேன். 

வாத்தியார் சொன்னால் சரி என்று வழமையாகச் சொல்வார்கள்.


சிறுவனாக எனக்குத் தெரிந்த வரையிலும் 

நாங்கள் யாரையும் பகைத்துக் கொள்வது இல்லை. காவல்நிலையத்தில் ஒரு முறைப்பாடும் செய்தது இல்லை.


நாங்கள் பிள்ளைகள் ஒன்றாகச் சேர்ந்து பனந்தோப்புகளுக்குப் போவோம். ஈச்சம்பழம் பொறுக்குவோம். திடலுக்குப் போய் விளையாடுவோம்.


அப்போது பெரிய உருளையைக் கொண்டு வந்து சாலை போடுவார்கள். அதை வேடிக்கை பார்ப்போம். 

அதில் ஏறி விளையாடி இருக்கின்றேன்.


கோயிலாக்கண்டி என்ற ஊரில் ஏதோ ஒரு பிரச்சினை. எங்கள் தந்தையார் என்னையும் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போனார். 

அங்கே ஒரு வீட்டில் உட்கார்ந்து பேசினார்கள்.


அப்போது வீடுகளில், செம்பு, மூக்குப் பேணி என ஒரு சில பாத்திரங்கள்தான் இருந்தன. வேறு பெரிய பாத்திரங்கள் எதுவும் கிடையாது. டம்ளர் கிடையாது. சிறியவர்களுக்கு சிறிய மூக்குப் பேணி, பெரியவர்களுக்குப் பெரிய மூக்குப் பேணிதான். எங்கள் வீட்டில் மூன்று அளவுகளில் மூக்குப் பேணிகள் இருந்தன.


அந்த வீட்டில் தகரத்தால் செய்த மூக்குப்பேணியில் அப்பாவுக்கும் எனக்கும் தேநீர் கொடுத்தார்கள். 


அந்த வீட்டில் இருந்து நாங்கள் திரும்பி வரும்பொழுது, அப்பா என்னிடம், நான் அந்த வீட்டில் தேநீர் குடித்தேன் என்று ஆச்சியிடம் சொல்லாதே என்றார்.


அதாவது அப்படித் தேநீர் குடிக்கக்கூடாத வீட்டுக்கு நாங்கள் போயிருக்கின்றோம் என்பதைப் புரிந்துகொண்டேன். 

ஆனால் அப்பா தன் வாழ்நாளிலேயே தீண்டாமையை ஏற்கவில்லை.


அருணகிரி


உங்கள் ஊரில் எத்தனை சாதியார் இருந்தார்கள்?


மறவன்புலவு க சச்சிதானந்தன்


மறவன்புலவில் என்னென்ன சமூகங்கள் இருந்தன? என்று நீங்கள் கேட்டீர்கள்.


பிராமணர், பண்டாரம், வேளாளர். 

முதலாவது நிலையில் கோவிலுக்குப் பூசை செய்கின்ற ஐயர்.

அடுத்த நிலையில், மாலை கட்டுகின்றவர்களே, 

சில கோவில்களில் பூசை செய்வார்கள். 

ஐயர் எல்லாக் கோவிலுக்கும் போக முடியவில்லை என்றால், பண்டாரங்களை அனுப்பி விடுவார்கள்.


அடுத்தது வேளாண்மை செய்கின்றவர்கள். 

அவர்களுள் சைவ உணவுக்காரர்கள், அசைவ உணவுக்காரர்கள் இருந்தார்கள்.


சாப்பிடும்போது கண் காணாமல் சாப்பிடுவார்கள். அதாவது, தாங்கள் சாப்பிடுவதை மற்றவர்கள் பார்க்கக்கூடாது. ஐயர்மார் அப்படித்தான் சாப்பிடுவார்கள். 

எங்கள் வீட்டிலும் ஆச்சி அப்படித்தான்.


அந்த வேளாளருக்கு உதவிகள் செய்கின்ற ஒரு சமூகம் இருந்தது. 

கோவியர் என்று பெயர். அந்தச் சாதிப்பெயர் தமிழ் நாட்டிலோ, இந்தியாவிலோ கேள்விப்பட்டது இல்லை. வேளாளருக்கும் கோவியருக்கும் அதிக வேறுபாடு இல்லை.


அப்படி மூன்று நான்கு கோவியர் குடும்பங்கள் சுற்றி இருந்தால்தான், 

ஒருவர் வேளாளராகக் கருதப்படுவார். 

அந்தக் கோவியர்கள் தனித்துப் போக முடியாது. அவர்களுக்குத் தேவையான சாப்பாடு, வீடு துணிமணிகள் எல்லாமே, 

இந்த வேளாளர்தான் செய்து கொடுக்க வேண்டும்.


பள்ளியில் படிக்கும்போது, எனக்குப் பகல் உணவு கொண்டு வந்து ஊட்டி விடுபவர் ஒரு கோவியர்தான். அவர்கள் அந்த வேளாளர் குடும்பத்துக்கு உண்மையாக இருப்பார்கள். நிலத்தில் உழுவார்கள், மாட்டு வண்டி ஓட்டுவார்கள், வயல் வேலைகள் எல்லாம் செய்வார்கள்.


இதே கோவியர், கடற்றொழில் செய்பவராயின் 

கண்டிக் கோவியர். 

அவர்கள் மறவன்புலவின் கிழக்கான கடற்கரையோரப் பகுதியான அடைப்பற்றில் வாழ்பவர்கள். 

கடலில் களம் கட்டுவர், கண்டி கட்டுவர். சங்கு குளிப்பர். 


இவர்களைப் போலவே மீன் பிடிக்கும் கரையார் கோயிலாக் கண்டியில் இருந்தார்கள்.


இவர்களுக்கு அடுத்தபடியாக, 

கோயிலுக்கு வெள்ளை கட்ட, வீட்டுத் துணி வெளுக்க வண்ணக்கர் என்ற வண்ணார். 

முடி வெட்டுகின்ற அம்பட்டர், . பறை அடிக்கப் பறையர். வயல் வேலைக்குப் பள்ளர். மரம் ஏற நளவர்.


சிறுவனாக மறவன்புலவில் நான் அறிந்த சாதிகள் இவை.


எல்லாக் குடும்பத்துப் பிள்ளைகளும் பள்ளியில் ஒன்றாகத்தான் படித்தார்கள். 

அங்கே எந்தப் பாகுபாடும் கிடையாது. 

ஆனால், சாதிக் கண்ணோட்டம் இருந்தது. எங்களுக்குத் தருகின்ற மரியாதையை, மற்றவர்களுக்குத் தர மாட்டார்கள். 


வாத்தியார், என்னை தம்பி என்று கூப்பிடுவார்கள். அவர்களை, டேய் என்றுதான் கூப்பிடுவார்கள்.


அருணகிரி


தமிழ்நாட்டில் தந்தை பெரியார் பகுத்தறிவு, சுயமரியாதைப் பரப்பு உரைகள் செய்தது போல, ஈழத்தில் யாரேனும் செய்தார்களா?


மறவன்புலவு சச்சிதானந்தன்.


காந்தி அடிகளின் தாக்கம்தான் இருந்தது. 

என் அப்பாவுக்கு 18 வயதாக இருந்த காலத்தில் காந்தியடிகள் யாழ்ப்பாணம் வந்தார். 

அவரைப் பார்க்கத் தந்தையார் செல்ல விரும்பினார். கூட்டங்களுக்குப் போவதை விரும்பாத ஆச்சி தடுத்தார்.


ஆறுமுக நாவலர், சாதிக் கட்டுப்பாடுகளைக் காக்க வேண்டும். அதுதான் மரபு என்று சொல்லி வந்தார். ஆறுமுக நாவலரின் சக மாணாக்கர் சயம்பர் மறவன்புலவைச் சேர்ந்தவர்.


என் தந்தையார் ஆறுமுக நாவலர் மீது மதிப்புக் கொண்டவர் என்றாலும், 

இந்தப் பிரச்சினையில் அவர் தெளிவாக இருந்தார். அதற்குக் காந்தி அடிகள்தான் காரணம். 

சாதிப் பாகுபாட்டை மறுத்தார். எங்கள் வீட்டுக்கு வந்தவர்களுக்கு பேணியில்தான் தேநீர் தந்தார். ஆச்சிக்குப் பிடித்தம் இல்லை. அம்மாவும் அதை ஏற்றுக்கொண்டார்.


தந்தை பெரியார் இலங்கையில் கொழும்புக்கு வந்தார். யாழ்ப்பாணம் வரவில்லை. 

சிறுவனாக இருந்த காலத்தில் தந்தை பெரியாரை நான் அறிந்திருக்கவில்லை.


அருணகிரி


அசைவம் என்றால் ஆடு, கோழிதானே?


மறவன்புலவு க. சச்சிதானந்தன்


அசைவம் எனச் சொல்ல மாட்டார். 

மச்சம் மாமிசம் உண்பவர் என்பார். 

மச்சம் மாமிசம் சமைக்கும் வீடுகளிலும், சமையல் அறைக்குள் மச்சம் சமைப்பது மிக மிகக் குறைவு. சமையல் அறைக்கு வெளியே தாழ்வாரத்தில் மச்சம் காய்ச்சும் சட்டிகளை வைப்பர். 

வெட்ட வெளியில் அடுப்பு மூட்டியே மச்சம் காய்ச்சுவர்.


கோயிலுக்கு விரதம் பிடிக்க வேண்டும். 

செவ்வாய் வெள்ளி விரதம், சித்திரை வைகாசியில் கோயில்களுக்குப் பொங்கல், ஆவணி வரை கோயில் திருவிழாக்கள், ஆடிச் செவ்வாய், ஆவணித் திங்கள், புரட்டாதிச் சணி, கௌரிக் காப்பு, ஐப்பசி வெள்ளி, கந்த சட்டி, கார்த்திகைப் பிள்ளையார் கதை, மார்கழித் திருவெம்பாவை, தைப் பொங்கல், பூசம், மாசி சிவராத்திரி, பங்குனித் திங்கள் எனத் தொடரும் விரத நாள்கள். 

எனவே மச்சச் சட்டிகள் சமையல் அறைக்கு வெளியே. தூய சட்டிகள் சமையல் அறைக்கு உள்ளே.


எங்கள் ஊர் கடற்கரை ஓரம் என்பதால், 

மீன்கள்தான் நிறையக் கிடைக்கும். 

என் ஆச்சியின் தம்பிக்கு, மீனைப் பற்றிப் பேசினாலே கோபம் வரும். 

ஓலையில் செய்த பறியில்தான் மீன் கொண்டு போவார்கள். கூடை போலப் பின்னி இருப்பார்கள். அப்படி அவர்கள் கொண்டு போவதைப் பார்த்தாலே, அங்கே போகாதே என்று கூறி என்னைத் தடுத்து விடுவார். 

அப்படி ஒரு அருவெறுப்பை எனக்கு ஊட்டி விட்டார்கள்.


எனவே, ஆடு வெட்டினார்களா? 

கோழி வெட்டினார்களா? என்பதை எல்லாம் நான் பார்த்ததே இல்லை. 

ஆனால், அம்மன் கோவிலில் கோழி குத்துவதாகச் சொல்லுவார்கள். பங்குனித் திங்கள் கடைசி நாளில் அப்படிச் செய்வதாக நண்பர்கள் சொல்லுவார்கள்.


நாங்கள் அந்தக் கோவிலுக்குப் போகக்கூடாது. 

வைரவர் கோவிலிலும் பலி கொடுப்பார்கள்.

அங்கேயும் நாங்கள் போகக் கூடாது.


ஆனால், ஒரேயொரு முறை, 

அந்த அம்மன் கோவிலுக்கு அம்மா அழைத்துக் கொண்டு போனார். பொக்கிளிப்பான் அம்மை நோய் வந்தபோது, முதல் வார்ப்பு வீட்டில் செய்தார்கள். இரண்டாவது வார்ப்புக்கு அந்த அம்மன் கோவில் கிணற்றுக்கு அழைத்துக் கொண்டு போய் தண்ணீர் வார்த்தார்கள்.


அது அம்மை நோய்தானே? 

அதனால், அந்தக் கோவிலுக்குப் போனோம். ஆனால், மொட்டாக்கு போட்டு மூடித்தான் அழைத்துக் கொண்டு போனார்கள். 

மொட்டாக்கு என்றால், தலையில் ஒரு துண்டு போட்டு மூடித்தான் கூட்டிக்கொண்டு போனார்கள். 

அங்கே தண்ணீர் வார்த்துக் குளிக்க வைத்து, புது உடுப்புகள் அணிவித்துதான் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.


அருணகிரி


அம்மைக்குத் தடுப்பு ஊசி குத்தினார்களா? 

எனக்கு மூன்று ஊசிகள் குத்தி இருக்கின்றார்கள். 

இடது கையில் மூன்று பெரிய தளும்புகள் உள்ளன.


மறவன்புலவு க. சச்சிதானந்தன்.


அக்காலத்தில் எங்கள் ஊரில் மருத்துவமனையே கிடையாது. 

ஊசி குத்தியதாகத் தெரியவில்லை. 

எனக்குத் தடுப்பூசிக் காயங்கள் தோள் பட்டையில் இல்லை. அக்கா, அம்மா, ஆப்பா, ஆச்சி ஆகியோர் இடது தோள் பட்டைகளில் தடுப்பூசித் தளும்புகள் இருந்தன.


அருணகிரி


மறவன்புலவில் காதல் திருமணங்கள் நடைபெற்றதாகச் சொன்னீர்கள். 

அது ஒரு சமூகத்திற்கு உள்ளே மட்டும்தானா? 

வேறு சமூகக் காதல் உண்டா?


மறவன்புலவு சச்சிதானந்தன்.


உண்டு. மலையகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற வந்த எம் உறவினர் வீட்டில் மலையகத்தைச் சேர்ந்த பெண்ணைப் பணிக்கு வைத்திருந்தனர். 

பெயர் சின்னப்பிள்ளை. 

எங்கள் வீட்டுக்கு உதவுபவர் ஐயம்பிள்ளை. 


ஒருநாள் அம்மா சொன்னார்கள், ஐயம்பிள்ளை சின்னப்பிள்ளையை அழைத்து வந்துவிட்டதாக. திருமண நிகழவு நடைபெற்றதாக எனக்கு நினைவு இல்லை.


குளத்தில் குளிக்கும் காலம் பழக்கம் ஏற்பட்டு விடும். குளத்தங்கரையில் பழகிய ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தாலும் சமூகம் ஏற்றுக்கொண்டது.


சிறுவனாக நான் அறிய, குடிகாரர்கள், திருடர்கள், காவல்துறையால் தேடப்படுகின்றவர்கள். காமுகர்கள் எல்லாம் இருந்தார்கள்.


அந்தக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் இருந்தார்கள். 

எங்கள் கோவிலில் புராணம் பாடுகின்றவருக்கு எட்டுக் குழந்தைகள் இருந்தார்கள். 

மழவராயருக்கு ஒன்பது குழந்தைகள்.


முன்பு மதுக்கடைகள் இருந்தன. 

அது மருந்தாகவும் பயன்பட்டது. 

என் ஆச்சி, உடல்நலக் குறைவின்போது, சாராயத்தை மருந்து போல, அளவாகக் குடித்தார். மறவன்புலவில் சாராயம் காய்ச்சுகின்றவர்கள் இருந்தார்கள். 


ஒரு சமுதாயத்தின் அத்தனை விதமான இயல்புகளும், அந்தக் குக்கிராமத்தில் இருந்தன. 


மறவன்புலவு சனசமூக நிலையத்தினர் 

அரசு நிதியில் ஒரு சிறிய கட்டடம் கட்டி, 

அதற்கு உள்ளே அரசு தந்த ஒரு வானொலிப் பெட்டியை 1948இல் வைத்தார்கள்.


அதைக் கேட்பதற்காக நாங்கள் அங்கே போவோம். அங்கே போனாலும் கூட, 

அதை ஏன் கேட்க வேண்டும்? என்று சொல்லி, என்னை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து விடுவார்கள்.


கோடை காலத்தில் கண்ணகிக் கூத்தும், காத்தவராயன் கூத்தும் நடக்கும். 

பனங் குற்றிகளை நட்டுப் பலகைகளை அடுக்கிக் கொட்டகை மேடை அமைப்பார்கள். 

இரவு 8 அல்லது 9 மணிக்குத்தான் தொடங்குவார்கள். விடிகாலை 3, 4 மணி வரைக்கும் சத்தம் போட்டுப் பாடுவார்கள். விளக்கு போட்டு இருப்பார்கள்.


கூத்துப் பார்க்கக் கூட என்னை விட மாட்டார்கள். ஆனால், எங்கள் வீட்டில் இருந்து பார்த்தாலே தெரியும். மேடைக்கும் வீட்டிற்கும் இடையில் வயல்வெளிகள்தான்.


அருணகிரி


அந்தக் காலத்தில் ஒலிபெருக்கி இருந்ததா?


மறவன்புலவு க. சச்சிதானந்தன்


கிடையாது. கத்தித்தான் பாடுவார்கள். 

அத்தனைப் பாடல்களையும் மனப்பாடம் செய்து இருப்பார்கள். பூவரச மரத்தின் கீழே உட்கார்ந்து படித்துக் கொண்டே இருப்பார்கள்.


மலேசியாவில் இருந்த எங்கள் உறவுமுறைப் பெரியப்பா குடும்பத்தினர் போர்க்காலத்தில் மறவன்புலவு திரும்பினர். அவர் பெயர் மழவராயர்.


அருணகிரி


உங்கள் பகுதியில் இருந்தும் மலேசியாவுக்குப் போனார்களா?


மறவன்புலவு சச்சிதானந்தன்


அந்த ஒரு குடும்பம் மட்டும்தான் போயிருந்தார்கள். அவருக்கு ஒன்பது பிள்ளைகள். அதற்கு மேலும், அங்கே தோட்டத்தில் ஒரு பிள்ளையைத் தத்து எடுத்து வளர்த்தார்.


அருணகிரி


எப்படி? கப்பலா? வான் ஊர்தியா?


மறவன்புலவு சச்சிதானந்தன்


கொழும்பு சென்று அங்கிருந்து கப்பல் ஏறி, பினாங்கு போனார்கள்.


மூத்தவர்கள் நால்வரும் மலாயாவிலே தங்கினர். அக்கா முறையான இருவர், அண்ணன் முறையான நால்வர் மறவன்புலவுக்கு வந்தார்கள்.


அவர்கள் எங்கள் உறவுக்காரர்கள். அவர்கள் வீட்டுக்குப் போய் வருவோம். அங்கு ஓர் அண்ணன் வழியில் என்னைப் பார்த்தார். அவர்கள் வீட்டுக்கு முன்னிருந்த வரம்பில் நடந்தேன்.


அவரோ, 

தம்பி அந்த வயலில் இறங்கி நடந்து வாங்க என்றார். நானும் இறங்கி நடந்தேன். திடீரென ஒரு குழிக்கு உள்ளே விழுந்து விட்டேன். அது அவர் வெட்டி வைத்து இருந்த பொறி. மேலே ஓலைகளை அடுக்கி மண் போட்டு மூடி வைத்து இருந்தார். எனக்கு வேடிக்கை காட்டுவதற்காக அப்படிச் செய்து வைத்து இருந்தார்.


அக்காமார் இருவரும் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் படிக்கச் சென்றனர். 

அண்ணன்மாரில் ஒருவர் படிக்கப் போகவில்லை. மற்றவர்கள் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும் கடைசி அண்ணன் மறவன்புலவிலும் படித்தனர்.


அருணகிரி


நீங்கள் என்ன படித்தீர்கள்? பள்ளிப் பருவம் மற்றும் உயர்கல்வி பற்றிச் சொல்லுங்கள்.


மறவன்புலவு க. சச்சிதானந்தன்


எனக்கு மூன்று வயதில், எங்கள் பிள்ளையார் கோவிலில் வைத்து ஏடு தொடக்கினார்கள். 

அரி ஓம் என்று முதலில் எழுதினேன். 

அடுத்து அ, ஆ கற்றுத் தந்தார்கள். சிலேட்டு பென்சில் வாங்கிக் கொடுத்தார்கள்.


வீட்டில் அம்மாவும் ஆச்சியும் உட்கார வைத்துச் சொல்லிக் கொடுத்தார்கள். 

அம்மா மணலில் கையால் தரவி அ, ஆ எழுதிக் காண்பிப்பார். என் விரலைப் பிடித்து எழுத வைப்பார்.


முருங்கை மரத்திற்குக் கீழே, நான் படுத்து உறங்குகின்ற அந்தத் திண்ணைக்கு அருகில்தான் முதன்முதலாக என்னை உட்கார வைத்து அம்மா சொல்லிக் கொடுத்தார்.


நான் அடிக்கடி சிலேட்டை உடைத்து விடுவேன். பென்சிலைத் தொலைத்து விடுவேன். 

அதற்காகவே, அம்மா நிறைய சிலேட்டுகள், பென்சில் பெட்டிகள் வாங்கி வைத்து இருந்தார். 

ஒன்று காணாமல் போய்விட்டால், அடுத்தது எடுத்துத் தருவார்.


