Thursday, February 15, 2007
நான் ஏன் எழுதுகிறேன்?
பரந்த வயல்வெளி. நடுவே பிள்ளையார் கோயில். அருகே குளம். அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் எங்கள் வீடு. ஒரு நாள் காலை நேரம். என்னைத் தன் தோளில் சுமந்து சென்றவர் அப்பா. கூட வந்தவர் என் தாயாரும் என் அக்காவும். வெற்றிலை, பாக்கு, பழம், அரிசி. தாம்பாளங்கள் இவற்றுடன் அப்பாவின் உதவியாளர்கள் பின்னாலே வந்தனர். வயல் வரப்புகளில் நடந்து கோயிலுக்குப் போனோம். அங்கே முன் மண்டபத்தில் என் தந்தையாரின் தாயாரும் அவரது தம்பியும் காத்து இருந்தனர். அன்று 1944ஆம் ஆண்டின் கலைமகள் பூசை. மறவன்புலவு வள்ளக்குளப் பிள்ளையார் கோயில் முன் மண்டபத்தில் தாம்பாளத்திலே அரிசியைப் பரப்பினர், அருகிலே நிறைகுடம் வைத்தனர், குத்துவிளக்குகள் ஏற்றினர். பழம், பாக்கு, வெற்றிலை, தேங்காய் யாவையும் சுத்தம் செய்து, காம்பு நீக்கி, அழகாக மற்றொரு தாம்பாளத்தில் அடுக்கி வைத்தனர். பழைய ஏட்டுக் கட்டு ஒன்றைத் தாம்பாளத்தில் என் தந்தையாரின் மாமனார் வைத்தார். அத்துடன் ஒரு புதிய பனை ஓலை. அருகில் இரும்பாலான எழுத்தாணி. ஊதுவத்தியும் சாம்பிராணிப் புகையும் மணந்தது. கற்பூரமும் ஏற்றினர்.சிவாச்சாரியார் சிவசுப்பிரமணியம் முதலில் கருவறையில் பூசை செய்தார்.பின்னர் வந்து முன் மண்டபத்தில் அமர்ந்தார். அவர் பக்கத்தில் என் தந்தையார் அமர்ந்தார். எதிரே என் தாயாரும் பிறரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.என் தந்தையார் தம் மடியில் என்னை இருத்தினார். என் வலது கையின் சுட்டு விரல் நுனியைத் தம் கைவிரல்களால் பிடித்து, தாம்பாளத்தில் அரிசித் தட்டில் எழுதுவித்தார். அனா... அனா.... அனா... என்று சொல்லியவாறே, அ என்ற எழுத்தை எழுதுவித்தார். எனக்கும் எழுத்துக்கும் இயற்கையைச் சாட்சியாக்கித் தந்தையார் ஏற்படுத்திய தொடர்பு அங்குதான், அப்பொழுதுதான்.அதன் பின்னர் புதிய பனை ஓலையை ஏடாக்கி, அதில் அகரம் முதலாத அஃகேனம் ஈறாக இருந்த எழுத்துகளை என் தந்தையார் சொல்ல நான் திருப்பிச் சொன்னேன். எனக்கு ஏடு தொடக்கிய நாள் அன்று. புதிய பனை ஓலையில் இரும்பு எழுத்தாணியால் என் தந்தையார் விரலுள் அகப்பட்ட என் விரல்கள் கிறுக்கின.பின்னர், கிடுகு வேய்ந்த எம் மண் வீட்டில், சாணம் பூசிய திண்ணைத் தரையில், மண் பரப்பி, என் சுட்டுவிரலால் எழுதக் கற்பித்தவர் என் தாயார். ஒரு பிடி சோறு, ஒரு வாழைக்காய்ப் பொரியல் துண்டு, நிலவின் ஒளியில் வீட்டு முற்றத்தில் ஓடுவதும் பிடி சோறு தின்பதும், பொரியலைக் கடிப்பதும், மணற் பரப்பில் அனா ஆவன்னா எழுதுவிப்பதுமாய் என் தாயாருடன் சில மாதங்கள் கழிந்திருக்கவேண்டும்.எனக்கும் எழுத்துக்கும் என் மூன்றாவது வயதில் இப்படித்தான் நெருக்கம் ஏற்பட்டது.படிப்படியாகச் சிலேற்றிலும் கொப்பியிலும் எழுதத் தொடங்கினேன். என் கையெழுத்தை விட என் அக்காவின் கையெழுத்து அழகாக இருக்கும். தாயார் சுட்டிக் காட்டுவார், அழகாக எழுதுமாறு காட்டித் தருவார்.ஆறாவது வகுப்பில், என் சக மாணவர் தங்கராசா பக்கத்தில் அமருவார். முத்துமுத்தான அவருடைய எழுத்துகள் என்னைக் கவர்ந்தன. அவரைப் போல எழுத ஆர்வம்கொண்டேன். வகுப்பில் குறிப்பு எழுதுவதில் அவர் வல்லவர். நான் விளையாட்டுத்தனமாக இருப்பேன். கவலையீனமாக இருப்பேன். அவர் கவனமாகக் குறிப்பு எழுதுவார்.வண்ணார்பண்ணையில் எங்கள் வீட்டுக்குக் கிட்டத்தான் அவரின் வீடு. மாலையில் அவரிடம் போய் அவர் கொப்பியை வாங்கிவந்து பாடக்குறிப்பைப் பார்த்து எழுதியபோது அவர் கையெழுத்துப் போலவே எழுதும் பழக்கம் வந்தது. என் எழுதும் முறையில் திருத்தத்தைக் கொண்டுவந்தவர் தங்கராசா. யாழ்ப்பாணத்தின் சிறந்த ஓவியர்களுள் ஒருவராக, கட்டடக் கலை வல்லுநராக இப்பொழுதும் யாழ்ப்பாணத்தில் தங்கராசா இருக்கிறார்.என் தந்தையார் 1952இல் யாழ்ப்பாணத்தில் அச்சகம் ஒன்றைத் தொடங்கினார். பள்ளி முடிந்ததும் மாலை வேளைகளில் அங்கு போவேன். அச்சடித்த தாள்களில் பிழை திருத்தம் செய்து கொண்டிருப்பவரோடு என்னைச் சேர்த்து விடுவார். பிழைகளைக் கண்டுபிடிக்கச் சொல்வார். பிறர் கண்டு பிடிக்காத பிழை ஒன்றைக் கண்டுபிடித்துச் சொன்னால், தேநீர்க் கடைக்கு அழைத்துச் சென்று போளி வாங்கித் தருவார். பிழை நீக்கி எழுதுவதற்குப் பழக்கியவர் என் தந்தையார்.வட்டுக்கோட்டைப் புலவர் சிவபாதசுந்தரனார், புங்குடுதீவு வித்துவான் ஆறுமுகம் போன்ற பலர் என் தந்தையாரிடம் வருவர். எழுத்து மற்றும் பிழை திருத்தப் பணிகளில் அவர்களுடன் சேர்ந்து கொள்வேன். அதுவே பின்னர் என் எழுத்துகளுக்கு செம்மையைத் தந்தது.பத்தாவது படித்துக் கொண்டிருந்த காலத்தில், என் தங்கையின் பள்ளியில் ஆண்டு மலருக்கு ஏதாவது எழுதித் தருமாறு தங்கையைக் கேட்டிருந்தனர். ஏதாவது எழுதித் தாங்கோ அண்ணை என அவர் என்னைக் கேட்டுக்கொண்டே இருந்தார். ஒருநாள் வந்து, அன்றே கடைசி நாள் என்றார்.கா கா என்று கரைந்தது காகம் எனத் தொடங்கி, எட்டு வரிகளை எழுதி முடித்துத் தங்கையிடம் கொடுத்தேன். அவரும் அந்த வரிகளைத் தன் ஆசிரியரிடம் கொடுக்க, பள்ளி மலரில் என் தங்கை பெயரில் கவிதையாக வெளிவந்தது. எனக்கு எழுதும் ஆற்றல் உண்டு என நம்பி, என்னை விடாமல் கேட்டு, எழுதுவித்த என் தங்கையே என் எழுத்து முதன்முதலாக அச்சில் வரக் காரணமானார்.அவ்வாறு எழுதுதற்கு எனக்குத் தூண்டுதலாக இருந்தவர் என் வகுப்புத் தோழர் சண்முகசுந்தரம். தான் பார்த்த திரைப் படக் கதையை எனக்குக் கூறுவார். தான் படித்த பாரதியாரின் கவிதை வரிகளைக் கூறுவார். பாரதிதாசனின் கவிதை வரிகளைக் கூறுவார். நான் சுவைத்த வரிகளை அவரிடம் கூறுவேன். நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் கடிதம் எழுதுகையில் கவிதை நடை இருவரது கடிதங்களிலும் வெளிப்படும். இப்பொழுது தோழர் சண்முகசுந்தரம் நோர்வேயில் பல்கலைக் கழகம் ஒன்றில் வேளாண்துறையில் பேராசிரியராக உள்ளார்.சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தேன். தொடக்க நாள்களில் லூயி பிஷரின் காந்தியடிகள் பற்றிய ஆங்கிலப் புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. காந்தியடிகளை எனக்கு முழுமையாக அறிமுகம் செய்த நூல் அதுவே. காதி பவன் சென்று காந்தியடிகளின் நூல்கள் பலவற்றை வாங்கிப் படித்தேன். புவிக்குள்ளே முதன்மையுற்றாய் என்ற தலைப்பில் காந்தியடிகளைப் பற்றி நான் எழுதிய கட்டுரை, 1960 அக்டோபர் 2இல் யாழ்ப்பாணம் ஈழநாடு இதழில் வெளியானது. அப்பொழுது ஈழநாடு ஆசிரியராக இருந்தவர் திருவையாறு கே. பி. ஹரன். நேரே அவருக்கு அனுப்பினேன். திருத்தல் நீக்குதலின்றி வெளியிட்டார். மார்கழி விடுப்புக்கு யாழ்ப்பாணம் போனபொழுது அவரைப் பார்த்தேன். தொடர்ந்து எழுதுமாறு ஊக்குவித்தார். 19 வயதில் என் எழுத்து யாழ்ப்பாணத்தில் அரங்கேறியது.பின் திரும்பிப் பார்க்கவில்லை. கதைகள் எழுதும் கற்பனை வளம் எனக்கு இருக்கவில்லை. தகவல்களைத் தொகுத்துச் சுவைபடச் சொல்லும் ஆற்றல் இருந்ததாக நம்பிக்கொண்டேன். சில நேரங்களில் அவை கவிதை வரிகள் போலவும் தோன்றின. கவிதையாக வந்த பொழுது எழுதிவைத்தேன்.என் அயலில் நிகழ்ந்தழவும் என்னைப் பாதித்தனவும் என் எழுத்துகளுக்கு நெம்புகோலாயின. நான் கேட்ட சொற்கள், படித்த வரிகள், எனை உந்தும் மொழியாயின. பழமொழிகளும் பாடல்களும் சந்தத்தையும் ஓசையையும் சேர்த்தன. பரந்து சிதறிய தகவல்கள் எனக்குச் செயல்களமாயின. நூல்கள் என் சிந்தனையைத் தூண்டின. என் நண்பர்கள் என் எழுத்துகளை ஊக்குவித்தனர்.மூன்று நான்கு சொற்களில் வாக்கியங்களை அமைக்க முயன்றேன். மூன்று நான்கு வரிகளைப் பந்திகளாக்கினேன். பிற மொழிச் சொற்களைத் தவிர்த்தேன். என் சொல் வளப் பெருக்கலுக்குத் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகளும் சாத்திர நூல்களும் உதவின. என் 13ஆவது வயது முதலாகக் கந்தபுராண படனத்தில் பயிற்சி பெற்றேன். புராணப் பாடலை முதலில் உரத்துப் படிப்பேன். பின் அப்பாடலைப் பதம் பிரித்து, பொருள் தரும் துண்டுகளாக்கிக் கொடுக்க, அம் மண்டபத்தில் எனக்கு எதிரில் இருக்கும் நல்லையாப் புலவர் என் பிழைகளைத் திருத்துவார், எதிரே காத்திருக்கும் கூட்டத்திற்கு அப்பாடலின் பொருளைச் சொல்லுவார். ஈராண்டுகள் தொடர்ச்சியாக இப்பயிற்சியில் ஈடுபடத் தந்தையார் பணித்திருந்தார். மார்கழி மாதங்களில் திருவாதவூரடிகள் புராண படனத்தில் ஈடுபட்டேன். இவை என் சொல்லாட்சி வளர்ச்சிக்குத் துணை நின்றன.கொழும்பில் பணிபுரிந்த காலத்தில் அமெரிக்க நூலகத்துக்குத் நாள்தொறும் போவேன். ஆங்கில நூல்களையும் இதழ்களையும் வாசிப்பேன். அந்த உரைநடை எனக்குப் புதிய உலகத்தை அறிமுகம் செய்தது. செய்திகளை எளிமையாகச் சொல்லும் திறனையும், ஆங்கில உரைநடைத் திறனையும் அங்கு வளர்த்தேன். அங்கு பார்த்த உலக வரை படங்கள் என் உள்ளத்தில் ஆழப் புதைந்தன. நாடுகள், மக்கள், அரசுகள், ஆட்சி முறைகள், இயற்கை வளங்கள் பற்றிய செய்திகள் எனக்குத் தகவல் புதையல்களாயின. அறிவியல் செய்திகளைத் தமிழில் தருவதில் எனக்குக் கொழும்பு, வீரகேசரி களம் அமைத்துக் கொடுத்தது. இலங்கை வானொலியில் உரையாற்றினேன். கொழும்பு, தினகரன் ஆசிரியர் உற்சாகப்படுத்தினார். அரசியல் கட்டுரைகளைக் கொழும்பு, சுதந்திரன் வெளியிட்டது. அரசுக் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துக்குப் பகுதிநேர மொழிபெயர்ப்பாளரானேன். அறிவியல் நூல்களை மொழிபெயர்த்தேன். பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கையில் இலங்கை அரசு வௌயிட்ட கலைச்சொற்றொகுதிகள் எனக்கு உதவின. பதினொன்றரை ஆண்டுக்காலம் கடற்றொழில் ஆராய்ச்சியாளராக இருந்த காலங்களில், யப்பானிய, ஆங்கில, பிரஞ்சு மொழிகளில் என் அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்தன. பின்னர் ஐநா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகி, 23 அரசுகளுக்குப் பணிபுரிகையில் அரபு, சுவாகிலி, கிரியோல் மொழிகளில் என் ஆக்கங்கள் வெளிவந்தன. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற மாநாட்டுக் கருத்தரங்குத் தொகுப்புகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான என் கருத்துகள் கட்டுரைகளாகின. 1975ஆம் ஆண்டில் என் மொழிபெயர்ப்புகள் கொழும்பு, சுதந்திரன் வெளியீடுகளாகின. தந்தை செல்வநாயகம் அனைத்துலக நீதி ஆணைக்குழுவுக்கு ஈழத் தமிழர் துயர நிலை பற்றி ஆங்கிலத்தில் எழுதிய நீண்ட கடிதமும் கட்டுரையும் சுதந்திரன் வௌயீடாகத் தமிழில் வந்ததும் பல ஆயிரம் படிகள் விற்பனையானதும், மாதம் ஒரு நூலாக என் மொழிபெயர்ப்பு நூல்களைச் சுதந்திரன் வெளியிட்டது. அரசியல் கட்டுரைகளைத் தீவிரமாக எழுதத் தொடங்கிய காலப் பகுதியில் சுதந்திரன் இதழில் கோவை மகேசன் ஆசிரியராக இருந்தார். தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் என் தமிழ் நடையைப் பாராட்டுவார், உற்சாகம் தருவார்.1976இல் திருச்செல்வத்தின் வழக்குரை வாதங்களைத் தமிழில் தந்தபொழுது, ஈழத் தமிழர் இறைமை என்ற அந்த 100 பக்க நூல், ஒரே நாளில் 2,000 படிகள் யாழ்ப்பாணத்தில் முற்றவெளிக் கூட்டத்தில் விற்பனையானதுடன்,வெளியிட்ட நாள் அன்றே கூடிய விலையில் அக்கூட்டத்தில் விற்பனையானது.பறவைகளைப் பற்றிய கட்டுரைகளை வீரகேசரி வார இதழில் 1980களில் தொடர்ச்சியாக 20 வாரங்கள் எழுதினேன். அக்காலத்தில் ஏடன் நகரில் ஐநா. ஆலோசகராக இருந்தேன். அங்கு வலசை வந்த நாரைகள் என்னை எழுதத் தூண்டின.அந்தக் கட்டுரைகளுள் ஒன்றை, இலங்கைப் பாடநூற் சபை, 9ஆம் வகுப்புத் தமிழ் பாடநூற் கட்டுரைகளில் ஒன்றாக்கியது. அறிவியல் தமிழை எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக அந்தக் கட்டுரை பயன்பட்டது. அந்தக் கட்டுரையைக் கற்பிக்கும் ஆசிரியருக்கு வழிகாட்டியாக ஒரு நூலையும் பாடநூற் சபை வெளியிட்டது.அந்தக கட்டுரைகளை வீரகேசரியில் படித்தோர், என் தந்தையாரிடம் சென்று பாராட்டைத் தெரிவிப்பர். மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வர். என் தந்தையாருக்கு அவையே ஊட்டச் சத்தாயின. அவற்றின் அருமை தெரிந்தவர் அவர். வீட்டிற்குச் சென்றதும் என் தாயாருடனும் உடன் பிறப்புகளுடனும் தன் மகிழ்வையும் பெருமையையும் பகிர்ந்து கொள்வார். வள்ளக்குளப் பிள்ளையார் கோயிலில் தன் மடியில் வைத்து அனா ஆவன்னா எழுதுமாறு விரலைப் பிடித்து என்னை எழுத்துக்கு அறிமுகம் செய்த என் தந்தையாருக்கும், நிலா முற்றத்தில் மணற் பரப்பில் அனா ஆவன்னா எழுதச் சுட்டுவிரலை அழுத்திய என் தாயாருக்கும் இதைவிட வேறு கைம்மாறு என்னால் செய்திருக்க முடியாது. வலது கைச் சுட்டு விரல், எழுத்தாணி, சிலேற்றுப் பென்சில், பென்சில், பேனை என என் எழுதுகோல்கள் மாறிக்கொண்டேயிருந்தன. இரு விரல்களால் எழுதிக் கொண்டிருந்தவன், இப்பொழுது பத்து விரல்காளலும் கணினியில் எழுதுகிறேன். கருத்துகள் வரும் வேகத்துடன் என் விரல்கள் ஒத்துழைப்பதில்லை. ஆனாலும் கணினி தரும் எழுத்துச் சுகம் வேறொன்றிலில்லை.சென்னையில் என் எழுத்துகளுக்கு முதற் களம் பச்சையப்பன் கல்லூரி மலர்கள். அதன் ஆசிரியர் குழுவிலும் இருந்திருக்கிறேன். பின்னர் கோயம்புத்தூர் கலைக்கதிரில் என் அறிவியற் கட்டுரைகள் வெளியாகின. மலேசியாவில் தமிழ் நேசன், மலேசிய நண்பன், சிங்கப்பூரில் தமிழ் முரசு, பிரான்சில் கனடாவில் ஈழநாடு, கொழும்பில் வீரகேசரி, தினகரன், தினபதி, சுதந்திரன், தினக்குரல், யாழ்ப்பாணத்தில் ஈழநாடு, உதயன், சென்னையில் தினமணி, முரசொலி, தீராநதி, அமுதசுரபி, தமிழர் கண்ணோட்ட்ம், வளர்தொழில், தென்செய்தி, அறிக அறிவியல், ஜனசக்தி போன்ற பல்சுவை இதழ்கள் என் ஆக்கங்களை வெளியிட்டன. ஒருமுறை கலைஞர் கருணாநிதியைச் சந்தித்பொழுது, தமிழகத்தில் ஈழத்தவர் ஆற்றிய பங்களிப்புப் பற்றிய கட்டுரையைக் கொடுத்தேன். அந்த வார இறுதி முரசொலியில் அந்தக் கட்டுரை வந்திருந்தது. யாழ்ப்பாணத்தில் ஈழநாடு கே. பி. ஹரன், கொழும்பில் சுதந்திரன் கோவை மகேசன், வீரகேசரி எஸ். டி. சிவநாயகம், தினகரன் இ. சிவகுருநாதன், பாரிஸ் ஈழநாடு குகநாதன், சென்னையில் குங்குமம் பாவை சந்திரன், வளர்தொழில் ஜெயகிருட்டினன், தினமணி ஆசிரியராக இருந்த சம்பநதம், இராயப்பா, அமுதசுரபி அண்ணா கண்ணன், இந்து மாலினி பார்த்தசாரதி போன்ற பலர் என்னை எழுதுமாறு ஊக்குவித்தவர்கள். தினமணியில் நடுப்பக்கக் கட்டுரைகள் தமிழகத்தில் புலமைச் சான்றோரிடம் என்னை எடுத்துச் சென்றதால், தமிழக வாசகரின் பரவலான பார்வைக்குள் அகப்பட்டேன்.என் எழுத்து, யாரை நோக்கியேதா, அவர்களைச் சென்றைடய வேண்டுமென்பதில் கருத்தாக இருந்தேன். அரசு அதிகாரிகளை நோக்கிச் செயற்றிட்ட அறிக்கைகள் எழுதினேன். அந்த நடை வேறு. அறிஞர்களை நோக்கி ஆய்வுக் கட்டுரைகளை எழுதினேன். அந்த நடை வேறு. தமிழீழ விடுதலைக் கருத்துருவாக்கத்தில் கண்ணாக இருந்தேனாதலால் அரசியல்வாதிகளையும் பொது மக்களையும் நோக்கி வாதங்களை அடுக்கினேன். அந்த நடை வேறு.எந்த ஒரு எழுத்தும் தாக்கத்தை ஏற்படுத்தாமலிருந்ததில்லை. செயற்றிட்ட அறிக்கைகள் நாடுகளின் வளர்ச்சிக்குப் பயனளித்தன. அறிவியற் கட்டுரைகள் அறிவியல் தமிழ் எழுதுவோருக்கு வழிகாட்டின. ஆராய்ச்சிக் கட்டுரைகள் அறிவு வளர்ச்சிக்கு உதவித் தொழினுட்ப முன்னெடுப்புகளுக்குப் பயனளித்தன. Colombo’s Camaflaouge என எழுதி, இந்து நாளிதளில் வெளியான என் கட்டுரை இலங்கை அரசைக் கடுங்கோபத்துக்குள்ளாக்கியது. பதிப்புத் தொழில் உலகத்தில் நான் எழுதும் கட்டுரைகளால் பலரின் சினத்துக்கு ஆளாயிருக்கிறேன்.ஏசுவார்கள், எரிப்பார்கள், எழுதுங்கள், அஞ்சாமல் எழுதுங்கள் என்ற வரிகள் யாழ்ப்பாணத்து ஈழநாடு இதழுக்காக யோக சுவாமிகள் கூறியவை. எழுதுகையில் அசாத்தியத் துணிச்சலும் வரவேண்டும், நயத்தக்க நாகரிகமும் மிளிர வேண்டும், தகவல்களிலும் தவறு நேர்ந்துவிடக் கூடாது. வாசிப்பவருக்குப் புரியவும் வேண்டும், வாசகரை என் கருத்து நோக்கி ஈர்க்கவும் வேண்டும். அந்த வாசகர் பாராட்டுவரா, சினப்பாரா என்பது நோக்கமல்ல. என் எழுத்துப் பயனுறுத்தியதா என்பதே எனக்குள் எழும் வினா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment