Tuesday, January 29, 2019

ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019)


ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019)
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
இலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின் தாக்குதலில் 64 தமிழ்ப் பொது மக்கள் இறந்தனர். வியத்நாமில் மைலாய் நகரில் 1968 மார்ச்சு 16இல் அமெரிக்கப் படைகள் தாக்குதலில் 300-500 வியத்நாமியப் பொதுமக்கள் இறந்தனர். வியத்நாமில் அமெரிக்கப் படைகள் செய்ததையே வல்வெட்டித்துறையில் இந்தியப் படைகள் செய்ததாகக் குற்றம் சாட்டிய ஜோர்ஜ் பெர்ணாண்டஸ், வல்வெட்டித்துறையை இந்தியாவின் மைலாய் என அறிவித்தார்.
ஜோர்ஜ் பெர்ணாண்டஸ், கொங்கணக் கத்தோலிக்கர். மேற்குக் கடற்கரையோர மங்களூரில் 1930இல் பிறந்தவர். பாதிரியாரகப் பயிற்சிக்கு பங்களூர் போனவர் இடை நிறுத்தி மும்பை சென்று தொழிற் சங்கவாதி ஆனவர். சமதருமக் கோட்பாடுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். எளிமையானவர், இனிமையானவர், அடித்தள மக்களின் மேம்பாட்டுக்கு அச்சாணியானவர். 1967இல் நாடாளுமன்ற உறுப்பினரானவர்.1994இல் சமதாக் கட்சியைத் தொடங்கியவர். பிகாரின் இன்றைய முதலமைச்சர் நிதிஷ்குமார், சமதாக் கட்சியில் இருந்து வளர்ந்தவர்.
வங்கத்துக் கவிஞர், நேரு அமைச்சரவையில் அமைச்சர் உமாயூன் கபீரின் மகள் இலைலாவை விரும்பி மணந்தவர் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ். சீன் அவர்களின் ஒரே மகன்.
1983க்குப்பின் இந்திய மனித உரிமை இயக்கங்கள் இலங்கைத் தமிழர் மீதான சிங்களவரின் தாக்குதல்களையும் தமது நிகழ்ச்சி நிரலில் ஆர்வத்துடன் சேர்த்துக்கொண்டன.
சென்னையில் ஊடகவியலார் தி என்  கோபாலன் மிகுந்த ஆர்வம் காட்டினார். வி ஆர் கிருஷ்ண ஐயர், ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் போன்ற தமிழரல்லாத மனித உரிமை ஆர்வலர்களை, சமதரும ஈடுபாட்டாளரைச் சென்னைக்கு அழைத்து இலங்கைத் தமிழர் அழிப்புத் தொடர்பான மாநாடுகளை நடாத்தி வந்தார்.
அக்காலத்தில் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் தமிழகத்தில் பலருக்கு இலங்கைத் தமிழர் ஆதரவாளராக அறிமுகமானார். அதற்குப்பின்னர் வாழ்நாள் முழுவதும் அவர் அந்தக் கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை.
இலங்கைத் தமிழருக்காக மட்டுமன்றி, மியன்மார், வங்கதேசம், நேபாளம் என அவரின் இரக்கக் கண்கள் பரந்து பார்த்தன, அடக்கியோரை எதிர்த்து விரைந்து குரல் கொடுத்தன.
இந்திராவின் நெருக்கடி நிலைக் காலத்தில் ஜோர்ஜ் பெர்ணாண்டஸுக்கு அடைக்கலம் கொடுத்தவர் கருணாநிதி. ஆனாலும் இலங்கைத் தமிழர் ஆதரவு நிலையில் தமிழகத்தில் பழ நெடுமாறன், வைகோ, கி. வீரமணி மூவரும் ஜோர்ஜ் பெர்ணாண்டஸுடன் நெருக்கமாகப் பணிபுரிந்தவர்கள்.
விடுதலையை வேரறுக்க முடியாது. அதற்கான போராட்டங்கைளையும் நசுக்க முடியாது. தமது நாட்டில் விடுதலைக் குரல்களை ஒடுக்கியோர், பிறிதொரு நாட்டில் விடுதலைக்கு ஆதரிப்பது இரட்டை வேடமே. மனதார ஆதரிக்கார். ஒப்புக்காக ஆதரிப்பார். இதனாலன்றோ உரத்த ஒலியுடன் குரல் எழுப்பியிருந்தாலும் இந்திரா காந்தியின் தமிழர் போராட்ட ஆதரவுக் கொள்கை தோல்வி கண்டது. எம்ஜியாரும் எதையும் செய்யமுடியவில்லை. ஆனாலும் அடக்கி ஆள்வோர் நடுவே எம்ஜியார் விடுதலைக்காகக் குரல் கொடுத்ததால் தனித்து ஒளிர்கிறார் என ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் எழுதினார் (பக். 61, மனித உரிமைகள், 1998).
இந்தியப் படைகளை மீளழைக்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் குரல் 1989 ஆனியில் ஓங்கி ஒலித்த நாள்களில், விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம், ஜோர்ஜ் பெர்ணாண்டசுடன் தொடர்பு கெண்டார். இந்தியப் படைகள் விலகினால் விடுதலைப் புலிகளைப் பிரேமதாசா அழித்துவிடுவார் எனக் கூறினார். பாலசிங்கத்தை ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் கமுக்கமாகச் சந்தித்ததாகவும் செய்தி உண்டு. இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தக் கேட்டுக்கொண்டார்.
இந்தியப் பிரதமரிடம் எடுத்துச் சொல்லும் நிலையில் தான் இல்லை எனப் பதிலளித்த ஜோர்ஜ் பெர்ணாண்டஸ், குடியரசுத் தலைவர் வேங்கடராமனுக்குக் கடிதம் எழுதினார். ஜோர்ஜ் பெர்ணாண்டஸிடம் மேலும் தகவல்களைக் கோரிப் பெற்ற வேங்கடராமன், பிரதமருக்கு அவை யாவற்றையும் அனுப்பினார்.  (இந்தியா ருடே, யூலை 31, 1989 இதழ்)
1997 பெப்ருவரியில் ஜோர்ஜ் பெர்ணாண்டஸைத் தில்லியில் முதன்முதலாகச் சந்தித்தேன். என்னுடன் வந்தவர் திருமதி மாலினி இராசநாயகம். இலங்கைத் தமிழர் ஆதரவு நிலைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தோம்.
1998 தொடக்கம் 2001 வரை ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர். முந்தைய அரசு இலங்கைக்குக் கடலோரப் பாதுகாப்புக் கப்பல்களைக் கொடுத்திருந்தது. ஒரு கப்பலை அனுப்பியபின் மற்றக் கப்பல் அனுப்பும் நிலையில் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் இந்தியப் பாதுகாப்பு அமைச்சரானார். பழ் நெடுமாறனின் வேண்டுகோளை ஏற்ற ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் இரண்டாவது கப்பலை இலங்கைக்கு அனுப்ப மறுத்தார்.
அமைச்சராகப் பணிபிரிந்த அதே காலத்தில் இலங்கைத் தமிழர் ஆதரவு மாநாட்டைத் தில்லியில் தன் வீட்டுப் பெருவெளியில் பழ நெடுமாறன், ஈழவேந்தன், வைகோ முதலானோர் பங்களிப்புடன் நடாத்தியமை அவரின் உணர்வுபூர்வமான ஈடுபாட்டின் வெளிப்பாடு. 
2000ஆம் ஆண்டு யூன் 3ஆம் நாள். சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம். முதலமைச்சர் கருணாநிதியின் 77ஆவது பிறந்த நாள் விழா.
இரத்தம் சிந்தாமல் ஒரே நாடு பிரிந்தது. செக் நாடும் சுலோவாக் நாடும் உருவாகின. அதே போல இலங்கைத் தீவில் தமிழர் தாயகம் தனியாகவும் சிங்களவர் தாயகம் தனியாகவும் பிரிந்து தமிழருக்குத் தனி நாடு அமையவேண்டும். கருணாநிதி தன் உரையில் இவ்வாறு கூறினார்.
வாஜ்பாய் பிரதமர். திமுகவும் அரசில் கூட்டணி. மாறன் அமைச்சர். ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் பாதுகாப்பு அமைச்சர்.
முதலமைச்சர் கருணாநிதியின் பேச்சு இந்திய அரசின் கொள்கையா? இந்திய எதிர்க் கட்சிகள் கூவின. இலங்கையில் சிங்களவர் கூச்சலிட்டனர். மேற்கத்தைய நாடுகளும் குரலெழுப்பின.
வாஜ்பாயின் பதிலை ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் கூறினார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் விரும்பும் தீர்வே இந்தியக் கொள்கை என்றார். ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் வாஜ்பாய் அவர் வழி கூறினார். அதே நாளில் இந்திய வெளியுறவு அமைச்சர் யஸ்வந்த் சிங் கொழும்பில் நின்றார்.
2000 யூலை 1, 2 நாள்கள். இடம் ஈரோடு. வைகோ தலைமையிலான மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் “தமிழக மீளெழுச்சி மாநாடு”. உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ், மின்சக்தி அமைச்சர் அரங்கராசன் குமாரமங்கலம், முதலமைச்சர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் இராமதாசர் எனப் பலர் பங்குபற்றிய மாநாடு.
அந்த மாநாட்டிலும் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் பேசினார். 1987-1988இல் இந்திய அரசின் தவறான கொள்கையைப் பிரதமர் வாஜ்பாய் பின்பற்றமாட்டார் எனக் கூறிய அவர், தமிழரும் சிங்களவரும் இணைந்து கேட்டாலே இந்திய அரசு தலையிடும் எனக் கூறினார்.
2008 வைகாசியில் தில்லியில் மீண்டும் ஜோர்ஜ் பெர்ணாண்டஸைச் சந்தித்தேன். குணபாலசிங்கம், பத்மநாதன் ஆகிய இருவருடனும் தில்லி சென்றிருந்தேன். இலண்டனில் அவர்கள் இருவரும் சார்ந்த அமைப்பு நடத்த இருந்த இலங்தைக் தமிழர் ஆதரவு மாநாட்டிறாகாக ஜோர்ஜ் பெர்ணாண்டஸை அழைக்கச் சென்றிருந்தோம்.
இலண்டன் மாநாட்டிற்காக, ஜோர்ஜ் பெர்ணாண்டஸை அனுப்ப உதவினேன். தென் ஆபிரிக்க அமைச்சர் என் நண்பர் படையாட்சியையும் அனுப்ப உதவினேன். தில்லியில் இருந்து இந்திய வெளியுறவுத் தூதரக அநுபவம் நிறைந்த என் நண்பர்களையும் அனுப்ப உதவினேன்.
மற்றொருமுறை தில்லி சென்ற பொழுது, ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் வாழ்ந்த கிருஷ்ண மேனன் மார்க் இல்லம் சென்றேன். அவர் மருத்துமனையில் இருப்பதாகக் கூறினர்.
நேற்று அவர் காலமானார் என்ற செய்தி அறிந்து கலங்கினேன். இலங்கைத் தமிழரின் உணர்வுபூர்வமான நண்பர். அடித்தட்டு மக்களின் இதயத் துடிப்பு. விடுதலை இயக்கங்களுக்கு நீரூட்டி வளர்ப்பவர். அவரின் மறைவு இந்தியாவுக்கு மட்டுமன்று, மனித நேயர்களுக்குப் பேரிழப்பு.



Wednesday, January 23, 2019

அடிமைத் தளைகளை அகற்ற உறுதிபூணும் நாள்




இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைமை இடமாகக் கொண்டு அமைந்த சைவத்தமிழ் அரசு.
400 ஆண்டுகளாகச் சங்கிலித் தொடர்ச்சியாக அமைந்த அரசு.
தென்மேற்கே வாய்க்கால் ஆறு அதன் எல்லை.
தென் கிழக்கே கொம்புக்கல் ஆறு அதன் எல்லை. சில காலங்களில் மாணிக்கக் கங்கை வரை அதன் எல்லை விரிந்து இருந்ததாம்.
அந்த 400 ஆண்டுகளில் தமிழீழ அரசின் ஆட்சியில் சைவ சமயமும் தமிழ் மொழியும் மட்டுமே பண்பாட்டு நெறிகள்.
புத்த சமயமும் சிங்கள மொழியும் தெற்கே கண்டியைத் தலைநகராகக் கொண்ட ஆட்சியிலும் தென்மேற்கே கோட்டையை தலைநகராக கொண்ட ஆட்சியிலும் சமகாலத்தில் விளங்கின.
மேலை நாட்டு மொழிகள், சமயங்கள், அரபு நாட்டு மொழிகள், சமயங்கள், அக்காலங்களில் இலங்கையில் இல்லை.
நல்லூரைத் தலைநகராகக் கொண்ட சைவத்தமிழ் அரசு 400 ஆண்டுகளுக்கு முன்பு வீழ்ந்தது.
கலியுகம் 4720 சகாப்தம் 1541 திருவள்ளுவராண்டு 1650
விபவ ஆண்டு 27 வைகாசி புதன்கிழமை (05.06.1619) தேய்பிறை எட்டாம் நாள் அட்டமி பூரட்டாதி நட்சத்திரம் அன்று சைவத்தமிழ் அரசு வீழ்ந்தது.
வீழ்த்தியவர்கள் மேலைநாட்டுப் போர்த்துக்கேயர். 1617இல் கோவாவில் தமிழீழ அரசை வீழ்த்துமாறு போர்த்துக்கேய ஆளுநர் ஆணையிட்டார்.
அக்காலத் தமிழீழ அரசன் சங்கிலியன். போர்த்துக்கேயர் திறை கொடுக்குமாறு ஆணைகளை அனுப்பினர். நிறைவேற்றச் சங்கிலியன் மறுத்தான்
மன்னாரின் பேசாலையில் போர்த்துக்கேய யேசூற்றப் பாதிரிமார்களால் வாள்முனையிலோ சோற்றுக்காகவோ கத்தோலிக்கராக மதம் மாறிய தனது குடிமக்களைச் சங்கிலியன் அழித்தான்.
போர்த்துக்கேயரின் படையெடுப்புகளைச் சந்திக்கத் தமிழகப் பழவேற்காட்டில் முகாமிட்டிருந்த ஒல்லாந்தர்களையும் தஞ்சை நாயக்கர் படைகளையும் மலையாளக் குஞ்சலி வீரர்களின் கடற்படையையும் துணைக்கு அழைத்தான். கண்டி அரசுக்கும் செய்தி அனுப்பினான்.
1619 பங்குனியில் பிலிப்பு டி ஒலிவேரா தலைமையில் தெற்கே கொழும்பிலிருந்து நூறு போர்த்துக்கேய வீரரும் சில ஆயிரம் சிங்களக் கூலிப்படைகளும் இணைந்த படை ஒன்று வடக்கு நோக்கிக் கிளம்பியது
தமிழகம் நாகப்பட்டினத்திலிருந்து போர்த்துக்கேயக் கடற்படை கப்பல்கள் யாழ்ப்பாணம் நோக்கிக் கிளம்பின.
1619 சித்திரையில் பூநகரி வந்த போத்துக்கேயப் படைகள் கேரதீவுக் கடலைக் கடக்க மீனவர்களைப் பயன்படுத்தினர்.
1619 சித்திரைக் கடைசியில் குடாநாட்டுக்குள் போத்துக்கேயப் படைகள் நுழைந்தன.
கலியுகம் 4720, சகாப்தம் 1541, திருவள்ளுவராண்டு 1650, விபவ ஆண்டு, வைகாசி 27ஆம் நாள், புதன்கிழமை பூரட்டாதி நாளில் (05.06.1619) வண்ணார்பண்ணையில் நடந்த பெரும் போரில் சங்கிலியன் படை தோற்றது. சைவத் தமிழ்ப் படை தோற்றது.
பிலிப்பு டி ஒலிவேராவின் கத்தோலிக்கப் போர்த்துக்கேயப் படை வென்றது.
நல்லூரைத் தலைமையகமாகக் கொண்ட தமிழீழ அரசு வீழ்ந்தது.
சைவத் தமிழ் அரசன் சங்கிலியனும் பல்லாயிரம் சைவத் தமிழ்ப் படை வீரரும் கத்தோலிக்கப் போர்த்துகேயப் படையிடம் தோற்று மாவீரராகிய நாள், அந்த நாள்.
அந்த நாளின் 400ஆவது ஆண்டு நிறைவு நாள், அதே திதி, இந்த ஆண்டு கலியுகம் 5120, சகாப்தம் 1941, திருவள்ளுவராண்டு 2050, விகாரி ஆண்டு, வைகாசி 13, திங்கள்கிழமை, தேய்பிறை எட்டாம் நாள் அட்டமி, சதய நாளன்று (27.05.2019) வருகிறது.
அந்நாள் இலங்கையின் வரலாற்று நாள். சைவத் தமிழரின் இதயத் துடிப்பு நாள்.
மன்னன் சங்கிலியனையும் அவனோடு உயிர்துறந்த தமிழர் படையினரையும் நினைவுகொள்ளும் நாள். 400 ஆவது ஆண்டு நினைவு நாள்.
கீரிமலையில் திரள்வோம், பாலியாற்றில் திரள்வோம். பாலாவியில் திரள்வோம், மோதரகம் ஆற்றில் திரள்வோம். நந்திக் கடலில் திரள்வோம். கொட்டியாற்றில் திரள்வோம். கல்லடியில் திரள்வோம். கொம்புக்கல் ஆற்றில் திரள்வோம். வாய்க்கால் ஆற்றில் திரள்வோம். சங்கிலிய மன்னனுக்கும் படைவீரர்களுக்கும் நீத்தார் கடன் ஆற்றுவோம்.
இந்த ஆனி தொடக்கம் அடுத்த ஆனி வரை ஓராண்டு காலத்துக்குச் சங்கிலியன் 400வது ஆண்டு நினைவு நிகழ்வுகளை இலங்கை முழுவதும் நடத்துவோம். புலம்பெயர் தமிழர்களிடையே நடத்துவோம்
ஊர்கள் தோறும் சங்கிலியன் சிலைகள் நிறுவுவோம்.
வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் சங்கிலியன் வரலாறு என்ற தலைப்பில் ஒரு பகுதி சேர்ப்போம்.
சங்கிலியன் நாடகம் ஓரங்க நாடகமாக நாடகக் குழுக்களிகளிடையே போட்டி நடத்துவோம்
சங்கிலியின் கதையில் ஏதாவது ஒரு பகுதியைப் பரதநாட்டியமாக அமைக்கும் போட்டி நடத்துவோம்
சங்கிலியன் வரலாற்றைத் தமிழிசைப் பாடல்களாக்கி இசைக்கும் போட்டி நடத்துவோம்
சங்கிலியன் வரலாறு தொடர்பாக மாணவர்களிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி எனப் போட்டிகள் நடத்துவோம்.
வைகாசித் தேய்பிறை எட்டாம் நாள் மன்னன் சங்கிலியன் மற்றும் தமிழ்ப் படை வீரருக்கு நினைவு நாள். ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து அடிமைத் தளைகளை அகற்ற உறுதிபூணும் நாள்.