Friday, January 12, 2018

தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தார்

வாழ்த்துரை
தலைநகர்த் தமிழ்ச் சங்கம் தமிழ்நாட்டில் ஆற்றிவரும் அரும்பணிகள் சிறக்க 40ஆம் ஆண்டு விழாவில் வாழ்த்துகிறேன்.

சென்னைக் கடற்கரையில் நிகழ்ந்த போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டதால் தலைநகரத் தமிழ்ச் சங்கத்தாரோடு எனக்குத் தொடக்க அறிமுகம். அதற்குப் பின்னர் நாம் நகமும் சதைகளானோம்.

தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினனானேன். அறக்கட்டளையில் ஆட்சிக் குழுவில் என இணைந்து பணிபுரிந்தேன்.கட்டடக் குழுவிலும் சேர்ந்தேன்.

பாவேந்தர் பாரதிதாசன் விருது தந்து என்னைச் சிறப்பித்தனர் சங்கத் தலைவர் பேராசிரியர் சேதுவும் செயலாளர் சுந்தரராசனும். கி. ஆ, பெ.விசுவநாதம் ஐயாவின் கைகளால் விருது பெற்றேன்.

பெயர்ப் பகைகளில் தமிழ், ஈழத் தமிழர் நலன், தமிழே ஆட்சி மொழி, தமிழே நீதிமன்ற மொழி, ஆங்கிலப் பள்ளிகளை அகற்று, எனப் பல முனைகளில் தலைநகர்த் தமிழ்ச் தங்கத்தினர் போராடினர். ஒருமுறை செயலாளர் சுந்தரராசனாரைக் காவலர் தடியால் அடித்தபொழுது நான் கொதித்து எழுதியன இன்னமும் என் நினைவில். வைகைக் கரையில் கூலியாளாக வந்த சிவனாருக்கு விழுந்த அடியாக நான் உருவகித்து, அக்கால முதலமைச்சர் கலைஞர் பொறுப்பானார் என எழுதினேன்.

கடை கடையாகத் துண்டுகள் கொடுத்தோம். தெருக்களில் ஊர்வலம் போனோம். தொடரிகளுக்குக் குறுக்கே படுத்தோம். வண்ணப் பூச்சால் அந்நிய எழுத்தழித்தோம். காவல் நிலையங்களில் தவம் கிடந்தோம். கலைஞர் கருணாநிதியின் சார்பாளராய்த் தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தினோம். கட்டட நிதி சேர்த்தோம். மாநாடுகள் நடத்தினோம். உண்ணா நோன்பிருந்தோம். தலைநகர் தமிழ்ச் சங்கம் கூடுமிடமாகக் காந்தளகம் அமைந்த காலங்களும் உண்டு. என் மகிழுந்து தலைநகர்த் தமிழ்ச் சங்கப் பணிகளுக்காக ஓடாத காலம் குறைவு.

பேரா. சேது, தமிழாகரர் சுந்தரராசனார், பாவலர் கணபதியார், புலவர் வெற்றியழகனார், செந்தில்குமரனார் என நூற்றுக் கணக்கான தமிழ் நெஞ்சங்களுடன் கலந்து மகிழ்ந்தேன். பல்லாயிரம் தமிழ் உணர்வாளர்களுடன் இணைந்து பணிபுரிந்தேன்.  நான் சிறையில் இருந்த காலம், என்னை நாடுகடத்திய காலம், என்மீது வழக்குகள் வந்த காலம், எனக்குப் பிணை தேவையான காலம், என் இல்லத்துக்குள் தமிழ் விழைந்த காலம், எந்தக் காலத்தில் எனக்குத் தலைநகரத் தமிழ்ச் சங்கத்தார் இடுக்கண் களையாதகாலம்? உடுக்கை இழந்தவன் கைபோலத் தலைநகர்த் தமிழச் சங்கத்தார் வருவர், காப்பர், கைகொடுப்பர், துயர் களைவர், உற்சாகம் தருவர், ஊக்குவிப்பர், நான் துவளாது துணை நிற்பர்.  




தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தார் இல்லங்களில் நான் செல்லப் பிள்ளை. என்னை அன்போடு வரவேற்பர், கனிவோடு விருந்தோம்புவர், வாழ்வியல் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பர் அரவணைப்பர். நான் இல்லாமல் அவர்கள் இல்லை என்றவாறு இணைந்தோம், கலந்தோம், மகிழ்ந்தோம், இறும்பூதெய்தினோம். தங்களுள் ஒருவராக என்னை வளர்த்தனர், வாழ்வித்தனர், உடன்பிறப்பாகக் கொண்டனர்.

40 ஆண்டுகளாகத் தொடரும் தமிழால் வந்த தொடர்பு, உணர்வால் வந்த பிணைப்பு, அன்பால் கனிந்த இணைப்பு, பணியால் நிறைந்த கலப்பு, இவை என் வாழ்வுக்கு நிறைவாகின.

வாழ்த்துகிறேன். தோளோடு தோள் நிற்போம். தமிழ் உணர்வோடு அனைவரின் தாள்களைப் பணிகிறேன், தொடர்வோம் தமிழோடு.

படங்கள் இணைப்பில்