இலங்கையில் இருந்து இந்தியா செல்லும் வானூர்திகளில் மதுரை, திருச்சி, திருவனந்தபுரம்,
சென்னை, பங்களூர் செல்லும் பயணிகளுள் 30% வழிபாட்டுப் பயணிகள்.
வடக்கே திருப்பதி, திருத்தணி, திருக்காளத்தி, மேற்கே குருவாயூர், சபரிமலை, தெற்கே
திருச்செந்தூர், நடுவே காஞ்சிபுரம், மேல்மருவத்தூர், திருவண்ணாமலை, சிதம்பரம், திருக்கடவூர்,
திருமறைக்காடு, திருச்சிராப்பள்ளி, பழனி மதுரை என ஈழத்து இந்துக்களின் வழிபாட்டுக்
கோயில்கள்.
தைப்பூசம் - பழனி, திருச்செந்தூர்
சிவராத்திரி – இராமேச்சரம், திருக்காளத்தி, திருமறைக்காடு, திருவிடைமருதூர்
பங்குனித் திங்கள் – மதுரை மீனாட்சி அம்மன்
சித்திரை முழுநிலா நாள் – மதுரை கள்ளழகர்
வைகாசி விசாகம் – முருகனின் ஆறு படை வீடுகள்
ஆனி உத்திரம் – சிதம்பரம்
ஆடிப் பூரம் – காஞ்சி காமாட்சி
ஆவணிச் சதுர்த்தி – பிள்ளையார் பட்டி
புரட்டாதிச் சனி – திருநள்ளாறு
ஐப்பசிக் கந்தர் சட்டி - திருச்செந்தூர்
கார்த்திகை விளக்கீடு – திருவண்ணாமலை
மார்கழித் திருவாதிரை – சிதம்பரம்
மகர விளக்கு – சபரி மலை
இவ்வாறாக மாதந்தோறும் தென்னாட்டில் உள்ள ஒரு கோயிலுக்கு வழிபாட்டுப் பயணம் மேற்கொள்வது
ஈழத் தமிழர் மரபு. இவை தவிர வடநாட்டில் காசிக்குச் சென்று வருவதும் ஈழத் தமிழர் மரபு.
தமிழ்நாட்டில், திருமறைக்காடு திருக்கோயில் ஆட்சியுரிமை ஈழத்தமிழரது. வரணிக்
குருக்கள் பரம்பரையினர் மரபுரிமை.
திருவண்ணாமலையில் ஆதீனத் திருமடம் ஒன்றின் தவக்கோலத்தர் மரபு வழியில் ஈழத்தமிழர்.
இராமேச்சரத்தில் பொன்னம்பலம் இராமநாதன் கட்டிய திருமடம் இன்றும் உளது.
கோடைக்கானலில் பொன்னம்பலம் இராமநாதன் கட்டிய முருகன் கோயில் அறங்காவலர் ஈழத்தமிழர்.
சிதம்பரத்தில் ஞானப்பிரகாசர் குளத்தைச் சுற்றி 31 திருமடங்கள் ஈழத்தவருக்குச்
சொந்தமானவை. மாலைகட்டித் தெருவிலும் சில மடங்கள் ஈழத் தமிழருடையன. சிதம்பரம் ஆறுமுகநாவலர்
பாடசாலை ஈழத் தமிழரின் மேற்பார்வையில் உள்ளது.
சென்னையில் தங்கசாலைத் தெருவில் ஆறுமுகநாவலரின் அச்சகச் சொத்து இன்றும் உளது.
சென்னை இராயப் பேட்டையில் புலோலி நா. கதிரவேற்பிள்ளையின் திருவுருவச் சிலை தாங்கிய
மண்டபம் அவரே அமைத்துத் திரு. வி. க. அவர்களின் ஆட்சியில் இருந்தது.
இவை தவிரக் காலத்துக்குக் காலம் ஈழத் தமிழர் முதலிட்ட சொத்துகளின் எச்சங்கள்
சென்னை பந்தர் தெரு, புதுக்கோட்டை, உதகமண்டலம், திருச்சி போன்ற பல நகரங்களில் உள.
சங்க கால ஈழத்துப் பூதந்தேவனார் தொடக்கம் நேற்றைய பாலு மகேந்திரா வரையாக ஈழத்
தமிழரின் பண்பாட்டு வளர்ச்சிப் பங்களிப்புகள் தென்னகத்தில் பன்முகங்களாவன.
ஈழத் தமிழகத் தொடர்புகளின் அடி நாதம் வட கடல் (இன்றைய பெயர் பாக்கு நீரிணை).
காலம் காலமாக ஈழத் தமிழர் வட கடல் வழி தமிழகத்துக்குப் பயணமாயினர். இவர்களுள்
பெருமளவினர் வழிபாட்டுப் பணிகள்.
மார்கழித் திருவாதிரைக்குச் சிதம்பரம் செல்லக் கப்பல் விடுமாறு நான் கேட்டு
வந்ததன் காரணம் இந்த வரலாற்றுப் பண்பாட்டு இணைப்பின் அருட்பயனை நோக்கியே.
20.11.2016 இலங்கை அரசு
நடத்திய நாவலர் விழா மூன்றாம் நாள் மாலை நிகழ்ச்சியில் நான் பேசினேன். விழாவின் சிறப்பு
விருந்தினர் வடமாகாண ஆளுநர் மேதகு இரெசினால்டு கூரே.
புத்தர்கள் வழிபாட்டுப்
பயணமாகக் கயா செல்ல அரசு வசதிகள் செய்கிறது. கிறித்தவர்கள் வழிபாட்டுப் பயணமாக எருசலேம்
செல்ல அரசு வசதிகள் செய்கிறது. இசுலாமியர் வழிபாட்டுப் பயணமாக மக்கா செல்ல அரசு வசதிகள்
செய்கிறது.
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரைநாள், நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும், தேரார் வீதியில்
தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து, பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் அருள்பெருக்க
விழையும் தேவர்கள் முனிவர் இயக்கர் சித்தர் கந்தருவர் யாவரும் சிதம்பரத்தில் கூடும்
நாள் திருவாதிரை நாள்.
சைவர்கள் வழிபாட்டுப் பயணமாகத்
திருவாதிரைக்குச் சிதம்பரம் செல்ல அரசு வசதி செய்யவேண்டும். மேதகு ஆளுநரிடம் கேட்டேன்.
என் கோரிக்கைக்கு ஆதரவாகக் கேட்போராக வந்திருந்த பெருந்திரளான சைவப் பெருமக்கள் கைதட்டி
ஆர்ப்பரித்தனர்.
2016 திசம்பர் 27 முதலாக
2017 சனவரி 13 வரையிலும் காங்கேயன்துறையில் இருந்து நாகப்பட்டினத்துக்கோ, கடலூருக்கோ
கப்பல் பயணச் சேவைக்கு ஏற்பாடு செய்யக் கேட்டு விளக்கமான விரிவான கடிதத்தை மறுநாள்
21.11.2016 காலை மேதகு ஆளுநரிடம் சேர்ப்பித்தேன்.
வெளிநாட்டமைச்சருக்கு
29.11.2016 நாளிட்ட கடிதத்தை மேதகு ஆளுநர் அனுப்பினார். சைவர்களுக்காகத் திருவாதிரைக்குச்
சிதம்பரத்துக்குக் கப்பல் விடக் கேட்டார். பாதுகாப்பு அமைச்சுக்கும் கலாச்சார அமைச்சுக்கும்
கடிதம் எழுதினார்.
14.12.2016 காலை வெளிநாட்டமைச்சில்
இருந்து என்னிடம் தொலைப்பேசியில் அழகான தமிழில் பேசினார். பேசியவர் தமிழரல்லர்.
நாகப்பட்டினத்துக்கும் கடலூருக்கும்
கப்பல் விட இந்திய அரசு ஒப்பவில்லை. காரைக்காலுக்கு விட ஒப்புகின்றது. உங்களுக்கு அஃது
ஏற்றதா?
சைவ வழிபாட்டுப் பயணிகள்
பணம் கொடுத்துப் பயணிப்பார்களா? அரசே செலவை ஏற்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா?
இந்த ஆண்டே கப்பலை விடவேண்டுமா?
அடுத்த ஆண்டு விடலாமா?
காங்கேயன்துறை - காரைக்கால்
கப்பல் ஏற்றது என்றேன். கட்டணம் தொடர்பாக அரசின் முடிவை ஏற்கிறேன் என்றேன். இந்த ஆண்டே
கப்பலை விடுங்கள் என்றேன்.
ஆவன செய்கிறோம் எனச் சொன்னார்
அன்பைக் குழைத்த சொற்களால் அந்த மூத்த அலுவலர் திருமிகு அஞ்சு.
நேரே ஆளுநர் அலுவலகம் சென்றேன்.
தெற்கே பயணத்தில் இருந்த மேதகு ஆளுநர் என்னிடம் தொலைப்பேசியில் பேசினார். விவரம் சொன்னேன்.
நன்றி சொன்னேன். நடந்ததைச் செய்தியாக வெளியிட ஒப்புதல் கேட்டேன், ஒப்பினார்.
ஓர் இலட்சம் ரூபாய் வரை
செலவு செய்து மூன்று இரவுகள் பயணமாகி, கொழும்பு – சென்னை – சிதம்பரம் என வானூர்தியில்
பயணமாகும் சைவப் பெருமக்களே, சில மணி நேரங்களில் மிக மிகக் குறைந்த கட்டணத்தில் கப்பலில்
சென்றடையும் வாய்ப்பு.
இலங்கை, இந்திய, தமிழ்கூறும் நல்லுலக ஊடகங்கள் இக் கப்பல்சேவைக்கு ஆதரவளித்துச்
செய்தி வெளியிட்டன. திரு. காண்டீபன், திரு. தவநேசன் இருவரும் வழிபாட்டுப் பயணிகளின்
பட்டியலைத் தயாரித்து வந்தனர். வட மாகாண ஆளுநர், யாழப்பாணம் மாவட்டச் செயலர், யாழ்ப்பாணத்திலுள்ள
இந்தியத் துணைத் தூதரகம் ஆகிய அலுவலகங்களில் இப்பட்டியல்களைக் கையளித்தனர்.
ஈழத் தமிழரிடையே அருள் பெருக்கும் எதிர்பார்ப்பைக் காங்கேயன்துறை காரைக்கால்
கப்பல் பயண வாய்ப்புக் கொடுத்தது. சிதம்பரம் நடராசப் பெருமானின் தில்லைவாழ் அந்தணர்களும்
வரவேற்று அறிவித்தனர்.
26.12.2016 திங்கள்கிழமை வட மாகாண ஆளுநரின் தனிச் செயலர் திரு. சுமணபாலா என்னைத்
தொலைப்பேசியில் அழைத்தார். வெளியுறவுத் திணைக்களம் ஆளுநருக்கு அனுப்பிய கடித வரிகளை
வாசித்தார்.
கொள்கை அளவில் இலங்கை அரசு இந்த வழிபாட்டுப் பயணத்தை ஏற்றுள்ளது. கால நெருக்கடியால்
2017 சனவரி 10 திருவாதிரைக்குக் கப்பல் விட முடியவில்லை. அடுத்த ஆண்டு திருவாதிரைக்குக்
காங்கேயன்துறையில் இருந்து காரைக்காலுக்குக் கப்பலை விடுவோம் என்ற வரிகளைச் சுமணபாலா
வாசித்தார். தளர்ந்தேன்.
30.12.2016 அன்று காங்கேயன்துறைக் கடற்படை முகாமில் இருந்து லெப்டினண்ட் கொமாண்டர்
மெலிந்தகொடை (0262269153) என்னை அழைத்தார். காங்கேயன்துறையில் இருந்து காரைக்காலுக்குக்
கப்பல் விடக் கடற்படை முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்றார். குடியகல்வு, சுங்க அலுவலகங்கள்
ஒத்துழைப்பதே மீதி என்றார்.
உடனே இந்தத் தகவலை வட மாகாண ஆளுநருக்குத் தெரிவித்தேன். அவரும் அவரது உதவியாளர்
திரு. சுமணபாலாவும் சுறுசுறுப்பாயினர்.
04.01.2017 புதன்கிழமை வட மாகாண ஆளுநரைச் சந்தித்தேன். கொள்கை அளவில் இலங்கை
அரசு ஏற்றுக் கொண்டதால், கடற்படை, குடியகல்வு, சுங்கம், துறைமுகத்தார், கப்பலார், மற்றும்
அரச அலுவலகங்கள் ஒத்துழைத்தால் இந்த ஆண்டு இந்துக்கள் சிதம்பரத்துக்கு வழிபாட்டுக்குப்
போகலாம் என்றேன். கொழும்பு சென்றதும் பேசி ஆவனசெய்வதாக உறுதி கூறினார்.
நாள்களை எண்ணிக் கொண்டிருந்தேன். நடராசப் பெருமானை வேண்டிக்கொண்டு இருந்தேன்.
10.01.2017 காலை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் / பணிப்பாளர் திரு. எசலா வீரக்கோனைச்
சந்திக்கச் சென்றார் வட மாகாண ஆளுநரின் உதவியாளர் திரு. சுமணபால. அனைத்து அனுமதிகளும்
வழங்கியுள்ளோம். கப்பலை விடுங்கள் எனத் திரு. வீரக்கோன் சொன்னதாகத் திரு. சுமணபால என்னிடம்
கூறினார். திரு. இளங்கோவனிடம் பேசி ஆவன செய்யுங்கள் என்றார் திரு. சுமணபால.
10.01.2017 செவ்வாய்க்கிழமை காலை கடற்படைக் கப்பித்தான் கோசலர் (0262269151)
என்னைத் தொலைப்பேசியில் அழைத்தார். கப்பல் ஆயத்தமா? எனக் கேட்டார். பாதுகாப்பு அமைச்சு
ஒப்புதல் தந்தது. நீங்கள் கப்பலை விடலாமா எனக் கேட்டார்.
விவரங்கைள வடமாகாண ஆளுநருக்கும் திரு. சுமணபாலாவுக்கும் குறுஞ் செய்தியாகத்
தெரிவித்தேன். வட மாகாண ஆளுநர் என்னைத் தொலைப்பேசியில் அழைத்தார். கப்பல் ஒழுங்கு செய்தால்
பயணிகள் போகலாம் என்றார். இந்திய நுழைவனுமதி தொடர்பாகத் துணைத்தூதர் நடராசனிடம் பேசுகிறேன்
என்றார்.
நேரே வட மாகாண ஆளுநர் அலுவலகம் போனேன். ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், உதவிச்
செயலாளர் செல்வநாயகம் இருவரையும் சந்தித்தேன். கப்பித்தான் கோசலருடன் பேசினார். தொலைநகல்
வழி நடைமுறைகளைச் செப்பமிட்டார். நெடுந்தீவுக்கு 80 பயணிகளுடன் பயணிக்கும் வடதாரகைக்
கப்பலை ஒழுங்கு செய்வதற்கா உயர் மட்டத்தில் பேசினார்.
11.01.2017 மதியம் ஒரு மணிக்குக் கப்பல் புறப்படப் பெருவாய்ப்புண்டு என்ற செய்தியுடன்
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் விரைந்தேன். துணைத் தூதர் நடராசனைரையும்
உதவியாளரையும் சந்தித்தேன்.
இரவிரவாகப் பணிசெய்து எத்தனை மணி சென்றாலும் 80 பயணிகளுக்கும் இலவய நுழைவனுமதி
கொடுக்கிறோம். உடன் இணையத்தில் விண்ணப்பிக்கச் சொல்க, விண்ணப்பம் ஏற்கும் முகவர்கள்
இரவு வரை உங்கள் பயணிகளுக்காகக் காத்திருப்பர் என்றார் நடராசன். விசா வழங்கும் அலுவலரை
அழைத்தார் இந்தியில் ஆலோசனை சொன்னார்.
திரு. காண்டடீபன், திரு. தவநேசன் இருவரையும் அழைத்தேன். பயணிகளை ஆயத்தம் செய்யுங்கள்
என்றேன்.
இலங்கை அரசு எமக்கு எழுத்துவழியாக எந்தக் கடிதமும் தரவில்லையே என்ற திரு. நடராசன்,
கொழும்பில் தன் சகாக்களை விசாரித்தார். எந்தக் கடிதமும் இலங்கை அரசிடமிகுந்து வரவில்லை
என்ற செய்தியைப் பெற்றார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் அலுவலர் திருமிகு அஞ்சுவுடன் பேசினேன். இந்திய
அரசுக்குக் கடிதம் கிடைக்கவில்லையே என்றேன். அதுவா, தில்லியில் உள்ள இலங்கைத் தூதருக்கு
எழுதினோம். அவர் தில்லியில் மிகுந்த உயர் மட்டத்தில் பேசி இந்திய அரசின் ஒப்புதல் பெற்ற
பின்னரே பயணிக்கலாம் என்றார். திரு. சுமணபாலாவுக்கும் திரு. வீரக்கோனுக்கும் இடையே
நடந்த உரையாடலைச் சொன்னேன். தனக்கு எதுவும் தெரியாதென்றார் திருமிகு. அஞ்சு. இந்திய
ஒப்புதல் வராமல் கப்பல் புறப்படக்கூடாதென்றார்.
இலங்கை அரசிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை எனத் தில்லியில் வெளிவிவகார அமைச்சிலும்
என்னிடம் தெரிவித்தனர்.
இலங்கை முழுமையாக ஒத்துழைத்தது. இந்தியா முழுமையாக ஒத்துழைத்தது. ஆனாலும் எங்கோ
ஓரிடத்தில் ஒரு தடங்கல். யாரோ ஒரு அதிகாரியின் மேசையில் கடிதம் தேங்கி இருந்தது.
11.01.2017இல் கப்பல் புறப்பட்டிருந்தால் காரைக்கால் சென்று சிதம்பரத்தில்
12.01.2017 புலர்காலையில் திருவாதிரை வழிபாட்டில் ஈழத்து அடியவர் 80 பேர் பங்கேற்றிருக்கலாம்.
திருவருள் கூட்டவில்லை.