யாழ்ப்பாணத் தமிழர் வாழ்க்கை
பகுதி 1
கடந்த 15 ஆண்டுகளில், தமிழ்நாட்டுக்கு வந்த ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் 35 பேர்களை
நேர்காணல் கண்டு,
இரண்டு புத்தகங்கள் எழுதி இருக்கின்றேன்.
காந்தளகம் பதிப்பக நிறுவுநர்,
யாழ்ப்பாணம் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள், 30 ஆண்டுக் காலப் பழக்கம்.
என் மீது மிகுந்த அன்பும், மதிப்பும், பற்றும் கொண்டவர்.
காந்தளகம் பதிப்பகத்தில் சார்பில் 400 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களை வெளியிட்டு இருக்கின்றார்.
எண்ணற்ற நாடுகள் சுற்றி வந்தவர். 80 வயது.
இப்போதும், சுற்றிக் கொண்டேதான் இருக்கின்றார்.
யாழ்ப்பாணத்திற்கு வருமாறு என்னைத் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கின்றார்.
தற்போது அவர் சென்னை வந்திருக்கின்றார்.
எழும்பூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினேன்.
யாழ்ப்பாணத் தமிழர் வாழ்க்கை குறித்து நிறைய தரவுகள் தந்தார்.
இரண்டு மணி நேர உரையாடலை
அலைபேசியில் பதிவு செய்து தட்டச்சு செய்து இருக்கின்றேன்.
அதன் முதல் பகுதி இந்தப் பதிவில் தருகின்றேன்.
தொடர்ந்து பல பகுதிகள் வரும்.
உலகின் பல்வேறு நாடுகளில் குடியேறி வாழ்கின்ற யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு,
இந்தக் கட்டுரை மலரும் நினைவுகளாக இருக்கும்.
படியுங்கள்.
உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.
மறவன்புலவு க. சச்சிதானந்தன் பேசுகிறேன்….
அருணகிரியாரின் வேண்டுகோளை ஏற்றேன்; பேசுகிறேன்.
என் சொந்த ஊர், யாழ்ப்பாணத்திற்குக் கிழக்கே,
16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மறவன்புலவு.
நான் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் உள்ள என் தாயார் வீட்டில்தான் பிறந்தேன்.
1941ஆம் ஆண்டு கார்த்திகை மாதம்.
கார்த்திகை விளக்கீட்டுக்கு அடுத்த நாள் இரவு. பின்னிரவு இரண்டு மணிக்கு என் தாயாருக்கு வலி ஏற்பட்டது.
மருதனார்மடம் மகப்பேறு மருத்துவமனைக்குக் கொண்டு போவதற்காக, அப்பா ஒரு வண்டி பிடித்து வரப் போனார்.
குதிரை வண்டி அல்லது மாட்டு வண்டிதான்.
அந்த வேளையில், எந்த வண்டியும் கிடைக்கவில்லை. எனவே, மகப்பேறு பார்க்கின்ற மருத்துவச்சி ஒருவரை அழைத்து வந்தார்.
அவரது உதவியுடன் விடிகாலை நான்கு மணிக்கு நான் பிறந்ததாகச் சொல்வார்கள்.
என் தந்தையார் கணபதிப்பிள்ளை. தாயார் தங்கம்மா. தந்தையார் ஆசிரியர். எனக்கு ஓர் அக்கா இருந்தார். நான் பிறந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, ஒரு தங்கை பிறந்தார். எங்களை வளர்ப்பதே அம்மாவுக்குத் தலையாய பணியாக இருந்தது.
என் அக்காவும், தங்கையும்,
வண்ணார்பண்ணையில் இருந்து வடக்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதனார்மடம் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்தவர்கள்.
மருத மரங்கள் நிறைந்த இடம். அங்கே ஒரு மடம் இருந்தது. எனவே, அந்த ஊர், மருதனார்மடம் எனப் பெயர் பெற்றது.
யாழ்ப்பாணம் நகரத்தில் என் தாயார் வீடு இருந்த பகுதியில் குடிகள் நெருக்கமாக இருக்கும்.
ஆனால், மறவன்புலவு வீடோ,
வயல்வெளிகள் சூழ்ந்து, மாரியில் பச்சைப் பசேல் எனவும் கோடையில் மணல் வெளியாகவும் காட்சி அளிக்கும்.
நான் பிறந்தது யாழ்ப்பாணத்தில் என் தாயார் வீட்டில் என்றாலும், நான்காம் வகுப்புப் படிக்கின்ற வரையிலும், மறவன்புலவில்தான் வளர்ந்தேன்.
குதிரை வண்டி அல்லது மாட்டு வண்டியில்தான் யாழ்ப்பாணத்திற்குப் போய் வருவோம்.
குதிரை வண்டியை வக்கி வண்டி என்றும் சொல்லுவார்கள்.
ஐந்தாறு பேர் இருந்தால், கால்களை வைத்துக்கொள்வதற்கு வக்கி போல ஒரு இடம் இருக்கும். எனவே, அதை வக்கி வண்டி என்று சொல்லுவார்கள்.