1944களிலேயே இலங்கையில் குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி இருந்தது. 

கனகரத்தினா என்று நினைவு. அவர்தான் அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்தக் காலத்திலேயே, 1945 இலேயே, பள்ளியில் பகல் சிற்றுண்டி தருவார்கள்.


8 மணி வாக்கில், நானும் அக்காவும், தங்கையும், ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவு, வயல்வெளிகளுக்கு ஊடாக நடந்து பள்ளிக்குப் போவோம்.


காலை வெயிலில் எங்கள் நிழலின் நீளத்தைக் காலடியால் அளந்து மணியைக் கணக்கிடுவோம்.


நான், சகலகலாவல்லி வித்தியாசாலைக்குப் போகும்பொழுது 

தொப்பி, சப்பாத்து (செருப்பு) அணிந்ததே இல்லை. கொளுத்துகின்ற வெயிலிலும் வெறுங்கால்களுடன்தான் நடந்து சென்றோம். சுடு மணலில் நடப்போம்.


ஒவ்வொரு நாளும் பள்ளி தொடங்குவதற்கு முன்பு கூட்டு வழிபாடு நடைபெறும். தேவாரம், திருவாசகம்தான் பாடுவார்கள். வெள்ளிக்கிழமை என்றால், சிவபுராணம் சொல்லித் தருவார்கள்.


அந்தப் பள்ளியில் அப்போது 100 மாணவர்கள் வரை இருக்கலாம். அந்த எண்ணிக்கை எனக்கு சரியாகத் தெரியாது.


பள்ளிக்கூடத்தில் பலவிதமான விளையாட்டுகள் கற்றுத் தருவார்கள். கோலாட்டம் உண்டு. தேவாரம், திருவாசகம் பாட வைப்பார்கள். 

இசை, ஓவியம் கற்றுத் தருவார்கள். வாரோட்டம் உண்டு. அடுத்து கபடி போல ஒரு விளையாட்டு. 

அடுத்து 50, 100 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், தொடர் ஓட்டம் எல்லாம் உண்டு.


கைவினைப் பொருட்கள் பின்னுவோம். அதற்கும் போட்டி நடத்தினார்கள். பனை ஓலையில் கொட்டைப் பெட்டி செய்வோம். எங்கள் ஆச்சி வண்ணவண்ணச் சாயங்கள் பூசி அழகாக ஒரு கொட்டைப் பெட்டி செய்து கொடுத்தார். அதை நான் பள்ளியில் போய்க் காண்பித்தேன். அதற்கு எனக்கு ஒரு சான்று இதழ் கொடுத்தார்கள். அப்பா அதை கண்ணாடிச் சட்டம் போட்டு வீட்டுச்சுவரில் மாட்டி வைத்தார்.


மழை பொழிந்தால், காவோலையைத் தலைக்கு மேலே பிடித்துக் கொண்டு செல்வோம். 

அது காய்ந்து போன பனை ஓலைதான். 

அவை வழிநெடுகிலும் விழுந்து கிடக்கும். 

அல்லது வெட்டிப் போட்டு இருப்பார்கள். அதை எடுத்து வைத்துக் கொண்டு வருவோம்.


வயல்வெளிகள் முழுமையும் நீருக்குள் மூழ்கி விடும். எனவே, வரப்பின் மீது கவனமாகக் கால் பதித்து நடந்து வருவோம். சில இடங்களில் கால் புதையும். இப்போதும் கூட மழைக்காலத்தில் அப்படித்தான் மூழ்குகின்றது. 


பள்ளியில் ஐந்து அல்லது ஆறு ஆசிரியர்கள். 

அவர்கள் எல்லோருமே அந்த ஊர்க்காரர்கள்தான். தலைமை ஆசிரியர் பொன்னம்பல வாத்தியார் ஒரு கிலோமீட்டர் தொலைவு நடந்தே வருவார். சைக்கிள் ஓட்ட மாட்டார். 

கந்தையா வாத்தியார், நடேசன் வாத்தியார் இன்னும் பல ஆசிரியர்கள் பெயர்கள் நினைவு இல்லை.


வீட்டில் இருந்து வரப்புகள் வழி நடந்து போகும் பொழுது, வழியில் பிள்ளையார் கோயிலும் வள்ளைக்குளமும், பின் பனங் கூடல், அடுத்து ஒரு திடல். 

அந்தத் திடலில் பள்ளிக்கூட ஆசிரியை தங்கியிருந்தார். அவரை அக்கா என நாம் அழைப்போம். அவர்தான் ஒரே ஒரு பெண் ஆசிரியை.


பள்ளிக்கு வராத மாணவர்கள் வீட்டுக்கு 

மாலையில் பொன்னம்பல வாத்தியார் நேரடியாகப் போய்விடுவார். ஏன் வரவில்லை? என்ன குறைபாடு? என்று கேட்பார். எங்கள் வீட்டுக்கும் வருவார். அவரைக் கண்டு நாங்கள் பயந்து போய் மூலையில் உட்கார்ந்து இருப்போம்.


பொன்னம்பல வாத்தியார் ஒரு சித்த வைத்தியரும் கூட. மாலையில் அவர் வீட்டுக்குப் போனால், அங்கே ஐந்தாறு நோயாளிகள் உட்கார்ந்து இருப்பார்கள். அவர்களுக்கு வைத்தியம் பார்ப்பார். மருந்து கொடுப்பார்.


அவர் மறவன்புலவுக்கு வந்து குடியேறியவர்தான். ஆனாலும், கிராம சபை உறுப்பினராக இருந்தார். 

சன சமூக நிலையத்தை வழிநடத்துவார். 

காரணம், அவர் தன் வாழ்க்கையை அவ்வளவு கட்டுப்பாடாக அமைத்துக் கொண்டவர். மற்றவர்களுக்கும் கட்டுப்பாடுகளைக் கற்பித்து ஒழுக்க சீலர்களாக வளர்த்தார்.


நெற்றி நிறைய திருநீறு பூசி இருப்பார்.

உயரம் குறைந்தவர் என்றாலும் பார்க்க வடிவாக இருப்பார். நல்ல உடை அணிந்து, மடிப்புச் சால்வை தோளில் போட்டுக்கொண்டுதான் வருவார்.


எங்கள் பள்ளி தனியார் பள்ளிதான். 

சைவ வித்தியா விருத்திச் சங்கம்தான் நடத்தியது. ஒரேயொரு நீண்ட கொட்டகை அறைதான். மாணவர்களுக்கு சீருடை எதுவும் கிடையாது. 

பத்து, பத்தரை மணிக்கெல்லாம் ஒரு சைக்கிளில் ஒரு பெட்டி கொண்டு வருவார்கள். 

எல்லோருக்கும் பாண் தருவார்கள். 

பாண் என்றால் ரொட்டி.

அது ஒரு இராத்தல், அதாவது அரைக் கிலோ இருக்கும். எனவே, அதை இரண்டாக வெட்டி, ஒரு மாணவருக்கு ஒரு துண்டு தருவார்கள். 

அதற்குத் தேங்காய், செத்தல் மிளகாய் அல்லது பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு அம்மியில் அரைத்து அதற்கு மேலே தேங்காய் பூ தூவிச் சம்பலாகத் தருவார்கள்.

அப்படி 1945களிலேயே இலவச சிற்றுண்டி தந்தார்கள். 


பகல் உணவு, வீட்டில் இருந்து அம்மா கொடுத்து விடுவார்கள். 

கோவியர் தூக்கு சட்டியில் எடுத்துக்கொண்டு வருவார். 

பள்ளிக்கு அருகில் உள்ள கொட்டகைக்கு அழைத்துச் சென்று ஊட்டி விடுவார்.

பிற்பகல் 3 அல்லது 4 மணி வரை பள்ளி நடக்கும். மீண்டும் நாங்கள் வரப்பு வழியாக நடந்தே வீட்டுக்குத் திரும்புவோம். குளத்தில் தாமரைக் கொட்டையை உடைத்துத் திண்போம்.

அப்போதும் கோவிலுக்குப் போய்விட்டுத்தான் வீடு திரும்புவோம். 

அங்கே அப்பம், வடை, மோதகம் என ஏதேனும் தருவார்கள்.


பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் சட்டையைக் கழற்றிக் கொடுத்து விட்டு, 

துண்டு வேட்டி கட்டிக்கொண்டு மாடு மேய்க்கப் போய்விடுவேன். 

இரவில் உட்கார்ந்து குப்பி அல்லது லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் படிப்போம்.


ஐந்தாம் வகுப்பு வரையிலும், தமிழை மட்டுமே கேட்டு வளர்ந்தேன். அதன்பிறகுதான் எனக்கு ஆங்கிலம் அறிமுகம் ஆயிற்று.


அருணகிரி

1 முதல் 5 வரை எங்கே படித்தீர்கள்?


மறவன்புலவு க. சச்சிதானந்தன்


மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாசாலையில்தான் படித்தேன். 

என் அக்கா சேர்ந்த அடுத்த ஆண்டு நான் சேர்ந்தேன்.

முதலாம் வகுப்பில் படித்த நான், சுட்டிகையானதாகக் கருதிய ஆசிரியர், 

இரண்டாம் வகுப்புப் படிக்காமல், வகுப்புத் தாண்டி, மூன்றாம் வகுப்பில் அக்காவுடன் சேர்த்தார்.

 4ஆம் வகுப்பு வரை அங்கு படித்தேன்.


4ஆம் வகுப்பு பாதியிலேயே, யாழ்ப்பாணம் வந்து விட்டோம். 

அங்கே இந்துக் கல்லூரி தொடக்கப் பாடசாலையில் என்னைச் சேர்த்து விட்டார்கள்.


காரணம் என்ன என்றால், மறவன்புலவுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வந்தால், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம் கிடைக்காது. அங்கேயே உள்ள தொடக்கப் பள்ளியில் படித்தால், அப்படியே ஐந்தாம் வகுப்புக்கு அங்கேயே சேர்ந்து கொள்ளலாம் என்று கருதித்தான் 

அங்கே அப்பா என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார். 

மற்றொன்று, அந்தப் பள்ளியில்தான் அப்பாவும் ஆசிரியராகப் பணி செய்து வந்தார்.


ஆனால், நாள்தோறும் மறவன்புலவில் இருந்துதான் யாழ்ப்பாணம் சென்று வந்தோம். 

எப்படி?

காலை ஆறு மணிக்கெல்லாம் தச்சன்தோப்புத் தொடரி நிலையம் போவோம். 

ஓன்றரைக் கிலோமீட்டர் தொலைவு. 

இரட்டைமாட்டு வண்டியில் போவோம்.

அப்பாவுடன் அக்காவும், நானும் அங்கே தொடர்வண்டியில் ஏறி, யாழ்ப்பாணம் போவோம். 


அங்கிருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்துக் கல்லூரித் தொடக்கப் பள்ளிக்கு நடந்தே செல்வோம். 

எட்டு, எட்டரை மணிக்கெல்லாம் போய்ச் சேர்ந்து விடுவோம்.


அதேபோல மாலை மூன்று நான்கு மணிக்கு அங்கிருந்து தொடர்வண்டியில் புறப்பட்டு தச்சன்தோப்பு வருவோம். மாட்டு வண்டி காத்திருக்கும். 

மறவன்புலவுக்கு வந்து விடுவோம். 

அவ்வாறு ஆறு மாதங்கள் கடந்தன.


அதன்பிறகு, 1949ஆம் ஆண்டு நாங்கள் யாழ்ப்பாணத்தில் அம்மா வீட்டுக்கே குடிபெயர்ந்து வந்தோம். 

அங்கே அம்மாவுக்கு ஒரு காணி இருந்தது. 

அவருக்குத் திருமணத்தின்போது சீதனமாகக் கொடுத்த காணி.

அப்படி ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணத்தின்போது, கட்டாயம் ஒரு காணி கொடுக்கின்றது வழமை. 

ஒரு மரபு.


அப்படி அம்மாவுக்குக் கிடைத்த காணியில், 

1950இல் அப்பா ஒரு கல் வீடு கட்டத் தொடங்கினார். தொடர்ச்சியாகக் கட்டவில்லை. விட்டுவிட்டுக் கட்டினார். காங்கிரீட் சிமெண்ட்டில் கட்டி ஓட்டால் மேற்கூரை போட்டார்.

மறவன்புலவிலும் வண்ணார்பண்ணையிலும் மண்வீட்டில், ஓலைக் கூரைக்குள் வாழ்ந்து பழகிய நாங்கள், சீமெந்து கன்கிறீட் ஓடு கொண்ட வீட்டுக்குள் புகுந்தோம்.


மூன்றாம் பகுதி தொடரும்.


அருணகிரி

யாழ்ப்பாணம் 

19 மே 2024

No comments: