தெற்கு ஏமன் நாடு. தலைநகரம் ஏடன். கடைத் தெருவில் நடக்கிறேன்.
வட இந்தியரின் துணிக் கடை.
என்னுடன் நடந்து வந்த மலையாள நண்பர் சொன்னார்,
“இந்தத் துணிக் கடைக்கு
ஒரு வரலாறு உண்டு”.
ஆர்வத்துடன், “என்ன வரலாறு?” எனக்
கேட்டேன்.
“இது கூர்ச்சரத்தார் ஒருவரின்
கடை. இங்குதான் அம்பானி கணக்கு எழுதிப் பழகினார். பகலில் பிரஞ்சுக் கம்பனியில் பணி.
இரவில் துணிக் கடைக்குக் கணக்கு எழுதுவார்.
“பக்கத்திலே பரவீன்பாய் தாக்கர், இரிலையன்சு வணிகம்
என்ற பெயரில் கைக்கடிகாரம் படப்பிடிப்புக் கருவி விற்பனையில் ஓகோ எனப் பணக்காரராய்
இருந்தார். பென்சுக் காரும் வைத்திருந்தார்.
“பிற்காலத்தில் இரிலையன்சு நிறுவனத்தைக் கட்டியெழுப்பி,
இந்தியாவின் கோடிகோடீச்சுரர்களுள் ஒருவராகிய, அம்பானியின் எளிமையான தொடக்கம் 1953இல்
இந்த ஏடன் தெருக்களில்”
என என் மலையாள நண்பர் சொன்னார்.
ஏடன் கடைத் தெருவில் மெய்சிலிர்த்து நின்றேன்.
1973ஆம் ஆண்டு. ஓர் அமெரிக்க நாட்டு இளைஞன்,
பல்கலைப் படிப்பு முடித்தவன். 20 வயதைத் தாண்டியவன். தாடியும் கம்பலை உடையுமாய்த் தில்லியில்
இருந்து இமயமலை அடிவாரம் நோக்கி நடக்கிறான்.
ஆன்ம ஈடேற்றக் குருவைத் தேடுகிறான். திட்டி
விரட்டும் ஞானிகளைிடை வாழ்கிறான். ஆப்பிள் பழங்களை ஞானிகள் இவன் மீது எறிந்து விரட்டுவர்.
ஆன்ம நாட்டத்தில் திளைக்கிறான்.
அமெரிக்கா திரும்புகிறான். காலப்போக்கில்
அவன் தலைமை தாங்கிய வணிக நிறுவனத்தின் பெயர் ஆப்பிள். உலகின் கோடிகோடீச்சுரர்களுள்
ஒருவனாக இறக்கிறான்.
அவனே ஆப்பிள் நிறுவனத் தலைவன், வழிகாட்டி,
இசுடீவன் யொப்சர். “உலகம் இந்தியாவுக்கு நன்றி உடையதாக இருக்கவேண்டும்.
அவர்கள் உலகுக்குத் தந்ததே சுழியம். அதுவே கணிணியில் கரு” என
நன்றி உணர்வோடு சொல்பவர் இசுடீவன்
யொப்சர்.
படித்து நான் மெய்சிலிர்ப்பேன்.
தெருத் தெருவாகச் செய்தித் தாள் விற்ற மாணவன்
உலகம் போற்றும் தொழிநுட்பக் கண்டுபிடிப்புகளின் பிதாமகனான தொமசு அல்வா எடிசன்.
1847இல் பிறந்தவர், தனது 21ஆவது வயதில்1868இல் தன் முதல் கண்டுபிடிப்பால் தேர்தலில்
வாக்களுக்கும் முறையை எளிதாக்கினார்.
அவர் வாழ்க்கை வரலாற்றைப் படித்து மெய்சிலிர்ப்பேன்.
அறைக்குள் நுழைகிறேன். சொகுசுக்குச் சொகுசு,
வசதிக்கு வசதி, தொழிநுட்பத் திறன் எதிலுமே குறையாத அறை.
அந்த அறைக்குள் பழைய ஈருருளி. காட்சிப் பொருளாக.
என்னை அழைத்துச் சென்ற உதவியாளரிடம் கேட்கிறேன்,
“ஏன் இங்கே இந்த ஈருருளி?”
“ஐயாவின் நினைவுப் பொருள். சென்னைக்கு வந்த
புதிதில், இதே சைதாப்பேட்டையில், ஐயாவும் அவர் அண்ணனும் தெருத் தெருவாகச் செய்தித் தாள்
கொண்டு சென்று விற்ற ஈருருளி. நினைவுக்குத் தன் அறையில் வைத்திருக்கிறார்” என
உதவியாளர் சொன்னார்.
இந்தியா வெங்கும் பல்வேறு வணிகத் தளங்களில்
அகலக் கால் பதித்து வெற்றிக்
கொடி நாட்டி, விரைந்து வளரும் தமிழகத்தை உருவாக்கிய சிற்பிகளுள் ஒருவராகிய, விஜிபி
உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர், செவாலியர், முதுமுனைவர், கவிச்சக்கரவர்த்தி, கலைமாமணி,
தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர், தென்னிந்தியாவின்
முன்னணித் தொழிலதிபர் வி. ஜி. சந்தோசம் அண்ணாச்சியின்
அறையே அந்த அறை.
நான் மெய்சிலிர்த்து நின்றேன். அவர் என்
அருமை நண்பராதல் நான் வாழ்வில் பெற்ற பேறு.
அத்தகைய நண்பர் ஒருவரே யாழ்ப்பாணத்தின் எசுரிஆர்.
அவரை என் நட்பு வட்டத்தில் கொண்டேன் என்பதால் எனக்குப் பெருமை. ஏன்?
அமெரிக்கா, ஒகையோ, மிலானில் 1850களில் தொமசு
அல்வா எடிசன் செய்தித் தாள்களை விற்று வாழ்வைத் தொடங்கியவர்.
தெற்கு ஏமன் தலைநகர் ஏடனில் 1950களில் துணிக்
கடையில் இரவுக் கணக்கு எழுதி வாழ்வைத் தொடங்கியவர் மும்பையின் இரிலையன்சு அம்பானி.
சென்னை, தைாப்பேட்டையில் 1950களில் தெருத்
தெருவாகச் செய்தித் தாள் விற்று வாழ்வைத் தொடங்கியவர் சென்னையின் சந்தோசம் அண்ணாச்சி.
அமெரிக்காவில் எருமைப் பால் விற்றுப் பின்னர்,
இந்திய இமய அடிவாரத்தில் கம்பலை உடையுடன் ஞானத் தேடலில் திளைத்தவர் ஆப்பிளின் இசுடீவன்
யொப்சர்.
1950களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பேருந்து
நிலையத்தில் மரத்தடியில் பலகைக் கடை விரித்துத் தோடம்பழம் விற்று வாழ்வைத் தொடங்கியவர்
சின்னத்துரை தியாகராசா என்ற எசுரிஆர்.
யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி
மாநாடு நடத்த முற்பட்டு, 1973 பிற்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். இலங்கை அரசு
மாநாட்டுக்குத் தடை விதித்திருந்த காலம்.
அரசின் கெடுபிடிகளை மீறி மாநாட்டை நடாத்தும்
உறுதியில் பேராசிரியர் சு. வித்தியானந்தன், வண. பிதா தனிநாயகம் அடிகளார், திருமதி புனிதம்
திருச்செல்வம், வி. எசு. துரைரைசா ஆகியோருடன் இணைந்து நான் பணியாற்றினேன்.
அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நான் தனியனாக
இருந்தேன். மற்றவர்கள் வந்து போவார்கள்.
என்னைக் கண்டால் தூர விலகினர் பலர். என்னை
ஆர அணைத்து ஆதரவு தந்தனர் சிலர். முன் பின் தெரியாத அந்த முகங்களுள் ஒருவர் எசுரிஆர்.
அவர் அப்பொழுது திரைப் பட விநியோகத்தில் முன்னணியில் இருந்தார். செல்வந்தராக இருந்தார்.
மாநாடு நடத்த நிதி வழங்கினார், வண்டியை ஓட்டுநருடன் தந்தார், தன் மாளிகை வீட்டில் வெளிநாட்டவரைத்
தங்க வைத்தார். அனைத்துப் பேராளர்களுக்கும் தன் வீட்டில் உணவு விருந்தோம்பினார்.
அரசின் தடைகள் ஒருபுறம். அரச அலுவலர் புறக்கணிப்பு
மறுபுறம்.
என்னைப் பார்த்து அஞ்சி விலகியோர் ஒருபுறம்.
மாநாட்டைக் குழப்ப வேண்டும் என்ற அரசு சார் தமிழர் மறுபுறம்.
இவற்றை மீறி, அச்சமில்லை எனத் தமிழுணர்வு
பீறிட, மாநாட்டை வெற்றிகரமாக நடத்த ஆதரவு அளித்த பெருந்தகை எசுரிஆர்.
அவருடைய அண்ணன் 1950களில் பேருந்து நிலைய
ஓரத்தில் நடத்திய இராசா கூல் பார் கடையை நன்றாக அறிவேன்.
அங்கேயே இவர் இரவில் கணக்கு எழுதத் தொடங்கினார்.