அப்போது யாழ்ப்பாணத்தில் மிகக் குறைந்த அளவில்தான் கார்கள் ஓடின.
மறவன்புலவில் என் இளமைக்கால வாழ்க்கை இனிமையானது.
எங்கள் வீட்டைச் சுற்றிலும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு வயல்வெளிகள்தான்.
இப்போதும் அப்படித்தான்.
நாள்தோறும் காலை ஆறு மணிக்கெல்லாம் ஆச்சி எழுந்து விடுவார்.
காரணம், அந்த நாள்களில் வீடுகளில் கழிப்பு அறைகள் கிடையாது. பெண்கள் வெளியேதான் போய் வர வேண்டும். பகலில் என்றால் எங்காவது புதர்கள் போன்ற மறைவு இடங்களைத்தான் தேடிப் போக வேண்டும்.
அதன்பிறகு ஆச்சி வயலுக்குப் போகும்பொழுது, அவருடன் நானும் போவேன்.
விடிகாலை 6 மணிக்குக் கீழ்வானத்தில் சூரியனைப் பார்க்கும்பொழுது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஒவ்வொரு நாளும் பார்ப்பேன்.
எங்களிடம் 45-50 மாடுகள் இருந்தன.
அவற்றை அவிழ்த்து மேய்ச்சலுக்கு விடுவேன்.
வயல் வேலைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்புகையில், வள்ளைக்குளத்தில் குளிப்போம். பிள்ளையார் கோவிலுக்குச் சென்று திருநீறு அணிந்து கொண்டு, சந்தனக் கட்டையை அரைத்துப் பொட்டு இட்டுக் கொள்வோம்.
கோவிலிலேயே ஆச்சி தேவாரம் சொல்லித் தருவார். படித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வருவோம்.
அம்மா சமைத்து வைத்து இருப்பார்.
எனக்கு இரண்டு வயதாக இருந்தபொழுது, மருதனார்மடம் மருத்துவமனையில் என் தங்கை பிறந்தார். அதற்காக, அந்த மருத்துவமனையிலேயே இரு வாரங்கள் தங்கி இருந்தோம்.
அப்பா பணிமுடிந்து மாலை வேளைகளில்
மருத்துவ மனைக்கு வருவார்.
என்னையும் அக்காவையும் அப்பா கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போய்,
யாழ்ப்பாணம் போகின்ற தொடர் வண்டியைக் காண்பிப்பார்.
ஒவ்வொரு நாளும் போய்த் திரும்பி வரும்பொழுது
ஓமப் பொடி வாங்கித் தருவார்.
அங்கே நாங்கள் தங்கி இருந்த நாள்களில்,
ஒவ்வொரு நாளும் உறவினர் உணவு கொண்டு வருவார்கள். அல்லது நாங்கள் சமைத்துச் சாப்பிடுவோம்.
அப்பொழுது காலையிலும், இரவிலும் பிட்டு அல்லது இடியப்பம் உணவு.
சிறுவனாக இருந்தபொழுது, தோசை, இட்லி நான் பார்த்ததே இல்லை.
வழக்கமாக, சிவப்பு அரிசியில் சமைத்த பிட்டு, இடியப்பம்தான் சாப்பிடுவோம்.
ஒருநாள் யாரோ கோதுமை மாவில் சமைத்த வெள்ளைநிற இடியப்பம் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
அது எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.
அதன்பிறகு ஒவ்வொரு நாளும், வெள்ளை இடியப்பம்தான் வேண்டும் எனக் கேட்டு நான் அழுது அடம் பிடிப்பேன்.
சிறுவனாக இருந்தபொழுது,
அம்மா உடம்பு முழுவதும் மருத்து எண்ணெய் தடவி விடுவார்கள். அது மணக்கும்.
ஏணைக்குள் கிடத்துவார்கள். அப்போது ஏணைக்குள் நெளிந்துகொண்டே கிடப்பேன்.
அதேபோல, அக்கா, தங்கையையும் தனித்தனி ஏணைகள் (தொட்டில்) கட்டிக் கிடத்துவார்கள்.
இரு மணி நேரமளவில் வெளியே எடுத்து,
சீயக்காய் அல்லது அரப்புத் தூள் தேய்த்துக் குளிக்க வைப்பார்கள். சவக்காரம் (சோப்பு) எதுவும் கிடையாது. அதை அக்காலத்தில் நாங்கள் பார்த்ததே இல்லை.
அவர்கள் திரைப்படம் பார்க்கச் செல்லும்பொழுது, என்னை ஆச்சியுடன் வீட்டில் விட்டு விட்டுப் போவார்கள்.
நானும் வருவேன் என்று அழுது அடம் பிடித்ததும் நினைவு இருக்கின்றது.
யாழ்ப்பாணத் தமிழர்களின் வீடுகளில், சமையல் அறை தனியாக இருக்கும்.
அதை நாங்கள் குசினி என்று சொல்லுவோம்.
அப்போது வீடுகள் பெரும்பாலும் மண் சுவர்தான். மேற்கூரையைப் பனை ஓலை அல்லது தென்னங்கீற்றுக் கிடுகால் வேய்ந்து இருப்பார்கள்.
அப்படி ஒரு மண் வீட்டில்தான் நான் வளர்ந்தேன்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், மண் தரையைச் சாணி போட்டு மெழுகுவார்கள்.
ஆண்டுதோறும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, மேற்கூரையைப் பிரித்து, மீண்டும் புதிதாகக் கிடுகு வேய்வார்ள்.
தலை வாரும் சீப்புகளைத் தாழ்வாரக் கிடுகுகளுள் சொருகி வைப்போம்.
வீட்டுக்கு உள்ளே ஓர் அறை மட்டும்தான்.
வெளியே கூரையுடன் விராந்தை எனும் திண்னைதான். திண்ணைக்குத் தட்டிகள் கட்டுவர்.
காற்று வரத் திறப்பதும் மழைக்கு மூடுவதுமாகத் தட்டிகள் இறப்பில் தொங்கும்.
திண்ணையில் உட்கார்ந்து படிப்போம்.
அங்கேயே பாய் போட்டுப் படுத்து உறங்குவோம்.
எங்கள் வீட்டு முற்றம் அழகாக இருந்தது.
அப்பா அம்மா திருமணத்திற்காக நட்டு வளர்த்த இரண்டு முள் முருங்கை மரங்கள் இருந்தன.
முற்றம் முழுமையும் பால் போன்ற வெண்ணிற மணல்தான்.
முற்றத்தில் புல் முளைக்க விட மாட்டார்கள்.
ஒவ்வொரு நாள் காலையிலும், அப்பாவின் தாயாரும், நாங்களும் முற்றத்தை விளக்குமாறு வைத்து நன்றாக அரித்துக் கூட்டுவோம்.
சிறு கற்கள், கிழிஞ்சல்கள், சருகுகள் இல்லாமல் நன்றாகத் துடைத்து எடுத்து விடுவோம்.
புற்களை வெட்டி எடுத்து விடுவோம்.
காரணம், மறவன்புலவில் ஏராளமான வகை வகையான பாம்புகள் இருந்தன. புற்கள் வளர்ந்தால் பாம்புகள் மறைந்து நெளிந்து வரும்.
வீட்டுக்குள் பாம்பு வந்தால் அடித்துக் கொல்லுகின்ற வழக்கம் கிடையாது.
அதற்குக் கற்பூரம் கொளுத்தித் தீபம் காட்டுவார்கள். கற்பூரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்து
சற்று நேரத்தில் திரும்பிப் போய்விடும்.
நாகப் பாம்பை நல்ல பாம்பு என்பர்.
புடையன், சாரை, விரியன், கட்டு விரியன், வயற்கோவியன், பச்சையன், மண்ணுண்ணி எனப் பாம்புகள்.
பறக்கும் பாம்புகள் மரத்தில் இருப்பதாகவும் கூறுவர்.
முற்றத்தில் புற்கள் இருந்தால்,
தேள், கொடுவால் தேள், பூரான் என்னும் மட்டைத் தேள், எறும்புப் புற்று, கரையான் புற்று, மழைக்காலத்தில் அட்டைகள், தவளைகள், தேரைகள் யாவும் காலுக்குள் அகப்படும்.
முன் முற்றத்தில் ஒரு வேப்ப மரம் இருந்தது.
நாங்கள் வேப்பங்குச்சியால் பல் துலக்குவோம். அடுப்புக் கரி இடக் கையில், வலக்கைச் சுட்டு விரலால் தொட்டுத் தொட்டுப் பல் துலக்குவோம்.
மறவன்புலவிலும் வண்ணார்பண்ணையில்
அம்மா வீட்டிலும் சுற்றிலும் வேலிகளுக்குப் பூவரச மரங்கள்தான்.
வேப்ப மரத்திலும் பூவரச மரத்திலும் அணில்கள் நிறைந்து இருந்தன.
ஓணான்கள் வகை வகையாக ஊர்ந்தன.
பல் வகைப் பறவைகள் வந்து போயின.
மறவன்புலவில் அம்மா குசினிக் கொட்டில் வாசலில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடக் கூப்பிடுவார்கள்.
நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்லி ஓடுவேன். வாழைப் பொரியல் சேர்த்து ஒரு பிடி சோறு கொடுத்து சாப்பிடச் சொல்லுவார்கள்.
அப்படி ஒவ்வொரு உருண்டை சாப்பிடும்பொழுதும், நானும், அக்காவும், தங்கையும் வீட்டு முற்றத்தின் எல்லைக்கு ஓடிச்சென்று திரும்பி வருவோம்.
என் தந்தைக்கு ஒன்பது வயதாக இருக்கும்பொழுது அவரின் தந்தையார்,
இறந்து போனார்.
அப்பா மட்டும்தான் ஒரேயொரு ஆண் பிள்ளை. அவருக்கு முன்பு பிறந்த குழந்தைகள் எல்லாம் இறந்து போனார்கள்.
எனவே, என் அப்பாவைக் கோயிலுக்கு விற்றுப் போட்டார்கள்.
எனவே, அவரை கோயிலின் பிள்ளை என்று சொல்லுவார்கள்.
அருணகிரி
நீங்கள் விற்பனை என்று சொல்லுகின்றீர்கள்.
இங்கே நாங்கள் நேர்ந்து விடுதல் என்போம்.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
விற்றார்கள் என்றால், காசுக்கு விற்பது அல்ல.
பிள்ளையார் அப்பா, இனி இது உன் குழந்தை.
நீதான் பார்த்துக் கொள் என்று சொல்லி விடுவார்கள். முறைக்காக, கோயில் ஐயா
அந்தக் குழந்தையை வாங்கிக் கொள்வார்.
அது அந்தக் குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு. அவ்வளவுதான்.
என் பாட்டனார்தான் அந்தக் கோவிலுக்கு அறங்காவலர். அடுத்து என் அப்பா அறங்காவலர்.
அப்பா சிறுவனாகத் தனிப் பிள்ளை,
கோயிலின் பிள்ளை என்பதால், பத்து வயது வரை பள்ளிக்கே போகவில்லை.
ஆச்சி போக விடவில்லை. எனக்கு ஒரே ஆண் பிள்ளை நீதான். உன்னை வெளியே விட மாட்டேன். நீ படிக்கவே வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
அதன்பிறகு யாரோ ஒரு ஆசிரியர் வந்து,
ஆச்சியைச் சினந்து பேசி, அப்பாவை வடக்கே நுணாவிலில் உள்ள பள்ளியில் சேர்த்து விட்டார். இதை அப்பா என்னிடம் சொன்னார்.
பிள்ளையார் கோயிலில் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு புராணம் படிப்பார்கள்.
மற்றவர்கள் உட்கார்ந்து கேட்பார்கள்.
பாடல்களுக்குக் கருத்துச் சொல்லுவார்கள்.
மாலை நேரங்களில் அப்படிப்பட்ட சூழல் நிலவியது. அதைப் புராண படனம் என்பார்கள்.
கந்த புராணம் படிப்பார்கள், திருவிளையாடல் புராணம் படிப்பார்கள். மார்கழி மாதம் திருவெம்பாவைக் காலத்தில், திருவாதவூரார் புராணம் படிப்பார்கள். சிவராத்திரியின் பொழுது, சிவராத்திரி புராணம் படிப்பார்கள்.
சித்திரை மாதம், முழு நிலாச் சித்திரைக் கஞ்சிக்கு சித்திரபுத்திர நாயனார் புராணம் படிப்பார்கள்.
அருணகிரி
நானும் எங்கள் தெருப் பிள்ளையார் கோயிலில் சித்திரபுத்திர நாயனார் புராணம் படித்து இருக்கின்றேன்.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
அப்படியா? மகிழ்ச்சி.
புராணங்கள் படிக்கின்ற பண்டிதர்கள் எங்கள் ஊரில் பலர் இருந்தார்கள்.
பாடல்களின் தொடர்களை அவர்கள் கொண்டு கூட்டிச் சொல்லுவார்கள்.
அதாவது, அவன் அழகன், வலிய தோளினன், கையில் வில் வைத்து இருப்பான் என்றெல்லாம் பட்டியல் போட்டுச் சொல்லிக்கொண்டே வந்து,
கடைசியில் இத்தகைய இராமன் என்று சொல்லி முடிப்பார்கள்.
ஆனால், கதையைத் தொடங்கும்பொழுது,
இன்று நான் உங்களுக்கு இராமனைப் பற்றிச் சொல்லப் போகின்றேன் என்று சொல்லித்தான் தொடங்குவார்கள். நடித்துக் காட்டுவார்கள். இசையோடு பாடுவார்கள், இசையோடுதான் பொருள் சொல்லுவார்கள்.
இவ்வாறு புராண படனங்களை, நாள்தோறும் கேட்டு வளர்ந்தேன்.
அதுதான் எனக்கு தமிழ் மீது, பண்பாட்டின் மீது, சைவத்தின் மீது பற்றினை ஊட்டி வளர்த்தது.
நாள்தோறும் காலையிலும் ஆச்சி எங்களைக் கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போய்த் தேவாரம் சொல்லிக் கொடுப்பார். படிக்காமல் விட மாட்டார்.
குழந்தை நாச்சியார் என்பது எங்கள் ஆச்சியின் பெயர். எனவே, எங்கள் வீட்டு மாடுகளில் கு என்ற எழுத்தை அடையாளமாகப் பொறிப்போம்.
அவருடைய தந்தை பெயர் இராமநாதன்.
எனவே, அவரது தம்பி, தன்னுடைய மாடுகளுக்கு இ என்ற குறி பொறித்து இருந்தார்.
ராமநாதன் என்று தமிழ்நாட்டில் எழுதுகின்றார்கள். ஆனால், ஈழத்தில் இ சேர்த்துத்தான் எழுதுவோம். சொல்லுக்கு முதல் எழுத்து எப்படி வரும் எனத் தமிழ் இலக்கணம் வரையறுத்து இருக்கின்றபடிதான் எழுதுகின்றோம்.
அப்படித்தான் பெயர்கள் சூட்டுவோம்.
நீங்கள் லண்டன் என்று எழுதுகின்றீர்கள்.
நாங்கள் இலண்டன் என்றுதான் எழுதுகின்றோம்.
அம்மா 90 வயதில் சென்னைக்கு வந்து இந்த எழும்பூர் வீட்டில் தங்கி இருந்தார்.
அப்போது வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து சாப்பாடு பரிமாறும்பொழுதும் கூட,
இரசம் கொண்டு வரட்டுமா? என்றுதான் கேட்பார்.
இ என்பதை அழுத்தமாகச் சொல்லுவார்.
விருந்தாளிகள் சிரிப்பார்கள். அவர் மட்டும் அல்ல, எங்கள் ஊரில் எல்லோருமே அப்படித்தான் பேசுவார்கள்.
அதுபோல வில்லியம் என்ற பெயரை, உவில்லியம் என்றுதான் எழுதுகின்றோம்.
என் இளமைக் காலத்தில் அமைதியான வாழ்க்கை. குறைவு இல்லாத வாழ்க்கை.
என் பெற்றோர் என்னை அடித்தது மிகமிகக் குறைவு. காரணம், என் அப்பா அவரது பெற்றோருக்கு ஒரேயொரு ஆண் பிள்ளை. அவருக்கும் நான் ஒரேயொரு ஆண்பிள்ளை. எனவே, நான் செல்லப்பிள்ளை.
வீட்டுக்கு யார் வந்தாலும், அவர்கள் என்னைத் தொடக்கூடாது என்று ஆச்சி சொல்லுவார்.
அவருக்குக் கிட்டப் போகதே என்பார்.
இங்கே வா என்று என்னை இழுத்துத் தன் மடியில் அமர்த்திக் கொள்ளுவார்.
ஆனால், அந்தக் கண்ணோட்டம் எல்லாம்,
நாங்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறியபிறகு, அப்படியே மாறிப் போய்விட்டது.
அங்கே என் வயதை ஒத்தவர்கள், ஏனைய பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து உரையாடி,
மகிழ்ச்சியாக இருந்தோம்.
மறவன்புலவில் ஒவ்வொரு நாளும் காலையில் ஆச்சியுடன் சேர்ந்து மாடுகளை அவிழ்த்து மேய்ச்சலுக்கு விடுவதும்,
மாலையில் அவையாகத் திரும்பி வந்ததும் கல்லில் அல்லது கட்டையில் கட்டுவதுமான வேலைகளைச் செய்தேன்.
பள்ளி முடிந்து வீடு திரும்பும்பொழுதும்
கோவிலுக்குச் சென்று பிள்ளையாரை வணங்கி விட்டுத்தான் வீட்டுக்கு வருவோம்.
அதன்பிறகு மாடுகளைக் கட்டைக்குள் கட்டப் போவேன். ஆச்சிதான் பராமரித்து வந்தார்.
அப்பாவுக்கு ஈடுபாடு இல்லை. ஆச்சியின் தம்பியும் மாடுகள் வைத்து இருந்தார். அவரும், நாங்களும் ஒரே வளாகத்தில்தான் இருந்தோம்.
பகல் முழுமையும் அலைந்து திரிந்த மாடுகள், மாலையானதும் சரியாக வீடு திரும்பி, கட்டைக்கு அருகில் வந்து நிற்கும். அது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும். அத்தனை மாடுகளுக்கும் ஆச்சி தனித்தனியாகப் பெயர் சொல்லிக் கூப்பிடுவார். கொம்பி வா, சிகப்பி வா என்று அழைப்பார்.
அருணகிரி
அப்படி என்னென்ன பெயர்கள்?
முடிந்த அளவு சொல்லுங்கள்.
காந்தளகம் சச்சிதானந்தன்
கொம்பி, சிகப்பு, குண்டுமணி, செவ்வாய், இருட்டி, மொந்தன் என மாடுகளின் பெயர்கள்.
ஒவ்வொரு மாட்டுடனும் பேசுவேன்.
உருவு தடத்தை வைத்தால், அந்த மாடுகள் தானாகவே வந்து அதற்கு உள்ளே கால்களை வைக்கும்.
அதுவும் எனக்கு வியப்பாக இருக்கும்.
மாடுகளைத் தட்டிக் கொடுப்பேன்.
விடியற்காலையில் சென்று கயிறை அவிழ்க்கும் போது, மாடுகளின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
ஒரு சில மாடுகள் மூர்க்கத்தனமாக இருக்கும்.
அதன் அருகே போகாதே என்று ஆச்சி தடுப்பார்.
இருந்தாலும் நான் மெல்ல அருகில் சென்று தடவிக் கொடுத்துப் பழக்கி விடுவேன்.
அவற்றுக்கு நம்மீது அன்பு ஏற்பட்டு விடும்.
மாடுகளைக் கட்டி வைக்கின்ற இடத்தை,
பட்டி என்று சொல்லுவார்கள்.
மாடுகள் கன்று ஈன்றால், வீட்டில் கொண்டு வந்து கட்டுவார்கள். பால் கறந்து குடிப்போம்.
ஒவ்வொரு வயற் பாத்தியிலும் இரண்டு நாள்கள் மாடுகளைக் கட்டுவோம்.
பிறகு அடுத்த வயற் பாத்தியில் கட்டுவோம். அன்றைக்கு மாடுகளை அவிழ்த்துவிட்ட பிறகு,
45 கற்கள் அல்லது கட்டைகளையும் மண்ணில் இருந்து பிடுங்கி, அடுத்த பாத்தையில் கொண்டு போய் ஊன்றி விட்டுத்தான் வீடு திரும்புவோம்.
சாணங்களை எடுத்து ஒரு இடத்தில் குவித்து வைப்போம்.
காய்ந்து போன சாணங்களை எடுத்துத் தூளாக்குவோம். அடுத்த உழவுக்கு முன்பு, அதை வயலில் பரவுவார்கள்.
நானும் வயலில் இறங்கி உழுது இருக்கின்றேன். அப்போதும் ஆச்சி, நீ சும்மா இரு என்று சொல்லுவார்.
ஒரு சில மாடுகள் திரும்பி வராது. வேறு பட்டிக்குப் போய் விடும். வீட்டில் இருக்கின்ற உதவியாளரிடம் சொன்னால், அவர் போய்த் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து கட்டுவார். மாடுகள் சினைப்பட ஏறுகின்ற காலத்தில் அப்படி மாறிப் போய்விடும்.
ஆவணி மாதத்தில் அருமையான நிகழ்ச்சி.
அதன்பிறகு விதைப்புக் காலம். அப்பொழுது மாடுகளை வீட்டில் வைத்து இருக்க முடியாது.
மறவன்புலவில் கிட்டத்தட்ட 1000 மாடுகள் வரையிலும் இருந்தன.
ஒரு நாள் குறிப்பார்கள்.
ஆவணி சதுர்த்திக்கு மறுநாள் பிள்ளையார் கோவிலில் உட்கார்ந்துதான் நாள் குறிப்பார்கள்.
குறித்த நாளன்று தெருவார ஆலடிக்கு மாடுகளை ஓட்டிக் கொண்டு போவார்கள்.
அங்கிருந்து தெற்கே அவை போகும்.
கடல் வற்றிய காலத்தில் அப்படியே நடந்தே கடந்து, கேரதீவுக்குச் சென்று, மூன்றாம்பட்டி, வெள்ளாங்குளம் போன்ற பகுதிகளில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வருவார்கள்.
அது கிட்டத்தட்ட 40 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கின்றது. யானைக்காட்டு வழியே போக வேண்டும்.
அருணகிரி
யாழ்ப்பாணத்தை ஒட்டி யானைகள் இருக்கின்றதா?
மறவன்புலவு சச்சிதானந்தன்
இல்லை. ஆனால், இங்கிருந்து தெற்கே போகும்பொழுது கேரதீவு. இடையில் ஆழம் இல்லாத கடல்.
கடந்தால் பூநகரி. அடுத்தது, முழங்காவில், அடுத்து வெள்ளாகுளம். மாடுகளைக் கொண்டு போகலாம். பூநகரிக்கும் முழங்காவிலுக்கும் இடைப்பட்டது யானைக் காடுகள்.
ஒருசிலர் குடும்பத்தோடு சென்று அங்கேயே தங்கி இருந்து மாடுகளைப் பராமரித்துக் கொள்ளுவார்கள்.
அங்கே நான்கைந்து மாடுகளை ஒரு பிணைச்சல் போட்டுக் கட்டி விடுவார்கள்.
ஐந்தாறு மாதங்கள் கழித்து, சிவராத்திரியை ஒட்டி திரும்பவும் மறவன்புலவுக்கு ஓட்டிக் கொண்டு வருவார்கள்.
அருணகிரி
அப்படி எத்தனை நாள்கள்?
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
புரட்டாதி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என 180 நாள்கள், பாதி ஆண்டு அங்கேதான் நிற்கும்.
அந்தக் காலத்தில் வௌளாங்குளம் கொண்டு போகாமல் வீட்டிலும் மாடுகளை வைத்துக் கொள்ளலாம்.
பாலுக்காக வீட்டில் மாடுகளை வைத்து இருப்பார்கள். அப்படி ஒருசில மாடுகள்தான் இருக்கும்.
ஆனால் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடக் கூடாது.
பனை ஓலையில் இழைத்த முகப் பெட்டி கட்டி, வெளியே கொண்டு செல்வர்.
ஒரு கதிரினை மாடு தின்றாலும், அது பாவம் என்று கருதுவார்கள்.
மற்றவனுக்கு கேடு நேர்ந்துவிட்டதே?
ஐயோ இந்தப் பாவத்தை நான் செய்து விட்டேனே? என்று வருந்துவார்கள்.
கதிர்களை அந்த அளவுக்குத் தூய்மையாகக் கருதுவார்கள்.
மழைக்காலத்தில் முற்றம் எல்லாம் தண்ணீர் தேங்கி சதுப்பு நிலம் ஆகி விடும்.
மாடுகள் படுத்து உறங்க முடியாது.
நின்று கொண்டே இருக்கும்.
கன்றுகள் பாடு பார்க்க வேதனையாக இருக்கும்.
மாட்டுத்தொட்டில் மேற்கூரை பனை ஓலை கொண்டு வேய்ந்து இருப்பார்கள். சில நாள்களில் அப்பா மாட்டுக் கொட்டில் போட்டு இருப்பார்.
ஆனால் அது மிகக்குறைவு. ஏன் என்றால், வெயில் காலத்தில் அது தேவை இல்லை.
விதைப்புக் காலத்தில், கோயிலில் நாள் விதைப்பு செய்வோம்.
உழவுப் பணிகளுக்கோ, வண்டி ஓட்டுவதற்கோ ஆச்சி, சிறுவனான என்னை விடவே மாட்டார்.
அவரது கரிசனம் எல்லாம் தன் பரம்பரை தொடர வேண்டும் என்பதுதான். அதற்காக என்னை அப்படிப் பாதுகாத்து வளர்த்தார். அது அவரது இயல்பு.
அதனால் பண்பட்ட வாழ்க்கை எனக்குக் கிடைத்தது.
கார்த்திகை மாதம் வெள்ளம் வரும்.
வயல்களில் ஓரடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கி நிற்கும். தவளை கத்தும், மீன்கள் துள்ளும்.
கொக்குகள் கொத்தித் தின்னும். தவளைகளைப் பாம்புகள் விழுங்கும். அழுக்கணவன் நாரைகள், காகங்கள், நத்தை கொத்திகள் எனப் பல் வகைப் பறவைகள் சுற்றி வரும்.
நிலத்தில் கலப்பை கொண்டு உழுகின்றபொழுது, பின்னால் வரிசையாக கொக்குகள், காகங்கள், நாரைகள் அணிவகுத்து வரும்.
மண்ணில் இருந்து வெளியே வருகின்ற பூச்சி புழுக்கள் வெட்டுக்கிளிகள் அவைகளுக்கு நல்ல தீனி.
அப்பொழுது உழவுக் கருவிகள் எதுவும் கிடையாது. ஒற்றை மாட்டு வண்டி, இரட்டை மாட்டு வண்டி என இரண்டு வகை வண்டிகள் இருந்தன.
குடும்பத்தோடு போகும்பொழுது கூரை போட்டு இருப்பார்கள். அதைக் கழற்றி வைத்து விட்டால், நெல் மற்றும் பொருட்களை ஏற்றிக் கொண்டு போகலாம்.
நாம்பன் மாடுகள் இருந்தன. நான்கு எருதுகள் இருந்தன. அவைகளை குளிப்பாட்டத் தனிக்குளம் இருந்தது. நான்தான் ஓட்டிக்கொண்டு போய்க் குளிப்பாட்டுவேன்.
அவற்றுக்கு நாணயம் போடுவது ஒரு கலை.
மூக்கு நாணயம் (மூக்கணாங்கயிறு) போட்டு, கழுத்தில் சங்கிலி கட்டு, அதில் சலங்கைகளைக் கட்டித் தொங்க விட்டு இருப்பார்கள். எனவே, தொலைவில் நடந்து வரும்பொழுதே மணி ஓசை கேட்கும்.
மழைக் காலத்தில் வரம்பில் புல்லை வெட்டி மாடுகளுக்குத் தீனி போடுவார்கள்.
மாடுகள் மீது அவர்கள் வைத்து இருக்கின்ற பற்று, பாசம், ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பது என அந்தத் தொடர்புகள் எல்லாம் ஒரு குடும்பப் பிணைப்பு.
ஒருவர் வீட்டு மாடு, அடுத்தவர் வீட்டுக்குப் போகாது. உரியவர்களைக் கண்டவுடன், மா என்று பாசத்துடன் குரல் கொடுக்கும்.
சூடு மிதித்து வருகின்ற நெல்லை
பொலி என்று சொல்லுவோம்.
அந்தப் பொலியில், முதலில் எடுத்து வைப்பது மீசுபொலி. பிளஅளையார் கோயிலுக்குக் காணிக்கை. கோவில் ஐயாவுக்கு, கோயிலில் வேலை செய்வோருக்கு, முடி வெட்டுவோருக்கு, வெள்ளை கட்டுவோருக்கு, எல்லோருக்கும் என ஓராண்டுக்கு உரிய பங்கை அங்கே வைத்து பிரித்துக் கொடுத்து விடுவார்கள்.
இப்படியாக வௌளாங்குளத்துக்கு மாடு ஓட்டிக்கொண்டு போய் வருவோருக்கும்
ஒரு பங்கு உண்டு.
அதை அவர்கள் வாங்கிக் கொள்ளுவார்கள். அதன்பிறகு, நாங்கள் எங்கள் பங்கு நெல்லை வீட்டுக்குக் கொண்டு வருவோம். பத்தாயத்தில் போடுவோம்.
அது பத்துக்குப் பத்து அறை.
நான்கு முதல் ஐந்து அடிகள் விட்டத்தில், எட்டு அடிகள் உயரத்தில் ஒரு களஞ்சியம் போல பனை ஓலையால் இழைத்துப் பின்னி வைத்து இருப்பார்கள். அதற்கு உள்ளேதான் நெல்லைப் போட்டு வைத்து இருப்பார்கள். அதை சிலர் மரத்தாலும் செய்து வைத்து இருப்பார்கள்.
விதைப்பு நடக்கின்ற காலங்களிலேயே வீட்டில் இப்படிப் பின்னல் வேலைகளும் நடக்கும்.
எனவே எந்த நேரமும் வேலைதான்.
சூடு மிதிப்பதற்குப் பாய் தேவை.
பெயர் கதிர்ப் பாய். அவை ஒவ்வொன்றும் 25 அடி நீளம் ஏழு அல்லது எட்டு அடி அகலம் இருக்கும்.
அப்படிப் பத்துப் பதினைந்து பாய்கள் தேவை.
சூடு மிதிக்கவும் நெல்லைக் குவிக்கவும் காயப் போடவும், புழுங்கல் அவித்தால் காயப்போடவும் கதிர்ப் பாய், ஆண்டுக்கு ஒருமுறைதான் பயன்படும்.
அல்லது திருமணங்கள் நடைபெறும்பொழுது,
இறப்பு வீடுகளின் முற்றங்களில் விரித்து உட்காருவார்கள். அதையும் பின்ன வேண்டும்.
எனவே, அப்பா, அம்மா, ஆச்சி என எல்லோருமே ஏதேனும் ஒரு வேலையைச் செய்து கொண்டே இருப்பார்கள்.
எங்கள் ஆச்சியின் தம்பியார் எல்லாவற்றிலும் வல்லவராக இருந்தார்.
மரம் செதுக்குவார், இரும்பை வளைப்பார், பாய் பின்னுவார், மாட்டு வண்டிக்கு, கொழுவுக்கு எண்ணெய் போடுவார்.
பகல் உணவு தாமரை இலையில்தான் சாப்பிடுவோம். அதற்காக, தாமரைக் குளத்திற்குப் போய், தாமரை இலைகளைப் பிடுங்கி வருவார்.
அவருடன் நானும் போய் வருவேன்.
தண்ணீர்க் குழாய் கிடையாது, மின்சாரம் கிடையாது, குப்பி விளக்குதான். எனக்கு விவரம் தெரிந்தபிறகுதான், கண்ணாடி பொருத்திய விளக்குகள் வந்தன.
மண் எண்ணெய் கிடையாது. விளக்குகளை தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெயில்தான் எரிப்பார்கள்.
எங்கள் வீட்டில் பாலும், நெய்யும் நிறைய இருக்கும். அரிசி, காய்கறிகளுக்குக் குறைவு இல்லை.
வேலி ஓரங்களில் பயத்தங்காய் பயிரிட்டு விடுவோம். அது மாசி மாதம் காய்க்கும். அதுபோல, முருங்கை, கறிவேப்பிலை, கத்தரிச் செடி, மிளகாய்ச் செடி எல்லாம் வீட்டைச் சுற்றி வளரும். அப்படி தன்னிறைவு பெற்ற வீடு.
நான் சிறுவனாக இருந்தபொழுது நாட்டில் பட்டினிச் சாவுகள் இருந்தன.
எனவே, அரசாங்கம் கூப்பன் அட்டைகள் கொடுத்தார்கள்.
அதற்கு ஒவ்வொரு வாரமும், மாவு, சீனி, வெள்ளை அரிசி கொடுத்தார்கள்.
அவற்றை நாங்கள் வாங்கி வருவோம்.
பயன்படுத்துவது இல்லை. மாடுகளுக்குத்தான் உணவாகப் போடுவார்கள்.
அந்த வெள்ளை அரிசியை அரிக்கன் அரிசி, அமெரிக்கன் அரிசி என்ற பல பெயர் சொல்லுவார்கள். ஆனால், நாங்கள் சிவப்பு அரிசி மட்டும்தான் சாப்பிடுவோம்.
வெள்ளை அரிசி சாப்பிடுவதை மானக் குறைவாகக் கருதுகின்ற ஊர், எங்கள் மறவன்புலவு.
எனவேதான், வெள்ளை அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி மாட்டுக்குத்தான் வைப்பார்கள்.
என்னுடைய இளமைக்காலம், மாணவப் பருவம், செல்வம் எல்லாமே ஒரு குறைவும் இல்லாத வாழ்க்கை. இறைவன் கொடுத்தது.
தொடர்ச்சி இதற்கு அடுத்த பதிவில்.
பதிவு
அருணகிரி
சங்கரன்கோவில்
12 நவம்பர் 2022
மீள் பதிவு
19 மே 2024
யாழ்ப்பாணம்
FB Arunagiri Sankarankovil