வணக்கம்
1979இல் மறவன்புலவை விட்டுப் புறப்பட்டேன்.
1986இல் சென்னை சென்றடைந்தேன்.
மீண்டும் மறவன்புலவில் வாழ்வது என 2010 ஆவணியில் வந்தேன்.
- அக்காலத்தில் பிரபாகரனின் தாயார் வல்வெட்டித்துறையில் மருத்துவமனையில் இருந்தார். திரு. வேலுப்பிள்ளையும் துணைவியாரும் நெடுங்காலமாக என்னுடன் பழகி வருபவர்கள். 2001இலோ முன்பின்னதாகவோ முசிறியிலிருந்த அவர்களுக்குக் கடவுச்சீட்டு முதலிய ஆவணங்கள் பெற்று இலங்கைக்கு அனுப்பி வைக்கத் துணை நின்றேன்.
- பிரபாகரின் தாயாரை வல்வெட்டித்துறை மருத்துவமனையில் பார்க்கச் சென்று வந்த மறுநாள் சாவகச்சேரிப் படைமுகாமிலிருந்து அழைப்பு. நீ இந்தியாவில் என்ன செய்கிறாய் என்று தெரியும் வா முகாமுக்கு விசாரணைக்கு என.
- முகாமுக்குச் செல்லாமல் இரவோடிரவாகக் கொழும்பு சென்று விமானமேறி மறுநாளே சென்னை சேர்ந்தேன். 2012 ஆவணி வரை ஈராண்டுகள் மறவன்புவுக்கு வரமுடியவில்லை. திரு. வாசுதேவ நாணயக்காரா, வண. பத்தேகமைத் தேரர் முதலாய சிங்கள நண்பர்கள் இவ்வாறு எனக்கு அறிவுறுத்தினர்.
ஒருவாறு 2012 ஆவணியில் மறவன்புலவு வந்தேன்.
வந்த உடனேயே மறுவாழ்வு முகாமுக்கு அழைத்துச் செல்ல மறவன்புலவு வந்தார்கள்.
என்னோடு பேசிய
1. காவல்துறைப் புலனாய்வு (NIB),
2. பயங்கரவாதப் புலனாய்வு அமைப்பு TID,
3. உள்ளூர் படைப் புலனாய்வு
எனத் தொடர்ச்சியான விசாரணைகள்.
என்மீது களங்கம் கற்பித்து உள்ளூரவர் பலர்
1. படைமுகாமில் நேரில் சென்றும்
2. கடித மூலமாகவும் (பெட்டிசன்) கொடுத்த புகார்கள்.
இவற்றைத் துரும்பாகக் கருதி இங்கிருந்து பணிபுரிகிறேன்.
புலனாய்வாளரின் துருவலில் எடுத்துக்காட்டுக்கு ஒன்று:
வினா: கிளிநொச்சியில் 2003 தொக்காப் பேட்டியில் பிரபாகரனைத் தலைவர் என்று கூறிய குறுந்தட்டு எங்களிடம் உண்டு. பயங்கரவாதி எப்படித் தலைவனாவான்? நீ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த சான்றுகள் உள.
விடை: அவ்வாறு சொன்னேன். அப்பொழுது பிரபாகரன் தமிழரின் அரசியலை முன்னெடுத்த தலைவர். தலைவர் என்று சொல்லாமல் பயங்கரவாதி என அவரை அழைத்திருந்தால் அப்போதைய சிங்களப் பிரதமர் மற்றும் சிங்களக் குடியரசுத் தலைவர் இருவரையும் அவமதித்தவனாவேன். 2000இல் அவர்கள் பிரபாகரனைத் தமிழர் தலைவர் எனவும் தம்மைச் சிங்களத் தலைவர் எனவும் ஒப்புக்கொண்டல்லவா புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு வந்தார்கள்.
இத்தகைய பல வினாக்கள், தொடர்ச்சியாக 3, 4 நாள்கள்.
என் விடைகளுடன் சென்றவர்கள் கொழும்பிலிருந்து வந்த TID.
மீண்டும் வரவில்லை.
இங்கு நான் இருப்பதால் பல்வேறு தரப்பினருக்கு உதவுகிறேன்.
நான் ஒருங்கிணைக்கும் 28 பொதுப் பணிகள்.
- மறவன்புலவு 10 ஆண்டுகள் 1999 - 2009 உயர் பாதுகாப்பு வலையப் பூமி. சுவிசு அரசு 300 வீடுகள் தந்தனர், சுவிசு நாட்டின் தலைநகர் பேர்ண் சென்று சுவிசு அரசின் அனைத்துலக உதவிக் கரத்தினருக்கு நன்றி சொல்லி வந்தேன்.
- மறவன்புலவுக்கான மின்சாரத் திட்டத் தடங்கலை நாஉ சந்திரகுமார் வழி போக்கினேன்.
- மறவன்புலவுக்கான பேருந்து நீட்டத்தைக் கோண்டாவிலில் பேசிக் கொணர்ந்தேன்.
- ஊதுவத்தி உருட்டும் தொழிலில் இந்திய வல்லுநர்கள் மறவன்புலவு வந்து 40 பெண்களைப் பயிற்றுவித்தனர். ஊதுவத்திக்கான சேர்க்கையில் வெடிகுண்டு இருக்கிறாத என அறியப் படைப் புலனாய்வினர் வந்தனர், இந்திய வல்லுநரைத் துளைத்தெடுத்தனர்.
- 2013 தொடக்கம் கோயிலில் 100 பானைகள் வைத்துத் தை முதல் நாள் பொங்குகிறோம். தம் அனுமதி இல்லையே என்ற படைத் தளபதியிடம் அனுமதி பெறாமலே செய்வோம் எனச் சொன்னோம். செய்கிறோம். சென்னையிலிருந்து நல்லி செட்டியாரின் அன்பளிப்பாக 100 புடைவைகளை, 100 வேட்டிகைள ஒவ்வொரு பொங்கல் விழாவுக்குக் கொணர்கிறோம். மக்கள் தத்தம் பண்பாட்டு அடையாளப் பேணலுக்கு உரமூட்டும் நிகழ்ச்சி. கிளிநொச்சியிலும் மற்ற இடங்களிலும் இதேபோன்ற பொங்கல் விழாக்களைப் பாரிய அளவில் கொண்டாடுவதை மரபாக்கி வருகிறோம்.
- புழுப்பிடித்த பருப்பை அவித்து மறவன்புலவு மாணவருக்கு நண்பகல் உணவாக்கிக் கொடுப்பதை நிறுத்த உண்ணாநோன்பிருந்தேன். சாவகச்சேரிப் படைத்தளபதியே நேரில் வந்து என்னை அப்புறப்படுத்தினார். அன்றிலிருந்து மாணவர் நல்லுணவு உண்கின்றனர்.
- மறவன்புலவு மாணவருக்கு, தமிழ் மொழி, கணிணி, ஆங்கிலம் பயிற்றுவித்து வருகிறேன். இதுவைர 40 மாணவர்கள் பயின்றுளர். வகுப்பு நேரம் புலர் காலை 0430 தொடக்கம் 0545 வரை.
- ஏர்விழா மங்கலம், நாள் விதைப்பு, புத்தரிசி சமைத்தல், அறுவடை விழா என வேளாண் பண்பாட்டுக் கூறுகளை மறவன்புலவில் மீட்டுருவாக்கினேன்.
- மழைக்காலப் பெரும் போகத்தை மட்டும் செய்து வந்த வேளாண் மக்கள், மழையைத் தொடர்ந்த காலங்களிலும் சிறுதானியம் விதைக்க ஊக்குவிக்கிறேன். என் தோட்டத்தில் வெற்றிகரமாகக் கடந்த இரு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்துகிறேன்.
- மறவன்புலவில் 1996இல் காணாமல் போனவரைத் தேடிப் பூசா முகாம் சென்றேன். ஒருநாள் முழுவதும் தங்கி, பதிவேடுகளைப் புரட்டித் தேடினேன். இன்றைய வடமாகாண ஆளுநர் அன்றைய மகிந்த அரசில் அமைச்சர் றெசினால்டு கூரே உரிய அலுவலர்களுக்கு ஆணையிட்டு முழுமையாக ஒத்துழைத்தார்.
- தென்மராட்சி தெற்கில் 1996 படைத் தேடுதலில் அள்ளிச் சென்ற 84 இளைஞர், அவர்களுள் காணாமல்போன 22 இளைஞர், பின்னர் காணாமல் போன நால்வர், இவர்களைப் பற்றிய படங்கள், பிறப்புச் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள், காவல் நிலைய முறைப்பாடுகள் பிற யாவையும் ஏ4 அளவில் 32 பக்க ஆவணமாக்கி, யாழ்ப்பாணம் வந்த ஐநா மனித உரிமை விசாரணைக்குழுவிடம் கிளிநொச்சி சென்று விளக்கிக் கையளித்தேன்.
- யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடலட்டை வளரப்புத் திட்டத்தை முன்னெடுக்கக் கொரியாவில் பயிற்சி பெற்ற யாழ் இளைஞரை வழிகாட்டி ஊக்குவிக்கிறேன்.
- கோயம்புத்தூர் விதைகள் பெற்று, விறகுக்கான 27 இலட்சம் சவுக்கு மரங்கள் வளர்க்கும் தோப்புகள் உருவாக்கும் திட்டத்தை யாழ் அரச அதிபரும் இந்தியத் துணைத்தூதரும் இணைந்து செய்ய ஒருங்கிணைக்கினேன்.
- தமிழகத்தின் 100 கவனக நினைவாற்றலரை வட, கிழக்கு மலையகப் பாடசாலைகள் தோறும் அனுப்பி கவனகக் கலையை மீட்டுருவாக்க முயல்கிறேன்.
- 16 மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் 7 அடி உயரத் திருவள்ளுவர் சிலையைத் தமிழகத் தொழிலதிபர் வி சி சந்தோசத்திடம் அன்பளிப்பாகப் பெற்றுக் கல்வி இராசாங்க அமைச்சர் வி எசு இராதாகிருட்டிணன் ஒத்துழைப்புடன் நிறுவுவதில் ஒருங்கிணைக்கிறேன். 2016 ஆனியில் திறப்பு விழாக்களுக்காகத் தமிழக நீதிபதிகள், துணைவேந்தர்கள், தமிழ் அறிஞர்கள் கொண்ட ஐம்பதின்மர் குழு இலங்கை வருகிறது. இவ்விழாக்களில் திருக்குறள் சிங்கள மொழிபெயர்ப்பில் 1000 படிகளை அச்சிட்டு வழங்க மாத்தளை இந்துக் கல்லூரியினர் முன்வந்துளர்.
- பல்கலைக் கழகங்களுக்குக் கலைத்துறை, நினைவாற்றல் துறை, தமிழ் அருச்சனைச் துறைகளில் இந்திய வல்லுனர் பங்களிப்பை ஒருங்கிணைக்கிறேன்.
- இணுவில் பொது நூலகம் மற்றும் சனசமூக நிலையத்தார், அண்ணா தொழிலக உரிமையாளர் திரு. சு. பொ. நடராசா ஆகியோர் கேட்டுக் கொண்டாதால் தமிழக அரசை அணுகி, தமிழ் வளர்ச்சித் துறை, தொல்லியல் துறை, ஆசிவியல் நிறுவனம், தமிழ்ப் பல்கலைக் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆகிய நிறுவனங்களின் வெளியீடுகளைப் பெற்றேன். தனியாரை அணுகி, பேராசிரியர் அ ச ஞானசம்பந்தன், பேராசிரியர் அரங்க இராமலிங்கம், பேராசிரியர் நக்கீரன், பேராசிரியர் மலையமான், பேராசிரியர் சரளா இராசகோபாலன், கவிஞர் ஏர்வாடி இராதாகிருட்டிணன் ஆகியோரின் அன்பளிப்புகளைப் பெற்றேன். ஆக மொத்தம் 3000த்துக்கும் கூடுதலான தலைப்புகளைப் பெற்றுச் சென்னையிலிருந்து இணுவிலுக்கு அனுப்பினேன்.
- தமிழரசுக் கட்சியின் நடுவண் குழு உறுப்பினராகி, மிதவாதிகளிடமிருந்து வரும் கொள்கைப் பிறழல்களுக்கு அரணாக முயல்கிறேன். அவர்கள் வழியைத் தவறு எனப் பகிரங்கமாக, அனந்தி மற்றும் சிவகரனுடன் ஊடக வழி பரப்புகிறேன். சிவகரனையும் அனந்தியையும் நீக்கியவர்கள் என் வரலாற்று மூத்த நிலை கருதி இதுவரை நீக்கவில்லை.
