வல்லார்யார் சச்சியல் லால்
முனைவர் தமிழப்பன்
இஞ்சி முருங்கை இனியதோர் நெல்லிக்காய்
கொஞ்சம் உருளையதும் கூட்டிவர - பஞ்சனைய
சோறிட்டான் பாயசத்தால் சொக்கவைத்தான் சச்சியைப்போல்
வேறெவர்தாம் செய்வார் விருந்து.
முத்தைப்போல் சோறு முருங்கைக்காய் நற்குழம்பு
சத்தான இஞ்சிநெல்லி சார்ந்துவர - இத்தரையில்
வல்லாரை(ப்) போற்றி வளைத்துமே போடுவதில்
வல்லார்யார் சச்சியல் லால்.
விருந்தென்றால் நானும் விருப்புடனே சென்றேனா
விருந்தா மருந்தா வியந்தேன் - அருந்திடவே
இஞ்சிநெல்லி வல்லாரை இவைவைத்தால் என்சொல்ல
கொஞ்சு தமிழ்மொழியே கூறு.
மீண்டும் அழைப்பானோ மாட்டானோ என்றேநான்
தூண்டிற் புழுவாய்த் துடிக்கின்றேன் - தூண்டுசுவை
உண்டார் மறப்பாரோ ஒண்டொடியே என்வயிறு
அண்டாவாய் ஆகிவிட்ட தே.
முனைவர் தமிழப்பன், 15.05.2004