Sunday, November 27, 2016

வாஜ்பாயியுடனான தொடக்கத் தொடர்பு

1975 மார்ச்சு 31 தொடக்கம் ஏப்பிரல் 5 வரை. கொழும்பில் உலக நாடாளுமன்ற ஒன்றிய மாநாடு. (Interparliamentary Union Conference, held at Colombo, Sri Lanka, March 31-April 5). மாநாட்டுக்கு வந்த இந்து நாடுகளின் பேராளர்களை நாம் சந்தித்தோம். இலங்கையில் இந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகளைக் கூறினோம்.

இந்து இளைஞர் பேரவை சார்பில் திரு. பேரின்பநாயகம், நான் இருவரும் மாலை நேரங்களில் விடுதிகளுக்குச் செல்வோம்.

கயானா, மொரிசியசு இந்தியா நேபாளம் ஆகிய நான்கு நாடுகளின் போராளர்களைச் சந்தித்தோம். வழக்கறிஞர் கந்தசாமி, ஊர்மிளா இருவரும் மற்ற நாடுகளைச் சந்தித்தனர்.

கயானா நாட்டு இந்துப் பேராளர்களைத் தந்தை செல்வாவிடம் அழைத்துச் சென்றோம். அவர் தன் கையாலேயே தேனீர் வழங்கினார். இந்துக்கள் படும் துயரை எடுத்துச் சொன்னார்.

வெளியே வந்ததும் கயானா நாட்டவர் கேட்ட வினா வியப்பில் ஆழ்த்தியது. இந்துக்களுக்குக் கிறித்தவர் தலைமை தாங்குகிராரா? இந்துக்களுக்கு நிகழும் கொடுமைகளைக் கிறித்தவர் சொல்கிறாரா? கயானாவில் கிறித்தவர்களை இந்தியர் என்றே சொல்வதில்லை. இந்துக்களை மட்டுமே இந்திய வம்சாவழியினர் என்போம் என்றனர்.

காலிமுகத் திடலுக்கு எதிரே விடுதி. எந்த வித முன்னறிவிப்புமின்றி நானும் பேரின்பநாயகமும் சென்னோம். தன் அறைக்கு முன்னே நாற்காலியில் அமர்ந்து காற்றுவாங்கியவண்ணம் இருந்தார் அடல் பிகாரி வாச்பாயி. இந்திய சனசங்கத் தலைவர். இந்து இளைஞர் பேரவையில் இருந்து வருகிறோம் என அறிமுகித்துப் பேசினோம். நாம் சொன்னவற்றை அமைதியாகக் கேட்டார். இரவு விருந்துக்கு ஒருநாள் வாருங்கள் மேலும் பேசலாம் என்றோம். ஓத்துக்கொண்டார்.

மு. திருச்செல்வம் அவருக்கு உயர்விடுதி ஒன்றில் விருந்தளித்தார். இலங்கையில் இந்துக்களின் இடர்களை ஒன்றும் விடாமல் பட்டியலிட்டோம். அவர் பிரதமராக இருந்த 2000ஆம் ஆண்டிலும் அவரோடு தொடர்பாக இருந்தேன்.

2000 மே 25ஆம் நாள் சென்னையில் என் வீட்டுக்கு வந்தவர் இன்றைய மேகலாயா ஆளுநர் சண்முகநாதன். வாச்பாயி உங்களை அழைக்கிறார் எனக் கூறினார். உடனே தில்லி போனேன். முக்கிய பணி ஒன்றை எனக்களித்தார் (அப்பணி தொடர்பாக வேறோர் இடத்தில் கூறுவேன்). நானும் நெடுமாறன் ஐயாவும் கவிஞர் காசி ஆனந்தனும் அப்பணியை வெற்றிகரமாக முடித்தோம். அவர் மகிழ்ந்தார். விடுதலைப் புலிகள் தொடர்பான, ஈழத் தமிழர் தொடர்பான இந்திய அணுகுமுறையை ஓரளவு மாற்றியமைத்த பணி. மறைவில் இருந்த காலத்திலும் பிரபாகரன் எம்முடன் ஒத்துழைத்த பணி.

மொரிசியசுப் பேராளர்களுக்கும் நேபாளப் பேராளர்களுக்கும் மு. திருச்செல்வம் வெவ்வேறாக விருந்தளித்தார். இந்துக்களின் குறைகளைப் பட்டியலிட்டு அந்தந்த நாடுகளின் ஆதரவைக் கேட்டோம். 

No comments: