Sunday, March 16, 2025

ஊரான் ஊரான்

 ஊரான் ஊரான்


தருண் நந்தினி நகுலேசுவரன்

சகலகலாவித்தியாசாலை மறவன்புலவு


ஊரான் ஊரான் வயல்களிலே 

உளுந்து விதைத்து முளைக்கையிலே 

அயலான் மாடுகள் அலைந்தனவே

அனைத்தும் அழிந்துச் சிதைத்தனவே

அடாத்தால் வளர்ச்சி தடுப்போரின்

ஊராம் மறவன் புலவாமே


ஊரான் ஊரான் தோட்டத்திலே 

நேராய் நிமிர்ந்த வெண்டிச்செடி

அவிழ்த்தார் ஆடுகள் அலையவிட 

அடாத்தாய் வேலியை உடைத்தனவே

காய்கறித் தோட்டங்கள் அழிப்பனவே

ஆடுகள் மறவன் புலவாமே


ஊரான் ஊரான் கோயிலிலே

உண்டியல் உடைப்பார் உள்ளாரே

உண்டியல் உடைத்த சண்டியரே 

கள்ளுக் கடையில் நிற்பாரே

மதுவில் மயங்கித் தள்ளாடும்

மடையர் மறவன் புலவாரே


ஊரான் ஊரான் பள்ளியிலே

படிக்கப் போகும் மாணவரே

படிப்புப் புத்தகம் உணவெல்லாம் 

கொடுப்பார் அங்கே இலவயமாய்

துடுக்காய்ப் பெடியள் பெட்டையளும்

படிக்கார் மறவன் புலவாரே


ஊரான் ஊரான் திருவிழாவில்

கோலம் போடத் தெரியாதார்

மாலை கட்டத் தெரியாதார்

சேலை உடுக்கத் தெரியாதார்

சுவையாய்ச் சமைக்க தெரியாதார்

மகளிர் மறவன் புலவாரே


ஊரான் ஊரான் பேருந்தில் 

உவந்து ஓட்டும் ஓட்டுநரும் 

நயந்து அழைக்கும் நடத்துனரும்

புத்தம் புதிய பேருந்தே

புதையும் பாதை திருத்தாத

மக்கள் மறவன் புலவாரே


ஊரான் ஊரான் கடற்கரையில்

கஞ்சா கடத்தும் தொழிலாமோ

களவாய் மணலை அகழ்வோமோ

களவாய் மாடு கொள்வோமோ

உழைக்க மறந்து திரிவோமோ

உதுவே மறவன் புலமாமோ


ஊரான் ஊரான் குளத்தருகே

நிலாவும் வள்ளைக் குளத்துள்ளே

உலாவும் மீனைக் கள்வோமோ

மலரும் தாமரை கொள்வோமோ

சுற்றிய வேலிகள் உடைப்போமோ

மற்றிது மறவன் புலமாமோ


ஊரான் ஊரான் மழையேலோ

உடைக்கும் வரம்பில் கடவானோ

சேறாய்ப் புதைக்கும் நிலமாமோ

சோறாய் முதிரும் கதிராமோ

மழையே பொழியாய் மாரியிலே

மகிழ்ச்சி மறவன் புலவினிலே


ஊரான் ஊரான் நெற்கதிரே

உழுதார் விதைக்க முளைத்தாயே

பயிராய்ப் பச்சைப் பசேலானாய்

குடலை வெடித்துக் குதிரானாய்

கதிராய் வளைந்து நெல்லானாய்

மகிழ்வார் மறவன் புலவாரே












மறவன்புலவு க. சச்சிதானந்தன்

No comments: