Monday, January 27, 2025

தினமணி கி. வைத்தியநாதன்

 தை 15, செவ்வாய் (28 1 2025)

மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன்.

வணக்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர்.

உலகெங்கும் ஒரு கோடிக்கும் கூடுதலான எண்ணிக்கையில் வாசகர்களைக் கொண்ட தினமணி நாளிதழின் இப்போதைய ஆசிரியர் திரு கி. வைத்தியநாதன் அவர்கள்.

தினமணி நாளிதழில் 1986ல் இருந்து தொடர்ச்சியாக நடுப்பக்கக் கட்டுரைகளை எழுதி வந்துள்ளேன். நூறுக்கும் கூடுதலாகக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். தமிழ் மொழி, அறிவியல், இலங்கை அரசியல் ஆகிய தலைப்புகளில். அவற்றுள் பல, இலங்கை மற்றும் பிற நாடுகளின் தமிழ் இதழ்களில் மீள அச்சாகும்.

ஈழத் தமிழர் போராட்ட வரலாறு என்ற தலைப்பில் தினமணியில் 140 நாள்கள் தொடர்ச்சியாகக் கட்டுரை எழுதி வந்தவர் திரு. பாவை சந்திரன். முன்பு குங்குமம், நமது எம்ஜிஆர் போன்ற பல இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தவர். இப்பொழுது தினமணி ஆசிரியர் குழாமில் இருக்கிறார். அச்சுக்குப் போகும் அந்தக் கட்டுரையில் எழுதிய தகவல்கள் சரியாக இருக்கிறனவா? எனப் பார்க்குமாறு என்னிடம் கேட்பார். 140 நாள்களும் இரவு 9 மணி அளவுக்கு தினமணியில் இருந்து அக் கட்டுரை மின்னஞ்சலில் எனக்கு வரும். எந்த ஊரில் இருந்தாலும் அந்த நேரம் திரு பாவை சந்திரனின் கட்டுரையை நான் உடனே பார்த்துத் திருத்தம் இருந்தால் திருத்தி அனுப்புவேன்.

தினமணி இதழும் சென்னையில் நான் நடத்தி வந்த காந்தளகம் பதிப்பகமும் இணைந்து தமிழகம் முழுவதும் ஒரே காலத்தில் 50 இடங்களில் புத்தகக் காட்சிகளை நடத்தி இருக்கிறோம்.

தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும உரிமதாரரான சொந்தாலியா குடும்பத்திலும் எனக்கு நண்பர்கள். தமிழ்நாடு சட்டமன்ற அவைத் தலைவராகவும் அமைச்சராகவும் பணிபுரிந்த திரு இராசாராம் அவர்கள் என்னை எக்ஸ்பிரஸ் வளாகத்துக்கு அழைத்துச் சென்று அக்குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்தார். நெடுங்காலம் அவர்கள் தொடர்பைப் பேணி வந்தேன்

தினமணி நாளிதழில் 1994 கார்த்திகையில் (திரு மாலன் அப்பொழுது ஆசிரியர்) வெளிவந்த செய்தி, ஈழத் தமிழர் நன்மைக்காக நான் எடுத்த முயற்சி தொடர்பான செய்தி. அச்செய்தியின் விளைவாக என்னை மிரட்டியவர் கோடம்பாக்கம் குமார். சென்னை உயர் நீதிமன்றம் நீதியரசர் திரு சிவராஜ் பட்டீல் ஆணைக்கு இணங்க, தமிழக அரசு (அப்பொழுது முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள்) 35 நாள்களுக்கு 24 மணி நேரமும் எனக்குக் காவல்துறையின் பாதுகாப்பைக் கொடுத்தது.

திரு ஐராவதம் மகாதேவன், திரு கஸ்தூரிரங்கன், திரு மாலன் நாராயணன், திரு இராம சம்பந்தம் எனத் தொடர்ச்சியாகத் தினமணி ஆசிரியர்கள் எனக்கு அன்பர்கள். ஆசிரியர் குழாமில் திரு. திருப்பூர் கிருஷ்ணன், திரு. பாவை சந்திரன் உள்ளிட்ட பலர் எனக்கு நண்பர்கள். தினமணிக்கு அக்காலத்தில் எழுதிக் கொண்டிருந்த கவிஞர் அண்ணா கண்ணனும் என்னுடன் தொடர்பானார்.

தினமணியை நான் வாசிக்கத் தொடங்கிய காலத்தில் ஏ என் சிவராமன் ஆசிரியர். 1959இல் மாணவனாகப் பச்சையப்பன் கல்லூரி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்த நூலகத்துக்கு நாள்தோறும் மாலை 6 மணிக்குச் செல்வேன். அனைத்து முன்னணி நாளிதழ்கள் வார இதழ்கள் மாத இதழ்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் அங்கு மேசை முழுவதும் பரவி இருக்கும். நேரம் போவதே தெரியாமல் மாலை ஏழு மணிக்கு உணவு அருந்தப் போகும் வரை படித்துக் கொண்டிருப்பேன். தினமணி அவற்றுள் ஒன்று.

இப்போதைய தினமணி ஆசிரியர், இலங்கை யாழ்ப்பாணத்துக்கு வெள்ளிக்கிழமை 31.1.2025 அன்று வரவிருக்கிற திரு கி. வைத்தியநாதன் அவர்கள், எனக்கு அன்பர் நண்பர். அவருடைய திருமகன் திருமணம் திருவனந்தபுரத்தில். நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார். அதற்காகவே நான் திருவனந்தபுரம் சென்று வாழ்த்தி வந்தேன்.

தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகா சன்னிதானம், முத்தி அடைந்த பொழுது, " _அவரின் அணுக்கத் தொண்டரான  நீங்கள் அவர் தொடர்பாகத் தினமணிக்கு கட்டுரை எழுதித் தாருங்கள்_ " என என்னைக் கேட்டார். மயிலாடுதுறையில் தருமபுரத்தில் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளத் திருமடத்தில் இருந்தேன். அங்கிருந்த மர நிழலின் கீழ் இருந்து நானே சொல்லச் சொல்ல என் திறன்பேசி கட்டுரையாக எழுதியது. எழுதியதைத் திருத்தினேன். தினமணிக்கு உடன் அனுப்பினேன். மறுநாளே அக்கட்டுரையைத் தினமணியின் ஆசிரியர் பக்கத்தில் வெளியிட்ட பெருமகனார் திரு கி. வைத்தியநாதன்.

வெள்ளிக்கிழமை (31.1.2025) நண்பகல் தினமணி ஆசிரியர் திரு கி வைத்தியநாதன், சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வருகிறார்.

சனிக்கிழமை (1.2.2025) திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் செல்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை (2.2.2025) காலை திருக்குறள் வளாகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அன்று நண்பகல் சென்னை திரும்புகிறார்.

வானூர்தியில் வரும் அவரை வரவேற்று, ஞாயிற்றுக்கிழமை (2.2.2025) காலை நிகழ்ச்சிக்கு அனுப்பும் வரை தங்குமிட, பயண ஒழுங்குகளை திரு கி வைத்தியநாதன் அவர்களுக்குச் செய்துள்ளேன்.

அக்காலத்தில் நான் சென்னையில் இருப்பேன் ஆயினும் பயண ஒழுங்குகளில் எந்தக் குறையும் இருக்காது சிவபெருமான் திருவருளால்.

திரு. கி. வைத்தியநாதன் அவர்களின் அன்பரும் யாழ்ப்பாணத்தவரும், ஊடகச் செம்மலும், தினமணி தில்லிப் பதிப்பில் நான்காண்டுகள் தொடர்ந்தவருமான திரு அருள் இனியன் அவர்கள் திரு வைத்தியநாதனின் மாணவர். 

மூன்று நாள்களும் திரு வைத்தியநாதனோடு இருப்பார்கள். திரு அருள்இனியன் அவர்களின் தொடர்பு எண் +94 77 985 3078.

உங்கள் தகவலுக்காக.

மிக்க நன்றி