Saturday, March 21, 2026

இலங்கையில் இந்து அமைப்புகள்

 ஞாயிறு பங்குனி 1, (15 3 2026)


ஐயா 

உங்கள் கோரிக்கையை கேட்டேன். சைவமானவர்களுக்கு 175,000 விவிலியப் படிகளை ஒவ்வொருவருக்கும் கொடுக்குமாறு வடமாகாணக் கல்வி அமைச்சு முயல்கிறதே! பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே? எனக் கேட்கிறீர்கள்.


இலங்கையில் உள்ள சைவ சமய இந்து சமய அமைப்புகளை ஒரே குடைக்குள் இணைக்கும் அமைப்பாக அமைந்தது அகில இலங்கை இந்து மா மன்றம்.


வேர்களாக அமைந்த ஊர் மன்றங்கள் ஊர் அமைப்புகள் அனைத்தும் வலிமையாக அமைய வேண்டும் என்று கொள்கை இந்து மாமன்றத்தின் கொள்கை.


இன்றைக்கு இந்து மாமன்றம் தானே ஒரு அமைப்பாக மாறியது. வேர் மன்றங்கள் ஊர் மன்றங்களை வலிமை அற்ற மலட்டு அமைப்புகளாக மாற்றியது.


போர்க்காலத்தில் ஊர் மன்றங்கள் வேர் மன்றங்கள் 30 ஆண்டுகளாகக் கலைந்து குலைந்து சிதிலமடைந்து போயிருந்தன.


அவற்றை மீள்மைக்க வேண்டும் வலிமையான வேர்கள் அமைய வேண்டும் ஊரிலே சைவத் தலைமை இந்துத் தலைமை அமைய வேண்டும் என்ற கண்ணோட்டம் போர்க்காலத்தில் இந்து மாமன்றத்தில் திசை மாறியது.


வேர்களை அறியாத ஊர்களை அறியாத கொழும்பிலேயே வாழ்க்கை நடத்திய சொத்துக்களை பராமரிப்பதில் துறை போகிய சிலர் இந்து மாமன்றத்தைத் தங்களது நன்மைகளுக்காகப் பயன்படுத்த தொடங்கினர்.


ஊர் மன்றம் ஆகிய கொழும்பு இந்து இளைஞர் மன்றத்துக்கு ஒதுக்கப்பட விருந்த அரச காணியை அகில இலங்கை இந்துமாமன்றம் அடாத்தாக அரசிடம் தனக்கெனப் பெற்றது. இந்துமா மன்றத்தின் வீழ்ச்சி அங்கே தொடங்கியது. 


கட்டடத்தை அமைப்பது சொத்தைப் பெருக்குவது பராமரிப்பது அதிலிருந்து வரும் வருவாய் பெருக்குவது வணிக நிறுவனங்களில் முதலீடு செய்வது மேலும் வருவாயே பெருக்குவது இந்து மாமன்றத்தின் தலையாய பணி. 


அதற்கேற்றவாறு இந்து மாமன்றத்தின் யாப்பு விதிகளை மாற்றி போர்க்காலங்களில் பொறுப்பேற்றவர்களே தொடர்ந்தும் பொறுப்பில் இருக்கவும் வேறு யாரும் உள்ளே நுழையாதவாறும் பார்த்துக் கொண்டனர் சில தன்னலமிகள்.


திருக்கேதீச்சர ஆலயத் திருப்பனிச் சபை யாப்பு விதிகளையும் அவ்வாறே மாற்றி ஒரு சிலர் மட்டுமே 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பொறுப்பில் இருபக்குமாறு யாப்பு விதிகளை மாற்றிக் கொண்டனர். வன்முறை அடிபிடி சண்டை கெட்டசொல் கூறல் என்பன இந்து மாமன்றத்திலும் திருப்பணிச் சபையிலும் வழமையான நடைமுறைகள்.


இவர்களுக்குச் சைவ சமயத்திலோ இந்து சமயத்திலோ திருக்கேதீச்சர ஆலயத்திலோ மிகக் குறைந்த ஆர்வம். சொத்துக்களைப் பராமரிப்பதில் வருவாயை பெருக்குவதில் அந்த வருவாயைத் தாம் சார்ந்த வணிகக் குழுமங்களில் முதலீடு செய்வதில் அவர்கள் ஆர்வம் காட்டினார்கள்.


மலேசியாவில் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணி சபைக்கு இருந்த தொகைகளை எல்லாம் இவ்வாறு திசை திருப்பி தாம் நிறுவிய அந்த வணிகக் குழுமத்தைத் திவால் ஆக்கி நட்டம் காட்டி அந்தக் காசை கரைத்துத் திருடினார்கள்.


வேர் மன்றங்களையும் ஊர்மன்றங்களையும் வலிமையாக்குதைக் கைவிட்டார்கள். மலையகத் தமிழர் சார்ந்த சைவ இந்து மன்றங்கள் விண்ணப்பித்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். யாழ்ப்பாணத் தமிழரிடமே இந்துமாமன்றம் என்றும் இருக்க வேண்டும் மலையக தமிழர் கைக்கு மாறக்கூடாது என்ற கொள்கையே காரணம். இதை என்னிடம் இந்துமாமன்றம் சேர்ந்த ஒருவர் வெளிப்படையாகவே சொன்னார். 


யாழ்ப்பாணத்தில் ஊர் மன்றமாக வேர் மன்றமாக இருக்க வேண்டிய அமைப்புச் செய்ய வேண்டிய பணிகளை இந்துமாமன்றமே நேரடியாகச் செய்து நிலம் வாங்கி கட்டடம் கட்டி அந்தக் கட்டடம் கேட்பாரற்றுக் கிடக்கிறது.


அவ்வாறே முறிகண்டியில் நிலம் வாங்கி கட்டடம் அமைத்து வணிகத்தை மையமாகக் கொண்டு இந்துமதம் பணி புரிகிறது. முருகண்டி யில் உள்ள சைவ மக்கள் செய்ய வேண்டிய பணியை கொழும்பில் வாழ்கின்ற ஒரு சிலர் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.


திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணி சபை கொழும்பிலிருந்து ஆட்சி நடத்துகிறது மன்னாரில் மன்னார் ஆயரின் கைப் பொம்மைகளே திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் பொறுப்பாளர்கள். திருப்பணிச் சபை எந்த நிகழ்ச்சியை நடத்துவதாலும் ஆயரிடம் சென்று அவரோடு கலந்த பின்னரே நடத்தி வந்தார்கள். வவுனியாவில் ஒரு கூட்டத்தில் நான் கடுமையாக இதைச் சாடினேன்.


பின்னரே மன்னார் ஆயரிடம் நேரடியாக செல்லாமல் இப்பொழுது மறைமுகமாக அவரது ஏவலாளிகள் மூலம் செய்திகளைப் பரிமாறி திருக்கேதீச்சரத்தை நடத்துகிறார்கள்.


மாந்தைச் சந்தியில் கத்தோலிக்கக் கட்டுமானங்களை அமைக்கக் கூடாது என்ற கந்தையா வைத்தியநாதன் - ஆயர் உடன்பாட்டை உடைத்தெறிந்து திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணி சபையினர் அங்கு கத்தோலிக்கர் அடாத்தாகக் கட்டிய உலூர்தம்மாள் தேவாலயத் திறப்பு விழாவுக்குச் சென்று பாதிரியாருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்கள்.


ஊரறிந்த மதமாற்றி. செட்டியார் கட்டையடம்பன் மக்களில் 100 பேரை மெதடித்த திருச்சபைக்கு மதம் மாற்றியவர். அத்திருச்சபையின் இணை ஆயரானவர். அவரது மனைவி கோடி கோடியாகப் பணம் கொண்டு வந்து இலங்கையில் மதமாற்ற முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறார். அவரே சுமந்திரன்.


மாந்தைச் சந்தியில் சைவ வரவேற்பு வளவைக் கட்டுவதற்குப் பிரதேச சபையின் உரிமத்தை பெற்ற பின்பும் கட்டாமலே காலத்தை கடத்திக் கொண்டு வந்தனர் சபையினர். மன்னார் ஆயரின் கைக்கூலிகள்.


இடைக்காலமாகத் தொண்டர்கள் வளைவைக் கட்ட முயன்ற போது செய்தியைச் சபையினரே ஆயருக்குச் சொல்ல, ஆயரே ஆள்களை அனுப்பி வளைவை உடைப்பித்தார். 


வளைவை உடைத்து அவர்கள் மீது காவல்துறை வழக்கு தொடுக்க, சபையின் சார்பில் வழக்குரைஞராகச் செட்டியார் கட்டையடம்பனில் நூற்றுக்கணக்கான வரை மதம் மாற்றிய திருச்சபையின் இணை ஆயராக இருந்த சுமந்திரனே, அந்தக் கொடுமையான மதமாற்றியே சபையின் வழக்குரைஞர்.


திருப்பணிச் சபையின் பொறுப்பாளர்களிடம் மன்னார் ஆயர் சிலுவையைக் கொடுத்தார். முதலில் உங்கள் அலுவலகத்தில் தொங்க விடுங்கள். பின்பு சிவலிங்கத்தை அகற்றி அங்கு சிலுவையை நிறுவங்கள் என்பதே அவரது ஆணை.


பொறுப்பாளர்கள் சிலுவையை கோபுரத்துக்கு முன்புள்ள அலுவலக அறை முகப்பில் தொங்க விட்டனர். நீண்ட காலமாக தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே அலுவலக ஊழியர்கள் பணி புரிந்து கொண்டிருந்தனர்.


ஒரு நாள் அலுவலக அறைக்குள் புகுந்தேன். அங்கு திரு தயானந்தராசா பொறுப்பாளர் இருந்தார். சிலுவை தொங்குவதைக் கண்டேன். எப்படி? என்று கேட்டேன். உங்கள் கண்ணுக்குத் தெரிகிறது. என் கண்ணுக்குத் தெரியவில்லையே என்றார். அந்தச் சிலுவையை அகற்றினார். 


நான் போயிருக்காவிட்டால், அதை அகற்றி இருக்காவிட்டால் அடுத்த பெரிய சிலுவை கருவறைச் சிவலிங்கத்தின் இடத்திற்குப் போய் இருக்கும். கத்தோலிக்க சைவ மதக் கலவரமே வெடித்திருக்கும்.


இந்து அமைப்புகள் சைவ அமைப்புகள் யாவும் சொத்துக்கு குவிப்பு அமைப்புகளாக உள்ளதால் 

சைவ சமயத்தை பாதுகாப்பதா?

தமக்குள்ள சொத்துகளை பாதுகாப்பதா?

அந்தச் சொத்தில் எவ்வளவு தொகையைத் திருடலாம் என்ற கண்ணோட்டத்தில் 

திருடர் கள்ளர் வசம் போய்விட்ட சபைகளாக மாறிவிட்டன 


சைவ பரிபாலன சபைத் தலைவரும் பொருளாளரும் வங்கிக்கு செல்கிறார்கள் 

54 இலட்சம் பணத்தைக் காசாகப் பெறுகிறார்கள் 

அவ்வளவே 

அதை தாங்களே எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள்.


ஊழல் குற்றச்சாட்டில் வட மாகாண அமைச்சுப் பதவியில் இருந்து நீங்கியவர் இன்று திருநெல்வேலி இந்துவாலிபர் சங்கத்தின் தலைவர்.


சொத்துகள் ஊழல்வாதிகளையும் வணிக ஈடுபாடு உள்ளவர்களையும் நிதி மேலாண்மையாளர்களையும் ஈர்க்கின்றன. சைவ சமய ஈடுபாடு அற்றவர்கள் இந்து மீள் எழுச்சியைக் காண நினைக்காதவர்கள் சைவர்களுக்குரிய ஊர் மன்றங்கள் வேறு மன்றங்களைக் கைப்பற்றுகிறார்கள். தங்கள் நலத்துக்காக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.


175,000 சைவமானவர்களுக்கு விவிலியப் படிகளை கொடுங்கள் என வடமாகாண கல்வி அமைச்சின் மேலதிக கல்விப் பணிப்பாளர் பரங்கிப் பெயரர் பிராட்லி கடிதம் அனுப்பிய பின்பும் ஊர்மன்றங்களில் உள்ள எவராவது ஒரு தீர்மானம் போட்டார்கள? போராட்டம் நடத்தினார்களா?


எனக்கு நூற்றுக்கணக்கானவர்கள் கடிதம் எழுதுகிறார்கள். ஐயோ! சைவ மாணவர்களுக்கு விவிலியம் கொடுக்கிறார்களே. பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா என என்னிடம் கேட்கிறார்கள். 


இந்து மாமன்றத்தில் இருந்தும் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையிலிருந்தும் எனக்குத் தொலைப்பேசி அழைப்பு எடுத்துக் கேட்கிறார்கள் ஐயா! ஏதாவது செய்யுங்கள். 


சொத்தையும் சுகங்களையும் திருடவும் பயன்படுத்தவும் வங்கிக் கணக்குகளில் மலைபோல் தொகைகளை குவித்து வைத்திருக்கவும் ஒரு சிலர்.


பனியிலும் குளிரிலும் மழையிலும் வெயிலிலும் இரவிலும் பகலிலும் ஓயாது உழைத்து சுவரொட்டிகள் ஒட்டி கடிதங்கள் கொடுத்து மதமாற்றிகளை விரட்டி திருக்கோயில்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய தேவாலயங்கள் அமைப்பதைத் தடுத்து பணிபுரிகிறார்கள் எந்தவித வசதியும் இல்லாத தொகைகள் தம்மிடம் இல்லாத நூற்றுக்கணக்கான தொண்டர்கள்.


நான் சைவ உலகில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. எந்த அமைப்பிலும் இல்லை. உறுப்பினர்களாக என்னுடன் சேர முடியாத சிவ சேனை என்ற பெயரை மட்டும் வைத்திருக்கிறேன். 


சொத்து இல்லை. வங்கிக் கணக்குகள் இல்லை. தலைவர் இல்லை, செயலாளர் இல்லை. ஆனாலும் இலங்கை முழுவதும் ஆர்வமுள்ள நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். 


வேர்களாக அவர்கள் விளைந்திருக்கிறார்கள். விழுதுகளாக அவர்கள் தாங்குகிறார்கள். சிவ சேனை என்ற அமைப்பை.


திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணி சபையினை முழுமையாக மன்னார்ச் சைவ மக்களிடம் கையளிக்க வேண்டும்.


அகில இலங்கை இந்து மாமன்றச் சொத்துக்களை ஊர் மன்றங்களிடம் கையளிக்க வேண்டும். அகில இலங்கை இந்துமாமன்றம் ஊர் மன்றங்களை வேர் மன்றங்களே குடைக்குள் அமைக்கும் மன்றம் ஆக வேண்டும். ஊர் மன்றங்களையும் வேர் மன்றங்களையும் உத்வேகமாக உற்சாகமாக திறமையாக ஆற்றலாக இயங்கும் மன்றங்களாக மாற்ற வேண்டும். 


போர்க்கால சூழ்நிலையில் அலமந்து ஆற்றாது மயக்கமும் தெளிவின்மையும் கலந்த மனோ நிலை மாறிவிட்டது. நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தொகைகளை எதிர்பார்க்காமல் தொண்டுகளை எதிர்பார்த்து என் பின்னிருக்கிறார்கள் என்பதைத் தொகைகளையும் சொத்துகளையும் குவித்து வைத்திருக்கும் அமைப்புகள் தெரிந்து கொள்ள வேண்டும்.


சைவ மீள் எழுச்சிக்காக பிற மதத் தாக்குதல் இருந்து தம்மை விடுவிப்பதற்காக, பல்லாயிரம் ஆண்டுத் தொடர்ச்சியை மரபுத் தொடர்ச்சியை மண்ணில் வேரூன்றி வளர்ந்த வழமைகளை முன்னெடுக்கச் சைவ உலகம் திரண்டு வரும்பொழுது அதற்குத் தலைமை தாங்க அகில இலங்கை இந்து மாமன்றம் முன் வர வேண்டும்.


1970களில் தோராயமாக 75 இந்து இளைஞர் மன்றங்கள் வேர் மன்றங்களாக ஊர்மன்றங்களாக அமைந்த இந்து இளைஞர் பேரவைத் தலைமைச் செயலாளராக நான் பணிபுரிந்த பொழுது அமைத்த கட்டடங்களே வவனியாவில் சுத்தானந்த இந்து இளைஞர் மன்றம் கைதடியில் சைவ அனாதை இல்லம் மட்டக்களப்பில் இந்து இளைஞர் மன்றம் திருகோணமலையில் இந்து இளைஞர் மன்றம் கொக்கிளாயில் இந்து இளைஞர் மன்றம். இந்து இளைஞர் பேரவைக்காக எந்தச் சொத்தையும் நாங்கள் வாங்கவில்லை. குடை அமைப்பாக இருந்தோம். வேறு மன்றங்களும் ஊர் மன்றங்களும் வலிமைமிக்க மன்றங்களாக மாற உதவினோம். மாவட்டங்கள் தோறும் மாநாடுகளை நடத்தினோம். நிதி திரட்ட இலங்கை முழுவதும் கொடி நாள்களை நடத்தி அவ்வப்பொழுதே அந்த நிதிகளை செலவழித்தோம்.


இந்து சமயம் தலைமை இன்றித் தவிக்கின்றது. திருடர்களும் சொத்தில் நாட்டம் உள்ளவர்களும் வணிக நோக்கம் உள்ளவர்களும் இந்து மாமன்றத்திலும் திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்திலும் சைவ பரிபாலன சபையிலும் இருப்பதை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். சாட்சிகளோடு சொல்கிறேன்.


வட மாகாண கல்வி அமைச்சு சைவமானவர்களுக்கு விவிலியத்தை கொடுத்தால் அந்த விவிலிய படிகளை தீயிட்டுக் கொளுத்துவதற்கு வடமாகாணம் முழுவதும் நூற்றுக்கணக்கான சிவ தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.


இந்து மாமன்றமோ சைவ பரிபாலன சபையோ திருநெல்வேலி இந்துவாலிபர் சங்கமோ, பரங்கிப் பெயரரான தலைவரைக் கொண்ட விவேகானந்த சபையோ திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையோ அவர்களைத் திரட்டவில்லை அவர்களுக்கு உற்சாகமூட்டவில்லை அவர்களுக்கான செலவுகளைக் கொடுக்கவில்லை.


அவர்களும் தனி ஒரு மனிதனான என்னிடமே அவ்வாறு செய்யுமாறு கேட்கிறார்கள்.

No comments: