Sunday, February 24, 2019

சிங்கள அரசே, யார் கொலோ சதுரர்?


மறவன்புலவு க. சச்சிதானந்தன்
அழிவிலும் உண்டு ஆக்கம். எந்த ஒரு செயலுக்கும் அதே அளவு ஆற்றலும் வலுவும் உள்ள மாற்றுச் செயல் அல்லது எதிர்ச் செயல் உண்டு. Newton's third law of motion says, For every action, there is an equal and opposite reaction.
தெரிந்து செய்தார்களா? தெரியாமற் செய்தார்களா? 1948, 1952, 1956, 1958, 1961, 1972, 1974, 1977, 1981, 1983 ஆண்டுகள் அதற்குப்பின் இற்றை நாள் வரை. தமிழின அழிப்புக்கான சிங்கள அரசுகளின் எழுபது ஆண்டுகால வன்முறை சார் முன்னெடுப்புகள். அரச பயங்கரவாதத்தின் இலக்குகளாக ஈழத் தமிழர்.
1976 மார்கழியில் சிறையில் இருந்து விடுதலையானயோர் நூறு வரையான இளைஞர். அவர்களுள் 14 பேர் என்னிடம் வந்தார்கள். அவர்கள் கடவுச் சீட்டுப் பெற நான் பிணையாளி. அக்காலத்தில் பிணையாளி இன்றிக் கடவுச் சீட்டு இல்லை.
எனக்குத் தெரிந்து அரச பயங்கரவாதத்தில் இருந்து தப்ப ஐரோப்பா சென்றவர்கள் இவர்கள். முன்பும் சத்தியசீலன் போன்றவர்கள் சென்றார்கள்.
யாழ்ப்பாணம் கச்சேரி வளாகத்துள் 1981 தையில் காவலர் தடுப்பில் ஈழவேந்தன். அவரை மிரட்டுகிறார்கள். பல வினாக்கள். அவற்றுள் ஒன்று, Where is that bugger Sachi? He has signed for 14 terrorists to get passports. The terrorists have escaped. We will bring Sachi from wherever he is. ஐநா ஆலோசகராக செங்கடல், மத்தியதரைக் கடல் நாடுகளில் நான் பணிபுரிந்த காலம்.
இலங்கை அரசுக் காவலர் என்னை விசாரிக்கத் தொடங்கியது 1973இல். கடந்த சில மாதங்களுக்கு முன் 2018 கார்த்திகையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு விசாரிக்க என்னிடம் வந்தனர். சென்னையிலும் 1986இல் இருந்து நேற்று வரை, இந்திய அரசப் புலனாய்வாளரின் விசாரிப்பு வலையத்துள், சிறைக்குள், நீதிமன்ற வழக்குகளுக்குள் நான். இந்த விசாரணைகள் முடிவடையா. ஏனெனில் நான் தமிழனாகப் பிறந்தேன். தமிழை மீண்டும் உலகமயமாக்கும் தலைமுறையில் பிறந்தேன்.
இன்று (21.02.2019) நண்பகல் விருந்துக்கு வந்தவர்கள் பிரித்தானியா இலண்டனில் வாழும் கோப்பாய் திரு சிவாபிள்ளை, தனங்களப்பாரான (மறவன்புலவுக்கு அயலூர்) அவரின் மனைவி.
உலகெங்கும் 29 நாடுகளுக்குப் பரந்து ஒவ்வொரு நாட்டிலும் கணிசமான தொகையினராக வாழும் இருபது இலட்சம் ஈழத் தமிழருள் இருவர்.
இலண்டன் பல்கலையில் தமிழிருக்கை அமைக்கச் சென்னையில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர், தமிழ் வளரச்சித் துறைச் செயலர், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் யாவரையும் தனித்தனியாகவும் கூட்டாகவும் சந்தித்தவர். கூடவே இலண்டன் பல்கலைப் பொறுப்பாளரையும் அழைத்துச் சென்றவர் சிவா பிள்ளை இணையர்.
இனப் படுகொலை முயற்சியில் இருந்து தப்பி, இவர்போல உலகெங்கும் சென்றவர்களால் ஒரு சில நாடுகளில் வழங்கிய தமிழ் மொழி, இன்று உலகெங்கும் வழங்குகிறது. பல நாடுகளில் பயிற்று மொழி, பாட மொழி, அரச அறிவிப்பு மொழி என உலக மயமாகியது.
சூரியன் உதிக்க உதிக்க அந்தந்த இடங்களில் திருப்பள்ளியெழுச்சி கேட்கிறது. அனைத்துலக நாள் கோடு கடந்ததும் பிஜி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் கேட்கும். நெடும்பாகை ஒவ்வொன்றாகக் கடக்கையில் அந்தந்த நாட்டில் கேட்கும். ஒரு சுற்று முடிந்து அனைத்துலக நாட்கோட்டை அண்மிக்கையில் அமெரிக்க மாநிலத்தின் அவாய்த் தீவில் கவ்வை ஆதீனத்தில் தமிழில் அதே திருப்பள்ளியெழுச்சி கேட்கும்.
தேமதுரத் தமிழோசை பூமிப் பந்தெங்கும் கேட்கிறது. கத்தியின்றி இரத்தமின்றிச் சூரியன் மறையாத உலகப் பேரரசை நடத்துகிறாள் தமிழ்த் தாய்.
சிவா பிள்ளை கோப்பாயிலும் திருமதி சிவா பிள்ளை தனங்களப்பிலும் தொடர்ந்திருந்தால், இலண்டன் பல்கலையில் தமிழ் இருக்கை கோருவார் யார்?
ஒரு பானை சோற்றுக்குச் சிவா பிள்ளை ஒரு சோறு. உலகு பரந்த தமிழர் ஒவ்வொருவரும் அங்கங்கே தமிழ் மொழி, மரபு, பண்பாடு என எடுத்துச் செல்வர். சிங்கள அரசின் தமிழின அழிப்பு முயற்சிக்குக் கல்லறை கட்டுவர்.
இன அழிப்பு முயற்சியே உலகமயமாகிய இன வளர்ச்சி முயற்சியாயும் ஆனது. அழிவிலும் உண்டு ஆக்கம். எந்த ஒரு செயலுக்கும் அதே அளவு ஆற்றலும் வலுவும் உள்ள மாற்றுச் செயல் அல்லது எதிர்ச் செயல் உண்டு. Newton's third law of motion says, For every action, there is an equal and opposite reaction.
கொண்டது எழுபது ஆண்டுகளூடாகப் பத்து இலட்சத்துக்கும் கூடுதலான தமிழ் உயிர்களை, கோடிகோடி பெறுமதியான உழைப்புச் சொத்துகளை, தந்ததோ உலககெங்கும் தமிழ் தன்னை, இன அழிப்புச் சிங்கள அரசே, யார் கொலோ சதுரர்?

No comments: