வாரம் ஒரு சிந்தனை 21
மறவன்புலவு க சச்சிதானந்தன்
நன்றி இல்லா அயலவர்
அநுராதபுரம் பழமையான நகரமா? நிலத்துக்குக் கீழே படை படையாகப் பழமைக்குச் சான்றுகள் உளவா? தேடியவர் சிரான் தெரணியகல. தொல்லியல் திணைக்கண ஆய்வாளர்.
தேடாமல் அங்கே அவருக்குக் கிடைத்தன ஆறு அல்லது ஏழு பானை ஓடுகள். அவற்றில் தமிழி எழுத்துகள். புத்தருக்கு முந்தைய காலத் தமிழி எழுத்துகள். 2650 ஆண்டுகளுக்கு முந்தையன அவை.
சிரான் சிங்களவர். தொல்லியலாளர். நேர்மையானவர். அவை தமிழி எழுத்துகள் என 1980இல் அறிவித்தார். இலங்கை முழுவதும் தமிழி எழுத்துகளில் பானையோடுகள் கல்வெட்டுகள் உள்ளன. காலத்தால் முந்தியன சிரான் கண்டுபிடித்த அநுராதபுரப் பானை ஓடு எழுத்துகள்.
1900 ஆண்டுகளுக்கு முன்பு, தெற்கு ஆசியாவில் 18 வரிவடிவங்கள். பல்லாயிரம் வட்டார வழக்கு மொழிகள். 18 வரி வடிவங்களில் ஒன்று தமிழி. கூறுவது 1900 ஆண்டுகளுக்கு முந்தைய சமண நூலான சமயவங்க சூத்திரம்.
ழ, ள, ற, ன ஆகிய தமிழ் வரிவடிவங்கள் தமிழியில் உள. தமிழியில் இருந்து உருவான அசோகர் பிராமியில் அவை இல்லை. சிரான் கண்டெடுத்த பானை ஓடுகளில் தமிழ் வரி வடிவங்கள் இருந்ததால் அவற்றைத் தமிழி என்றார் சிரான்.
800 ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கை முழுவதும் எல்லோரும் எழுதிய வரி வடிவம் தமிழி. 2600 - 800 = 1800 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இலங்கை முழுவதும் தமிழி வரி வடிவம். பிராகிருதத்தையும் தமிழியில் எழுதினர். வடமொழியையும் தமிழியில் எழுதினர். பாளியை பாளி வரி வடிவத்தில் எழுதினர்.
800 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கள வரி வடிவம் எழுந்தது. 1600 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உருவான கிரந்த வரி வடிவமும் தமிழி வரி வடிவமும் இணைந்தே சிங்கள வரி வடிவம் உருவானதாகச் சொல்வர்.
மூன்றாம் விஜயபாகு, இரண்டாம் பராக்கிரமபாகு, நான்காம் விஜயபாகு இவர்கள் காலத்தில் சிங்கள வரிவடிவங்கள் சிங்கள இலக்கியங்கள் சிங்கள இலக்கண நூல்கள் என்பன பரந்து எழுந்ததாகச் சொல்வர்.
இன்று கிடைக்கும் மிகப் பழமையான சிங்கள இலக்கண நூல் சிதத் சங்கராவ. பதிராச பிரிவேனாத் துறவி இயற்றிய நூல். 700 ஆண்டுகளுக்கு முந்தைய தம்பதெனிய அரசர் ஆட்சிக் கால நூல்.
1200 ஆண்டுகளுக்கு முன்பு கங்கைகொண்ட சோழபுரத்தில் வீரராஜேந்திர சோழன் காலத்தில் புத்தமித்திரர் இயற்றிய தமிழ் இலக்கண நூல் வீரசோழியம்.
வீரசோழியத்தை அடியொற்றியே சதத் சிங்கராவவை இயற்றினேன். அங்கேயும் 12 இயல்கள். இங்கேயும் 12 இயல்கள். சதத் சங்கராவ வாசகர்களே, இந்த நூலில் உங்களுக்கு ஐயங்கள் இருந்தால் வீரசோழியத்தைப் படித்து ஐயங்களைத் தீர்க்க என்கிறார் நூலாசிரியர் பதிராச பிரிவேனத் துறவி.
சிங்களத்துக்கு வரி வடிவங்களைக் கொடுத்தோர் தமிழர். சிங்களத்துக்கு இலக்கண நூலைக் கொடுத்தோர் தமிழர். சிங்கள மொழிகள் 70% சொற்கள் தமிழ் மொழி வேர்ச் சொற்கள். சொற்களைக் கொடுத்தோரும் தமிழர்.
இந்தக் கொடைகளுக்கு நன்றியோடு நடக்க வேண்டிய அயலவரே இன்றைய சிங்களவர். நன்றியோடு தமிழரை நினைக்கிறார்களா? தமிழருக்கு நன்றியாக நடக்கிறார்களா? காலம் பதில் சொல்லும்.
No comments:
Post a Comment