- சென்னையில் பாரதிய ஜனதாக் கட்சி நடத்திய இலங்கைத் தமிழர் சிக்கலுக்கு இந்தியா செய்யவேண்டியன பற்றிய அறிஞர் சார்ந்த உள்ளகக் கருத்தரங்குக்குச் சுமந்திரன் வந்திருந்து 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைக்கு வருமானால் அதுவே சிக்கலுக்கு முழுமையான தீர்வு எனக் கூற, நேரடியக மறுக்கும் பண்பாட்டுக் குறைவைத் தவிர்த்து வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஒரே ஆட்சியில் சிங்களவரும் தமிழரும் இணைந்து வாழமுடியாதெனக் கூறினேன். சுமந்திரன் தமிழரசுக் கட்சி சார்பில் வந்தவர். நான் பாஜகட்சியின் சிறப்பு அழைப்பாளர். வேறு தகுதி இல்லை.
- ஈழத் தமிழர் இழந்த மண் என்ற 32 பக்க நூல், தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் என்ற 80 பக்க நூல், தமிழக மீனவரைத் தாக்கலாமா என்ற குறுந்தட்டு யாவும் இலங்கையில் விற்பனைக்கு விட்டுள்ளேன். யாழ்ப்பாணம் தான் தொலைக்காட்சியில் தமிழக மீனவர் பற்றிய என் நேரலை நேர்காணலுக்கு மறுநாள் என்னைப் பேட்டி கண்டவர் பதவி பறிபோனதுக்கு அங்கு பணி புரியும் தயா மாஸ்ரர் வழியாக வந்த உயர் மட்டத் தலையீடே காரணம் என்பர் தொக்கா நிறுவனத்தினர்.
- தந்தை செல்வா நினைவுத்தூண் திருத்தங்களுக்காக நாஉக்களிடம் நிதி திரட்டி ஒப்பந்தகாரரை ஏற்படுத்த ஒருங்கிணைக்கிறேன். 26.4.16 தந்தை செல்வா நினைவுப் பேருரை நிகழ்வுக்கான ஆயத்தங்களில் தந்தை செல்வா அறங்காவல் குழுவினருடன் சேர்ந்து பணிபுரிகிறேன். நினைவு அறங்காவல் குழுவின் தொடக்கச் செயலாளராக இருந்து நினைவுத்தூண் (1977-1980) கட்டுவித்தேன்.
- வளர்ச்சித் திட்டங்களுக்கான பாரிய நிதி உள்வரவுகளை மண்ணுக்கு ஏற்றதான திட்டங்களில் முதலீடு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர், அரச அதிபர் போன்றேக்கு அப்பப்போ ஆலோசனைகள் வழங்குகிறேன்.
- தென்னமரவாடி போன்ற வளர்ச்சியற்ற சிற்றூர்களுக்கு அடிக்கடி சென்று அம்மக்கள் அங்கு தங்குமாறும் இடம்பெயராது தடுப்பதற்குமுரிய தளங்களை ஆட்சியருடன் வாதிட்டும் நன்கொடையாளரை ஊக்குவித்தும் வலுவாக்க முயல்கிறேன். வட இந்திய பிகாரிலிருந்து இந்து அமைப்பு வந்து பார்த்னர். அங்குள்ள கோயிலுக்கு உதவுவதைத் தடுக்கும் புத்த பிக்குகளைக் கண்டனர். வட இந்தியாவுக்கு இச்செய்திகளைக் கொண்டு சென்றனர். இவர்கள் பயணத்தை ஒருங்கிணைத்தேன்.
- இலங்கை இந்துக்களின் நிலையை வட இந்திய இந்து அமைப்புகளிடை உணர்த்தவும் ஆவன செய்கிறேன், இதற்காகக் கோவா மாநிலம் சென்று வட இந்திய இந்துத் தலைவர்கள் நடுவே பேசினேன்.
- அகில இலங்கை இந்து மாமன்றத்தினர் தம் ஆட்சிக்குழுவில் என்னையும் சேர்த்துள்ளதாகத் தெரிவித்தனர்.
- இலங்கை முழுவதும் இந்துக் கோயில்களில் உயிர்ப் பலியைத் தடைசெய்யச் சிட்னி சிவா பசுபதியிடம் வரைவுச் சட்டமூலம் எழுவித்தேன். இந்துக் கலாச்சார அமைச்சர் நாடாளுமன்றத்தில் சட்டமாக்க ஒருங்கிணைக்கிறேன். கோயில்களில் உயிர்ப்பலிக்கு எதிராகச் சமூக விழிப்புணப்வுக்கா உண்ணா நோன்புகள், வட்ட ஆட்சியர்களின் கூட்டங்களில் பங்கேற்றல், கோயிலார்களுடன் பேசுதல், வழக்குகளுக்கு உதவுதல் (நீதிபதி இளஞ்செழியனின் இடைக்காலத் தடைத் தீர்ப்பு நல்ல முன்னேற்றம்) எனச் சைவ மகா சபை, மருத்துவர் நந்தகுமார், சின்மயா மிசன் சுவாமி சைதன்யர் ஆகியோருடன் அறவழிப் போராட்டக்குழுவை ஒருங்கிணைக்கிறேன்.
- திருமுறைகளைக் கல்முனைச் சிங்கள மகாவித்தியாலயத் துணை அதிபர் திரு வடிவேலு அவர்கள் வழி சிங்களத்துக்கு மொழிபெயர்ப்பிக்கிறேன். திருவாசக மொழிபெயர்ப்பபை இந்துக் காலாச்சார அமைச்சே வெளியிடுகிறது. ஒன்பதாம் திருமுறையின் சிங்கள மொழிபெயர்ப்புத் தயாராகவுள்ளது. அதையும் அவர்களே வெளியிடுவார்கள்.
- அறவழிப் போராட்டக் குழு வழியாக அறவழிப் பயிற்சிகளை முன்னெடுக்கிறேன். என் பயிற்சியையக் கேள்வியுற்ற வட மாகாண முதலமைச்சர் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளிக்கக் கேட்டுள்ளார்.
- சென்னையில் கடந்த 16 ஆண்டுளாக நீதிமன்றத்தில் இந்திய நடுவண் புலனாய்வுப் பிரிவு (CBI) முடக்கி வைத்திருக்கும் என் கடவுச் சீட்டை நானே நேரில் நீதிமன்றத்தில் வாதாடி, அன்பர் ஒருவர் பிணை நிற்பதால், ஆண்டுக்கு ஒருமுறை பயணத்துக்காக எடுத்து வருகிறேன். ஒவ்வொரு பயணத்துக்கும் நீதிமன்ற அனுமதியுடன் பல நாடுகளுக்குச் சென்று வருகிறேன்.
- சிங்கப்பூர் அரசு என் உள் வரவைத் தடுத்துள்ளது. ஒவ்வொரு முறை உள்புக முனையும் பொழுது திருப்பி அனுப்புவர். கனடா அரசு எனக்கு நுழைவனுமதி மறுத்துள்ளது. ஐநா வழங்கிய கடவுச்சீட்டுகளில் உலகெங்கும் 62 நாடுகளுக்குத் தங்குதடையின்றிப் பயணித்த நான், கடவுச் சீட்டு முடக்கத்தையும் நுழைவு தடைகளையும் தாண்டிச் சோர்வின்றிப் பயணித்துப் பணிபுரிகிறேன்.
- அரசியல் பதவி ஏதுமில்லாதவன்,
- மக்கள் வரிப்பணத்தில் வாழ்வு நடத்தாதவன்.
- என் உழைப்பில், ஓய்வூதியத்தில் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.
- மற்றவர்களுக்குத் துன்பம் தாராத பணிகளைச் செய்கிறேன்.
1 comment:
GREAT TO KNOW THIS..KEEP IT UP! WORLD TAMILS NEED YOUR GREAT SEVICES! ESTABLISH A "WORLD TAMIL MUSEUM" IN JAFFNA ALONG WITH ARU.THIRUMURUGAN! GOD BLESS,GUIDE & PROTECT YOU!
Post a Comment