Thursday, August 06, 2026

வெடுக்குநாறிக் கல்வெட்டுகள்

 வெடுக்குநாறி மலை கல்வெட்டு ஆய்வு


வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவாகிய நெடுங்கேணி ஒலுமடு பகுதியில்  அமைந்துள்ள வெடுக்குநாறி மலை பகுதியில் காணப்படுகின்ற கீழ்வரும் 3 கல்வெட்டுக்கள்.


IC - 373 (Vedukkunarimalai)

"மஹ சமுத்த புத குத்தஸ லெணெ,ஸகஸ" பருமக பமதத்த குத்தஹ மஹகுத்த(ஹ) லெணெ" 

என்கிறது.


இதன் பொருள் 

 "மகா-சமுத்தன் மகன் குத்தனின் குகை, உணவு (ஸகஸ) அளிக்கப்பட்டது"என்கிறது.அத்தோடு அதனை முழுமையாக "பிரம்மதத்த குத்தனின் மஹா குத்தனின் குகை" என்றும் கூறுகிறது.ஆகவே இந்த மகா சமுத்த மகன் குத்தன் துறவறம் ஏற்ற தினத்தில் அவருக்காக அமைக்கப்பட்ட இப்பாழி  அமைந்த இடத்திற்கு வந்தவர்,வராதவர் என பேதம் பாராது அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது, என்பது பொருளாகும். 


அடுத்து இதே போன்றதொரு கல்வெட்டு


IC 133a (handagala)


" பருமக சமுத்தஹ லெணெ" என்கிறது.


IC 374 (Vedukkunarimalai)

 பத-சுடி-திஸ்ஸஹ லெணெ' என்கிறது.

இதன் பொருள்


 " பத - குரு(குருக்கள் போன்ற தலைமை நிலை) ஹபதி-குடும்ப தலைவன்,தஸபதிகந்- பத்து தலைவர் போன்ற நிலை, பத பகிர்னிய -தலை சிறந்த, போன்றன அந்த அர்த்தத்தைத் தருகிறது. அதே போன்று பத சுடி திஸஹ என்பதும் துறவு ஏற்ற அந்நெறி தலைவரை குறிப்பது. மேலும் 

 


IC- 375 (Vedukkunarimalai)

  பருமக புஸமித-புத மஹ லெணெ. அகத அனகத சதுதிஸ ஸகஸ " என்கிறது.

 "புஷமித்தன் மகனின் பெரிய குகை, இந்த துறவற புகுநாளில் நாலா திசைகளிலும் இருந்து வந்தவர்,வராதவர் என அனைவருக்குமாக உணவு அளிக்கப்பட்டது" இது துறவு ஏற்கும் அந்நாளைய வழக்கம்.


ஆகவே இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள புஷமித்தன் பற்றிய தகவல் வேறு எங்காவது உண்டா என ஆராய்கையில் 


IC - 266 ( Rithigala) , எனும் இடத்து கல்வெட்டு ஒன்று "பருமக கடலி புத பருமக புஷமித ஜித உபசிஹ ஸமணய ஹ லெணெ" என்கிறது

 ( inscriptions of Ceylon, Volume 1) 


ஆக இந்த பருமகன் கடலன் மகன் பருமக புஷமித்தனின் மகள்(ஜித) உபாசிகையுடைய சமணத் துறவியுடைய குகை, என்கிறது.


 ஆகவே இதன் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடிவது இந்த புஷமித்தன் கடலி(கடலன்) என்பவன் மகன்.(கல்வெட்டுக்களில் ஆண் சந்ததியாருடைய வழியே உரைக்கப்பட்டுத்தான் பின்பாகத்தான் இன்னார்  அவருடைய மகன்,மகள்,மனைவி என கூறுகின்றன, அதுதான் வழமை) அந்த வகையில் "கடலி புத" என்பது கடலன் மகன் என்பதாகும்.

 அத்தோடு இவனது நெறி இவளது மகளது நெறியாக விளங்கிய சமணமே என கருதுவதில் தவறில்லை


ஆகவே இந்த கடலன் பற்றிய ஒப்பீட்டு கல்வெட்டுக்கள் எங்காவது உள்ளனவா என பார்ப்போமானால், அது


தமிழக மாங்குளம் குகைத் தளத்தில் இரு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை பாறை முகப்பில் அமைந்த நீர்வடி விளிம்பின் கீழே உள்ளன. முதற்கல்வெட்டு ஒரு வரியில் உள்ளது.


கணிய் நந்த அஸிரிய்இ  குவ்அன்கே தம்மம் இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன் வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்

கணி - வானியல்,மருத்துவ உயர்நிலை எய்திய பிச்சை எடுத்து வாழும் முனிவர்க்கு உரிய பட்டம், title for attainment of higher state in meditation by an  ascetic ; குவ்வன்  - பாடம் சொல்பவன், தீர்ப்பு சொல்பவன்; ஈத்தான் -- கொடுத்தான்; பணவன் - மணிக்கல் சுரங்க பொறுப்பாளர், precious stone mine in-charge; கொட்டுபித்த -  கொடுத்த, பள்ளி  - கற்படுக்கை என்கிறது.


விளக்கம்: கணி நந்த ஆசிரியர் நடத்திய கல்விச் சாலையில் பாடம் சொல்வானுக்கு தருமமாய் நெடுஞ் செழியனின் மணிக்கல் சுரங்கப் பொறுப்பாளன் கடலன் வழுதி என்பான் இக் கற்படுக்கையை உருவாக்கித் தந்தான் என்பது இதன் பொருள். இக்கல்வெட்டில் "அன்" ஆண்பால் ஒருமை ஈறு பணவன், கடலன் என தனியே பிரித்துக் காட்டப்பட்டுள்ளன. ஆகவே இந்த கடலன் மாணிக்கக் கல் சுரங்க பொறுப்பாளனாக விளங்கியவன்,ஆக மாணிக்க கல் என்பது சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகார வரிகளிலும் இலங்கைக்கு முதலிடம் வழங்குகின்றன. இவற்றை கடலன் இலங்கையிலிருந்து கொண்டு சென்றிருக்க வேண்டும்.அத்தோடு இந்த மாங்குளம் கல்வெட்டும் பாண்டியன் நெடுஞ்செழியனுடை சமண படுக்கைகள் பற்றியே கூறுகின்றன. ஆகவேதான் இந்த வெடுக்குநாறி மலை "மஹ சமுத்த" என்பது கடலன் என்பதன் பிராகிருத வடிவமாகும். அந்த ஆலயமும் சமயத்தின் பால் ஜயனராகவும்,நாகர்களது தொன்மையான "மணிநாக" சிவ வழிபாட்டையும் இணைத்து மரபார்ந்த சொல்லாடல் வழி "ஆதிசிவன் ஐயனார் ஆலயம்" என விளிக்கப்படுகின்றது.

ஆகவே இதன் தொன்மம் மிகப்பழமையானது ஆகவே இந்த பாண்டியன் நெடுஞ்செழியன் உட்பட்ட இலங்கையிலிருந்த கடலன் போன்றவர்களுடைய மாணிக்கம்,முத்து,மெல்லிய ஆடை போன்ற  கடல் சார்ந்த வணிகம் காரணமாகவே இந்த மதங்கள் இங்கே பரவியது என்று கூறினால் அது மிகையல்ல. ஆக இந்த கல்வெட்டுக்கள் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு உரியவை, அதன் நெறி சமணமாகும்.

No comments: