மார்கழி 14, திங்கள் (29 12 2025)
மாவை சேனாதிராசா
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
உணர்வு சார்ந்தது தேசியம். அறிவு சார்ந்ததும் தேசியம். உணர்வு மீ நிற்பதா? அறிவு மீ நிற்பதா? தேசியம்.
இரண்டுமே கற்பனை நிலை. இரண்டையும் கண்ணால் காண முடியாது. காதால் கேட்க முடியாது. பொறிகள் புலன்கள் இரண்டுக்கும் அப்பால் உணர்வும் அறிவும்.
தெல்லிப்பழையைச் சேர்ந்த மரபினர். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். இளம் பருவத்தில் கொழும்புக்கு வருகிறார் கல்கிசையில் பாடசாலை மாணவனாக.
பள்ளிப்படிப்புக்குப் பின் சட்டம் படிக்கிறார். கொழும்பிலே மிகச்சிறந்த வழக்கறிஞர், வழக்குரைஞர்.
கொழும்புச் சட்ட நூலகத்தில் தோழர் ஒருவரின் அழைப்பை ஏற்றுத் தமிழ் அரசியலுக்குள் நுழைகிறார்.
அறிவு அளப்பரியதாய். உணர்வு ஓரளவினதாய். அரசியல் களத்தில் அறிவு சார்ந்து நிமிர்கிறார்.
நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும் அரசியலுக்கும் பிணைப்பைக் கொடுக்கிறார். அவர் சா ஜே வே செல்வநாயகம்.
அரசியலில் நேர்மைக்கும் களம் உண்டு என்பதைத் தமிழரிடையே நிறுவியவர் தந்தை செல்வநாயகம். சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்ற நேர்மைக் களம் ஒழுக்கக் களம் அவரது அரசியல் முன்னெடுப்பு.
உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்தார். சிந்தனைச் சிறகை விரித்தார். அறிவுப் பரப்பை அலசினார். கொள்கை வகுத்தார். அரசியல் நெறி அமைத்தார்.
தமிழரசுக் கட்சியைத் தொடங்கினார். தேர்தல்களில் வெற்றி பெற்றார். தொண்டர்களைத் தன்வயமாக்கினார். தமிழர்களின் தனித்துவச் சார்பாளராக மீ நின்றவர் தந்தை செல்வநாயகம்.
தமிழரசுக் கட்சி தொடங்கிய 10-15 ஆண்டுகளின் பின், மாவிட்டபுரத்தில் கட்சித் தொண்டராக அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் மாவை சேனாதிராசா.
அறிவுப் புலம் உங்களுடையது. சிந்தனைக் களம் உங்களுடையது. உணர்வுப் பிழம்பாக நாங்கள் இளைஞர் இருக்கிறோம். உங்கள் பின் பட்டாளமாக வருவோம் என வாழ்ந்து காட்டியவர் மாவை சேனாதிராசா.
தமிழரசுக் கட்சிக்குள் உணர்வலைகளைத் தயக்கமின்றி வெளிகாட்டியவர்களுள் மாவை சேனாதிராசா முதன்மையாளர்.
படிப்பைத் தொடரவில்லை. பணி தேடும் ஆர்வத்தைக் கைவிட்டார். தமிழர் உரிமை மீட்பே வாழ்வியலாகக்கியவர் மாவை சேனாதிராசா.
அரசியலில் எதிர்பார்ப்புகள் இன்றி வாழ்வது எளிதல்ல. கட்சிக்குள் பதவி ஒருபுறம். மக்கள் மன்றத்தில் சார்பாளராதல் மறுபுறம். இவை அரசியல் வாழ்வு ஈர்ப்புகள்.
இவை வேண்டாம், தொண்டே போதும், தமிழர் உரிமை மீட்பே இலக்கு, என வாழ்ந்தவர் மாவை சேனாதிராசா. அறிவுப் புலத்தைத் தந்தை செல்வாவிடம் விட்டார். உணர்வுப் புலத்தில் பணிபுரிந்தார்.
போராட்டங்கள், களப் பணிகள், சிறை வாழ்க்கை எனக் கட்சிக்காக அவர் ஆற்றிய கைமாறு கருதாப் பணிகள் சொல்லில் அடங்கா. எழுத்தில் அடங்கா.
அமிர்தலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீது, மூவர் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு. அரசியலமைப்புச் சார்ந்த வாதங்களை மு. திருச்செல்வம் முன் வைத்தார். வழக்குரை வாதங்களைப் படித்தேன். தமிழில் அவற்றைத் தொகுத்தேன். அதுவே ஈழத் தமிழர் இறைமை என்ற நூல்.
அக்காலத்தில் மாவை சேனாதிராசா சிறை வாழ்வில். நான் தமிழாக்கிய நூலின் படி அவருக்கு எப்படியோ கிடைத்தது.
"அண்ணே, நீங்கள் தமிழாக்கிய வழக்குரை வாதங்களைப் படித்து என் அரசியல் அறிவைப் பெருக்கிக் கொண்டேன், சிறைக்காலத்தில்" என என்னிடம் அடிக்கடி கூறுவார் மாவை சேனாதிராசா.
அதே காலத்தில் நிலவரைவுத் திணைக்கள மேனாள் இணை ஆணையர் Deptuty Surveyor General (retired) ஜே. ஆர். சின்னத்தம்பி உடன் இணைந்து நான் ஆக்கிய நூல், தமிழ் ஈழம் நாட்டெல்லைகள்.
அந்த நூலின் படியையும் தன் சிறை வாழ்வில் மீண்டும் மீண்டும் படித்ததாக மாவை சேனாதிராசா என்னிடம் கூறுவார்.
நான் அவருக்குச் சிறையில் நூல்கள் வழி அறிமுகமானேன். எனினும் நேரில் நான் அவரைச் சந்தித்தது யாழ்ப்பாணத்தில் அவர் சிறையில் இருந்து வெளிவந்த பின்பே.
தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுச் செயலாளர், தமிழர் பொருளாதார இயக்கச் செயலாளர் எனத் திரு அமிர்தலிங்கம் எனக்கு யாழ்ப்பாணத்தில் ஒப்படைத்த பணிகள். அவற்றைச் செவ்வனே செய்வதில் மாவை சேனாதிராசா எனக்குத் துணை நின்றார்.
எனக்கு வயதில் குறைந்த தம்பி மாவை சேனாதிராசா. சென்னையில் தணிகாசலம் தெருவில் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் மாவை சேனாதிராசா இல்லத்தாரோடு தங்கி இருந்தார். தமிழரசு கட்சியின் அரசியல் குழுவில் பணிபுரியுமாறு அழைத்தவர் திரு அமிர்தலிங்கம்.
அக்காலத்தில் நானும் மாவையாரும் இணைந்து பல்வேறு கட்சிப் பணிகளில் ஈடுபட்டோம். சிறப்பாக, கடிதம் எழுதுவது, அச்சிடுவது தமிழகத் தலைவர்களுக்குக் கொடுப்பது ஆகிய பணிகள்.
சில ஆண்டுகளின் பின் அவர் திருச்சிக்கு இல்லத்தோடு சென்றாலும் சென்னைக்கு வரும் பொழுது என்னைச் சந்திப்பார். சென்னையில் என் வீட்டில் வெற்றிடமாக இருந்த அறை ஒன்றில் அவரும் மகன்களும் சென்னைக்கு எப்போதாவது வந்தால் தங்குவதை வழமையாக்கிக் கொண்டனர்.
அமிர்தலிங்கத்துக்குப் பின் நாடாளுமன்றத்தில் அவரிடத்திற்கு மாவை சேனைதிராசா வரவேண்டும் என்பதைக் கொழும்பில் நடந்த கட்சிக் கூட்டத்தில் நான் வலியுறுத்தினேன். அவரை ஆதரித்தேன்.
நாடாளுமன்ற உறுப்பினராக ஒருமுறை சென்னைக்கு வந்து என் வீட்டில் தங்கியிருந்த காலத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுப் பொறுப்புகளைத் தன்னிடம் தர வேண்டும், கடிதமாக எழுதி எனக் கேட்டார். எழுதிக் கொடுத்தேன்.
தமிழகத் தலைவர்களான கலைஞர் கருணாநிதி வைகோ மருத்துவர் இராமதாசு ஆகியோரையும் பிறரையும் சந்திக்க வேண்டும் என என்னிடம் கேட்பார். அழைத்துச் செல்வேன்.
ஈழத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்க வேண்டும் என ஒரு முறை என்னிடம் தெரிவித்தார். அந்த ஏற்பாடுகளுக்காக நானும் அவரும் தில்லிக்கு ஒரு நாள் பயணமாகச் சென்று வந்தோம். பின்னர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தனர்.
யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய பின், தமிழரசுக் கட்சிப் பணிகளில் ஈடுபட விரும்பினேன். தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுப் பணிகளில் ஈடுபட விரும்பினேன். மாவை சேனாதிராசா ஆர்வம் காட்டவில்லை.
வவுனியாவில் கட்சிக் கூட்டம் ஒன்றில் நான் கருத்துக் கூறிக் கொண்டிருந்த பொழுது சுமந்திரன் குறுக்கிட்டார். சுமந்திரனை மாவை சேனாதிராசா கண்டித்தார். மேடைக்கு வந்த சுமந்திரன் தேவையின்றிக் குறுக்கிட்டமைக்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டார்.
உணர்வுகள் மீ நிற்கும் தொண்டரான மாவை சேனாதாராசா, அறிவுப் புலத்தில் நாட்டம் கொள்ளாததால், தமிழரசுக் கட்சியின் வளர்ச்சியில் தாக்கம் தெரிந்தது. தமிழரின் குரல் ஒருமித்து ஒலிக்க வேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார். எனினும் அவருக்குக் கட்சிக்குள் ஆதரவு குறைந்தே வந்தது.
மாவை சேனாதிராசாவின் வரலாறு தமிழ்த் தேசிய உணர்ச்சிப் பிழம்பின் வரலாறு. ஈழத் தமிழரின் அரசியல் வரலாற்றில் பிரிக்க முடியாத தொண்டராக, ஊழியராக, நாடாளுமன்ற உறுப்பினராக, முடிசூடிய தலைவனாக, தமிழரசுக் கொள்கைகளே வாழ்வியலாகக் கொண்ட மாவை சேனாதிராசா புகழ் வாழ்க.
அவர் நினைவைப் போற்றுவோம்.
No comments:
Post a Comment