இந்தியாவின் உயிர்மையைத் தேடி......
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
இந்தியத் தேசம் சிலிர்க்கிறது, ஆர்ப்பரிக்கிறது, தோள் கொட்டுகிறது. ஐவகை நிலத்தின் பரப்பு அகன்று நீண்டு விரிகிறது. வானளாவ உயர்ந்த இமய மலைகளின் முடிமீது பனிப்பாளங்கள் குவிந்து மின்னுகின்றன. கிழக்கிலும் மேற்கிலும் நீண்ட கரையோரமெங்கும் நீலத் திரைகடல் ஓயாது ஒலியெழுப்பி அமைமோதிக்கொண்டிருக்கிறது.
நிலம் நீர் தீ காற்று ஆகாயம் எங்கும் இந்தியா நிமிர்ந்து நிற்கிறது. இந்தியாவின் நிலமெங்கும் நீரெங்கும் மலை முகடுவரையும் காற்றின் ஊடேயும் வானை நோக்கியும் பரந்து செறிந்துள்ளோர் இன்றைய கணக்கில் நூறு கோடி மக்கள். அனைவரும் இந்திய மக்கள். பாரதத் தாயின் தவச் செல்வங்கள்.
பாரதத் தாய் பேசுகிறாள், உரத்த குரலில் அவள் ஒலிக்கிறாள். 100 கோடி மக்களின் ஆயிரக் கணக்கான மொழிகளே பாரதத்தின் குரல்.
100 கோடி மக்களின் பண்டைய பராம்பரியம் மிக்க பண்பாடே பாரத தேசம். நூற்றுக் கணக்கான வழிபாட்டு முறைகளைத் தன்னுள் கொண்டதே பாரதம். பல்லாயிரக் கணக்கான தொழில்கள் பாரதத்தை வளம்படுத்துகின்றன. இன்றைய 100 கோடி மக்களின் உழைப்புத் தொகுப்பே இன்றைய பாரதத்தின் செல்வம்.
புவிக்குள்ளே முதன்மையுற்ற மனிதர்களைப் பாரதத் தாய் ஈன்றிருக்கிறாள். மனித வாழ்வு முறைகளை மாற்றி வளர்த்த முதுமுனிவோர்களை ஈன்றது மட்டுமல்ல அவர்களின் கருத்துகள் உலகு பயனுறுமாறு உவந்தளித்த திருமண் பாரதம். இன்று பாரதம் வீறுகொண்ட வியத்தகு தேசமாக உருவெடுத்துள்ளது. முன்னெப்பொழுதுமில்லாத தேசத் தன்மைகள் பாரதத்தை மிளிரச் செய்கின்றன. அனைத்து மொழிகளும் அனைத்து வழிபாட்டு முறைகளும் அனைத்துப் பண்பாட்டு நெறிகளும் அனைத்து வளங்களும் ஒரு தன்மைத்தாகப் பேச முடியுமா? முடியும். ஒருமித்துக் குரல் கொடுக்க முடியும். பொதுச் செய்தியை வழங்க முடியும்.
தெற்கே கன்னியாகுமரியில் சொல்லும் கருத்தை அப்படியே முரண்பாடின்றி வடக்கே இலாடகத்தில் சொல்ல முடியும். மேற்கே கூர்ச்சரத்தின் கருத்தே கிழக்கெல்லை நாகர்களின் கருத்தாவது எளிதானது. அனைத்து நிலத்துக்கும் பொதுவான, அனைத்து மக்களுக்கும் பொதுவான, அனைத்து வழிபாட்டு முறைக்கும் பொதுவான, அனைத்துப் பண்பாட்டு ஒழுக்க நெறிகளுக்கும் பொதுவான, அனைத்து வாழ்வு முறையினருக்கும் பொதுவான, அனைத்து அரசு முறைகளுக்கும் ஏற்ற கருத்துகளின் பேழையே திருக்குறள். இந்தியப் பரப்பெங்கிலும் எவரும் தொகுத்தளிக்காத பொதுமைப் பண்புகளைத் திருவள்ளுவர் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏழேழு சீர்களாக 1,300 பாக்களில் உலகத்துக்காக விட்டுச் சென்ற வழிகாட்டல் பெட்டகமே திருக்குறள். அதே இந்தியாவின் இயல்பு, பண்பாடு, மொழி, பார்வை, எதிர்காலம், செல்நெறி, வாழ்வுமுறை, அரசுமுறை என்றெல்லாம் இந்தியாவிலுள்ள எவரும் எடுத்துக் கூறி அமைதி பெறக் கூடிய நுண்ணியதான கருப்பொருளும் விரிந்த பருப்பொருளும் கொண்ட ஒரே நூல் திருக்குறள். ஒரு தேசத்தின் வெளிப்பாடு. ஒரு தேசத்தின் குரல். ஒரு தேசத்தின் இயல்பு. ஒரு தேசத்தின் நூல். ஒரு தேசத்தின் உயிர்மை. அதுவே திருக்குறள். எனவே திருக்குறள் தேசிய நூலாகிறது. வேறு எந்த நூலும் இந்தியாவின் உயிரோட்டத்தைக் கூறுவதில்லை. தனி மனிதனின், தனி மனித குழுமத்தின், தனி நிலத்தின், தனி ஒரு மொழியின் தனி ஒரு தத்துவத்தின், தனி ஒரு பண்பாட்டின், தனி ஒரு அரசின், தனி ஒரு தொழிலின், தனி ஒரு வளத்தின், புகழையோ நிகழ்வையோ ஒட்டி அமையாத ஏதாவது ஒரு நூல் இந்தியாவில் உண்டெனின் அது திருக்குறள் மட்டுமே. ஏனெனில் அஃது இந்தியப் பொது நூல். காலத்தால் முந்திய நூல். கருத்தால் செறிந்த நூல். தேசத்துக்கென அமைந்த நூல். இந்தியர் எங்கிருப்பினும் திருக்குறளில் உள்ளவை தமக்கு ஒவ்வாதவை என்று கூற இயலாத அடித்தளக் கருத்துகளை உள்ளடக்கிய நூல். இத்தகைய நூல் இல்லையே என இந்தியா தேடிக்கொண்டிருக்க வேண்டாம். உலகத்தோர் தேடித் தேடி வந்து திருக்குறளை அப்படியே மொழிபெயர்த்துத் தமதாக்கிக் கொள்ள முயல்கின்றனர். எந்தவோர் அரசின் தூண்டுதல் ஆதரவு, நெருக்குதல், திணிப்பு எதுவும் இன்றி, எந்த ஒரு மடத்தின் அல்லது நிறுவனத்தின் ஆதரவோ பரப்புரை முயற்சியோ எதுவுமின்றித் திருக்குறள் உலகப் பொது நூலாகி வருகின்றது. படித்தவர், கேட்டவர், பயின்றவர் யாவரும் வியந்து தத்தம் மொழிகளுக்கத் தாமாகவே எடுத்துச் சென்ற, செல்கின்ற நூல் திருக்குறள். அத்தகைய சிறப்பு வாய்ந்த பண்பாட்டுப் பெட்டகத்தை, காலப் பேழையை, மனித வெளிப்பாட்டைத் தேசிய நூலாக ஏற்றுக்கொள்வதால் இந்தியா பெருமை அடையும். அயல்நாடுகளின் அல்பேட்டுச் சுவைற்சர், போப்பையர் முதலாக, இந்திய தேசத் தந்தை காந்தியடிகள் ஊடாக, தமிழ் நாட்டுப் புலவர் ஔவை, பாரதி போன்றோர் ஈறாகத் திருக்குறள் தொடர்பாகச் சொல்லிய புகழுரைகளை மீட்டும் மீட்டும் வரி வரியாகப் பெயர்த்துச் சொல்வது கூறியது கூறலாகலாம். அத்தகைய உலகச் சான்றோர் பலர், பல்லாற்றானும் சொன்னவற்றின் திரட்டையே தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தினர் இந்திய நடுவண் அரக்கும் தமிழக மற்றும் புதுவை அரசுகளுக்கும் எடுத்து கூறி, பண்டைய புகழாரங்கழைத் தொகுத்து முடிசூட்டித் திருக்குறளைத் தேசிய நூலாக்குங்கள் என வலியுறுத்துகின்றனர்; இந்தியாவுக்கு உயிர்மையூட்டுங்கள் எனக் கோருகின்றனர். திருக்குறள் இந்தியத் தேசிய நூல் என்ற அறிவிப்பு எவ்வளவு விரைவில் வெளிவருகிறதோ அவ்வளவு சிறப்பும் பெருமையும் இந்தியாவைச் சேரும். இந்தியத் தேசம் சிலிர்க்கும், ஆர்ப்பரிக்கும், தோள் கொட்டும்! அந்த அறிவிப்பு வெளிவரும் காலம் வரை தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தின் போராட்டங்கள் ஓயா.