வாழ்த்துரை
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
இளமைத் துடிப்போடு படிக்கிறார். பேரார்வத்தோடு படிக்கிறார்.
உற்சாகத்தோடு படிக்கிறார். பல நூல்களைப் படிக்கிறார். இணைய தளங்கள் பல உசாவுகிறார்.
தேடித் தேடித் தகவல்களைச் சேகரிக்கிறார். விளைவாக, இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள்
எனும் நூலைத் தந்துளார் கலாநிதி கார்த்திகா கணேசர்.
கலைகள் பல அறிவோரே, இலக்கிய அறிவு நிறைவோரே, மொழி அறிவுப்
புலவோரே, ஆய்வுப் பார்வை உடையோரே தேர்ந்து தெளிந்த நாட்டியக் கலைஞர்.
பல்துறைகளை ஒருங்கிணைத்துத் தன்னுள் அடக்கும் அற்புதக்
கலை, ஆடற் கலை. கலாநிதி கார்த்திகா தேர்ந்த ஆடற் கலைஞர்.
பல் துறைகளை ஒருங்கிணைக்கும் அதே கலை ஆற்றலை எந்த ஒரு
நூலைப் படைப்பதிலும் கொண்டமை அவரது நாட்டிய ஆளுமையின் வெளிப்பாடே. அவர் எழுதித் தமிழக அரசின் பரிசு பெற்ற காலந்தோறும் நாட்டியக் கலை காலத்தைக் கடந்து வாழும் சிறந்த படைப்பு.
அவ்வாறே அன்னார் எழுதிய ஏனைய நூல்களும் கனதியானவை, காத்திரமானவை, கருத்துக் களஞ்சியமானவை.
ஒளி பாய்ச்சும் பகலவன் கிழக்கில் உதிக்கிறான். அறிவொளி
பாய்ச்சிப் பரப்பிய அரும் பெரும் கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கியோரும் கிழக்கத்தியரே;
அறிவாற்றல் படைத்த மேதைகள் பலரும் கிழக்கத்தியரான இந்திய துணைக் கண்டத்தினரே என அடுத்து
வரும் பக்கங்களில் பறைசாற்றியுள்ளார் கலாநிதி கார்த்திகா.
இந்த ஆண்டு அவருக்குப் பவள விழா ஆண்டு. அவரது பவள விழவை
ஒட்டியதே இந்நூல். தளர்வறியா அவர் கலை முயற்சிகள் எழுத்துத் திறமைகள் தொடர்வதாக. வாழ்த்துகிறேன், வணங்குகிறேன், போற்றுகிறேன்,
அறிவுப் பகிர்வும் கலைப் பகிர்வும் கலாநிதி கார்த்திகா
கணேசரின் வாழ்வாகுக. அவர் இனிய மனம்போல அவர் வாழ்வும் இனிமையாக அமையப் பவள மேனியன்
பால் வெண்ணீற்றன் கூத்தப் பிரான் திருவருள் பொழிவாராக.
14.1.2022
மறவன்புலவு
சாவகச்சேரி
No comments:
Post a Comment