Monday, March 07, 2022

சிலோன் விஜயேந்திரனுக்கு அணிந்துரை

 கல்லடி வேலுப்பிள்ளை

சிலோன் விஜயேந்திரன்

அணிந்துரை

"நாளைய பிரியாணியை விட இன்றைய கஞ்சி அமிர்தம்". சிலோன் விஜயேந்திரன் என்னிடம் அடிக்கடி கூறும் அழகு வரி. நேற்று முடிந்தது. நாளை வருமா? தெரியாது. இன்று இப்பொழுது வாழ்வதே வாழ்வு. சிலோன் விஜயேந்திரனின் உயர்ந்த வாழ்வியலின் தளம். என்னிடம் எப்பொழுதும் பகிரும் தளம்.

மிகை  நடிப்பாளர் சிவாஜி கணேசன் என்பார். அவருடன் இணைந்து நடித்த படங்களின் காட்சிகளைக் கூறுவார். தமிழகத்தில் நூறுக்கும் கூடுதலான எண்ணிக்கையில் திரைப்படங்களில் நடித்தவர். இளவாலை விஜயேந்திரன் என நான் அவரை என் மாணவப் பருவத்தில் அறிவேன். சென்னை வந்ததும் மண்வாசனை மேலிடச் சிலோன் விஜயேந்திரன் என மாற்றிக் கொண்டார்.

தொல்காப்பியம் கூறும் எண் சுவைகளான, நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி,  உவகை என்பன உடன் சாந்தமும் சேர, ஒன்பது சுவைகளும் சிலோன்  விஜயேந்திரனுக்கு வருவாயைத் தேடித்தேடித் தந்தன. ஒன்பது சுவைகளையும் நடிப்பால் ஒரு மணி நேரத்தில் இவர் வெளிப்படுத்தாத கல்வி நிலையங்கள் தமிழகத்தில் இல்லை எனலாம். நவரச நாயகன் சிலோன் விஜயேந்திரன் எனவே தமிழக மாணவர் உலகம் இவரை அறியும்.

மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தனிடம் தமிழ் கற்றதை நிணைவு கூர்வார். உரை நடை, கவிதை இரண்டிலும் தனக்கெனத் தனிப் பாணி வகுத்தவர். நடைமுறை கமழ்வதே எழுத்து என்பார். இயல்பாக எழுவதே எழுத்து என்பார். இவரது தமிழால் இவரிடம் நட்புப் பேணியவர் கலைஞர் கருணாநிதி. கலைஞரின் திரை இசைப் பாடல்கள் எனத் தொகுத்துக் கலைஞரிடம் காட்டி வாழ்த்துப் பெற்றார். காந்தளகத்தில் நான் பதிப்பித்தேன்.

கல்லடி வேலுப்பிள்ளை விஜயேந்தினுக்குத் தாத்தா. தமிழகத்துக்குக் கல்லடியாரை அறிமுகிக்க ஈழத்துப் பதிப்பை என்னிடம் தந்து காந்தளகம் பதிப்பாக்கினார். தமிழகத்தின் மூத்த பதிப்பாளர் பலர் இவரின் ஆக்கங்களை வெளியிட்டனர்.இலங்கையில் இவர் பதிப்பித்த நூல்களுக்கு ஆக்கம் தந்து ஊக்குவித்தவர் என் தந்தையார் மு.கணபதிப்பிள்ளை. என்னிடம் வந்தால் என் தந்தையார் ஊக்கியதை நினைவூட்டுவார்.

திருவல்லிக்கேணியில் வாழ்ந்தார். இளமையிலிருந்தே முகமதியரின் வாழ்வியலில் ஆர்வம் கொண்டவர். திருவல்லிக்கேணிச் சூழல் அவருக்கு மிகவும் பிடித்த வாழ்வியல் சூழல். என்னிடம் அடிக்கடி கூறுவார்.

தமிழ்த் தேசியத்தில் அவர் கொண்ட கொள்கைகள் மரபணு வழியன. சைதாப்பேட்டைச் சிறையில் சில காலம் இருந்த காலங்களில் அவரிடம் செல்வேன் ஆறுதல் கூறுவேன்.

பன்முக ஆற்றலர், பண்பட்ட பழக்கத்தார், நட்புகளை நயப்பவர், ஈழத்துக்கு உலகெங்கும் பெருமை சேர்த்தவர், எனக்கு இனிய நண்பர். அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தேன். அவரின் அன்புக்கு உரியவனானேன்.

அவரின் வழி வந்தோர் பதிப்பிக்கும் அவரின் அரிய படைப்புக்கு அணிந்துரை வழங்கி மகிழ்கிறேன்.

No comments: