1. இந்து மாலினி பார்த்தசாரதியைக் காசி ஆனந்தன் 1991 பெப்ருவரி முதல் வாரத்தில் சந்திக்கச் சென்றார். காந்தளகத்தில் இருந்தே இந்து அலுவலகத்துக்கு நடந்து சென்று மீண்டார்.
2. மீண்டதும் என்னிடம் சொன்னார் இராசீவ் காந்தி விடுதலைப் புலிகளின் சார்பாளர் ஒருவரைச் சந்திக்க விழைவதாக மாலினியிடம் கேட்டதாக. சந்திப்புக்குக் காசி ஆன்ந்தன் ஒத்துக்கொண்டதாக. என் வழி தொடர்புகளை வைப்பதாக.
3. பெப்ருவரி நடுப்பகுதியில் மாலினி என்னை அழைத்தார். காசி ஆனந்தனைச் சந்திக்கவேண்டும் என்றார். மாலினியின் இல்லத்திற்குக் காசி ஆனந்தன் சென்றார்.
4. மறுநாள் என்னிடம் வந்தார். 5.3.1991இல் தில்லியில் இராசிவைச் சந்திக்க ஏற்பாடு. கடிதம் எழுதுவோம், நீங்களும் நானும் சந்திப்போம் என்றார் காசி ஆனந்தன்.
5. அதற்கு அடுத்த ஞாயிறு நானும் கவிஞர் காசி ஆனந்தனும் காந்தளகத்தில் அமர்ந்து கடிதம் தயாரித்தோம். தமிழீழமே தீர்வு என்பதே கடிதத்தின் சாரம்.
6. தில்லிக்கு என்னை அழைத்தார் காசி ஆனந்தன். நான் மறுத்தேன். விடுதலைப் புலிகளின் சார்பாளனாக வர முடியாதே என்றேன். உதவியாளராக ஒருங்கிணைப்பாளராக வாருங்கள் என்றார்.
7. பயணச்சீட்டுகள் வாங்கினோம் எனக்கு என் பெயரில். அவருக்கு மாற்றுப் பெயரில். தில்லி சென்றோம். இராசீவர் அலுவலகத்தில் இருந்து வண்டியும் வரவேற்பாளரும் வானூர்தி நிலையம் வந்தனர். தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். உணவு, தங்கும் செலவை ஏற்றனர்.
8. மாலினியிடம் தில்லி இந்து அலுலவலகத்துக்குக் காசி ஆனந்தன் சென்று சந்தித்து வந்தார். நான் மாலினியிடம் போகவில்லை. பின்னர் இராசீவர் வீடுவரை நடந்து சென்று இடம் வலம் பார்த்தோம்.
9. 5.3.1991 மாலை 1630 சந்திப்பு நேரம். வண்டியில் அழைத்துச் சென்றனர். வரவேற்பறையில் பலர் இருந்தனர். எம் இருவரையும் ஒதுக்கில் தனி அறையில் விட்டனர். அந்தச் சந்திப்புக் கமுக்கச் சந்திப்பு என முதலிலேயே மாலினி சொல்லியிருந்தார். அன்று சந்திரசேகர் அரசை விட்டுக் காங்கிரசு விலகிய நாள். சந்திசேகர் அரசு காலையில கவிழ்ந்தது. எனவே மூத்த அரசியல்வாதிகள் பலர், ஊடகத்தார் பலர் வரவேற்பறையில். நாம் இருந்த அறை கமுக்க அறை. அவர்களுக்குத் தெரியாது.
10. 1625க்கு இராசீவின் செயலாளர் யோரச்சர் வந்தார். கடிதத்துடன் கவிஞர் அவருடன் போனார். நான் அறையிலேயே இருந்தேன். 1510 மணி அளவில் கவிஞர் மீண்டார். கண்கள் சிவந்திருந்தன. சந்திப்பில் அழுதேன் என்றார். மகிழ்ச்சியாகச் சொன்னார். ஐந்து செய்திகளைச் சொன்னார். நேரே மாலினியிடம் சென்றார் கவிஞர். நான் போகவில்லை.
11. மீண்டு வந்ததும் அவரும் நானும் பொதுத் தொலைப்பேசி ஒன்றிற்குப் போனோம். இலண்டனுக்குப் பேசினார், கிட்டுவிடம் பேசியதாகச் சொன்னார். என்னிடம் மாலினியிடம் சொன்ன ஐந்து செய்திகளையும் கிட்டுவிடம் சொன்னார்.
12. 24(?).5.1991 இந்து நாளிதலில் மாலினி செய்தி எழுதினார். இராசீவைப் புலிகள் கொன்றிருக்க முடியாது. 5.3இல் கமுக்கச் சந்திப்பு நட்ந்தது. இராசீவர் பின் வருவனவற்றைக் காசி ஆனந்தனிடம் கூறினார் என ஐந்து செய்திகளையும் எழுதினார். அவ்வாறு சந்திப்பு நடைபெறவில்லை எனப் பிரணாப் முகர்சி மறுத்ததான செய்தி மறுநாளும் சந்திப்பை உறுதிசெய்வதாக மாலினியின் செய்தி மூன்றாவது நாளும் வந்தன.
13. ஓராண்டு காலம் 1991இல் தொடர்ச்சியாக மல்லிகையில் என்னை விசாரித்தனர். 2000இல் என் கடவுச் சீட்டை சென்னைத் தடா நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். யாவும் அச்சந்திப்பின் விளைவு. இன்றும் வழக்கில் நான்.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan
Maravanpulavu K. Sachithananthan