தை 9, 2047 (23.01.2016) யாழ்ப்பாணம், மருத்துவமனை வீதி,
தான் தொக்கா அலுவலகம்.
தான் தொக்கா அலுவலகம்.
23.01.இரவு 1000 மணி தொடக்கம் தான் தொக்காவின் நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். வடகடலில் இந்திய மீனவர் அன்றைய பேசு பொருள்.
மூன்று பகுதிகளாக உன்குழாயில் youtube இல் அந்தப் பேட்டியைச் சேர்த்துள்ளேன்.பார்க்க. பகிர்க. கருத்துரைக்க.
காரசாரமான கருத்துகள் அவை. அதனாலன்றோ என் மனத்தில் நெருடல். என் பங்களிப்பால் என் கருத்தோட்டத்தால் ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டாரா?
அவர் பணியில் இருந்து நீங்கியமைக்கு நான் காரணமல்ல என அவர் பலமுறை என்னிடம் சொல்லியிருந்தாலும், என் கருத்துகள் கூறி நேரலையாக ஒளிபரப்பிய மூன்றாம் நாள் அவர் பணியில் இல்லை எனும்பொழுது என் மனத்தில் நெருடல் வராதா?
தொலைக்காட்சிகளில் 1987 தொடக்கம் என் கருத்துகள் வெளிவரத் தொடங்கின. சன் தொலைக்காட்சி தொடங்க முன்னர், கலாநிதி மாறன் மாதந்தோறும் காணொளி தயாரித்துக் கொடுத்துவந்தார். பூமாலை என்ற பெயரில் வந்த தொடரில் என் கருத்துப் பதிவாகி வந்துகொண்டிருந்தது. கலாநிதி மாறன் என் அன்பராகிக் காந்தளகத்துக்கு வந்து போய்க்கொண்டிருந்த காலம்.
தொடர்ச்சியாகப் பூமாலையில் கருத்துக் கூறினேன், பின்னர் பொதிகை, சன், சக்தி, செயா, மக்கள், புதிய தலைமுறை, வின், தான் (சென்னை) என்பன தொடர்ச்சியாக என் கருத்துக்களமாயின. அரசியல் பேசினேன், அறிவியல் பேசினேன். பதிப்பியல் பேசினேன். தமிழியல் பேசினேன், வளர்ச்சித் திட்டங்கள் பேசினேன். நேரலைகளாக, அறிஞர், அரசியலார், திரைத்துறையார் எனப் பலருடன் ஒருவனாகக் காட்சிப் பதிவுகளில் கலந்தேன்.
யாழ்ப்பாணத்தில் தான் தொலைக்காட்சியினர் என்னை அழைப்பார்கள்.