நடிகர் திலகம் சிவாஜி
கணேசன். அவர் திரைப் படங்களில் நடித்தாரா? அல்ல அல்ல, எந்தத் திரைப் படத்திலும் அந்த
நாயகனகவே மாறிவிடுவார்.
யாழ்ப்பாணம் இந்துக்
கல்லூரி மாணவனாக இருந்த காலங்களில் அவர் நாயகனான திரைப் படங்கள் யாழ்ப்பாணத்தில் ஓடின.
1958இல் என்று நினைவு.
தங்கமலை இரகசியம் என்ற திரைப் படத்தைப் பார்த்து வந்த என் உடன் வகுப்பு மாணவர், சுதுமலை
வாசி, ந. சண்முகரத்தினம் (இப்பொழுது அவர் நோர்வேயில் வேளாண் பேராசிரியர்) வகுப்பு முடிந்து
வீடு செல்லும் வழியில் ஓட்டுமடம் சந்திப்பில் நின்றவாறே கதையைக் கூறினார். காட்சிகளை
விளக்கினார். பாடல்களின் சுவையைக் கூறினார். சிவாஜி கணேசனின் நடிப்பாற்றலை வியந்தார்.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய அமுதைப் பொழியும் நிலவே பாடலின் வரிகளைக்
கூறி வியந்தார். சிவாஜி கணேசனின் நடிப்புக் கூறுகளை ஆற்றலை எனக்கு விளக்காமாக முதலில்
கூறியவர் சண்முகசுந்தரம். அதுவரை சிவாஜி கணேசனின் திரைப்படங்களைக் கேள்வியுற்றுளேன்,
ஆனால் பார்த்ததில்லை.
பராசக்தி திரைப்பட
வரிகளுட் சில எனக்கு மனப்பாடமாக இருந்தாலும் நான் அத் திரைப்படத்தைப் பார்க்கவில்லை.
கலைஞர் கருணாநிதியின் வரிகளாகவே விதந்து பேசினர்.
சென்னை வந்த பின்
1959இல் சிவாஜி கணேசனைக் கட்டபொம்மனாகப் பார்த்தேன். கெயிட்டி திரை அரங்கில் பார்த்து
மெய்சிலிர்த்தேன். பின்னர் பாசமலரில் அண்ணனாகப் பார்த்தேன்.
அக்காலத்தில் தெருவில்
வைத்திருக்கும் விளம்பரத் தட்டிகளில் சிவாஜி கணேசனின் பட்த்தின் மீது சாணி எறிந்திருப்பர்.
சுவரொட்டிகள் கிழிந்திருக்கும்.
விடுதியில் என் அறைக்குப்
பக்கத்து நண்பர் கேசவன் எம்ஜிஆரின் சுவைஞர். சிவாஜி கணேசனைத் தாழ்த்திப் பேசுவார்.
இந்த நிகழ்வுகள் சிவாஜி
கணேசன் மீது எனக்கு இரக்கத்தைத் தந்தன. சண்முகசுந்தரத்தின் அறிமுகம், கட்டபொம்மன் வீர
உரைக் காட்சிகள், பாசமலர் தந்த அழுகை யாவும் என்னைச் சிவாஜி கணேசன் மீது ஈர்ப்பைத்
தந்தன.
என் தந்தையார் திரைப்
படங்களில் ஆர்வமில்லாதவர். எனவே எனக்கும் அளவுக்கு மீறிய ஆர்வமோ. ஈர்ப்போ வந்ததில்லை.
சென்னையில் என் உடன் மாணவர் கோடம்பாக்கம் செல்வர். திரைப் படப்பிடிப்புகள் பார்த்து
வருவர்.
சென்னையில் வாழ்ந்த
எந்தக் காலத்திலும் திரைப்படப் பிடிப்பைப் பார்க்கும் ஆர்வம் எனக்கு வந்ததில்லை.
1960ஆம் ஆண்டு. பச்சையப்பன்
கல்லூரி. அறிவியல் இளவல் முதலாண்டு மாணவன். விலங்கியல் முதன்மைப் பாடம். வேதியியல்
இரண்டாவது பாடம்.
யாழ்ப்பாணத்தில் என்
தந்தையார் அச்சகம் வைத்திருந்தார். அச்சகத்திற்கு ஈய எழுத்துகள் சென்னையில் இருந்து
வந்தன. அனுப்பும் நிறுவனங்களுள் ஒன்று நாட்டன் நிறுவனம். உரிமையாளர் சண்முக முதலியார்.
அவருக்கு மூன்று மகன்கள்.
அவர்களுள் இருவர், துரைராஜா, கிருஷ்ணமூர்த்தி. இருவரும் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.
வேப்பேரி சூளையில் நிறுவனம் இருந்தது. அச்சகத்துக்கு ஈய எழுத்துகள் அனுப்புவதால் என்
மீது அவர்களுக்கு ஈடுபாடு. வார இறுதிகளில் அவர்கள் இல்லம் செல்வேன். விருந்தோம்புவர்.
அங்கு பழகியவர்களுள்
ஒருவர் துரைசாமி. அவர்களின் உறவினர். மெல்லியதான தோற்றம். இனிமையாகப் பழகுவார். எளிமையான
வாழ்வு முறை.
ஒரு நாள் பச்சையப்பன்
கல்லூரி விடுதிக்கு வந்தார். வேதியியல் பேராசிரியரின் அறிமுகம் கேட்டார். தான் திரைப்
படத் துறையில் இருப்பதாகவும் இயக்குநர் பீம்சிங்கிற்கு உதவி இயக்குநராகப் பணி புரிவதாகவும்,
ஆய்வு கூடம் அமைத்துத் தர வேதியியல் பேராசிரியர் ஒருவரின் உதவி தேவை எனவும் கூறினார்.
இரண்டாம் பாடமாக வேதியியல்
படித்தேன். பேராசிரியர் இராமராவ் எனக்கு ஆசிரியர். அவரிடம் சென்றேன். துரைசாமியாரின்
வேண்டுகோளை முன்வைத்தேன். சினிமாக்காரங்களிடம் போகாதே, பாடங்களைப் படி என என்னை விரட்டினார்.
துரைசாமியார் மீண்டும்
வந்தார். இராமராவாரிடம் மீண்டும் போனேன். விடமாட்டேங்கிறியே, பணம் தருவார்களா எனக்
கேட்டார்.
இருவரிடமும் தொடர்ந்து
பேசி, ஊதியம், போக்குவரத்து, ஆய்வுகூடப் பொருள் செலவு பற்றிய உடன்பாட்டுக்கு இருவரையும்
இணக்கினேன். நீயும் என்னோடு இருக்கவேண்டும் எனக்கு இராமராவாரின் ஆணை.
முதல் நாள் பீம்சிங்காரிடம்
இராமராவரையும் என்னையும் அழைத்துப் போனார். காட்சியை விளக்கினார் இயக்குநர். ஆய்வு
கூடம், அதில் ஆராய்ச்சிக்கான காட்சிகள். ஒரு காட்சியில் புகை கக்கும் நிகழ்வு. ஆய்வாளருக்குக்
கண் போகுமாறு வெடித்துப் புகை கக்கும் நிகழ்வு.
இராமராவாரும், துரைசாமியரும்
நானுமாகப் பொருள்கள் வாங்கினோம். ஆய்வுகூட அமைப்பை இயக்குநரிடம் கூறிவந்தோம்.
படப்பிடிப்பு நாள்
வந்தது. முதல் நாளே ஆய்வு கூடத்தை ஒழுங்கு செய்து வந்தோம்.
காலை போனோம். சிவாஜி
கணேசன், சரோஜாதேவி, சௌகார் ஜானகி வந்திருந்தனர். அவர்கள் தனியாக இருந்தனர், நாம் இருவரும்
தொலைவில் இருந்தோம்.
இராமராவார் சொல்லிக்
கொடுக்க, பீம்சிங்காரும் துரைசாமியாரும் உள்வாங்கி, நடிகர்களுக்கு விளக்கினர். படப்பிடிப்புக்
காலம் நான்கு அல்லது ஐந்து நாள்கள் தொடர்ச்சியாக. மாலை வேளைகளில் இராமராவரும் நானும்
கோடம்பாக்கத்துக்கு அவர்கள் வண்டியில் போய்வருவோம். புகை கக்கும் காட்சிக்காக முழு
நாளும் இருந்தோம்.
ஒரே ஒரு நாள் சிவாஜி
கணேசனுடன் பேசினேன். காலேஜா? என்ன படிக்கிறாய்? எனக் கேட்டார். எந்த ஊர்? என்றார்,
யாழ்ப்பாணம் என்றேன், ஓ… சிலோனா, எனக்குப் பிடிக்காது. அங்கே நம்மாள்களுக்கு மரியாதை
இல்லை, அடிக்கிறாங்க… என்றார். அவரது அடித்தொண்டைக் குரலும் புகை பிடித்தவாறே பேசிய
பாங்கும் என் நினைவில் நீங்காதன.
பேராசிரியர் இராமராவரும்
நானும் பாலும் பழமும் திரைப் படத்தின் முன்னோட்டக் காட்சிக்குப் போய் வந்தோம். பின்னர்
நண்பர்களுடன் சென்று திரைப் படத்தை இரண்டு அல்லது மூன்று முறை பார்த்திருப்பேன்.
நான் பங்குபற்றிய படப்பிடிப்புப்
பகுதிகளை https://youtu.be/B9Gq-aVyKns
பார்க்கலாம்.
தந்தையாருக்கு நடப்பவற்றை
அவ்வப்பொழுதே கடிதத்தில் எழுதிவிடுவேன். பேராசிரியர் இராமராவர் என்னைத் திரைத் துறைக்குப்
போகக் கூடாதென வலிந்து சொல்லும் இயல்பினர். இந்தச் செய்தி என் தந்தையாருக்கு ஆறுதலைத்
தந்தது.
1962ஆம் ஆண்டு. மீண்டும்
துரைசாமியார் கோரிக்கை ஒன்றுடன் வந்திருந்தார். 10 மாணவர்கள் வரை வேண்டும். பட்டமளிப்பு
விழாப் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும். படத்தின் பெயர் பாரத். கீழ்ப்பாக்கம்
நியூட்டோன் அரங்கத்தில் படப் பிடிப்பு.
என் நண்பர்களுக்குக்
கொண்டாட்டம். ஒருநாள் மாலை 2 மணி. படப்பிடிப்புக்கு வண்டியில் அழைத்துச் சென்றனர்.
அனைவரும் கைவலார் அறை சென்றோம். அரிதாரம் முகமெங்கும் பூசினோம். ஆங்கில உடையான கோட்டும்
சூட்டும் தந்தனர் அணிந்தோம்.
பெரிய மண்டபம். பட்டமளிப்பு
விழாவுக்கான மேடை. அலங்காரங்கள். துரைசாமியார்
எங்களுக்கு அறிவுறுத்தினார். எங்கு உட்காருதல் போன்ற காட்சி விளக்கங்கள் தந்தார்.
மண்டபத்துக்கு மறுபக்கத்தில்
நாற்காலிகள். வரிசையாகப் பலர் இருந்தனர். சிவாஜி கணேசன், பத்மினி, சாவித்திரி, நம்பியார்
எனப் பலரைக் கண்டோம். என் நண்பர்களும் நானும் நெருங்கிச் சென்று பார்த்தோம்.
படப்பிடிப்பு முறைகள்
எம் போன்ற புதியவர்களுக்குக் களைப்பைத் தரும். மீட்டும் மீட்டும் ஒரே நடைமுறை. இரவு
12 மணி வரை படப்பிடிப்பு.
உணவு, தேநீர் யாவுக்கும்
குறைவில்லை. படப்பிடிப்பு முடிந்ததும் சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் புறப்பட்டனர். பின்னர்
நாம் உடைகளை மாற்றினோம். விடுதிக்கு வண்டியில் அனுப்பினர்.
1960இல் சிவாஜி கணேசனுக்காகக்
காட்சி அமைப்பில் அணிலாக இருந்தேன். 1962இல் அவர் பங்குபற்றிய காட்சியில் நானும் இருந்தேன்.
பாரத் படப்பிடிப்புத் தொடரவில்லை எனவும் திரைப் படம் வெளிவராது எனவும் துரைசாமியார்
பின்னர் என்னிடம் சொன்னார்.
சிவாஜி கணேசன் நினைவு
நாள் இன்று 21.07.2018 எனப் பதிவுகள் பார்த்தேன். நினைவலைகளை மீட்டேன்.