என் தந்தையாரைப் போலவே காசோலை எழுதுவதற்காக ஆங்கில அரிவரியைப் படித்தார்.
திரையரங்குகளில் கழிவாகும் படச் சுருள் வெட்டுகளை
எடுத்து ஒட்டுவார். தானே இணக்கிய கருவியில் வெள்ளை வேட்டித் திரையில் வீட்டில் ‘திரைப்
படம் ஓட்டுவார்.’
பகலில் தோடம்பழ வியாபாரம். இரவில் ஒட்டல்
பொட்டலலான படச் சுருள் ஒட்டித் திரை ஓட்டம்.
எடிசனுக்கும் அம்பானிக்கும் சந்தோசம் அண்ணாச்சிக்கும்
இசுடீவன் யொப்சருக்கும் இருந்த தன் முனைப்பு, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை,
நினைத்ததை முடிப்பவன் என்ற இறுக்கமான மன உறுதி, இவை எசுரிஆரின் வளர்ச்சியின் அடித்தளங்கள்.
உயிரோடு கலந்து, ஊனோடு நனைந்து, உள்ளத்தோடு
பிணைந்த தமிழ் உணர்வு, சைவ நெறிப் பிடிப்பு அவரின் எசுரிஆரின் பண்பாட்டுத் தளங்கள்.
1974க்குப் பின்னர் எம் நட்பு வளர்ந்தது.
ஒருவர் மேல் மற்றவர் கொண்ட மதிப்புணர்வு மிகுந்தது. கேண்மைக்கு இலக்கணமாயது.கெழுதகைமைக்கு
உருவகமானது.
அண்மையில் அன்னாரது யாழ்ப்பாண இல்லம் சென்றிருந்தேன்.
செல்லும் வாய்ப்பை உருவாக்கியவர் இலண்டன் இரஞ்சன். எசுரிஆரையும் அவர்தம் அருமை மக்களையும்
கண்டேன்.
பலதையும் பேசினோம்.
“சோனியின் கபுசிக்கி கயிசா, இரிலையன்சின்
அம்பானி, ஆப்பிளின் இசுடடீவன், கொழும்பின் விரிவி தெய்வநாயகத்தார் எனச் சாதனையாளரின்
வாழ்க்கை வரலாறுகள் உலகுக்குத் தெரியுமாறு நூல்களாயின” எனச் சொன்னேன்.
“அந்த எடுத்துக் காட்டுகளே பலரை ஊக்குவிக்கின்றன”
என்றேன்.
“யாழ்ப்பாணம் ஈந்த சாதனையாளர், தொழில் முனைவோர்,
வெற்றியாளர் வாழ்க்கை வரலாறுகள் மிக மிகக் குறைவு” என்றேன்.
“பலகைக் கடையில் இருந்து பட மாளிகைகள் வரை
உயர்ந்த வரலாறு யாருக்குத் தெரியும்?
“தமிழகத் திரை உலகில் உங்களின் செல்வாக்கு,
செல்வநாயகம் தொடக்கம் “ஈழ அரசியலாரிடம் உங்களின் செல்வாக்கு யாருக்குத் தெரியும்?
“சைவ உலகுக்கு நீங்கள் ஆற்றிய அரும் பணிகள்
யாருக்குத் தெரியும்?
“உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதுங்கள்” என்றேன்.
என் தாழ்மையான உரிமை சார்ந்த வேண்டுகோளை ஏற்றார்.
இந்த நூல் அதன் விளைவு.
தமிழில் வந்தால் தமிழரே தெரிந்து கொள்வர்.
சிங்களத்தில் ஆங்கிலத்தில் உலக மொழிகளில் உங்கள் வாழ்க்கை வரலாறு வெளிவரவேண்டும்.
எடிசனுக்கோ, அம்பானிக்கோ, சந்தோசம் அண்ணாச்சிக்கோ,
விரிவி தெய்வநாயகத்தாருக்கோ, இசுடீவனுக்கோ உள்ள சிறப்புகளெல்லாம் உங்களுக்கும் உள.
அவற்றுக்கு மேலும் உங்களிடம் உள.
அவர்களுக்கு இருந்த பரந்த வாய்ப்புகள் உங்களுக்கும்
இருந்தால் அவர்களை விடச் சிறந்த சாதனையாளராக இருந்திருப்பீர்கள்.
பல்லாண்டு பல்லாண்டு நலமாகப் புகழுடன் வாழ்ந்து
உலகுக்குப் பயனுறுத்த, நீங்கள் நாள்தொறும் நீங்கா நினைவுடன் போற்றும் வண்ணை அருள்மிகு
கதிரேசப் பெருமானார் அருளுண்டு.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
09 மார்கழி 2048 (24.12.2017)
No comments:
Post a Comment