Saturday, February 01, 2020

தமிழக ஏதிலிகள் குடியுரிமை

வினா 1
இந்தியாவில் தற்போது அறிமுகமான குடியுரிமைத் திருத்தச் சட்டம் சொல்வது என்ன?

விடை 1
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை மேற்கே காந்தாரம் தொடக்கம் கிழக்கே ஐராவதி வரை வடக்கே திருக்கயிலாயம் தொடக்கம் தெற்கே கதிர்காமம் வரை பரந்த நிலமே இந்துக்களின் தாயகமான பரத கண்டம்.

1940களில் ஆங்கிலேயர் விட்டுச்சென்ற பரத கண்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மாலை தீவு என மூன்று முகமதிய அரசுகள் உருவாகி அமைந்தன. நான்காவது முகமதிய அரசாக 1971இல் வங்காளதேசம் அமைந்தது.

முகமதியருக்கும் இந்துக்களுக்கும் ஓர் ஆயிரம் ஆண்டு காலப் பகை. ஆங்கிலேயர் விட்டுச் சென்ற பின்பும் இந்தப் பகை தொடர்ந்தது. மூன்று நாடுகளிலும் முகமதிய அரசுகள் இந்துக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கின. எனவே இந்தியாவில் தஞ்சம் தேடினர் இந்துக்கள். 

இவ்வாறு தஞ்சம் தேடிய இந்துக்களைச் சட்ட மீறல் குடியேறிகள் என இந்திய அரசுச் சட்டம் வகுத்தது. 

தஞ்சம் கோருவோரை, ஏதிலிகளை ஏற்றுக் கொள்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்தில் இந்தியா ஒப்பமிடவில்லை. தவிரவும் இந்தியாவில் ஏதிலிகளுக்கான சட்டம் ஏதும் இல்லை. 

1920, 1955 ஆண்டுகளின் குடிவரவு மற்றும் கடவுச்சீட்டுத் தொடர்பான அந்நியருக்கான சட்டமே நடைமுறையில் இருந்தது. நீதிமன்றமே தலையிட முடியாத இச்சட்டத்தைப் பயன்படுத்தி சட்டமீறிக் குடியேறிகளை, இந்திய அரசு நாட்டைவிட்டு வெளியேற்றலாம்.

2016இல் அரசாணை ஒன்றை இந்திய அரசு வெளியிட்டது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து ஏதிலிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர், புத்தர், சமணர், பாரசீகர், கிறித்தவர் ஆகிய ஆறு சமய நெறியாளர்களைக் குடிவரவுச் சட்ட மீறலுக்காக வெளியேற்ற வேண்டாம் என்றது அந்த அரசாணை. 

அந்த அரசாணையில் வாசகங்களை அப்படியே 2019 கார்த்திகையில் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை, சட்டமாக நிறைவேற்றியது.

 மாநிலங்களவையிலும் நிறைவேற்றிக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றால்1920, 1955ஆம் ஆண்டுகளின் அந்நியருக்கான கடவுச்சீட்டு மற்றும் குடிவரவுச் சட்டங்களின் 2019ஆம் ஆண்டின் புதிய திருத்தம் நடைமுறைக்கு வரும். 

அத் திருத்தத்திற்கு அமைய 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் சட்ட மீறிக் குடியேறிய மேற்கூறிய ஆறு சமயங்களைச் சேர்ந்த மூன்று நாட்டவரும் சட்டத்திற் குறிப்பிட்ட சில ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்தியாவில் வசித்து இருந்தால் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெறுவார்.

வினா 2
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,  வங்களாதேச ஏதிலிகளுக்குக் குடியுரிமை வழங்கவுள்ள இந்தியா, 30 வருடங்களுக்கு மேலாகத் தமிழகத்திலே தஞ்சமடைந்த  இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க மறுப்பது ஏன்?

விடை 2
இந்தியாவின் ஆயிரம் ஆண்டு முகமதியப் பகைமை. இப்பகைமைக் காலத்தில் காந்தாரம் தொடக்கம் ஐராவதி வரையும் திருக்கயிலாயம் தொடக்கம் கன்னியாகுமரி வரையுமான பரத கண்டத்தில் வாழ்ந்த இந்துக்களுக்கு முகமதிய அரசுகள் நடத்திய தொடர்ச்சியான கொடுமை.

இக்கால மூன்று முகம்மதிய அரசுகளின் கொடுமைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தஞ்சம் கோருவோருக்கு வாய்ப்பு அளிப்பதே இந்துக்களின் இன்றைய அரசு செய்யக் கூடியது எனப் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் கொள்கை வகுத்தனர்.  கடந்த தேர்தலில் அந்தக் கொள்கையைச் செயலாக்குவோம் என்று இந்திய மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்கள். மக்கள் ஆணை பெற்றார்கள்.

இலங்கை இந்துக்களின் நிலையை எடுத்துச் சொல்ல எவரும் இருக்கவில்லை. இலங்கை மோதல்கள் சிங்கள மொழி பேசுவோருக்கும் தமிழ் மொழி பேசுவோர்க்கும் இடையேயான மோதல்கள் எனத் தொடர்ந்து கூறி வந்தோம். 

எங்கள் பேச்சாளர்கள் கிருத்துவர்களே. தமிழ்நாட்டில் உள்ள பலரும் வட இந்தியாவில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஆர்வம் கொள்பவரும் இலங்கைத் தமிழர் கிருத்தவர்களே என்ற கண்ணோட்டத்தை வைத்திருந்தனர். 

இலங்கை இந்துக்கள் இந்துஸ்தானத்தின் ஒரு பகுதியினர் என கூறிவந்த முனைவர் சுப்பிரமணிய சுவாமியை, திட்டமிட்டே இலங்கைத் தமிழருக்கு எதிராக திருப்பியவர் திரு அன்டன் பாலசிங்கம் என முனைவர் சுப்பிரமணியசுவாமி என்னிடம் கூறி வருந்தினார். கவிஞர் காசி ஆனந்தனிடமும் இதனை அவருடைய சார்பாளர் கூறினர். அமெரிக்க உளவுத்துறையின் முகவர் என முனைவர் சுப்பிரமணிய சாமியை இந்தியாவில் வைத்தே திரு அன்டன் பாலசிங்கம் குற்றம் சாட்டினார். முனைவர் சுப்பிரமணியசாமி இலங்கை அரசின் பக்கம் சார்ந்த நிலை கொள்ள இஃதே அடித்தளம்.

1975ஆம் ஆண்டில் இருந்தே திரு வாஜ்பாய் அவர்கள் வழியாக இந்திய இந்துக்களின் ஆதரவைப் பெற நான் முயன்று வந்தபோதெல்லாம்  ஈழத்து அரசியல் தலைமைகள் என்னை இந்துத்துவக் கண்ணோட்டம் கொண்டவர் என குறை கூறி வந்துள்ளனர்.

புத்த மதத் தீவிரரின் கொடுமையால் இலங்கை இந்துக்கள் வருந்துவதை அறிந்த தலைவர்களாகத் திரு வாஜ்பாய் அவர்கள் திரு ஜனா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் திரு பால்தாக்கரே அவர்கள் முனைவர் சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் என விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே இருந்தனர். ஏனையோர் ஈழத் தமிழர்களைக் கிறித்தவர்களாக கருதிக் கொண்டிருந்தனர்.

வினா 3
தமிழகத்திலே தஞ்சமடைந்துள்ள  இலங்கை எதிலிகளின் இப்போதைய யதார்த்த நிலை என்ன?

விடை 3
தெற்கே சிங்களவர் தாக்கினால் வடக்கிலும் கிழக்கிலும் தஞ்சம் அடையலாம் எனக் கருதிய காலங்கள் 1977ஆம் ஆண்டோடு முடிவடைந்தன. தமிழகத்திலும் தஞ்சம் அடையலாம் என்ற முயற்சியை1977இல்  நான் முன்னெடுத்தேன். அண்மையில் காலமான அருளர் என்கிற அருட்பிரகாசம் எழுதிய இலங்கா இராணி என்ற நாவலின் கரு அதுவே.

1983 க்குப் பின் தமிழகம் புகலிடமாய் ஆயது. தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் புகலிடம் தேடி வருவோருக்கு அபயக் கரம் நீட்டினார் ஆதரவு கொடுத்தார் அனைத்து வசதிகளையும் செய்தார்.

ஏறத்தாழ மூன்று இலட்சம் ஏதிலிகள் 1983 இலிருந்து 1987 வரை தமிழ்நாட்டில் முகாம்களில் இருந்தனர். இலங்கை-இந்திய உடன்பாட்டின் பின்னர் 1987இல் இவர்களுள் பாதி அளவினர் கப்பல்களில் இலங்கை திரும்பினர்.

போர் முடிந்த 2009இல் தமிழ்நாட்டில் 108 முகாம்களில் ஒன்றேகால் லட்சம் ஏதிலிகள் இருப்பதாகத் தமிழக அரசு கணக்குக் கூறியது. 

2009இல் போர் முடிவடைந்ததும் இவர்கள் இலங்கை திரும்பலாம் என்ற கண்ணோட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையின் ஏதிலிகள் ஆணையம் முன்வைத்தது. இந்திய இலங்கை அரசுடன் பேசியது. படிப்படியாக இவர்களை இலங்கைக்கு அனுப்ப முயன்றது.

2019 இல் ஏறத்தாழ 100 முகாம்களில் 85,000 ஏதிலிகள் தமிழ் நாட்டில் வாழ்கிறார்கள் எனத் தமிழக அரசின் கணக்கு கூறுகிறது. 

1983 க்குப் பின்னர் முகாம்களுக்கு வெளியே இரண்டு அல்லது மூன்று இலட்சம் ஏதிலிகள் வாழ்ந்தனர். 1987களில் இவர்களுட் பாதி அளவினர் இலங்கை திரும்பினர். 

எனினும் 2019இல் ஏறத்தாழ இரண்டு இலட்சம் ஏதிலிகள் தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் ஆக வாழ்ந்து வருவதாக அரசு சார்பற்ற நிறுவனத்தின் மதிப்பீடு கூறுகிறது.

இலங்கை திரும்ப விரும்புகிறீர்களா? இந்தியாவில் தங்க விரும்புகிறீர்களா? என்ற கணக்கெடுப்பை அரசு சார்பற்ற நிறுவனமொன்று மேற்கொண்ட பொழுது இலங்கைக்குப் போகக் கூடிய அரசியல் சூழ்நிலை இல்லை, பாதுகாப்புச் சூழ்நிலை இல்லை, எனவே இந்தியாவிலேயே வாழ விரும்புகிறோம் எனப் பெரும் எண்ணிக்கையான ஏதிலிகள் கூறினர்.

ஒவ்வொரு ஏதிலியும் தன்னுடைய விருப்பத்திற்கு அமையவே எங்கு வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை உடையவர் என்பதை ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் ஆணையம் உறுதி செய்கிறது. 

இலங்கையில் இந்துக்களின் எண்ணிக்கையைக் கூட்டும் நோக்குடன் அவர்களை இங்கு அழைக்க வேண்டும் என சிலர் ஆசைப்படுகிறார்கள். 

எந்த அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகிறது என உலகுக்கு நாம் சொல்கிறோமோ அதே அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றே ஏதிலி ஒருவர் எங்கு வாழ வேண்டும் எனத் தனக்குத்தானே தீர்மானம் மேற்கொள்வது.

வினா 4
வங்களாதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஏதிலிகள் மதம்சார் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள் என்றும் இலங்கையில் நடப்பது மதம்சார் துன்புறுத்தல் அன்று, இனம்சார் பாகுபாடே என்றும் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி தரப்பால் விளக்கம் தரப்பட்டுள்ளதே. இது குறித்து?

விடை 4
தில்லியில் கோவாவில் கொல்கொத்தாவில் மும்பையில் கருத்தரங்குகளில் பிரபாகரன் கிருத்தவரா என என்னிடம் கேட்பார்கள்.தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் இத்தகைய வினாவை இலங்கை தமிழ்த் தலைவரிடம் முன்பு கேட்டு இருக்கிறார்.

சிங்களவர் தமிழர் இன மோதல் என்றும் புத்த இந்து மத மோதல் அல்ல என்றும் நேற்று திரு சந்திரகாசன் அவர்கள் பிபிசி செவ்வியில் கூறியிருக்கிறார்.

நாங்களே அவ்வாறு சொல்லும்பொழுது பாரதிய ஜனதா கட்சியினர் அவ்வாறு சொல்வதில் வியப்பு என்ன இருக்கிறது?

வினா 5
2015 இலங்கையின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்ட ஜ.நா  தீர்மானத்திலிருந்து தாம் வெளியேறப்போவதாக இலங்கையின் பதிய  வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்   இது பற்றி?

விடை 5
1921ஆம் ஆண்டு அன்றைய சட்டசபைத் தேர்தலுக்கு வடமேல் மாகாண வேட்பாளராகச் சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களை இலங்கைத் தேசிய காங்கிரஸ் நியமித்தது. சில வாரங்களில் அருணாசலம் அவர்களுக்குத் தெரிவிக்காமலே திரு டி மெல் என்பவரை வேட்பாளராக அறிவித்தது. இலங்கைத் தேசிய காங்கிரஸில் தொடக்கத் தலைவர் அருணாசலம். டிஎஸ் சேனநாயக்கா எஃபார் சேனநாயக போன்றவர்கள் வாக்குறுதியை மீறினார்கள் உடன்பாட்டை முறித்தார்கள். யாழ்ப்பாணம் வந்த அருணாசலம், சிங்களத் தலைவர்களை நம்பமுடியாது என எழுதி வைத்திருக்கிறார்.

1925இல் மகேந்திரா உடன்பாட்டை யாழ்ப்பாணத்தில் எழுதியோரே காலி மாநாட்டில் அதை முறித்தவர்களான இலங்கைத் தேசிய காங்கிரஸின் சிங்களத் தலைவர்கள்.

1947இல் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறும் ஆவணத்தில் தமிழர் சார்பில் ஒப்பமிட்ட திரு சுந்தரலிங்கம் அடுத்த சில ஆண்டுகளில் ஏமாற்றம் அடைந்தார். உடன்பாடுகளைச் சிதைத்த சிங்களத் தலைமையிடம் இருந்து பிரிந்தார். அடங்காத் தமிழர் முன்னணி அமைத்தார். தமிழ் ஈழமே தீர்வு என 1950இல் கூறினார்.

1957 பண்டா செல்வா ஒப்பந்தம் 
1965 டட்லி செல்வா ஒப்பந்தம் 
1987 ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் 
2002 பிரபாகரன் இரணில் புரிந்துணர்வு உடன்பாடு
யாவற்றிலும் இருந்து ஒரு தலைப்பட்சமாக விலகியவர்கள் சிங்கள புத்த தலைவர்கள்.

ஈழத்தமிழருடன் உடன்பட்ட பல நிலைகளில் இருந்து விலகியவர்கள் 
இந்தியாவோடு உடன்பட்ட நிலையில் இருந்து நீதிமன்று வழி விலகியவர்கள் 
இன்று ஐநா மனித உரிமை அமைப்பு நாடுகளுடன் 2015இல் உடன்பட்ட நிலையில் இருந்து விலகுகிறார்கள்.

1921 தொடக்கம் 2015 வரை உடன்படுவதும் விலகுவதும் சிங்கள புத்தத் தலைமையின் தொடர்கதை.

--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan