வியக்கும் ஆங்கிலப் புலமை. மயக்கும் ஆங்கில மொழி நடை. தயக்கம் காணா மொழிபெயர்ப்பு ஆற்றல். நயக்கும் உணர்வாய்த் திருமுறைகள். பயக்கும் நன்மைதரு இல்லத்தார். இலயிக்கும் நட்பு வட்டத்தார்.
நான் கண்ட பேராசிரியர், நாடு போற்றும் புலமையர், நவில் தொறும் நட்புப் பெருக்கும் பண்பாளர். இவரே பேராசிரியர் எஸ் ஏ சங்கரநாராயணன்.
அப்பைய தீட்சிதர் வழி வந்தவர். அறிவுப் பெட்டகமாய் ஒளிர்பவர். மரபணுக்களில் புதைந்த நினைவாற்றலர். சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு குறைந்தவர்.
ஆங்கிலச் செகப்பிரியரில் அவரின் புலமை அளவற்றதானால், அந்தச் சுவையைப் பகிர்வதில் உள்ள ஆற்றலும் அளவற்றதே.
மாணவருக்கு ஆங்கிலப் பாடம் கற்பித்தாரா? ஆங்கிலேய உலகத்தையே வகுப்பறைக்குள் நிறுத்தினாரா? ஆங்கிலச் சூழலாக மாற்றி அமைத்தாரா? என மாணவர் அவைரைப் போற்றுவர். கல்லூரிக் காலம் முடிந்த பின்னும் அவரின் வகுப்புகள் மாணவரின் நெஞ்சங்களில் நினைவுகளாய் நிழலாடும்.
பன்னிரு திருமுறைகளிலும் மெயகண்ட சாத்திரங்களிலும் அவருக்கு ஈடுபாடு எனச் சொல்வது அவரது இயல்பைக் குறைத்துச் சொல்வதாகும். திருமுறைகள் அவர் ஊனில் கலந்து உயிரோடு உறவாடுவன.
பெரிய புராணச் செய்திகளை ஆங்கிலத்தில் சிறு சிறு நூல்களாக்க அவர் முயன்றார். நான் அவற்றை அச்சிட்டுக் கொடுதிதேன். நாயன்மாரின் வாழ்வியல் நோக்கங்களை நாடக மொழியில் அவர் ஆங்கிலத்தில் தந்த நூல்கள் காலத்தைக் கடந்து வாழ்வன.
ஒளிவளர் விளக்கே எனத் தொடங்கும் ஒன்தாம் திருமுறையின் 301 பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தாருங்கள் எனக் கேட்டேன். ஆர்வத்துடன் மொழிபெயர்த்தார். நூலாக வெளிவந்தது.
பதினோராம் திருமுறையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தாருங்கள் எனக் கேட்டேன். ஆர்வத்துடன் மொழிபெயர்த்தார். நூலாக்கினோம்.
மாணிக்கவாசகரின் திருவாசகம் திருக்கோவையார் நூல்கலுக்கு அவரின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பத்தி உணர்வை தமிழில் தருவது போலவே ஆங்கிலத்திலும் தரலாம் என்பதற்கு எடுத்துக் காட்டுகள்.
அவரின் மக்கள் இருவரும் அவரைப் போலவே புலமையாளர். அவரின் துணைவியாரின் ஆதரவே இந்த மூவரின் அறிவு மேம்பாட்டுக்கு அச்சாணி.
தமிழக முதலமைச்சரின் மொழிபெயர்ப்பாளர் விருது (2018) பெற்றார். எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க ஆங்கில மொழிபெயர்ப்பாளர் விருது (2017) பெற்றார், அலவிலா மகிழ்ச்சி அடைந்தேன்.
யாழ்ப்பாணத்து கென்சுமன் ஆங்கிலப் பேராசிரியராகக் கற்பித்த, அவரிடம் வெள்ளி நாக்கர் சீனிவாச சாத்திரியார் மாணவனாகக் கற்ற அதே கும்பகோணம் கலைக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகக் கற்பித்தவர் போர. எஸ் ஏ சங்கரநாராயணனார்.
இந்த மாதத்தில் கும்பகோணத்தார் அவரைப் பாராட்டுகிறார்கள். வேறென்ன மகிழ்ச்சி எனக்கு. அவரும் துணைவியாரும் மக்களும் பல்லாண்டு நலமாக மகிழ்வாக வாழ வாழ்த்துகிறேன்.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
காந்தளகம், யாழ்ப்பாணம், சென்னை
21.08.2018
No comments:
Post a Comment