ஆடையின்றி ஒருவர் வந்தார். நகைப்புக்குரியவராக, பழிப்புக்குரியவராக, இழிவுக்குரியவராக, தாழ்வானவராக, கேலிக்குரியவராக, கிண்டலுக்குரியவராக அவரை ஆடையணிந்த சமூகம் கருதியது; ஆடையற்றவர் நகுதற்குரியவரானார்.
என் நாட்டைப் புகழ்ந்து பாடுவோர் போரில் நான் தோற்றால் என்னை இகழ்வாராக என வஞ்சினம் கூறியவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் (புறநானூறு) எனத் தொடங்கும் அவனது வரிகள் புகழ்பெற்றவை.
நகுதக் கனர் என்பது காலப்போக்கில் நக்கர் ஆயிற்று. என்ன நக்கலா எனக் கேட்கும் பேச்சு வழக்கும் இன்று உண்டு. ஆடையற்றவர் நகுதற்குரியராதலால் நக்கர் ஆயினர்.
எவரோ ஒருவர் ஆடையற்றிருந்தால் நகுந்து விட்டுவிடலாம். ஒரு மனிதக் குழுவினரே ஆடையற்றிருப்பின் அவர்களுக்குப் பெயர் சூட்டவேண்டாமா? குழு, இனம், சாகியம், கணம் என்பனவும் சாரணர் ஆகும்.
ஆடையற்ற, நகுதற்குரிய மனிதர் கூட்டத்தினரே நக்க சாரணர். சூர்மலை வாழும் நக்க சாரணர், நயமிலர் என்ற மணிமேகலை (16 55, 56) வரிகளில் இந்தச் செய்தி உண்டு.சங்க காலத்திற்கு முன்பிருந்தே ஆடையின்றி அம்மணராக வாழ்ந்த நக்கசாரணர், அவ்வாறே மணிமேகலையின் காலத்திலும் ஆடையின்றித் தொடர்ந்தனர், இன்று வரை அவர்களுட் பலர் ஆடையின்றியே வாழ்கின்றனர்.
என் நாட்டைப் புகழ்ந்து பாடுவோர் போரில் நான் தோற்றால் என்னை இகழ்வாராக என வஞ்சினம் கூறியவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் (புறநானூறு) எனத் தொடங்கும் அவனது வரிகள் புகழ்பெற்றவை.
நகுதக் கனர் என்பது காலப்போக்கில் நக்கர் ஆயிற்று. என்ன நக்கலா எனக் கேட்கும் பேச்சு வழக்கும் இன்று உண்டு. ஆடையற்றவர் நகுதற்குரியராதலால் நக்கர் ஆயினர்.
எவரோ ஒருவர் ஆடையற்றிருந்தால் நகுந்து விட்டுவிடலாம். ஒரு மனிதக் குழுவினரே ஆடையற்றிருப்பின் அவர்களுக்குப் பெயர் சூட்டவேண்டாமா? குழு, இனம், சாகியம், கணம் என்பனவும் சாரணர் ஆகும்.
ஆடையற்ற, நகுதற்குரிய மனிதர் கூட்டத்தினரே நக்க சாரணர். சூர்மலை வாழும் நக்க சாரணர், நயமிலர் என்ற மணிமேகலை (16 55, 56) வரிகளில் இந்தச் செய்தி உண்டு.சங்க காலத்திற்கு முன்பிருந்தே ஆடையின்றி அம்மணராக வாழ்ந்த நக்கசாரணர், அவ்வாறே மணிமேகலையின் காலத்திலும் ஆடையின்றித் தொடர்ந்தனர், இன்று வரை அவர்களுட் பலர் ஆடையின்றியே வாழ்கின்றனர்.
அந்த நக்கசாரணர் வாழ்கின்ற இடமே நக்காவரம். நக்காவரம்:
நிக்கோபார் என்ற இன்றைய வழக்குச் சொல் நக்காவரத்தின் போலி. அந்தமான் நிக்கோபார் என இன்று அழைக்கிறோமே, அத்தீவுக் கூட்டத்தில் வாழும் பழங்குடியினர் பலர் இன்றும் ஆடையின்றியே வாழ்கின்றனர்.
நக்காவரம் தீவுக் கூட்டத்தில், கொக்குத் தீவு, கச்சல் தீவு எனத் தமிழ்ப் பெயர்களைக் கொண்ட தீவுகள் பலவுள.பன்னெடுங்காலமாக நக்காவரத்துக்குத் தமிழர் சென்று மீள்கின்றனர். அங்கு வாழும் நக்கசாரணரின் மொழியில் வல்லவரான தமிழர், காலந்தோறும் வாழ்ந்துளர். பூம்புகார்த் தமிழனான சாதுவன், நக்காவரத்து நக்கசாரணரின் மொழியில் வல்லவனாயிருந்த செய்தியை, மற்றவர் பாடை மயக்கறு மரபின் கற்றவனாதலின் என மணிமேகலை (16 60, 61) கூறும்.
இன்றைய இந்தோனீசியாவில் உள்ள, சாவகத்துக்கு 1,800 ஆண்டுகளுக்கு முன் பூம்புகாரிலிருந்து புறப்பட்டுச் சென்று புத்தரின் கோட்பாட்டைப் பரப்பியவர் மணிமேகலை. கடல்வழி பயணித்த அவர், சாவக மொழியை அறிந்திருந்தார்.
மகேந்திர பல்லவன் காலத்தில், 1,400 ஆண்டுகளுக்கு முன், சாவகம், காம்போசம் ஆகிய பகுதிகளில் கோயில்கள் கட்ட, மாமல்லபுரச் சிற்பப் பாணியில் கட்ட, சிற்பிகள் சென்றனர். அங்கிருந்து வந்தோர் சிற்பக் கலையில் பயிற்சி பெற்றுச் சென்றனர்.
சீன நாட்டினருக்காக 1,000 ஆண்டுகளுக்கு முன் நாகப்பட்டினத்தில் தூபி அமைத்தவன் சோழப் பேரரசன் இராரசராசன்.
600 ஆண்டுகளுக்கு முன், மதுரைப் பாண்டிய இளவரசன் ஒருவன் தன் உடன்பிறப்பொடு எழுந்த பகையைப் போக்க, நாகப்பட்டினம் வழி தன் தூதரைச் சீனம் அனுப்பிச் சீனப் படையைத் துணை கேட்ட வரலாறும் உண்டு.
தமிழகத்தின் கிழக்குத் துறைமுகங்களான மாமல்லபுரம், பூம்புகார், நாகப்பட்டினம் துறைகளிலிருந்து கிழக்கே வணிகத்துக்காக, சமயக் கொள்கை பரப்புவதற்காக, கோயில்கள் கட்டுவதற்காக, பேரரசு அமைப்பதற்காக, அரசுகளுக்குத் தூது அனுப்புவதற்காகக் காலம் காலமாகத் தமிழர் தம் கப்பல்களில் சென்று வருகின்றனர்.
தமிழகத்தின் கிழக்குக் கரையை விட்டகன்று, கிழக்குற்றால் நெடுங்கடலைத் தாண்டியதும் முதலில் கண்ணுக்குத் தெரியும் நிலப்பகுதி நக்காவரம்.
சோழன் குடாவில் வலசை, இடசை:
சோழன் குடா நெடுங்கடலுக்கு ஆங்கிலேயர் இட்ட பெயர் வங்காள விரிகுடா; தமிழரிடை நெடுங்காலமாகப் பயின்றுவரும் பெயரே சோழன் குடா.
அக்குடாவில் தமிழரின் கப்பல் பயணத்துக்குத் இயற்கைத் துணைகள் மூன்று, 1. விண்மீன்கள், 2. காற்று, 3. கடல்நீரோட்டம்.
