Wednesday, January 19, 2022

பரராசேகரப் பிள்ளையார் பிள்ளைத் தமிழ்

 வாழ்த்துரை

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

சிவ சேனை

 

குடத்துள் விளக்கு. உறையுள் வாள். காட்டினால் காணலாமா? அன்பும் அத்தகையதே.

நினைக்கும் தொறும் தன்னை மறப்பர். காணும்தொறும் தம் அடையாளம் இழப்பர். கேட்கும்தொறும் தலைப்படுவர். காணாத அன்பைக் காட்டுபவர் அவரே.

அம்மமையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே என்பார் மாணிக்கவாசகர்.

மனம் ஒன்றிறும். மனம் ஒடுங்கும். மனம் எதுவாகிறதோ அதுவாகும் அன்பால். தாயாகும் தந்தையாகும் மகவாகும் அன்பர் என்பவர்க்கே.

திங்கள் சேர் சடையாரைக் காணப் போகிறார் கண்ணப்பர். காணா முன்னே அன்புருவமானார். மோகமாய் ஓடிச் சென்றார். கண்டதும் தழுவினார், மோந்து நின்றார் என்பார் சேக்கிழார்.

மக்களுக்கு வாத்தியாராய், வளர்ப்புத் தாயாராய், வைத்தியராய், நண்பனாய், மந்திரியாய், நல்லசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய், எனக்குள்ளான் கண்ணன் என்பார் மகாகவி பாரதியார்.

அன்பு மேலீட்டினால் தலைவனுக்குத் தாயாகி வந்து பாலூட்டி வளர்க்கும் பாங்கைக் கூறுவதே பிள்ளைத் தமிழ் இலக்கிய மரபு.

அரசன் குலோத்துங்கன் மீது அன்பு மீவரப் பெற்றவர் ஒட்டக்கூத்தர். தன் மகவாப் பார்க்கிறார். தாமே குலோத்துங்கனுக்குத் தாயாகிறார். குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் என அன்பைப் பிழிகிறார், 100 பாடல்களில் தமிழைப் பொழிகிறார். தமிழ் இலக்கியப் பரப்பில் நமக்குக் கிடைக்கும் முதலாவது நூல்.

குலோத்துங்கன் பிறந்த மூன்றாவது மாதம் தொடக்கப் பருவம். இரு மாதங்களுக்கு ஒரு பருவம். ஆக பத்துப் பருவங்கள். 21ஆம் மாதம் வரை. காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் எனப் பத்துப் பருவங்கள். ஒட்டக்கூத்தர் விட்டுச் சென்ற வரன்முறை.

குமரகுருபரர், பகழிக் கூத்தர், அழகிய சொக்கநாதர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சிவஞான சுவாமிகள், அருணாசலக் கவிராயர் என ஒட்டக்கூத்தரைத் தொடர்ந்து தத்தம் அன்பரைச் சேயாக்கித் தாம் தாயாகி, அன்பைப் பிழிந்து தமிழைப் பொழிந்த புலவர் பெருமக்கள் எண்ணிக்கை சொல்லும் அளவன்றோ!

அவர்கள் வழி வந்த, பண்டிதை வைகுந்தம்மையார் கணேசபிள்ளை இணுவில் அருள்மிகு பரராசசேகரப் பிள்ளையாரைக் கண்டார், மோகம் கொண்டார். மகவெனப் பாங்கு கொண்டார். தாயாகித் தம்முள் இயைந்தார். நெஞ்சம் கனத்தார். நினைவை மறந்தார். தமிழ்ச் சொற்கள் தாமாக வந்து வரிசையில் நின்றன. அவரை மீறி வரிகள் விரிந்தன. பிள்ளைத் தமிழாயின.

தாலேலோ தாலேலோ, கொட்டுக சப்பாணி, எனத் தமிழைக் கொட்டினார், குவித்தார். குன்றின் விளக்காகிப் பண்டிதை வைகுந்தம்மையார் கணேசபிள்ளை அவர்கள், இணுவில் அருள்மிகு பரராசேகரப் பிள்ளையார் மீது பிள்ளைத் தமிழ் பாடினார். வாழ்த்துகிறேன்.

அருள்மிகு பரராசேகரப் பிள்ளையார் திருக்கோயில் குடமுழுக்கு நாளான திபி 2053, பிலவ, தை 24, ஞாயிறு அன்று திருநெறிய தமிழ் மறைக் கழகத்தினர் வெளியிடுகிறார்கள். வாழ்த்துகிறேன்.

No comments: