தமிழ் நாட்டிற்கு அடையாளங்கள் பல உள. இக்காலத்தில்
இந்து நாளிதழ் தமிழ் நாட்டின் ஆழப் புதைந்த
அடையாளங்களுள் ஒன்று. இந்து நாளிதழ் வேறல்ல,
தமிழ் நாடு வேறல்ல.
1960களில் இந்து
இதழுக்கு இலங்கையில் இருந்து செய்தி அனுப்பி வந்தவர் திரு. கே. வி. எஸ். வாசன். அக்காலத்தில்
இலங்கைச் செய்திகள் உள்பக்கங்களுள் ஒன்றுள் ஒரு மூலையில் எப்பொழுதோ ஒரு நாள் வரும்.
1983 வரை இந்த நிலையே. அக்கால இனக் கலவரம், தொடர்ந்த
அதிர்வுகள், பரபரப்புகள் இந்து இதழில் விரிவாக
வெளிவரத் தொடங்கின. அக்காலம் தொடங்கிய செய்தி வழங்கல் இன்று வரை இடைவிடாமல் தொடர்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக, இந்து இதழுக்குக் கொழும்பில் முழுநேரச் செய்தியாளர் ஒருவர் இருந்து வருகிறார்.
சென்னையில் உள்ள ஒருவரை இந்து கொழும்புக்கு
அனுப்பித் தன் வதிவிடச் செய்தியாளராக்கியது.
தமிழ் நாட்டு வாசகர் மட்டுமன்று, இந்தியா முழுவதிலும்
வாழும் அரசியலார், இந்துவில் வெளியாகும்
இலங்கைச் செய்திகளை, கருத்துரைகளை, தலையங்கங்களை, கட்டுரைளைக் கூர்ந்து வாசிப்பர்.
இலங்கைத் தமிழர் நலம்பேணும் கருத்துருவாக்கத்தில் இந்துவின் பங்கு அளப்பரியது.
அண்மைக் காலங்களில் இந்துச் செய்தியாளராகக் கொழும்பில் பணிபுரிந்தவர் இராமகிருட்டிணன். இளமையிலேயே
இந்துவில் சேர்ந்தவர். 25 ஆண்டுகளுக்கும்
கூடுதலாக இந்துவுடன் தொடர்பவர். புகழ்பூத்த
தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரனின் திருமகன்.
ஓர் இனப்பிரச்சனையும் ஓர் ஒப்பந்தமும் என்ற தலைப்பில் அருமையான நூலைத் தந்துள்ளார்.
அந்த நூலை அறிமுகிக்க யாழ்ப்பாணம் வந்திருந்தார்.22.04.2018 அன்று நல்லூரில் முகாமையாளர்
மன்ற ஏற்பாட்டில் நிகழ்வு.
தமிழ் நாட்டவர் எழுதிய நூல். தமிழ் நாட்டில் கலைஞன்
பதிப்பகம் வெளியிட்ட நூல். தமிழ் நாட்டு வாசகர்களைச் சென்றடையும் நூல். தமிழ் நாட்டின்
நூலகங்களில் இருக்கவுள்ள நூல்.
இலங்கைத் தமிழர் தொடர்பாகத் தமிழ் நாட்டவரிடையே தொடர்ச்சியாக
விழிப்புணர்வைத் தரும் நூல். இந்து ஊடகத்தார்
எழுதிய நூல். அசோகமித்திரனின் திருமகன் எழுதிய நூல். சிறந்த பதிப்பகம் வாயிலாக வெளிவந்த
நூல்.
செயலலிதா காலம் முடிந்தது. கலைஞர் ஓய்வாக இருக்கிறார்.
வீரமணி, மகேந்திரன், இராமதாசர் பேசுவதைக் குறைத்துக் கொண்டனர். நெடுமாறன், வைகோ, சீமான்
போன்ற ஓரநிலைத் தலைவர்கள் மட்டுமே தொடர்ந்து குரல் கொடுக்கின்றனர்.
இந்நிலையில், 2016 வரையான இலங்கைக் காட்சிகளை அறிவார்ந்த
ஒருவர் நூலாக்கி உள்ளார். தமிழ் நாட்டின் புலமை சார்ந்தவர்களிடையே இலங்கை மீதான ஆர்வத்தை,
அக்கறையை ஈடுபாட்டைத் தொடர முயல்கிறார். தொலைதூரப் பார்வையாளராக அன்றி, கொழும்பின்
நடுக் களத்தில் நின்றவராகத் தமிழ் நாட்டுக்கு எடுத்துச் சொல்கிறார்.
இராமகிருட்டிணன் அந்தப் பணியைச் செய்கிறார் எனில்
இலங்கைத் தமிழர் அவருக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்கள்.
தமிழ் நாட்டுக்கு இலங்கைத் தமிழர் நிலையைக் கொண்டு
செல்வதில் உள்ள சிக்கல்களை அறிந்தவன், கொண்டு செல்வதற்காக 1961இல் இருந்து அயராது உழைப்பவன்,
தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளிலும், அனைத்துத் தமிழ் ஆர்வலர் அமைப்புகளிலும் ஊடகங்களிலும்
அருமை நண்பர்களைப் பெற்றவன், தமிழகச் சிறையில் இருந்தவன், இந்திய அரசின் நாடுகடத்தும் ஆணையைப் பெற்றவன், சென்னை நீதிமன்று
வழி கடவுச் சீட்டு முடங்கிய நிலையோடு வாழ்பவன் சொல்கிறேன், இராமகிருட்டிணன் நன்றிக்குரியவர்,
பாராட்டுக்குரியவர், போற்றுதலுக்குரியவர்.
யாழ்ப்பாணத்தின் நிகழ்வு அந்த நன்றி உணர்வைக் கொண்டிருக்கவில்லை.
சிவிகே சிவஞானம், பாலசுந்தரம்பிள்ளை, சுரேசர் பிரேமச்சந்திரன், தவராசா, பொறியலாளர்
விக்கினேசுவரன், கிருட்டிணதாசன், சிவாசிலிங்கம் ஆகியோர் ஆற்றிய உரைகளில் இந்த நன்றி
உணர்வு வெளிப்படவில்லை.
ஏற்புரை ஆற்றிய இராமகிருட்டிணன் சொல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல் துயருற்றார். தனக்கு முன்பு பேசியவர்களுக்கு விளக்கம் கொடுப்பதிலேயே
அவர் கவனம் செலுத்தினார். குறிப்பு எடுத்து, விளக்கம் கொடுத்தபொழுது நான் நெளிந்தேன்,
நெகிழ்ந்தேன்.
இலங்கைத் தமிழரின் சிக்கலைத் தமிழ் நாட்டில் உயிரோடு
வைத்திருக்க உங்கள் முயற்சி உதவும் என எவருமே பாராட்டவில்லை. தொப்புள்கொடி உறவாக நின்று
எங்களுக்குக் கைகொடுக்கிறீர்களே என எவரும் போற்றவில்லை.
தேடினார், திரட்டினார், தொகுத்தார், விரித்தார், துல்லியமான
தகவல்களைத் தந்தார். வரலாற்றைப் பட்டியலிட்டார், இவை எமக்குப் பயன்படும் என ஒரு சிலர்
கூறியதைக் கேட்டேன். இந்த முயற்சியால் இலங்கைத் தமிழரின் எதிர்காலத்தைக் கணிக்கத் தமிழகத்
தமிழருக்கு உதவும் என எவரும் பேசவேயில்லை.
இராமகிருட்டிணனின் நோக்கம் உயர்ந்தது. இந்து சார்பில் கொழும்புக்கு வந்த ஏனைய சகபாடிகள்
ஏதும் எழுதவில்லையே என்ற ஏக்கம் அவரை உறுத்தியது. எழுதுங்கள் எனச் சகபாடிகளைப் பலமுறை
கேட்டுள்ளார். இலங்கைத் தமிழர் சிக்கலைத் தமிழ் நாட்டில் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும்
என்ற நோக்கமானவர் இராமகிருட்டிணன்.
இலங்கைத் தமிழர் கோரிக்கைகளைக் கூறினர். வரலாற்று
நிகழ்வுகளில் தத்தம் பங்களிப்பைப் பெருமிதத்துடன் கூறினர். கருத்தோட்டத்தில் மென்மை
இருந்ததாகக் கூறினர். தகவல் பெட்டகமாக இருந்தததைக் கூறினர். விடுபட்ட செய்திகளைச் சேர்ந்து
மற்றுமொரு நூல் எழுதுங்கள் எனக் கூறினர். இந்தியா விட்ட தவறுகள், இந்திய செய்யவேண்டியன,
இந்திய வெளிவிவகார அணுகுமுறைத் தவறுகள் என வரிசையாக்கினர். தமிழரும் சிங்களவரும் சேர்ந்து
வாழ முடியும், முடியாது, செய்யக் கூடியன பற்றிப் பேசினர்.
ஏதோ இராமகிருட்டிணன் இந்தியப் பிரதிநிதியாக வந்துள்ளதாகக்
கருதிப் பேசினர்.
இத்தனைக்கும் இலங்கைத் தமிழர் மீதான தன் நல்லெண்ணத்தைக்
காட்ட, பேசவுள்ள ஒவ்வொருவருக்கும் இராமகிருட்டிணன் நிகழ்வுத் தொடக்கத்திலேயே சால்வை
போர்த்தினார். சென்னையில் இருந்து வரும்பொழுதே சால்வைகளைக் கொணர்ந்திருந்தார் போலும்.
எழுத்தாளர் வந்திருக்கிறார். எம் சிக்கலைத் தெரிந்தவர்
வந்திருக்கிறார். எம்மைப் பற்றி எழுதியவரல்லவா வந்துள்ளார். இந்து நாளிதழில் எம் சார்பான
செய்திகளை, கட்டுரைகளை எழுதக்கூடியவர் வந்திருக்கிறார்.
நிகழ்வுக்கு வந்த ஒருவராவது இராமக்கிருட்டிணனைப் பாராட்டும்
அடையாளமாக மாலை போடவில்லை, சால்வை போர்த்தவில்லை. நீங்கள் சாதனையாளர் எனக் கூறவில்லை.
அவருடன் கூட வந்த மகள் இரம்யாவைப் பற்றியும் குறிப்பிடவில்லை.
அவர் விருந்தினர்.