மீகாமானுக்கு இவ்வியற்கைக் கூறுகள் பற்றிய அறிவை, ஏடுகளும் தந்தன; பட்டறிவும் தந்தது. வானியல் ஏடுகள் தமிழில் நிறைந்திருந்தன; விண்மீன்களைப் பற்றிய அறிவு நிலத்திலேயே கிடைத்தது. காற்றையும், நீரோட்டத்தையும் அறியக் கடலில் பயணித்துப் பயிற்சி பெற்ற பட்டறிவே துணையாயது.
ஐப்பசியில் தொடங்கித் தையில் முடியும் வாடை; வைகாசியில் தொடங்கி ஆடியில் முடியும் தென்றல்: இவை கடுங் காற்றுகள். மாசி பங்குனியில் கொண்டல்; ஆவணி புரட்டாதியில் கச்சான்; இவை மென் காற்றுகள்.
வாடைக் கால நீரோட்டம், நக்காவரத்திலிருந்து வடக்கே போய், வங்காளக் கரையைத் தொட்டு, கலிங்கக் கரையோரமாக ஓடிவந்து தமிழகக் கரையைத் தழுவி, இலங்கையின் கிழக்குக் கரையோரமாகச் சென்று மீண்டும் நக்காவரத்துக்குச் செல்லும் வலசை (வலங்கை).
தென்றல் கால நீரோட்டம், இலங்கையின் கிழக்குக் கரையிலிருந்து புறப்பட்டு, தமிழகக் கரையைத் தழுவி, கலிங்கக் கரையோடு ஓடி, வங்கக் கரையைத் தொட்டு, நக்காவரம் வந்து, மீண்டும் இலங்கையின்கிழக்குக் கரைக்கு வருகின்ற இடசை (இடங்கை).
வலசையிலும் இடசையிலும் கடுவேக நீரோட்டத்தைக் காணும் சோழன் குடா, இடைக்காலத்தில் அலைகள் குறைந்த, வேகமற்ற காற்றுள்ள குளமாகி, கப்பல் பயணத்துக்கு ஏதாகி அமையும். மீகாமான்கள் இதை அறிவர்.
வலசையும் இடசையும் வரலாற்றுப் பதிவுகளாக உள. மணிமேகலையில் வலசையின் பாதிப்புச் செய்தி உண்டு; மகாவமிசத்தில் இடசையின் பாதிப்புச் செய்தி உண்டு.
நக்காவரத்தில் சாதுவன்:பூம்புகாரின் வணிகனான சாதுவன் கணவன், ஆதிரை அவனுக்கு மனைவி. பெரும் பொருள் ஈட்டினான் சாதுவன்; மனைவியை விட்டான்; கணிகையை நாடினான்; வட்டாடினான்: பொருள் அனைத்தையும் இழந்தான்; கணிகையும் நீங்கினாள். மீண்டும் பொருளீட்ட விழைந்தான். வணிகர்களுடன் பூம்புகாரில் மரக்கலம் ஏறினான்; கிழக்கு நோக்கிப் பயணமானான்.
ஐப்பசித் திங்களில் அவன் புறப்பட்டான். வாடையின் கடுங்காற்றுக் காலம்; வலசை நீரோட்டக் காலம். நெடுங்கடலில் அலைகள் அந்த மரக்கலத்தை உடைத்தன; அதிலிருந்த மிதப்புக் கட்டைகளைப் பற்றிய வணிகர் மிதந்தனர். தொடர்ந்து வந்த மரக்கலங்கள் மிதந்த வணிகர் சிலரை மீட்டன. சாதுவனை மீட்க முடியவில்லை.தப்பிய வணிகர் பூம்புகார் திரும்பினர்; இடைச் சாமத்திலே எறிதிரைகள் மரக்கலத் உடைத்தன; அந்த அழிவில் நாம் தப்பினோம், ஒழிந்தோருள் சாதுவனும் ஒருவன் என ஆதிரையிடம் செய்தி கூறினர்.
கணவனைக் கணிகைக்கு இழந்தவள், மீள்வான் என வாழ்ந்தவள், கடலுக்கு இழந்ததும் உயிர்நீக்க விழைந்தாள்; ஏதோ அவளைத் தடுத்தது; வருவான் கணவன் என ஆதிரை உயிர் தரித்திருந்தாள்.
நெடுங்கடலில் உடைந்த மரக்கலத்தின் மிதப்புக் கட்டை ஒன்றைப் பற்றிய சாதுவன் மூழ்கவில்லை; வலசை நீரோட்டத்துடன் அள்ளுப்பட்டான்; வடக்கே இழுத்த நீரோட்டம் நக்காவரத் தீவொன்றில் சாதுவனைக் கரைசேர்த்தது. மயங்கிய நிலையில் கரையில் ஒதுங்கிச் சாதுவன் கிடந்தான்.
நக்காவரத்தின் நக்கசாரணர் ஆடையற்றவர் மட்டுமல்ல, மனித உடலை விரும்பி உண்பவர். தனியனாகக் கரைசேர்ந்த சாதுவன், நல்ல உணவாவான் என மகிழ்ந்தனர். சாதுவனை நெருங்கினர்.
நக்கசாரணரின் மொழியில் சாதுவன் பேசத் தொடங்கினான். கேட்டதும் மகிழ்ந்த நக்கசாரணர், சாதுவனைத் தொழுதனர். தீவின் தலைவனிடம் அழைத்துச் சென்றனர். பேச்சினால் அத்தலைவனைத் தன்வயமாக்கினான் சாதுவன்.
உணவற்றுக் கடலில் அலைந்தவனுக்கு உணவு கொடுங்கள், இளம் பெண்ணைக் கொடுங்கள், புலாலும் கள்ளும் வேண்டும் வரை கொடுங்கள் என ஆணையிட்டான் அத்தலைவன்.
உணவைத் தவிர பிறவற்றை ஏற்க மறுத்தான் சாதுவன். புத்தரின் அறவுரைகளைத் அத்தலைவனுக்குப் போதித்தான். தலைவனும் நக்கசாரணரும் மனம் மாறினர். மரக்கலம் கவிழ்ந்து கரைவந்த மக்களை முன்பு உணவாக்கினோம், இனி அவர்களைக் காப்போம் என அத்தலைவன் சாதுவனுக்கு உறுதி அளித்தான். தைத்திங்களில் வலசை முடிந்தது; கடல் குளம்போலாயது; சந்திரதத்தன் என்பானின் மரக்கலம், மலைநாட்டிருந்து அவ்வழியே பூம்புகாருக்குப் போய்க்கொண்டிருந்தது. அந்த மரக்கலத்தை மறித்துச் சாதுவனை அதில் பரிசுப் பொருள்களுடன் ஏற்றிவிட்டான் தீவின் தலைவன். சாதுவனும் மாசித் திங்களில் பூம்புகார் திரும்பி ஆதிரையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.
நக்காவரத்தில் விசயனும் தோழர்களும்:வங்கத்துக்கு வடக்காக, மகதத்துக்குத் தெற்காக இலாலை நாடு. காடுகள் சூழ்ந்த இலாலை நாட்டின் அரசன் சிங்கபாகன்; பட்டத்து அரசி சிங்கவள்ளி.இவர்களுக்குப் பிறந்த அனைவரும் இரட்டையர்களாக முப்பத்திரண்டு ஆண்கள். மூத்தவனான விசயன் பட்டத்து இளவரசனான். விசயனுக்குத் தோழர்கள் பலர். விசயனும் தோழர்களும் தீய பழக்கங்கள் உடையவராயினர், வன்முறையில் ஈடுபட்டனர். குடிமக்கள் இதனால் துன்புற்றனர். மன்னனிடம் குடிமக்கள் முறையிட்டனர். இளவரசனையும் தோழர்களையும் மன்னன் இருமுறை எச்சரித்தான்; இளவரசனும் தோழரும் செவிசாய்க்கவில்லை.
தொல்லை பொறுக்காத குடிமக்கள் திரண்டனர்; இளவரசனைக் கொன்றுவிடுக என மன்னனிடம் கோரினர்.
விசயனையும் எழுநூறு தோழர்களையும் பிடித்து வந்த அரசன், அவர்களின் முடியை மழிப்பித்தான். கங்கை ஆற்றில் நின்ற மரக்கலத்தில் ஏற்றுவித்தான். அந்த மரக்கலம் கங்கை ஆற்றுவழியாக முகத்துவாரம் வந்தது; வங்கத்தின் தெற்கெல்லையில் கடலுள் பயணித்தது.
அது சித்திரை மாதம். கொண்டல் காற்று நின்றதும் தென்றல் வீசத் தொடங்கியது. சோழன் குடாவில் இடசை நீரோட்டம் தொடங்கிய காலம்.
மரக்கலத்தை நீரோட்டம் தென் கிழக்காக இழுத்துச் சென்றதால் நக்காவரத்தை மரக்கலம் அடைந்தது; நக்கர் தீவை (ஆடையற்றோர் தீவை) விசயனும் தோழர்களும் அடைந்தனர் என மகாவமிசம் (வரி 5.41) கூறும்.
விசயனின் தோழர்கள் அங்கும் வன்முறையில் ஈடுபட்டனர். எனவே விசயன் மீண்டும் அவர்களுடன் மரக்கலத்தில் ஏறினான். நீரோட்டத்தைப் பின்பற்றினான். இடசை நீரோட்டம் அவர்களைத் தெற்கே இழுத்து வந்து, இலங்கைத் தீவில் இயக்கர் நிறைந்து வாழ்ந்த தாமிரக் கடவையில் (இன்றைய தம்மன் கடவை) திருகோணமலைக்குக் கீழே கரைசேர்த்தது.
சித்திரையில் இலாலை நாட்டை விட்டுப் புறப்பட்டனர். வைகாசி முழுநிலா நாளில் விசயனும் தோழர்களும் (மகாவமிசம் 5.47) இலங்கையை வந்தடைந்தனர்.
நக்காவரமும் தமிழரும்:அந்தமான்நிக்கோபார் தீவுக் கூட்டம் என்ற பெயர் ஆங்கிலேயர் தந்தது. நக்காவரத் தீவுக் கூட்டம் என்பதே தொன்மைப் பெயர்; தமிழர் இட்ட காரணப் பெயர். 1,800 ஆண்டுகளுக்கு முந்தைய மணிமேகலையும் 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய மகாவமிசமும் இந்தப் பெயரின் தொன்மையை உறுதி செய்கின்றன.அந்தத் தீவுக் கூட்டத்திலுள்ள இடப்பெயர்கள் பல தமிழாக உள. இன்று சிறிதே சிதைந்து, ஆங்கில ஒலிக்குள் புகுந்து பெயர்ப் போலிகளாகியுள.
தமிழகத்தின் கிழக்குக் கரையிலிருந்து மியன்மார், சீயம், மலைக்கா, சாவகம், காம்போசம், சீனம், நிகோன் போன்ற பல நாடுகளுக்குத் தமிழர் செல்லும் மரக்கலங்களின் முதற் தங்கிடமாக நக்காவரம் தீவுகள் இருந்தன. அங்கு வாழ்ந்த நக்கசாரணரின் மொழியைத் தமிழகக் கடலாடிகள் கற்றனர்; நக்கசாரணருடன் நல்லுறவு பூண்டனர், உதவி பெற்றனர், நாகரிகமுள்ளவராக்கினர், வணிகமும் செய்தனர்.