தென்னிலங்கையில் இந்துக்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் அழிவின் விளிம்பிலுள்ள தொண்டீஸ்வரம்
தெவிநுவர என்பது பாலி மொழியில் ‘தேவநகரம்’ என்ற அழைக்கப்பட்டது. தமிழில் தேனவரை. இந்நகரின் இன்னொரு பெயரான தெவுந்தர என்பது, தேவன்துறை என்ற தமிழ்ப்பெயரின் சிங்கள வடிவம்1. இந்தக் கோவிலின் அருகே இருந்த பட்டினம் புகழ்பெற்ற பன்னாட்டு வணிகத்துறைமுகம் என்பதை பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் மூலம் உறுதிப்படுத்த முடிகின்றது. கலையழகும் சீரிய வேலைப்பாடுகளும் நிறைந்திருந்த தேனவரை நாயனார் கோவில் அப்போது உலகப்புகழ் பெற்ற கோவிலாக விளங்கியது. மேலைநாட்டு ஐரோப்பியக் குறிப்புகள், அது திருக்கோணேச்சரத்துக்கு அடுத்ததாக பிரசித்தமான கோவில் என்று புகழாரம் சூட்டுகின்றன.
தெவிநுவரைக்கு தெண்டீரம் என்றும் முன்பு பெயர் இருந்தது. டொண்ட்ரா என்ற அதன் ஐரோப்பியப் பெயர் ‘தெண்டீரம்’ என்பதிலிருந்து வந்ததே. அங்கிருந்த சிவன் கோவில் தெண்டீர ஈச்சரம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். 1588இல் தென்னிலங்கைச் சிங்கள அரசான சீதாவாக்கை அரசோடு முரண்படும் போர்த்துக்கேயர்கள் அக்கோவிலை சிதைத்தழிக்கிறார்கள். கோவில் மறைந்தொழிந்து போனாலும், தெவிநுவரைத் தேவன் புகழ் குன்றிப்போகவில்லை. இன்று வரை, இலங்கையின் நான்கு காவல் தெய்வங்களில் ஒருவனாக சிங்களவரால் போற்றப்பட்டு வருகிறான் தெவிநுவரை உபுல்வன்.
இலக்கியக் குறிப்புகள்:
சிங்கள வரலாற்று இலக்கியங்களில், அதிகம் குறிப்பிடப்பட்ட இடங்களில் ஒன்று தேவநகரம். இலங்கையை சோழர் ஆக்கிரமித்திருந்த காலத்தில் (993 - 1077) உரோகணத்தை பன்னிரண்டு ஆண்டுகள் ஆண்ட காசியப்ப விக்கிரமபாகு (1029 – 1041), வாதநோயால் பாதிக்கப்பட்டு தேவநகரத்து தேவனை சரண் புகுந்து அங்கேயே உயிர் நீத்ததாகச் சொல்கிறது சூளவம்சம் (மவ. 56:6-7). சோழரிடமிருந்து இலங்கையை மீட்ட முதலாம் விஜயபாகு (1055 - 1110), தேவநகரத்தில் சிதைந்திருந்த விகாரத்தை புனரமைத்திருக்கிறான் (மவ. 60:59). முதலாம் பராக்கிரமபாகுவின் படைத்தளபதி அரக்கன், தேவநகரத்து வணிகருக்கு பாதுகாப்பாக செயற்பட்டான் (மவ. 75:47). இரண்டாம் பராக்கிரமபாகுவின் (1234 - 1269) மருமகனான வீரபாகு, இலங்கை மீது படையெடுத்த சாவகன் சந்திரபானுவை வென்றபின் தேவநகரத்துக்குச் சென்று உற்பலவண்ண தேவனுக்கு விழா எடுத்துக் கொண்டாடினான் (மவ. 83.49). அக்கோவில் சிதிலம் அடைந்திருப்பதை அறிந்து அங்கு வந்த இரண்டாம் பராக்கிரமபாகு அங்கிருந்த உற்பலவண்ண தேவராஜனின் ஆலயத்தை தேவராஜனின் (தேவேந்திரன்) ஆலயம் (இந்திரலோகம்) போல செப்பனிட்டதுடன், அங்கு வருடாந்தம் எசல திருவிழா இடம்பெறவும் ஒழுங்குகள் செய்தான் (மவ. 85:85-89).
பதினாறாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தேவநகரக் கோவில் இடித்தழிக்கப்பட்ட போதிலும், அங்கு வீற்றிருந்த உற்பலவண்ணக் கடவுள், உபுல்வன் என்ற பெயரில் சிங்களவர்களின் முதன்மையான தெய்வங்களில் ஒருவராக மாறினார். 15ஆம் நூற்றாண்டளவில் உருவான பரக்கும்பா சிறீத உள்ளிட்ட சிங்கள இலக்கியங்களில், தேவன்துறையின் உற்பலவண்ணன் திருவுருவம் செஞ்சந்தனக்கட்டையில் செய்யப்பட்டது என்று சொல்லப்படுவதுடன், தேவநகரக் கோவிலின் தோற்றத்துடன் தப்புலசேன மன்னனும் (பொ.பி 9ஆம் நூற்றாண்டு) இணைக்கப்படுகிறான். செஞ்சந்தனத்துக்கு (Pterocarpus santalinus) சிங்களத்தில் கிஹிர்லி என்று பெயர். எனவே உற்பலவண்ணன் கிஹிர்லி உபுல்வன் ஆகின்றார் (Holt 2008:65)
'சந்தேச' என்ற பெயர் கொண்ட தூது இலக்கியங்கள் பழைய சிங்கள இலக்கியங்களில் குறிப்பிடத்தக்கவை. அன்னம்விடுதூது - திஸர சந்தேசத்தில் (14ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி) தூது செல்லும் அன்னமும், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த குயில்விடுதூதான கோகில சந்தேசத்தில் தூது செல்லும் குயிலும், தெவிநுவரையில் தான் தங்கள் தூதுப்பயணத்தை ஆரம்பிக்கின்றன (Krishnamoorthy & Mukhopadhyay 1991:cii) அதே காலத்தில், இலங்கைத்தீவின் நாற்பெரும் காவல் தெய்வங்களில் ஒருவனாக வளர்ச்சி கண்ட தெவிநுவரை உபுல்வனுக்கு, கண்டி அரசின் ஆட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் பல புதிய தேவாலயங்கள் உருவாக்கப்பட்டன.
கல்வெட்டுச் சான்றுகள்:
தேனவரைக் கோவில் தொடர்பாக இதுவரை நமக்கு பல கல்வெட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றில் இரண்டாம் பராக்கிரமபாகுவின் பொ.பி 1236 தெவுந்தர பலகைக் கல்வெட்டு, 1409 அளவில் நிறுவப்பட்ட காலி மும்மொழிக் கல்வெட்டு, 1433இல் பொறிக்கப்பட்ட ஆறாம் பராக்கிரமபாகுவின் நாய்மணைக் கல்வெட்டு, ஏழாம் விஜயபாகுவின் 1510ஆம் ஆண்டு தெவுந்தரக் கல்வெட்டு ஆகிய நான்கும் குறிப்பிடத்தக்கவை. இவற்றில் நாய்மணைச் சாசனத்திலும், காலி மும்மொழிச் சாசனத்திலும் தமிழ் வரிவடிவத்தில் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவை பற்றி பேராசிரியர் சி.பத்மநாதன் ஏற்கனவே விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.
இரண்டாம் பராக்கிரமபாகுவின் (1234 - 1271) தெவுந்தர பலகைக் கல்வெட்டு அவன் தொடர்பாக மகாவம்சம் சொல்வது உண்மை தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. அக்கல்வெட்டு 'தெண்டீரத் தோட்டத்தின்' வணிகர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது தொடர்பான விதிகளையும் கட்டுப்பாடுகளையும் விரிவாக சொல்கின்றது (பத்மநாதன் 2013:232-236). அதன் படி, தேவன்துறையைச் சூழ இருந்த ‘தெண்டீரத் தோட்டத்துக்கு’, முன்பு வழங்கப்பட்ட அரச மானியங்கள் அவ்வாறே இனியும் தொடரவேண்டும். அதன் தலைவரான மகாபண்டிதரே இத்துறையில் வரி வசூலிக்க அனுமதிக்கப்பட்டவர். பன்னாட்டு வணிகர்களிடம் மேலதிக சுங்கம் பெறுவதோ, இலஞ்சம் பெறுவதோ தவிர்க்கப்படவேண்டும். அவர்களிடம் உள்ளூரார் அளவுக்கு மீறி நெருக்கத்தைப் பேணக்கூடாது. தேவன்துறையின் விகாரை, தேவாலயம், கோவில், அக்கிரகாரம் ஆகிய புனித தலங்கள் சிறப்பாகப் பேணப்படவேண்டும் (Sudharmawathie 2011:7-8).
இரண்டாம் பராக்கிரமபாகுவின் கல்வெட்டு சொல்கின்ற மகாபண்டிதரை, அங்கிருந்த பிராமண அக்கிரகாரத்தின் முதல்வராக இனங்காணலாம். ‘சரசோதிமாலை’ நூலை இயற்றியவரும், பராக்கிரமபாகுவின் அரசவைப் பண்டிதராகவும் விளங்கிய போசராசர், தேனுவரைப் பெருமாள் என்றும் அழைக்கப்பட்டதை விவரிக்க வந்த பேராசிரியர். சி. பத்மநாதன், அது தெண்டீரத் தோட்டத்தில் மகாபண்டிதர் பதவி வகித்தோருக்கு சூட்டப்பட்டிருந்த பட்டப்பெயர் என்கிறார் (பத்மநாதன் 2013:237). இதே கோவிலில் கிடைத்த ஏழாம் விஜயபாகுவின் செப்பேடு ஒன்றில் தேனுவரைப்பெருமாள் என்ற பெயரில் பிராமணர் ஒருவர் குறிப்பிடப்பட்டிருக்கிறார் (Paranavitana 1994:435).
காலி மும்மொழிக் கல்வெட்டு, இலங்கைக்கு வந்த சீனக்கடலோடி வீரன் செங்ஹேயால் (1371 - 1433) பொறிக்கப்பட்டது. சீனம், தமிழ், பாரசிகம் ஆகிய மும்மொழிகளில் 1409 அளவில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டு, அக்காலத்தில் ஆசியாவின் முக்கியமான வணிக மொழிகள் எவை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது. இதன் சீனப்பகுதி புத்தபிரானைத் துதிக்க, பாரசீகப்பகுதி ஆதம் மலை ஆண்டவனைத் துதிக்கிறது. தமிழ்ப் பகுதியில் தேநவரை நாயினாருக்கு சீன மன்னன் கொடுத்தனுப்பிய பொன், வெள்ளி, பட்டாடைகள், விளக்குகள் உள்ளிட்ட பல காணிக்கைகள் வருணிக்கப்படுகின்றன (பத்மநாதன் 2013:223-246).
காலி மும்மொழிக் கல்வெட்டு
இதை அடுத்து தமிழ் மற்றும் வடமொழியில் அமைந்த ஆறாம் பராக்கிரமபாகுவின் (1412 - 1467) நாய்மணைச் சாசனத்தில், நாய்மணை, சுங்கங்கொலை, வேர்துவை உள்ளிட்ட கிராமங்கள் தேவராஜனின் கோவிலுக்காக பன்னிரு பிராமணருக்கு தானம் வழங்கப்பட்டன என்ற செய்தி பொறிக்கப்பட்டிருக்கிறது. நாய்மண, வேரதுவ ஆகிய ஊர்கள் இன்றும் தெவிநுவரைக்கு அருகே அமைந்துள்ளன. ‘தேவராஜாக்கள் சன்னதி’ என்று இக்கல்வெட்டில் வருகின்ற தொடர், சூளவம்சம் தேவராஜன் என்று அழைக்கும் உற்பலவண்ணன் கோவிலையே மரியாதையாகக் குறிக்கின்றது (பத்மநாதன் 2013:247-268).
கோட்டை மன்னன் ஏழாம் விஜயபாகுவின் நான்காம் ஆட்சியாண்டில் சிங்களத்தில் பொறிக்கப்பட்ட தெவுந்தரக் கல்வெட்டில், 'நகரீச நீல கோவில' என்ற கோவிலொன்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அக்கல்வெட்டு, சக ஆண்டு 1432இல் (பொ.பி 1510) நவதுன்னை, பத்கமை உள்ளிட்ட இடங்களில் விளையும் 20 அமுணம் நெல்லை ‘தெவிநுவரேஹி நகரீச நீல கோவிலுக்கு’ கொடுத்ததைச் சொல்கின்றது (Davids 1871:26-27).
மேலைநாட்டவர் குறிப்புகள்:
தேவநகரம் பற்றிய மிகப்பழைய மேலைநாட்டுச் சான்றுகளில் முதன்மையானது, 1341 - 1344 இடையே இலங்கை வந்த அரேபியப் பயணி இபன் பதூதாவின் குறிப்பு. வணிகரின் பெருநகரமான தினவாரில் உள்ள பெருங்கோவிலில் அதே பெயர் கொண்ட சிலை ஒன்று இருப்பதையும், அங்கு ஆயிரக்கணக்கில் பிராமணர்களும் யோகியர்களும் வசிப்பதையும், பதிவு செய்திருக்கும் அவர், அச்சிலை முன் தினமும் ஆடிப்பாடும் ஐநூறுக்கு மேற்பட்ட மகளிரைப் பற்றியும் சொல்கிறார். அந்த நகரமும் நகரத்தின் வரிகளும் அத்தெய்வத்துக்கே உரியவை என்பதால், அக்கோவிலில் வசிப்போரும், கோவிலுக்கு வருவோரும் கோவில் மூலமே உணவளிக்கப்படுகிறார்கள். ஆளுயரத் தங்கப்படிமமாக வீற்றிருக்கும் இங்குள்ள தெய்வத்தின் விழிகளாக பதிக்கப்பட்டிருந்த இரு மாணிக்கக்கற்கள், இரவில் விளக்கு போல ஒளி வீசும் என்று தன்னிடம் சொன்னார்கள் என்கிறார் (Gibbs 1953:260). தினவாரிலிருந்து பதினெட்டு மைல் தொலைவில் காலி இருப்பதை பதூதா குறிப்பிடுவதால், தினவார் என்பது நம் தேனவரை தான் என்று ஐயத்துக்கிடமின்றி உறுதியாகின்றது.
இரண்டாவது முக்கியமான குறிப்பு, போர்த்துக்கேய வரலாற்றாசிரியர் குவரோசினுடையது. 1681இல் எழுதப்பட்ட தன் நூலில் அவர் சொல்வதன் படி, மாத்துறையிலிருந்து அரை லீக் தூரத்தில் ஒரு காலத்தில் திருக்கோணமலைக்கு அடுத்தபடியாக புகழ் பெற்றிருந்த கோவில் இருந்தது. அக்கோவிலுக்கான சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அந்நாட்டு மன்னர்களின் கட்டளைகள் கொண்ட கல்வெட்டுக்கள் இங்கு உள்ளன. இங்கிருந்த ‘விக்ஸ்னுடே வீர ஜூரிகா’வின் வழிபாடு, தங்கள் (போர்த்துக்கேய) படையெடுப்பின் பின்னர், புனித பிரான்ஸின் வழிபாடாக மாற்றப்பட்டு விட்டது. இங்கு அரண்மனையில் குடிகொண்டிருந்த இலங்கை மன்னர்கள், இதை தேவர்களின் நகரம் என்ற பொருளில் அழைத்தனர். போர்த்துக்கேயர் இக்கோவிலின் ஆடல் மகளிர் வசித்து வந்த அயல் கிராமமான ‘தேனவரை’ என்ற பெயரால் இதை அழைத்தார்கள். பொன், வெள்ளியிலமைந்த பல உலோக வார்ப்புகளும் வேல் போன்ற ஆயுதங்களும் இங்கு சிறந்த முறையில் செய்யப்படுகின்றன (Queyroz 1992:35).
Diogo De Quoto
மூன்றாவது மேலை நாட்டவர், இன்னொரு போர்த்துக்கேய வரலாற்றாசிரியர் டியோகோ டூ கோட்டோ (Diogo Do Couto; 1542 - 1566). போர்த்துக்கேயத் தளபதி தொமே டீ சூசா, சீதாவாக்கை மன்னன் முதலாம் இராஜசிங்கன் மீது கொள்ளும் சீற்றத்தால், தேனவரையை 1588இல் இடித்தழிப்பதை வர்ணித்திருக்கிறார் அவர் (Holt 2008:81). இலங்கையிலேயே நிகரற்றதாக, கடலை நோக்கியபடி, ஆடம்பரமான அலங்கார வளைவுத் தோரணங்களுடனும் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட செம்பு வேய்ந்த கோபுரங்களுடனும் விளங்கிய ‘தனவேரம்’ கோவிலை முற்றிலுமாக இடித்தழித்தான் டீ சூசா. அங்கிருந்த ஆயிரக்கணக்கான கற்சிற்பங்களும் வெங்கலப்படிமங்களும் அவனது படையினரால் உடைத்துச் சூறையாடப்பட்டன. வேண்டுமென்றே பசுக்களை இட்டு வந்து வெட்டிக்கொன்று அந்தக் கோவிலின் புனிதத்தைக் கெடுத்தான். கோவிலில் சேமிக்கப்பட்டிருந்த யானைந்தந்தம், சந்தனமரங்கள், விலையுயர்ந்த மாணிக்கங்கள் முதலியன கொள்ளையிடப்பட்டன. இறுதியாக எஞ்சிய கோவிலையும் சுற்றியிருந்த கட்டிடங்களையும் எரித்துச் சாம்பலாக்கினான் (Tennent 1860:20-21).
உற்பலவண்ணன்
உற்பலவண்ணன் என்றால் நீலோற்பல மலர் நிறத்தவன் என்று பொருள். அது சிங்களத்தில் உபுல்வன் என்று ஆயிற்று. பாலியில் உப்பலவண்ண என்றும் சிங்களத்தில் உபுல்வன் என்றும் இவன் அறியப்படுகின்றான். உப்பலவண்ணா என்ற பெயர், பௌத்த ஜாதகக் கதைகளில் ஏற்கனவே புத்தரின் சீடப்பெண்ணொருத்தியின் பெயராக பிரலமானது தான் (Bartholomeusz 1994:122). ஆனால் ஆண் தெய்வமொன்றின் பெயராக இலங்கையில் அது பற்றிய முதல் குறிப்பைத் தருவது மகாவம்சம். புத்தர் பரிநிர்வாணமடையும் போது இலங்கையில் விஜயன் கால் பதிக்கிறான். அவன் சந்ததியால் அங்கு பௌத்தம் நிலைநிறுத்தப்படும் என்று புத்தபெருமான் கூறுவதை அடுத்து, தேவேந்திரனால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட தேவன் உற்பலவண்ணன்2 (மவ. 7:5-7).
நிறம் ஒன்றைத் தவிர உபுல்வன் பற்றிய வேறெந்த உருவவியல் விளக்கங்களும் பழைய குறிப்புகளில் கிடைக்கவில்லை. ஆனால் இன்று உபுல்வனை திருமாலின் வடிவிலேயே சித்தரிக்கின்றனர். உற்பலவண்ணன் அல்லது உபுல்வன் நிச்சயம் திருமால் தான் என்ற முதல் குறிப்பைத் தருபவர் குவரோஸ் தான். தேனவரையிலிருந்த வழிபாடாக அவர் சொல்லும் ‘விக்ஸ்னுடே வீர ஜூரிகா’வை (Vixnude Vira Jurica) ‘விஷ்ணு தெவி ரஜூ’ (Vixnu Devi Raju [rica?]) என்ற சிங்களச்சொல்லின் மரூஉ ஆக கண்டுகொள்ளலாம். பத்தினி வழிபாட்டுடன் தொடர்புடைய சிங்கள ‘காலபந்தம’ சடங்குப் பாடல்களில், உபுல்வன் கிருள (கருடன்) வாகனம் கொண்டவன் என்றும் பத்து அவதாரங்கள் எடுத்தவன் என்றும் திருமாலாகவே காட்டப்படுகிறான் (Obeyeysekere 1984:313).
எனினும் சில அறிஞர்கள் உபுல்வன் பிற்காலத்தில் தான் திருமாலாக இனங்காணப்பட்டான், உண்மையில் இருவரும் வேறு வேறு என்று சொல்கின்றார்கள். சிங்களவர் தமது நான்கு காவல் தெய்வங்களின் கோவிலை மாத்திரமே 'தேவாலே' என்று அழைப்பர். தெவிநுவரையில் இருந்த கோவிலையும் தேவாலயத்தையும் மேலே சொன்ன இரண்டாம் பராக்கிரமபாகுவின் தெவுந்தரப் பலகைக் கல்வெட்டு தனித்தனியே குறிப்பிடுவதால் உபுல்வன் குடிகொண்ட தேவாலயம் வேறு; கோவில் வேறு என்கின்றார் பேராசிரியர் பத்மநாதன் (பத்மநாதன் 2013:236 - 237). எனினும் அந்தக் கோவில் சைவக்கோவிலா வைணவக்கோவிலா என்ற வாதத்துக்குள் அவர் நுழையவில்லை 3.
பத்மநாதனைப் போலவே திருமால் வேறு, உபுல்வன் வேறு என்ற கருத்தைக் கொண்ட செனரத் பரணவிதான, அதற்கு ஆதாரமாக மூன்று சான்றுகளைத் தருகிறார். திசர சந்தேசம் ‘ஸ்ரீ (லட்சுமி) தன் கணவனை விடுத்து உபுல்வனைச் சேர்ந்தாள்’ என்றும், கோகில சந்தேசம் ‘உபுல்வன் விஷ்ணுவை ஒத்தவன்’ என்றும், இலங்காதிலக கல்வெட்டு உபுல்வனைத் தனியேயும், விஷ்ணுவைத் தனியேயும் குறிப்பிடுகின்றன (Obeyesekere 1984:315).
இந்தக் குழப்பத்துக்கு வேறொரு விதத்தில் தீர்வு காண முயல்கிறார் பேராசிரியர் கணநாத் ஒபேயசேகர. இவற்றையெல்லாம் சைவ – வைணவ இலக்கிய மரபுகள் சார்ந்தும் இலக்கிய நயம் சார்ந்துமே முகங்கொடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டும் அவர், தமிழ் மற்றும் வடமொழி இலக்கியங்களில், திருமால், அவரது அவதாரங்களான இராமர் – கிருஷ்ணர் ஒரே நேரத்தில் ஒருவராகவும் வேறுவேறாகவும் சொல்லப்படுவதையும், அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்தார்கள் என்றும் கூட புராணக்கதைகள் இருப்பதையும் எடுத்துக்காட்டுகிறார். சிங்களத்திலேயே கூட ‘நீயே ராமன், நீயே கிருஷ்ணன், நீயே இந்திரன்’ என்று உபுல்வனைப் புகழும் கவி ஒன்று வழக்கில் இருப்பதை அவர் சான்று தருகிறார். (Obeyesekere 1984:315 - 317).
இடைப்பட்ட காலத்தில், உபுல்வன் ஒரு அவலோகிதேஸ்வரர், அல்லது வருணன், அல்லது கண்ணன், அல்லது இராமன், என்பன உள்ளிட்ட பல்வேறு ஊகங்கள் ஆய்வுலகில் எழுந்திருந்தன. இந்த ஊகங்களை சீர்தூக்கி நோக்கும் ஆய்வாளர் ஹோல்ட், இறுதியில், “உபுல்வனின் மூலம் இன்னதென்று சரியாகச் சொல்லமுடியாது அல்லது பிற்காலத்தில் திருமாலாக இனங்காணப்பட்ட இலங்கையின் நாட்டார் தெய்வமொன்று” என்று இந்த வாதத்தை முடித்து வைக்கிறார் (Holt 2008:100 – 101).
தமிழ்த்தெய்வம் தேனவரை நாயனார்:
தெவிநுவரை தொடர்பாகக் கிடைக்கின்ற எல்லா வரலாற்றுக் குறிப்புகளிலும் இங்கு பிராமணர்களும் தமிழ் வணிகர்களும் கூடி வழிபாடியற்றியதையும், தமிழகக் கோவில்கள் போலவே ஆடற்கணிகையர் இங்கு பணிபுரிந்தார்கள் என்பதையும் காணமுடிகின்றது4. இக்கோவிலுடன் தொடர்புடைய இரு கல்வெட்டுக்கள் தமிழில் பொறிக்கப்பட்டிருப்பதும், ‘கோணேச்சரத்துக்கு அடுத்தது’ என்ற சான்றிதழை குவரோஸ் வழங்குவதும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. மேலும், சூசாவால் அழிக்கப்பட்ட செம்பு வேய்ந்த கூரைகள், கோபுரங்கள், விக்கிரகங்கள், தோரண வாயில்கள் என்பன சொல்லப்படும் போது, அக்கோவில் தென்னிந்தியக் கலைப்பாணியிலேயே அமைந்திருக்க வேண்டும் என்பதும் தெரியவருகின்றது. எனவே அங்கிருந்தது ஒரு நாட்டார் தெய்வத்தின் மடாலயம் அல்ல; தமிழ் வணிகர்களாலும் அந்தணர்களாலும் வழிபடப்பட்ட, ஆகமவிதிப்படி அமைந்த ஒரு பெருங்கோவில் என்ற முடிவுக்கே நாம் வந்து சேர முடிகின்றது.
இன்று எஞ்சியுள்ள பழைய கோவிலின் கல் தோரணம், தெவிநுவரை.
தேவநகரம், தெவிநுவர, தெவுந்தர போன்ற எந்தவொரு சிங்கள – பாலிப் பெயர்களும் பயன்படாமல், காலி மும்மொழிக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள ‘தேனவரை’ என்ற தமிழ்ப் பெயரிலேயே5 போர்த்துக்கேயக் குறிப்புகள் இவ்விடத்தைக் குறிப்பிடுகின்றன என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். இதெல்லாம் இங்கு வீற்றிருந்த இறைவன் தமிழரால் வழிபடப்பட்டவன் என்பதற்கான ஐயந்திரிபற்ற சான்றுகளாக விளங்குகின்றன.
மும்மொழிக் கல்வெட்டு "தேனவரை நாயனார், தேனவரை ஆழ்வார்" என்று குறிப்பிடும் தமிழ் இறைவன் யார் என்று அறிவதற்கு நாம் இரு வகையான கருதுகோள்களின் வழியிலேயே செல்லவேண்டும். ஒன்று கணநாத் ஒபேசேகர வழியில் உபுல்வனும் திருமாலும் ஒன்றே என்று கொள்வது. இரண்டு பத்மநாதன், பரணவிதான வழியில் இருவரும் வெவ்வேறு என்று கொள்வது.
உபுல்வனும் திருமாலும்:
உபுல்வன் யாராக இருந்தாலும், தமிழர்கள் தமிழ் மரபு ஏற்றுக்கொண்ட வடிவிலேயே இங்கிருந்த இறைவனை வழிபட்டிருப்பார்கள் என்பது வெளிப்படை. சைவ – வைணவ மரபிலும் சரி, தமிழ் –வடமொழி மரபுகளிலும் சரி, நீல நிறத்தில் போற்றப்படும் முதன்மையான இறைவன் திருமால் தான்6. உதாரணமாக பாகவத புராணத்தில் திருமால், நீலோற்பல இதழ் போல் கறுத்தவன் (நீலோற்பல தள ஸ்யாம 3:28:13) என்று போற்றப்படுவதைக் காணலாம். நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் ‘நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த நீண்ட முகில் வண்ணன்’ (பிரபந்தம். 3684) என்று திருமால் போற்றப்படுகிறான். இன்னோரிடத்தில் “உலகு அளந்து நடமாடிய பெருமான் உரு ஒத்தன நீலங்களே” என்று நீலோற்பலங்கள் திருமாலை நினைவூட்டுவதைப் பாடுகிறார் நம்மாழ்வார் (பிரபந்தம். 2515).
காலி மும்மொழிச் சாசனம், இங்கிருந்த தெய்வத்தை ‘தேனுவரை நாயனார்’ என்றும், ‘தேனுவரை ஆழ்வார்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறது. உபுல்வன் என்று சிங்களவர்கள் போற்றிய நீல வண்ண இறைவன் தமிழரின் திருமால் தான் என்றால் 'நாயனார்' என்ற சொல்லால் அவர் குறிப்பிடப்பட்டிருக்க முடியுமா?
சாசன வழக்கில் நாயனார் என்ற பெயரில் திருமால் அழைக்கப்படுவதும் இயல்பே. எடுத்துக்காட்டுக்கு திருச்சி லால்குடி நத்தம் ஆதிமூலப்பெருமாள் கோவிலிலுள்ள திருமால், மூன்றாம் ராஜராஜ சோழனின் ஒரு கல்வெட்டில் ‘ஆதிமூர்த்தி நாயனார்’ என்று குறிப்பிடப்படுகிறார் (Suganthy 2017). பொ.பி 1310இல் சரசோதிமாலை பாடிய தேனுவரைப் பெருமாள், திருமாலுக்கே கடவுள் வணக்கம் பாடியிருக்கிறார் (வெங்கடேச ஐயர் 1985:01) என்பதும் நம் கவனத்தை ஈர்க்கிறது. திருமாலுக்கு கடவுள் வணக்கம் பாடுவது தமிழிலக்கியத்தில் விந்தையல்ல என்றாலும், தேனுவரை சம்பந்தப்படுவதாலேயே இங்கு குறிப்பாக திருமால் மீது கடவுள் வாழ்த்து பாடப்பட்டிருக்கிறது என உறுதிப்படுத்தலாம். இத்தனை சான்றுகளாலும் இங்கு வீற்றிருந்த முதன்மை இறைவனான உற்பலவண்ணன் திருமாலே என்பதும், இங்கு ஆகமவிதிப்படி அமைந்திருந்த பெருங்கோவில் ஒரு விண்ணகரம் (விஷ்ணு கோவில்) என்பதும் ஓரோவழி போதரும்.
தேனவரைச் சிவன் கோவில்
உபுல்வனும் திருமாலும் வேறுவேறாகவே இருந்திருக்க முடியும் எனக்கொண்டால், இன்னும் இருவிதமான எடுகோள்களை நாம் எடுக்கவேண்டி நேர்கின்றது. ஒன்று, பராக்கிரமபாகுவின் கல்வெட்டு கோவிலையும் தேவாலயத்தையும் தனித்தனியே குறிப்பிடுவதால், கோவில் வைணவக்கோவிலாக இருந்திருக்கிறது, கோவிலும் தேவாலயமும் அழிக்கப்பட்டபின்னர் பிற்காலத்தவர் இரு தெய்வங்களையும் ஒருவராகக் கருதிவிட்டனர் என்று சிந்திப்பது. இப்படிச் சிந்தித்தாலும் தேனவரை நாயனார் அல்லது தேனவரை ஆழ்வார் திருமால் தான் என்றே கொள்ளமுடியும்.
அல்லது திருமாலுக்கு தேனவரையில் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. அது உபுல்வனின் நீலநிறத்தின் தற்செயல் காரணமான பிற்காலத்தைய தவறான இனங்காணல். எனவே கல்வெட்டுச் சொல்லும் கோவில் ஒரு சிவன் கோவில் என்ற எடுகோளுக்கு வருவது. தெவிநுவரையில் சிவனை சம்பந்தப்படுத்துவதற்கு ஏதும் உறுதியான சான்றுகள் கிடைத்திருக்கின்றனவா?
தென்றீர ஈச்சரத்து சிவலிங்கம், தெவிநுவரை.
(படம் நன்றி: சகிலன் ஆனந்தராசா)
ஈழத்தமிழர் மத்தியில், பழம்பெரும் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான தொண்டீச்சரம் இலங்கையின் தென்பகுதியில் அமைந்திருந்தது என்ற நம்பிக்கை பன்னெடுங்காலமாக நீடித்து வருகிறது (Arumugam 1999, வைத்தியநாதன் 2006:302). விஜயனால் இலங்கையின் நாற்றிசைக் காவல் ஈச்சரங்களில் ஒன்றாக மாத்துறையில் சந்திரசேகர ஈச்சரம் அமைக்கப்பட்டது என்கிறது யாழ்ப்பாண வைபவ மாலை (சபாநாதன் 1995). தெவிநுவரையில் 1998இல் விசித்ராராம ரஜமகா விகாரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது அங்கு தற்செயலாக சிவலிங்கம், நந்தி முதலிய திருவுருவங்கள் கிடைத்திருந்தன (Lankabhumi 2006). இந்த விகாரை இன்றைய உபுல்வன் தேவாலயத்துக்கு மிக அருகே அமைந்திருக்கிறது. இங்கு பெறப்பட்ட சிவலிங்கம், நந்தி என்பனவும் உடைந்த பிள்ளையார் திருவுருவமொன்றும் இன்றும் தெவிநுவரை உபுல்வன் தேவாலயத்தில் வைத்துப் பேணப்படுகின்றன. இவற்றையெல்லாம் வைத்து ஈழத்தமிழ் மரபுரைகளில் சொல்லப்பட்ட தொண்டீச்சரம் அல்லது சந்திரசேகரீச்சரம், தெவிநுவரையில் அமைந்திருந்த சிவாலயமே என்ற ஊகத்தை நாம் உறுதிப்படுத்த முடியும்.
தென்றீர ஈச்சரத்து நந்தி, தெவிநுவரை.
(படம் நன்றி: சகிலன் ஆனந்தராசா)
தெண்டீர ஈச்சரம்:
பராக்கிரமபாகுவின் கல்வெட்டானது இந்தக்கோணத்திலான ஆய்வுக்கு பல புதிய திறப்புகளை தந்திருக்கிறது. அக்கல்வெட்டு தேனவரைப் பகுதியை ‘தெண்டீரத் தோட்டம்’ என்று அழைக்கிறது. தென்றீரம் என்பது ‘தெற்குக்கரை’ (தென் + தீரம்) எனப்பொருள்படும் தமிழ்ச்சொல். தென்னிலங்கைக் கரையில் அமைந்திருந்த துறைமுகம், தென்றீரத் தோட்டம் என்று அழைக்கப்பட்டதில் வியப்பேதும் இல்லை. அது எளிதில் 'தெண்டீர' என்று மருவக்கூடியது தான். தெண்டீரம் என்பதே டொண்ட்ரா என்ற நவீன இடப்பெயரின் சரியான வடிவம் எனலாம். இலங்கை நாட்டார் வழக்கிலுள்ள 'தொண்டீச்சரம்' என்ற தலப்பெயருக்கு சரியான அர்த்தமொன்றைப் பெற முயன்றால், ‘தெண்டீர ஈச்சரம்’ என்பதே அச்சிவாலயத்தின் திருத்தமான பெயர் என்று கொள்ளலாம்.
சிதைந்த பிள்ளையார் திருவுருவம், தெவிநுவரை
(படம் நன்றி: கனகசபை எழில்வேல்)
இந்தச் சிவன் கோவில் பற்றிய இன்னொரு குறிப்பை பேராசிரியர் பரணவிதான சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏழாம் விஜயபாகுவின் தெவுந்தரக் கல்வெட்டில் ‘நகரீச நீல கோவில’ என்று வருகின்றது. அது தேவநகரத்தின் ஈசனான 'நீலன்' என்று பொருள்படும். ஆனால் அதைத் தவறான வாசிப்பு என்று கூறும் அவர் அது ‘நகரீச நம் கோவில’, ‘நகரீச எனும் பெயர் கொண்ட கோவில்’ என்பதே சரியான வாசிப்பு என்கின்றார் (Paranavitana 1953:75). அவரது வாசிப்பு சரியானது எனில், தேவநகரத்தில் இருந்த சிவன் கோவில், (தேவ)நகரீச கோவில் அல்லது தேவநகர ஈச்சரம் என்று ஆகும். தேனவரையிலிருந்த சிவன் கோவில் பெயர் எதுவாகவும் இருக்கட்டும். இன்று எஞ்சியிருப்பது சிதைந்த சிவலிங்கமும் நந்தியும் மட்டுமே.
தேனவரை நாயனார் - தெண்டீர ஈச்சரம்:
மாத்துறைச் சிவன் கோவில் தொடர்பான வாய்மொழிக் கதைகளை வைத்து நாம் தீர்க்கமான முடிவொன்றுக்கு வரமுடியாது என்பது உண்மையே. ஆனால் உபுல்வனும் திருமாலும் ஒன்று என்று கொண்டாலும் வெவ்வேறு என்று கொண்டாலும், அங்கு சிவாலயம் இருந்தது உண்மை என்பதற்கான மறுக்கவியலாத ஆதாரங்கள் அகழாய்வில் கிடைத்த இந்தச் சான்றுகள்.
உற்பலவண்ணன் பெற்றிருந்த வரலாற்று முக்கியத்துவத்தையும், அவன் கோவில் அழிக்கப்பட்டு நூறாண்டுகளுக்குள் அவன் விஸ்ணு தெவிரஜூ தான் என்று குவரோஸ் அடிகள் உறுதி செய்வதாலும், குறைந்த பட்சம் அக்கோவிலின் பொற்காலமான 13 - 15ஆம் நூற்றாண்டுகளிலாவது உற்பலவண்ணன் திருமாலாக அடையாளம் காணப்படத் தொடங்கி விட்டார் என்ற முடிவுக்கு செல்வதே பொருத்தம் போல் படுகிறது. இப்படி இரு இறைவர்களுக்குமான தொல்லியல் மற்றும் இலக்கிய ஆதாரங்களும் உறுதிப்படுவதால், அங்கு இருவருக்குமே கோவில்கள் இருந்தன என்று முடிவெடுப்பதில் தவறு இருக்கமுடியாது7.
ஏனெனில் திருமாலுக்கும் சிவனுக்கும் அருகருகே கோவில் கட்டி அழகு பார்ப்பது இலங்கைக்கு சிறப்பான வழக்கங்களில் ஒன்று. திருக்கோணமலையில் கோணமாமலையிலேயே விண்ணகரமொன்று அமைந்திருந்தது. பொலனறுவை ஐநூற்றுவ ஈச்சரத்துக்கு மிக அருகே தான் நான்காம் இலக்க விண்ணகரம் அமைந்திருக்கிறது. பொலனறுவைக் கோட்டையின் வடக்கு வாசலருகே காவல் தெய்வங்களாக ஒருவரை ஒருவர் நோக்கியபடி திருமாலும் ஈசனும் கோவில் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி தேனவரை நாயனார் கோவிலை ஒரு தனிக்கோவிலாக அன்றி, கோவில்களின் தொகுதி என்று இனங்காண்பது வசதியானது. இலங்கையில் அமைந்திருக்கும் பழைமை வாய்ந்த எல்லாக் கோவில்களும் ஆரம்பத்தில் தனிக்கோவில்களாக இருந்து, பின்பு கோவில்களின் தொகுதியாக மாறியவை தான். கோணேச்சரத்தில் மூன்று கோவில்கள் இருந்ததையும், கேதீச்சரத்தில் சமகாலத்தில் இராஜராஜேச்சரம், திருவிராமீச்சரம் என்று இரு கோவில்கள் அருகருகே இருந்ததையும், பொலனறுவையில் பல தொகுதிகளாக சிவாலயங்களும் விண்ணகரங்களும் அம்மன் கோவிலும் அடுத்தடுத்து அமைந்திருப்பதையும் இங்கு ஒப்பிடலாம்.
தேனவரையில் ஒன்றுக்கு மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் இருந்தன என்பதற்கு இரண்டாம் பராக்கிரமபாகுவின் கல்வெட்டு மட்டுமன்றி, சிறுகோவில்கள் இடித்தழிக்கப்பட்டதைச் சொல்லும் போர்த்துக்கேய கோட்டோவின் குறிப்பும், உபுல்வனின் துணைவர்களாக சந்தவன், தனு தேவராஜா முதலிய பரிவாரங்களைக் குறிப்பிடும் சந்தேச இலக்கியங்களும் கூட மேலதிக ஆதாரமாகின்றன (Tennent 1860:20-21; Holt 2003:84).
இன்றைய உபுல்வன் தேவாலயத்துக்கு வடக்கே அமைந்துள்ள கல்கே எனும் பாழடைந்த கட்டிடம் இந்தக்கோணத்தில் விரிவாக ஆராயப்பட வேண்டியது. கல்கே ஒரு சிதைந்த கற்றளியின் எச்சம். அதில் தமிழகத்தின் பல்லவர் பாணியிலான கட்டிடக்கலை அம்சங்கள் தென்படுவதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்தக் கல்கே, நாம் விவாதிக்கின்ற தெண்டீர ஈச்சரச் சிவாலயமோ, திருமால் கோவிலோ, அல்லது வேறொரு கோவிலோ ஏதாவது ஒன்றின் எச்சமாக இருக்கலாம். அதை எதிர்கால ஆய்வுகளே உறுதிப்படுத்த வேண்டும்.
கல் கே, தெவிநுவரை.
(படம்: Lankadeepa)
முடிவுரை:
இலக்கிய மற்றும் தொல்பொருள் சான்றுகளில் இருந்து, குறைந்தது பத்தாம் நூற்றாண்டு முதல் 1588இல் தகர்க்கப்படும் வரை, தேவநகர உற்பலவண்ணன் கோவில் புகழ்பெற்ற ஒன்றாக விளங்கியிருக்கிறது என்பது தெரியவருகின்றது. அதன் தோற்றம் சரியாக எப்போது நிகழ்ந்தது என்பது தெரியவில்லை. மரபுரைகளில் தப்புல சேன மன்னன் இணைக்கப்படுவதால், அது 9ஆம் நூற்றாண்டளவில் பெருங்கோவிலாக கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பிருந்தே அங்கு உற்பலவண்ணனுக்கு வழிபாடு இடம்பெற்று வந்திருக்கலாம்.
துறைமுகங்களுக்கருகே சுதேச மக்களால் வழிபடப்படும் தெய்வம் பின்பு வணிகர்களின் கொடைகளால் உலகப்புகழ் பெறுவது ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல. திருக்கோணமலைத் துறைமுகத்தில் அமைந்திருந்த திருக்கோணேச்சரமும், மாதோட்டத்து மாந்தைத் துறைமுகத்தில் அமைந்திருந்த திருக்கேதீச்சரமும் தமிழகத்திலும் புகழ் நீடிக்கக் காரணமாய் அமைந்தது, கடல் வழி வாணிப மையங்களின் அருகே இருந்த அவற்றின் அமைவிடச் சிறப்பே தான். கல்துறையில் (களுத்துறை) அமைந்திருந்த காளி கோவிலும், கிழக்கே மட்டக்களப்பின் தேசத்துக்கோவிலான கண்டபாணத்துறை திருக்கோவிலும் கூட அதே துறைமுக அமைவிடங்களால் வழிபாட்டுத்தலங்களாக வளர்ச்சி கண்டவையே. இந்தப் பின்னணியில் தான், தெண்டீரத் துறைமுகத்தின் அருகே அமைந்திருந்த உற்பலவண்ணன் கோவில் பின்னாளில் வணிகரும் அந்தணரும் ஆடல்மகளிரும் போற்றிய திருமாலின் பெருங்கோவிலாக உயர்ந்தது எனக் கொள்ளமுடிகின்றது. அதற்கு முன்போ பின்போ அல்லது சமகாலத்திலோ சிவனுக்கும் அப்பகுதியில் கோவிலொன்று எழுந்திருக்கிறது என்பது தொல்லியல் மற்றும் மரபுரைச் சான்றுகளிலிருந்து தெரியவருகிறது.
போர்த்துக்கேய மற்றும் இடச்சு வரைபடங்களில் தேனவரை முக்கியமான பன்னாட்டுத் துறைமுகமாகவும் வணிக நகராகவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அந்தணரின் சதுர்வேதி மங்கலமும் ஐநூறுக்கு மேற்பட்ட ஆடல்மகளிரும் கொண்டு புகழ்பூத்த வணிக நகரமாக விளங்கிய தேனவரையின் பொற்காலம், 1588இல் போர்த்துக்கேயர் அங்கு ஆடிய வெறியாட்டத்துடன் நிறைவுக்கு வருகிறது. சைவமும் வைணவமும் தமிழும் சிங்களமும் ஒருங்கே செழித்த தென்றீரத் தோட்டத் தேவன்துறை எனும் பழம்பெரும் நகரம் வரலாற்றிலிருந்து மறைந்து போகின்றது.
தேனவரைக் கோவில் பற்றிய இவ்வாய்வுக்கட்டுரை தேனவரை எனும் பழம்பெரும் நகரில், வணிக மற்றும் அரசியல் காரணிகளால் ஒரு வழிபாட்டுத்தலம் உருவாகி வளர்ந்தமை பற்றி மேலோட்டமான சித்திரம் ஒன்றை வரைய முற்பட்டிருக்கிறது. இக்கோவில், அதன் தமிழ்த்தொடர்பு, தமிழக மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள், சிங்கள மன்னரின் உறவு முதலியன பற்றிய விரிவான ஆய்வுகள் பரந்த பார்வையில் பக்கச்சார்பற்ற விதத்தில் தொடரவேண்டும். அந்த ஆய்வின் முடிவுகள் இலங்கைத்தமிழருக்கு என்று மாத்திரமன்றி, முழு இலங்கைத்தீவின் வரலாற்றிலும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சக்கூடியவை. காலம் கனிக! தேனவரை ஆழ்வார் அருள் நிறைக! தெண்டீர ஈச்சரன் கூடி அருள்க!
அடிக்குறிப்புகள்:
1. துறை என்ற தமிழ்ச்சொல், சிங்களத்தில் தற என்று சிதைவது இயல்பானது. இன்றைய களுத்தற, மாத்தற என்ற இரு நகரங்களும் ஐரோப்பியர் வரைபடங்களில் தெளிவாக கல்துறை, மாத்துறை என்றே குறிக்கப்பட்டிருக்கின்றன. அவை பழங்காலத்திலிருந்தே தமிழக வாணிகர்கள் கூடிய மையங்கள் என்பதால், அப்பெயர்களை இட்டு ஆச்சரியப்படத்தேவையில்லை. இதே வரன்முறையின் படி, தெவுந்தற என்ற சிங்களப்பெயரின் சரியான பெயரை தேவன்துறை என்று இனங்காண முடிகின்றது.
2. அனுராதபுரத்தின் இசுருமுனியில் நான்காம் மகிந்தனால் பொ.பி 984இல் பொறிக்கப்பட்ட சிங்களக் கல்வெட்டொன்றில் அங்கிருந்த ‘போ உபுல்வன் கசுப்கிரி ரஜமஹவிகாரை’ என்ற பௌத்த மடமொன்று பற்றிய குறிப்பு வருகிறது. பாலியில் ‘போதி உப்பலவண்ண காஸப கிரிராஜ மகாவிகாரை’. இதை சிலர் உற்பலவண்ணன் பற்றிய குறிப்பாகச் சொல்கிறார்கள் ஆனால், முதலாம் காசிபனுக்கு போதி, உப்பலவண்ணா என்று இரு மகளிர் இருந்தார்கள் என்றும், அவன் ஈஸ்ஸரசமணாராம விகாரையை செப்பனிட்டு தன் மகளிரின் பெயரை சூட்டினான் என்றும் சூளவம்சம் (மவ. 39:10-12) சொல்லும். எனவே இது உற்பலவண்ண வழிபாட்டைச் சொல்வதல்ல என்பது வெள்ளிடைமலை (Wickremesinghe 1994:29 - 32).
3. சிங்கள பௌத்தரின் இன்றைய நான்கு காவல் தெய்வங்கள் கதிர்காமத்தேவன், உற்பலவண்ண தேவன், பத்தினித் தெய்வம் மற்றும் நாத தெய்வம் ஆகியோர். கண்டி அரசு காலத்துக்கு முன்னர் பத்தினிக்கும் நாதனுக்கும் பதிலாக களனியின் விபீஷணனும் சமனொளிபாதத்தின் சுமண சமனும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருந்தனர். எது எவ்வாறேனும் பேராசிரியர் பத்மநாதன் கருதுவது போல, இந்தத் தேவதைகளின் கோவிலை மாத்திரமே சிங்களவர்கள் தேவாலயம் என்று அழைத்தார்கள் என்று கொள்ளமுடியாதுள்ளது. இன்று சிங்களவர்கள் யாத்திரை செல்லும் முன்னேஸ்வரம், கோணேஸ்வரம் ஆலயங்களையும் அவர்கள் ஒரே நேரத்தில் 'கோவில' என்றும் 'தேவாலே' என்றும் அழைக்கிறார்கள்.
4. இலங்கையில் மாவிட்டபுரம், திருக்கோவில், பொன்னம்பலவாணேச்சரம், போன்ற சைவப்பெருங்கோவில்களிலும், இலங்காதிலக விகாரம் உள்ளிட்ட சில பௌத்த விகாரங்களிலும் தேவதாசியர் வழிபாடியற்றிய ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இலங்காதிலக விகாரம் ஒரு தமிழகச் சிற்பியால் கட்டப்பட்டது என்பதும், அங்கு புத்தபிரானுக்கு சமனாக நான்கு காவல் தெய்வங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
5. தேனவரை என்பது 'தெவிநுவர' என்ற சிங்களச்சொல்லின் தமிழ் வடிவம் என்றே பொதுவாகக் கருதப்படுகின்றது (பத்மநாதன் 2013:240) ஆனால் தேனவரை என்பது நவரை மீன் (Goat Fish) வகைகளில் ஒன்றின் பெயர். அம்மீன் அதிகளவில் கிடைத்த கடற்பகுதி தேனவரை என்ற பெயரைப் பெற்றிருக்கலாம். அல்லது தேனம் (கடல்)+ வரை (எல்லை, கரை, இடம்) என்ற சொற்களின் கூட்டாலும் அது உருவாகியிருக்கலாம்.
6. இன்று திருவுருவப்படங்களிலும் சிற்பங்களிலும், சிவனை நீலமாகவே வரைகின்றனர். முற்றிலும் அறியாமையின் விளைவு அது. சிவனுக்கு கழுத்து மட்டுமே நீலம். மரபில் சிவன் என்றுமே சிவந்தவனே. பொன்னார் மேனியன், பவழம் போல் மேனியன் என்றே திருமுறைகளிலும் போற்றப்படுகிறான். சிவப்பு நிறத்தவன் என்ற அர்த்தத்தில் வடமொழியின் மிகப்பழைய வேதத்துதிகளும் சிவனை விலோகிதன், சாருணன் உள்ளிட்ட பெயர்களிலேயே துதிக்கின்றன. ஆகமங்களிலும் கிராதர் உள்ளிட்ட மிகச்சில சிவமூர்த்தங்களே கருநிறமாக விவரிக்கப்படுகின்றன. சிவனை நீலமாகச் சித்தரிப்பது நவீன ஓவியர்கள் மரபுக்குச் செய்கின்ற மிகப்பெரும் துரோகம்.
7. இவ்வாய்வுக்கட்டுரை ஆய்வு மாநாட்டில் நிகழ்த்தப்பட்டபோது, அரங்குக்கு தலைமை தாங்கியெ பேராசிரியர் சி.பத்மநாதன், தேனவரையில் ஒரு சிவன் கோவில் இருந்ததில்லை என்று மறுத்துரைத்தார். அங்குள்ள சிவலிங்கம் முதலியன கோவில்வத்தை எனப்படும் தூரப்பிரதேசத்திலிருந்து கொணர்ந்து வைக்கப்பட்டவை என்பது அவரது கருத்தாக இருந்தது. எனினும் கிடைக்கின்ற தரவுகளின் படி, சிவலிங்கம் அதே தெவிநுவர உபுல்வன் தேவாலய வளாகத்திலுள்ள ஒத்பிலிம ரஜமகா விகாரையிலேயே கிடைத்ததையும் (Lankabhumi 2006). , கோவில்வத்தையில் கிடைத்தவை பிள்ளையார் சிலை முதலியன என்பதையும் உறுதிப்படுத்த முடிகின்றது. கோவில்வத்தை, உபுல்வன் தேவாலயத்துக்கு தென்மேற்கே சுமார் ஒரு கிமீ தொலைவில் வெள்ளமடம் எனும் பகுதியில் அமைந்திருக்கிறது. அங்கு வேறொரு (பிள்ளையார்?) கோவில் அமைந்திருந்தது என்று கொள்வதே பொருத்தம் போல் படுகிறது. இவ்விடயத்தில் மேலதிக ஆய்வுகள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.
உசாத்துணைகள்:
• சபாநாதன், குல (பதிப்பு). 1995. யாழ்ப்பாண வைபவ மாலை, கொழும்பு: இந்து சமய அலுவல்கள் திணைக்களம்.
• பத்மநாதன், சி. 2013. இலங்கைத் தமிழ்ச்சாசனங்கள் II, கொழும்பு: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
• வெங்கடேச ஐயர் (பதிப்பு), 1985, சரசோதிமாலை, கொக்குவில்: சோதிட பரிபாலன மடம்.
• வைத்தியநாதன், வசந்தா. 2006, ஈழத்துச் சிவாலயங்கள், கொழும்பு: ஸ்ரீமத் சபாரத்தினசுவாமிகள் தொண்டர் சபை.
· Arumugam, S. 1999. “The Pancha (Five) Ishwarams of Sri Lanka”,TamilNation, retireived from http://www.tamilnation.co
Bartholomeusz, T.J. 1994. Women Under the Bo Tree: Buddhist Nuns in Sri Lanka. Cambridge: Cambridge University Press.
· Davids, T.W.R. 1871. “Dondra Inscription No. 1: Text, Translation and Notes”, Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society (1870 – 71), pp.25- 28.
· Geiger, Wilhelm. 1998. Culavamsa: Being the most recent part of Mahavamsa, Part I, New Delhi-Madras: Asian Educational Services.
· ______. 1998(a). Culavamsa: Being the most recent part of Mahavamsa, Part II, New Delhi-Madras: Asian Educational Services.
· _______. 2000. The Mahavansa or The Great Chronicle of Ceylon, New Delhi-Madras: Asian Educational Services.
· Gibbs, H.A.R (Ed.). Ibn Battuta: Travels in Asia and Africa (1325 - 1354), London: Routledge & Kegan Paul Ltd.
· Holt, J.C. 2008. The Buddhist Viṣṇu: Religious Transformation, Politics, and Culture, New Delhi: Motilal Banarsidass Publishers.
· Krishnamoorthy, K., Mukhopadhyay, S. 1991. A Critical Inventory of Rāmāyaṇa Studies in the World: Foreign languages, New Delhi: Sahitya Akademi.
· Lankabhumi 2006, “Shiva Linga found at Devinuwara.”, Lankabhumi website, retrieved from http://lankabhumi.com
· Obeyesekere, Gananath. 1984. The Cult of the Goddess Pattini, Chicago (IL): University of Chicago Press.
· Paranavitana, S. 1953. The Shrine of Upulvan at Devundara, Colombo: Archeological Department of Ceylon.
· ________. 1994. “The Tamil Inscription on the Galle Trilingual Slab”, Epigraphia Zeylanica, Vol. III, pp.331 – 341.
· Queyroz, Fernao De. 1992. The Temporal and Spiritual Conquest of Ceylon, S.G.Perera (Tr.), Vol I: 1-2, New Delhi - Madras: Asian Educational Services.
· Sudharmawathie, J M. (2011). Reign of King Parakramabahu ІІ as Evident from the Devinuvara Slab Inscription. Jǹànaprabhà, retrieved from http://researchgate.net
· Suganthy, K. 2017. “The Writing on the Wall”, The Hindu (2017.06.08), retrieved from http://www.thehindu.com
· Tennent, James Emerson. 1860. Ceylon: An Account of the Island, Vol II. Part 04, London: Longman Green Longman and Roberts.
· Wickremesinghe, D.M.D.Zilva. 1994. “Vessagiri Inscriptions Slab Inscription III”, Epigraphia Zeylanica, Vol. I, pp.23 – 39.
-----------------------------------------------------------------
இலங்கையை சிவபூமி என்றார் திருமூலர். வட இந்தியாவிலிருந்து வந்து விஜயனுடன் கரையொதுங்கியவர்களில் ஒருவரான உபதிஸ்ஸன் என்கின்ற பிராமணர், இலங்கையில் நான்கு திசைகளிலுமிருந்த ஐந்து சிவாலயங்களைச் சென்று தரிசித்ததாகக் கூறப்பட்டுள்ளது. விஜயனின் வருகை புத்தர் பெருமானின் ஜனனத்துக்கு முற்பட்டதாகும்.அதாவது புத்தர் பிரான் அவதரிப்பதற்கு முன்பே இந்நாட்டில் சிவ வழிபாடு சிறந்தோங்கியிருந்தது என்று கூறப்பட்டுள்ளது.
உபதிஸ்ஸன் சென்று வழிபட்ட சிவத்தலங்கள் ஐந்தும் இன்று பஞ்சேஸ்வரங்கள் என்று கூறப்படுகின்றன. அவை வடக்கே நகுலேஸ்வரம், கிழக்கே திருக்கோணேஸ்வரம், தெற்கே தொண்டீஸ்வரம், மேற்கே முன்னேஸ்வரம் மற்றும் திருக்கேதீஸ்வரம் என்பவையாகும். இவ்வைந்து சிவாலயங்களும் போர்த்துக்கேயரால் சிதைத்தழிக்கப்பட்டபோதும், தொண்டீஸ்வரம் தவிர்ந்த ஏனைய நான்கு ஈஸ்வரங்களும் மீண்டும் தமது பண்டைய சிறப்புடன் இன்று துலங்குகின்றன.
ஆனால் தொண்டீஸ்வரத்தின் நிலை வேறுபட்டுள்ளது. இலங்கையின் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தின் தென்முனையில் உள்ளது தேவேந்திரமுனை. பருத்தித்துறையை தீவின் வடக்கெல்லையாகக் குறிப்பிடுவது போன்று தெற்கெல்லையாகத் தேவேந்திரமுனை குறிப்பிடப்படுவது வழக்கிலுள்ளது. பருத்தித்துறையில் உள்ள சிவாலயம் பசுபதீஸ்வரம். அதுபோல் தேவேந்திரமுனையில் இருந்தது தொண்டீஸ்வரம், சந்திரசேகரேஸ்வரம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
போர்த்துக்கேயரின் வருகையின் முன்னர் இலங்கையிலிருந்த இந்துக்களின் மிகப் பெரும் வரலாற்றுச் சிறப்புமிகு தொண்டீஸ்வரத் திருக்கோயில் அந்நியரின் வருகையின் பின்னர் சிதைத்தழிக்கப்பட்டது. போர்த்துக்கேயருக்கும் முதலாம் இராஜசிங்க மன்னனுக்கும் இடையே இடம்பெற்ற போரின் போது இத்திருக்கோயில் சிதைத்துக் கொள்ளையிடப்பட்டது.
கி.பி. 1587இல் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது. சீனச் சக்கரவர்த்தியால் இச்சிவாலயத்திற்கு வழங்கப்பட்ட பல பெறுமதி வாய்ந்த பொருட்களும் போர்த்துக்கேயரால் கொள்ளையிடப்பட்டு இன்றும் லிஸ்பன் நகர தொல்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
தென்னிலங்கை கரையினிலே தொன்மை மிகுந்த தொண்டீஸ்வரம் இன்று திருமாலின் திருத்தலமாகப் பிரசித்தி பெற்றுள்ளது. ஈஸ்வரனை மூலமூர்த்தியாகக் கொண்டு விளங்கிய தொண்டீஸ்வரம், இன்று தென்னிலங்கையில் பிரசித்தி பெற்ற விஷ்ணு கோயிலான சீரமைப்பு செய்யப்பட்டு மக்கள் வழிபாட்டிற்குரியதாக விளங்குகின்றது.
மாத்தறை நகரத்திலிருந்து இரண்டரை மைல் தொலைவில் மாத்தறை_ - ஹம்பாந்தோட்டை வீதியில் தெவிநுவரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. கடலையண்டியதாக அமைந்துள்ள தெவிநுவரையில் கடலை எல்லையாகக் கொண்ட இந்துத் தெய்வமான விஷ்ணுவின் திருத்தலமாகப் பண்டைய தொண்டீஸ்வரம் விளங்குகின்றது.
இன்று தெவிநுவர விஷ்ணு தேவாலயம் என்று சிறப்புடன் போற்றப்படும் இக்கோயில் பௌத்த மக்களால் பக்தியுடன் வழிபாடு செய்யப்படும் இந்துக் கோயில்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. தெவிநுவர என்பதன் பொருள் தேவநகர் அல்லது தெய்வநகர் எனத் தமிழில் பொருள்படுகின்றது. இன்று சிங்கள மொழியில் தெவிநுவர என்று வழக்கிலுள்ள பெயர் ஆதியில் 'தேவநகர்' என்ற தமிழ்ப் பெயரிலேயே அழைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத் தமிழ் மன்னன் ஆரியசக்கரவர்த்தியை எதிர்த்துப் போரிடச் செல்லு முன்னர் தன் வெற்றிக்காக சப்புமல்குமாரயா என்று கூறப்படும் செம்பகப் பெருமாள், தொண்டீஸ்வரத்திற்குச் சென்று வழிபாடு செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
கி.பி 1234 – 1271வரை தம்பதெனியாவிலிருந்து ஆட்சி செய்த இரண்டாம் பரக்கும்பா மன்னன் காலத்தில் தொண்டீஸ்வரத்தின் வருடாந்த திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. சிறப்பாக இடம்பெற்று வந்த திருவிழா 1587இல் இடம்பெற்ற யுத்தத்தின் பெறுபேறாகக் கைவிடப்பட்டது. கோட்டை நிர்மாணிக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது. தொண்டீஸ்வரம் அமைந்திருந்தமையால் ஐரோப்பியர் தொண்றா (DONDRA) என்று தேவேந்திர முனையைக் குறிப்பிட்டுள்ளனர். நீர்கொழும்பு என்ற தமிழ்ப் பெயர் 'நிகம்பு' என்று மாறியது போன்றது இந்தப் பெயர் மாற்றம் என்று கொள்ளலாம்.
விஜயன் வந்த போது இருந்த சிவாலயங்கள் பற்றி 'யங்' ஆசிய வெளியீட்டின் வரலாற்றறிஞரான சேர் போல் பீரிஸ் இலங்கையிலிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஐந்து சிவாலயங்களைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். பஞ்சேஸ்வரங்கள் என்று இந்துக்கள் போற்றும் அந்த ஐந்து சிவாலயங்களுமே அவை என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கள இனத்தவரான அறிஞர் சேர் போல் பீரிஸ் ஆராய்ந்து எழுதிய கட்டுரை தென்னிலங்கையில் தேவேந்திர முனையில் சிறப்புமிகு சிவாலயமாகத் தொண்டீஸ்வரம் விளங்கியமையை ஆதாரப்படுத்துகின்றது. மாத்தறை மாவட்டத்திலுள்ள பலரின் பரம்பரைப் பெயர்களில் தமிழ் தொக்கி நிற்பதை அவதானிக்கலாம். பெருமான் அல்லது பெருமாள் என்ற பதம் 'பெருமா' என்று முடியுமாறு பல பெயர்கள் உள்ளன. நல்ல பெருமா, வீரப் பெருமா... இவ்வாறு தமிழ்க் கருத்துக்களை முன்னதாகக் கொண்டு பெருமா என்று முடிவைக் கொண்டவையாக பெயர்கள் அமைந்துள்ளன.
அன்று சிவபெருமான் கோயில் கொண்டிருந்த பகுதியில் இன்று விஷ்ணு பெருமாள் கோயில் கொண்டுள்ளார். பெருமானோ, பெருமாளோ மக்களின் பெயர்களில் இணைந்திருப்பது சிறப்பானது. நல்ல, இளைய, பொன்னம், அழக போன்றவற்றுக்கு சிங்கள மொழியில் கருத்தில்லை. ஆனால் தமிழ்மொழியில் கருத்துண்டு. தூய தமிழ் மொழியை முதலாகக் கொண்டவர்களாக தென்னிலங்கையில் சிங்கள பௌத்தர்கள் வாழ்வது பண்டைய உறவின் வெளிப்பாடல்லவா?
போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு புனித லூசியா தேவாலயம் அமைக்கப்பட்ட தொன்மையான தொண்டீஸ்வரம் இருந்த அதே நிலப்பரப்பில் 1955ஆம் ஆண்டு மூன்று அடுக்குகளைக் கொண்ட விஷ்ணு கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சிவாலயம் விஷ்ணு ஆலயமாக மாற்றமடைந்தாலும் இந்துக்களின் வழிபாட்டிற்குரிய விஷ்ணுவே மூலமூர்த்தியாக இருப்பது இந்து சமயத்தின் பண்டைய பெருமையை மிளிரச் செய்கின்றதென்று கொள்ள வேண்டும்.
தொண்டீஸ்வரம், சந்திரசேகரேஸ்வரம் என்ற திருப்பெயருடன் சந்திரமௌலீஸ்வரம் என்ற பெயரும் இக்கோயிலுக்குரிய தொன்மையான பெயர்களிலொன்றாகும்.
தற்போது விஷ்ணு கோயிலாக விளங்கும் தொண்டீஸ்வரத்தின் நிலப்பரப்பில் பண்டைய பல தொன்மையான ஆதாரங்களுள்ளன. அவற்றிலே சிவலிங்கம், அழகாக வடிவமைக்கப்பட்ட நந்தி, பழைமைமிக்க விநாயகப் பெருமானின் கருங்கல்லினாலான திருவுருவம் மற்றும் நான்கு வரிசைகளாகவுள்ள கருங்கற் தூண்கள் ஆகும்.
விஷ்ணு கோயிலுக்கு உரித்தான சிவலிங்கமும், நந்தியும் பண்டைய சிவாலயத்தின் இருப்பை உறுதி செய்கின்றன. இவ்வாலய வளவில் சிற்பங்கள் செதுக்கப்பட்ட பல கருங்கல் படிமங்களுமுள்ளன. வரலாற்றுச் சிறப்புக் கொண்டதாகக் கொள்ளப்படும் தெவிநுவர விசித்திர விகாரையின் ஒத்பிலிம விகாரையில் மேற்குறிப்பிட்ட சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பிரசித்தி பெற்றதும் லண்டனிலிருந்து வெளிவருவதுமான 'நியூஸ் லங்கா' என்ற வாராந்தர சஞ்சிகையின் 1998ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆந் திகதி வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1917இல் பழைமை வாய்ந்த தொண்டீஸ்வரம் தொடர்பாக வரலாற்றாய்வாளர் சேர் போல் பீரிஸ் தனது ஆய்வு கட்டுரையின் மூலம் வெளிப்படுத்தினார். 1998இல் சான்றுகள் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சுற்றாடலில் வேறெந்தவொரு சிவாலயமும் இருந்ததற்கான ஆதாரங்கள் இன்மையும், இங்கு கண்டெடுக்கப்பட்ட சிவாலயச் சின்னங்கள் பழம் பெரும் தொண்டீஸ்வரத்திற்கே உரியவை என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
ஆவுடையார் அகப்படாத நிலையில் கண்டெடுக்கப்பட்ட நான்கு அடிகள் உயரமான சிவலிங்கத்தை நோக்கும் போது மூலமூர்த்தியாக விளங்கிய ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கத்தின் பாரிய அளவினைக் கணிக்க முடிகின்றது. அழகுற வடிவமைக்கப்பட்ட நந்தியின் திருவுருவம் பிள்ளையார் கோயிலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்நந்தியின் திருவுருவம் பல்லவர் காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது.
பிள்ளையார் கோயிலில் திரைச்சீலையால் மூடிமறைக்கப்பட்ட நிலையில் உள்ளது பண்டைய பிள்ளையாரின் திருவுருவம். கருங்கல்லாலான பெரிய அளவைக் கொண்ட மேற்படி திருவுருவம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவும் பண்டைய திருக்கோயிலின் ஆதாரச் சின்னமாக விளங்குகின்றது.
அடுத்ததாக பண்டைய சிவாலயத்தின் இருப்புக்கும், வரலாற்று நிகழ்வுக்கும் கட்டியம் கூறி நிற்பவை நான்கு வரிசைகளில் வரிசையாகவுள்ள கற்றூண்களாகும். புராதன சின்னங்களாகக் கொள்ளப்படும் இக்கற்றூண்கள் போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்ட தொண்டீஸ்வரத்தின் மண்டபத் தூண்களாகும். இதன் மூலம் கருங்கற்றூண்களைக் கொண்ட பிரமாண்டமான மண்டபங்களைக் கொண்டதாகத் தொண்டீஸ்வரம் விளங்கியுள்ளது என்பது சான்றுகளுடன் வெளிப்படுகின்றது.
இன்று இக்கோயில் வளவிலே விஷ்ணு பெருமான் மூலவராக வீற்றிருக்க விநாயகர், முருகன், சூரியன், அம்மன் உட்பட பல இந்துத் தெய்வங்கள் அமர்ந்து அருள் செய்கின்றன. ஒருபுறம் பழைமையும் பெருமையும் கொண்ட காலி மீனாட்சி சுந்தரேஸ்வரமும் மறுபுறம் தமிழ் தெய்வமென்று போற்றப்படும் கதிர்காமக் கந்தன் திருத்தலமும் அமைந்திருப்பது தேவநகர் தொண்டீஸ்வரத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றது.
மூலவராக விஷ்ணு வீற்றிருக்கும் மண்டபத்தில் விஷ்ணுவின் அவதார மூர்த்தங்கள் அழகுறச் சித்திரிக்கப்பட்டுள்ளன. வராக, நரசிம்ம, பரசுராம, கிருஷ்ண, ராமச்சந்திர என்று சகல அவதாரங்களும் சித்திரிக்கப்பட்டுள்ளன.
ஆண்டு தோறும் ஆடிமாதம் வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இலங்கையில் பிரசித்தி பெற்ற சமத் திருவிழாக்களில் தெவிநுவர விஷ்ணு ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்புப் பெறுகிறது. தென்னிலங்கையின் காவல் தெய்வமாகப் போற்றப்படுபவரும் விஷ்ணு பகவானே. இதனால், தென்மாகாணத்தின் சிறப்பு மிகு திருவிழாவாக இலட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்ளும் பெருவிழாவாக இவ்வாலய மகோற்சவம் இடம் பெறுகின்றது.
மூன்றாம் சங்ககாலம் அதாவது கடைச்சங்க காலத்தின் ஆக்கப்பட்டது சிலப்பதிகாரம். தமிழுக்கு அணிசேர்க்கும் காவிய நூல் இது. இளங்கோ அடிகளாரால் ஆக்கப்பட்ட இக்காவிய நூலிலுள்ள பாடல்களுக்கு மேற்குறிப்பிட்ட விஷ்ணு ஆலய மகோற்சவத்தின்போது சிறப்பிடம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவுள்ளது. இது சிலப்பதிகாரத்திற்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை தருவதாயுமுள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் மகோற்சவத்தின் போது பத்தினி அம்மனுக்காக யாகம் நடைபெற்று வருகின்றது. வாழை, மா, தென்னங்குருத்துக்களால் எல்லையிடப்பட்டு புனிதப்படுத்தப்பட்ட இடத்தில் மேற்படி பத்தினியம்மனுக்கான யாகம் இடம்பெறுகின்றது.
குடை, கொடிகளுடன் சேமக்கலம், கொம்பு, உடுக்கு, தவில், தம்பட்டை ஆகியவை ஒலிக்க இந்த யாகம் ஆரம்பமாகின்றது. தமிழ் மாமுனி இளங்கோவடிகளால் ஆக்கப்பட்ட சிலப்பதிகாரத்தின் பாடல்கள் பாடப்பட்டு அதற்கேற்ப வாத்தியங்களின் ஓசையும் எழுப்பப்பட்டு இந்த யாகம் இடம்பெற்று வருகின்றது. தமிழ் மொழியில் சிலப்பதிகாரப் பாடல்கள் பாடப்பட்டு பத்தினியம்மனின் ஆசி கோரப்படுகின்றது. தென்னிலங்கையின் தென் கரையிலிருந்து தமிழ் இசையுடன் ஆண்டுதோறும் ஓங்கியொலிப்பதை அறியும் போது பெருமிதம் ஏற்படுகின்றது. கண்ணகி அறம் காத்து மறம் அழிக்க வல்லவள் என்ற வரலாறு நினைவூட்டப்படுகின்றது.
அன்னதானம் என்று கூறப்படும் மகேஸ்வர பூசை விசேடமானது மகோற்சவ இறுதியில் அன்னதானம் வழங்கப்படுகின்றது. அன்னதானம் வழங்கும் வழக்கம் இந்துக்களுக்குரியது என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மகேஸ்வரன் என்ற திருப்பெயர் சிவனுக்கு உண்டு. திருக்கோயில் பெயர் மாறினாலும் சிவனுக்குரிய முக்கிய வழிபாடான, பூசையான மகேஸ்வர பூசை தவறாது தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
போர்த்துக்கேயரால் சிதைக்கப்படுவதற்கு முன்பு கடல் பயணிகளுக்கான கலங்கரை விளக்கமாக தொண்டீஸ்வரத்தின் தங்க முலாம் பூசப்பட்டு ஒளி வீசிய கோபுர கலசங்கள் விளங்கியதாக கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் வரலாற்றில் இந்து சமயத்தின் தொன்மைக்கு கட்டியம் கூறி நிற்கும் சான்றாதாரமாக விளங்கும் பெருமை பண்டைய தேவநகர், இன்றைய தெவிநுவர திருத்தலத்திற்குண்டு.
பஞ்சேஸ்வரங்களில் ஒன்றான தொண்டீஸ்வரத்தின் பழைமை, மேன்மை, இருப்பு, வளம் யாவும் வெளிக்கொண்டு வரப்படுவதன் மூலம் இலங்கையின் ஆதிக்குடிகளின் வழிபாட்டு முறையை நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தலாம்.